கண்ணே நீ ஒரு தொடாத விசை
இல்லாவிட்டால் எப்படி
என்னைத் தீண்டாமலே ஈர்த்திருப்பாய்?
தவமிருக்கிறேன்
உனது சுவாசத்திற்கு என்னில்
இடம் கொடுப்பதற்காய்
என் சுவாசத்தைத் தள்ளி வைத்து.
என் மேனி உன் ஸ்பரிசத்திற்காய்
ஏதோ ஒரு புல்லரிப்புடன்
காத்திருக்கிறது.
நீ பார்க்கும் போது,உனது பார்வையின்
ஆழம் என் உயிர் வரை சென்று
ஏதேதோ கவிதை விதைகளைப்
புதைக்கிறது.
உன்னைப் பார்க்காத போது,அவ்விதைகள்
விருட்சங்களாகப் பிறப்பெடுத்து
என்னை சுகமான அவஸ்தைகளில்
அழுத்துகின்ற மாயம் தான் என்னே!
உன் பார்வையின் அர்த்தங்களைப்
புரிந்துகொள்ள கணங்கள் போதாது!
அன்பே!அந்தக் கவிதையை வர்ணிக்க
வார்த்தைகள் போதாது-என்
பிரியத் தமிழுக்கு.
உன் பார்வையை வர்ணிக்க
நான் பேனாவைத் தூக்கினால்
பக்கங்கள் போதாது இருக்கின்றனவே!
ஒரு கண நொடிப் பார்வை-
மின்னல் வெட்டு.
அதற்கு என்னையே அசைத்து விடும்-
என் உலகையே உலுக்கிவிடும்
அசுரசக்தி எங்கிருந்து வந்ததோ?
மின்சாரப் புன்னகையுடன்
உன் பட்டாம்பூச்சிக் கண்கள்
சிறகடிக்கும் போது,
எனக்குள்ளே ஒரு மழையடிக்கின்றதே!
உடல் குலுங்க நீ சிரிப்புச்சங்கீதம்
இசைக்கும் போது
என் மனதுக்குள் புயலடிக்கின்றதே!
என் கால்களுக்கும் கனவுகளுக்கும்
சிறகு கொடுத்த தேவதையே!
உன் பெயர் என் நாவில் தேன்சுரபியடி
ஆருயிரே!
உன் மனதுக்குள் எனக்கொரு
இடம் தரக்கூடாதா?இல்லை-
இதயத்துள் இன்னொருவர்
ஏலவே இடம்பிடித்து விட்டாரா?
நினைக்க இதயம் நடுங்குகிறது.
உன் சக்கரம் கட்டிய கால்கள்
துள்ளித் துள்ளி நடக்கும் போது,
என் உலகம் உன்னுடன்
நிழலாய் வருவதைத் தெரிந்தும்
தெரியாதவள் போலப் போகிறாயே
பொன்மானே!
கவிதை எனக்குப் புரியாத பாசை
என்று எண்ணியிருந்தேன்.
காலம்காலமாய்
கற்பிக்க முடியாத வித்தையை-
கவிதைக் கலையைக்
கணப் பொழுதில் கற்பித்தவளே!
நீ உன் பார்வைக் கணைகளை,
உன் புருவ வில்லை வளைத்து
உன் நயன நாணில் ஏற்றி
என் மீது செலுத்தினாய்.
மதன்கூட பஞ்சகணைகளைத்
தொடுப்பானாம்.
நீ எத்தனை கணை தொடுத்தாயோ
அறியேன்!
எனக்குப் பசியில்லை,தூக்கமில்லை
எதுவும் பிடிக்கவில்லை.
எதற்கெடுத்தாலும் எரிச்சல் வருகிறது.
நீ பெண்களுடன் பேசினாலே
பொறாமை பொங்குகிறது.
கண்மூடாமலே கனவு பகலில்.
விழிமூடி விழிப்புக்கள் இரவில்.
என் திமிர்-தலைக்கனம்
உன் ஒரு பார்வையில்-
உன் ஒரு அஸ்திரத்தினால்
கட்டுண்டு உன் காலடியில்
வீழ்ந்துவிட்ட விந்தை கண்டேன்.
நீ மன்மதனிலும் பெரியவள்.
சிவனின் நெற்றிக்கண் திறந்ததும்
காமனின் தகனம் போல
உன் நொடிப்பார்வையில் என்
அகந்தை எரிந்து-மனம்
கிடக்கிறது சாம்பல்மேடாய்.
அதில் பூச்செடிகளை வளர்த்து
நந்தவனமாக்க நீ வேண்டும்.
அவ்வாறு வளர்க்கச் சம்மதித்தால்
உன் கூந்தல் சூடிக்கொள்ள
தினமும் கோடிப்பூ தருவேன்
என் உயிரே!
பரிசோதனைக்குழாய் போன்ற
உன் பிஞ்சு விரல்கள் என் மனதில்
தீயை வளர்ப்பானேன்.
உன் மனம் மட்டும் எரிகுழாய் போல்
என் காதல் நெருப்பால்
வெடிக்காமல் இருக்கும் விபரம்
என்னடி பெண்ணே!
உன்னைப் பார்த்த நாள் முதல்
எனக்கு ஆறு விரல்கள்
ஆகிவிட்டது பேனாவுடன் சேர்த்து.
என் விரல் வலிக்க
தாள்களுக்கு கறுப்புமை பூசுகிறேன்
உன் மீதுள்ள பாசத்தை
வெளிக்காட்டுமுகமாக.
வெற்றுத்தாளாக இருந்த இதயத்தைப்
பெரும் புத்தகமாக்கினாய்.
உனக்காக விழித்திருந்து
விரதமிருந்து என் இரவுகள்
மோட்சமடைந்துவிட்ட மந்திரம்
என்னடி மைனாவே!
பச்சைத் தண்ணீரைக்-குத்தும்
உன் பார்வையால் கொதிக்க
வைத்து நீராடினாய்.
இன்னும் ஏன் மௌனம்?
உன் மௌனம்-நியூட்டனின்
மூன்றாம் விதியைப் பிழைக்க வைக்குதடி-
என் தாக்கங்களுக்கு மறுதாக்கங்களைக்
காட்டாதிருப்பதன் மூலம்.
நீ எனக்குள் ஏற்றி வைத்த தீபத்தின்
சுடர் அசையாது எரிந்து
கொண்டிருக்கிறது இதயத்தில்.
இரவைப் பகலாக்கும் வேலையைச்
செவ்வனே செய்துகொண்டிருக்கிறது
அந்த ஜோதி.
அது சுழல்களால்-சூறாவளியால்
அணைந்துவிடக்கூடாது-
என்றுதான் என் இதயத்துள்ளே
பூட்டி வைத்துள்ளேன்.
உன் கீழ்ச்செந்நிறக்கதிர்வீச்சால்
என்னை ஆளும் Remote நீதானே பெண்ணே!
நீ எனக்குள்ளே இருந்தாய்
எனக்குத் தெரியாமலே.
இப்போது உன்னைத் தெரிந்து
விட்டதால் இதயம் பாரமாகிவிட்டது.
சுமை ஒன்றைச் சுமக்கின்றோம்
என எண்ணிச் சுமக்கும்போது
சுமை அதிகம் கனப்பது போல.
அதன் துடிப்பில்கூட உன் பெயர்தான்
சந்தமாகக் கேட்கிறதோ?
என் இனியவளே!
இளந்தென்றலே!
என் நாடி நரம்புகளினை
உன் கட்டுப்பாட்டில் வைத்துக்
கொள்ளத்தான் என்னைக் கேளாமலே
என் இதயம் நுழைந்தாயோ திருடீ!
உனக்காக உருகும் நேரங்களில்
என் பேனாவும் கண்களுடன்
இணைந்து கொள்கிறது.
இல்லாத இதயத்துடன் ஊசலாடும்
உயிர் எனக்கு.
நீ என் ஸிறீராமஜெயமாய் மாறிவிட்டாய்
அன்பே!
இதயத்துள் உன் கொலுசுச்சத்தம்
இனிய சங்கீதமாக ரீங்காரம் போடுகிறது.
என் நேசம் ஈதற்பிணைப்புதான்.
என்னிதயத்தை உனக்குப் பகுதியாகக்
கொடுத்துள்ளேன்-நீ எனக்கு
இதயம் தராதபோதும்.
ஆனால்,நீ-நான் பிணைப்பு
அயன்பிணைப்பாக
இருக்க வேண்டும் என விரும்புகிறேன்
அப்பிணைப்பை மீற அதிகசக்தி
தேவை என்பதால்.
உனது திமிர் ஆகிய சாலகச்சக்தி,
எனது நேசமாகிய நீரேற்றசக்தியிலும்
உயர்வாக இருக்கிறது போலும்.
அதனால்தான் வீழ்படிவுகள் போல
நீ கரையாது இருக்கிறாய்.
உன் உராய்வுக்குணகம்
உயர்வாக இருப்பதால்,
என்னை, உன்னை விட்டு
விலக்க முடியாது தவிக்கிறேன்.
உன் பார்வை ராமபாணம்-
இராவணனைக் கொல்ல-இராமன்
பயன்படுத்திய பாணம்-என்
திமிரை உன் முன் மண்டியிட வைத்தது.
உன் பார்வையில் எதுவும் புரியாத
கவிதைகளின் அர்த்தங்கள்
புரிகின்றன.
வெறுமைகள்,அர்த்தமற்றவைகள்
நீங்கி அர்த்தங்களாகப் பிறப்பெடுக்கின்றன.
என் ஒவ்வொரு சுவாசத்திற்கும்கூட
வாசனை பூசிய கலையரசியே!
அர்த்தமற்று இருந்த நான்,
புதிய முறையில் பிறப்பெடுத்தேன்-
உன்னால்தான்-இதனால்,
நீயும் எனக்குத் தாய் தானே!
இயற்கையின் ஒவ்வொருஅசைவும்
என்னை ஆள்கின்றன.
ஒரு மழைத்துளி வானை விட்டுப்
பிரிந்து வருந்தி அழும்போது,
உருகிப் போகிறேன் அதற்காக-
நானும் உன்னைப்போலத்தான்
என்று விசும்பிக் கொண்டே தேற்றி.
நிலவின்மீது கோபம்-அது
எவ்வளவு கெஞ்சியும் பேசாது-
உன்னைப் போலே ஊமையாய் இருப்பதால்.
ஆனால் அன்பே,
உன் முகத்தை நிலவிற்கு
ஒப்பிட மாட்டேன்.
நிலவைப் போன்ற கிண்ணக்குழிகள்
உன் முகத்தில் இல்லை.
அதன் களங்கம் கூட
உன் மனதில் இல்லை-
என் மீதான காதல் போல.
இலைகளின் சலசலப்பு கூட
சங்கீதமாய் காதுகளுள் ஒலிக்கிறது.
என் விம்பத்தைத் தொலைத்துவிட்டேன்.
கண்ணாடியில் என் விம்பத்திற்குப்
பதிலாக உன்விம்பத்தைப் பிரதியிட்டது யார்?
உன் காற்கொலுசுமணிகள்
உடைந்து சிதறி பனித்துளிகளாய்
இலைகளில் ஜொலித்து
வைரக்கற்கள் நாமென்று சொல்லிக்
கொண்டு இறுமாந்து கிடக்கின்றன
உன்னைப்போல். நான்
கதிரவன் அல்லன்-
அவற்றை உருக்கி,
அன்பு வெள்ளமாக மாற்ற.
என் இதயத்தில் இருந்து
ஊற்றெடுக்கும் அன்பு
அந்தப் பனித்துளிகளைக் கரைக்கவல்ல
இரசாயனப்பொருளாக
இருக்கக்கூடாதா?
ஒவ்வொரு பூக்களும் உன் புன்னகையை
மணம் பரப்புகின்றன.
எங்கிருந்தோ வரும் கோவில் மணியோசை
உன் சிரிப்பல்லவா?
நெஞ்சை வருடிச் செல்லும் காற்று
உன் தென்றல் போன்ற
விரல்களல்லவா?
இதயத்தை இழுத்துச் செல்லும் இனிய இசை
உன் பேச்சு அல்லவா?
நான் ராஜாவாகப் போவதில்லை
நீயும் என்னுடன்
காட்டிற்கு அனுப்பப்படலாம் என்பதற்காக.
நான் ஜனாதிபதி ஆவதில்லை
எனக்காக நீ பழிவாங்கப் படலாம் என்பதற்காக.
நான் இரவினில் தூங்கப் போவதில்லை
என் கண்மணி நீ உலகை
இரவில் நிலவின் அழகை ரசிப்பதற்காக
உன்னை யாருக்கும் விட்டுத்தரப் போவதில்லை
வேறொருவர் உன்னை ரசிப்பதற்காகவேனும்.
உன் பார்வை பாதி பட்டாலே போதும்
நான் மோட்சமடைவேன்.
உன் விரல் பிடித்திடும் வரம்
ஒன்றே போதும்
நான் பிறந்த பயனை அடைவேன்.
உன் பார்வையின் அர்த்தங்களை
எழுதிட மட்டும் என் இதயப் பக்கங்கள்
போதுமாக இருந்தால்
இலக்கியத்திற்கான நோபல் பரிசை
இலகுவாக வாங்கியிருப்பேன்.
வந்தர்வால்ஸின் கவர்ச்சிவிசை உருவாவது போல
நீ ஒரு பார்வை பார்த்தாய் அன்பே!
என் கண்களில் ஆரம்பித்த குழப்பம்
காலத்தையே மாற்றி விட்டது.
இரவுகளைப் பகலாகவும்
பகல்களை இரவாகவும்
மாற்றி வைத்தவளே நீ தானே!
F=Gm1m2/r2
என்ற சமன்பாடு என்னளவில் பொய்யே!
இதன் தலைகீழே என் வாய்பாடு.
ஆம்-உன்னைப் பிரிந்திருக்கும்
நீ-நான் இடைத்தூரம் அதிகரிக்கும் போதல்லவா
உன் மீதுள்ள அன்பு இரட்டிப்பாகிறது.
உலோகப் பிணைப்பைப் போல
உனக்கும் எனக்குமான பிணைப்பு
வன்மையாக இருப்பதால்
எதற்கும் வளைந்து கொடுக்கத் தக்கவனாகிவிட்டேன்
அன்பே!
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
அப்போது எல்லாம் நழுவாத
இந்த மனது நீ கடந்து சென்ற போது
உன் காலில் விழுந்ததடி.
உன் கண்கள் எனைக் கட்டுப்படுத்தி ஆளும்
மேலதிகாரி.
நான் அதனிடம் கட்டுப்படுகிறேன்.
அவை என்னை விட வல்லரசு நாடுகள்.
அவற்றிடம் அடிபணிந்து சரணடைகிறேன்.
ஆனாலும் அவை அணுகுண்டுகளை வீசி
என் இதயத்தைப் பிளப்பது தர்மமல்லவே!
அணுகுண்டுகளால் நொந்துபோய்
சற்றே நிமிரும்போதும்
பூகம்பங்களையும் எரிமலைகளையும்
பரிசாகத் தருவது ஏன்?
நான் யப்பான் என்று எண்ணியா?
என் கதையும் கானமும்
ஏன்-கவிதை என்ற பெயரிலான கிறுக்கலும்
முடிவிலி போல் நீளும் இந்தக் கடிதத்தின்-இல்லை
என் நெஞ்சத்தின் குரலும்
உன் காதில் விழுந்தால் நான்
தன்னியனாவேன்-புண்ணியவானாவேன்.
பலரின் காதல்கதை நான் கேட்டேன்.
என் கதை நீ கேட்பாயா?
என் எண்ணங்கள்
நீ பார்த்துக் கொண்டிருக்கும் இந்தத்தாளை
கடிதம் என்ற பெயரில்
அசிங்கப் படுத்தி விட்டன என்றா
இதைக் கசக்கி எறிய நினைக்கிறாய்?
என் காதல் தாய்மையுணர்வு கொண்டது.
பிள்ளை நேசித்தாலும் வெறுத்தாலும்
நேசிக்கும் தாய் போன்றது.
காதல் என்ற பெயரில் எதையோ செய்து
அசிங்கம் செய்யும் காதல்கள் உண்டு என்பதால்
நான் உன் மீது கொண்டிருப்பதை
காதல் என்று சொல்லாமல்
உன் மீது கொண்ட
இறப்பற்ற
பூர்வ ஜென்மத் தொடர்பால் வந்த அபரிதமான அன்பு
என்றே சொல்கின்றேன்.
நீ இல்லாமலே-உனக்கு உருவம் கொடுக்காமலே
எனக்குள் வைத்து அழகு பார்த்தேன்
உன்னைக் காணும் வரை.
என்னதான் இருப்பினும் நீ-நீதான்.
ஆனால் நான் நானாக இல்லை இப்போது.
உன் விழிப்பார்வை
என் நெஞ்சத்தைத் துளைக்கும்போது-
உன்னை நான் நெருங்கும்போது-
தொடுதூரத்தில் நீ அமர்ந்திருந்தும்
அழைக்கமுடியாமல் நான்
அவஸ்தைப்படும்போது-
தொலைதூரத்தில் இனங்கண்டு
உன் கஞ்சமில்லாத சிரிப்பினால்
என் கண்களைக் களவாடும்போது-
சப்த சமுத்திரங்களும் எனக்குள் இருந்து
வியர்வையாய் ஊற்றெடுப்பானேன்?
அழகுத் தேவதையே!
உன் அலட்சியப் பார்வையுடனான திமிரால்
என் அசிங்கத்திமிர்
உலோகங்களில் மின்கடத்தலின்போது
இலத்திரன்கள் ஓடுவது போல ஓடிவிட்டது.
இரசாயனம் வாழ்க-பெளதிகம் பிழை
என்கிறது மனது.
நான் உன்னைப் பார்க்குமுன்
நடுநிலையான அணுவாக அல்ல-
இலத்திரனை ஏற்கத் துளியும் விரும்பாத
சடத்துவ வாயு நான் என எண்ணிப்
பெருமைப் பட்டுக் கொண்டேன்.
அந்தப் பெருமையை
நீ இப்போது தட்டிச் சென்று விட்டாய்.
நீ திண்மமாய் சடத்துவமாக
உறுதியாக இருக்கிறாய்.
உன்னுடன் தாக்கம் புரிவதற்காய்
வாயு மூலக்கூறுகளாய் வந்து
மோத முயல்கிறேன் நான்.
சடத்துவ வாயுக்கூட்டத்தில் உச்சியில் இருந்த நான்,
ஒரு கூட்டமும் ஆறு ஆவர்த்தனமும் தாவி,
கதிர்த்தொழிற்பாட்டு மூலகமாகவே ஆகிவிட்டேன்.
சடத்துவத் தன்மை கொண்ட இலட்சியவாயு ஒன்று
அமுக்கப்பட்டு திண்மமாக என் முன்னே
வந்து நின்ற விந்தை கண்டேன்.
சும்மாவல்ல!சிற்பமாக!
என்னை அழவைத்து,
வெள்ளிப்பனிக்குடங்களாய்
என் கண்களில் இருந்து சிதறும்
நீர்த்துளிகளை
இலைகளிலும் இதழ்களிலும்
ஏன் தான் பூசி
அழகு பார்க்கின்றாய் தேவதையே!
”என் கல்லறையில் எழுதி வையுங்கள்
அவள் அன்பில்லாதவள் என்று”
என்று உன்னைப் பார்த்துத்தான்
கண்ணதாசன் எழுதியிருப்பானோ?
அது போகட்டும்-ஆமாம்
என்னிடம் இருந்து திருடிய
இதயத்தை-இரவுகளை
நிம்மதியை-உறக்கத்தை
எல்லாம் யாருக்குப் பரிசளித்தாய்?
பார்த்தலின் சக்திமாற்றம்
ஒளிச்சக்தி மின்சக்தி என்பது சரிதான்.
உன் பார்வையின் ஏற்றங்கள்
என் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி,
குறித்த ஒரு ஏற்றத்தைத் தோற்றுவிப்பதால்.
அலைகளினைப் பார்த்து அழுகின்றேன்-
உன்னைப் போல் தான் நானும் என்று-
என்னவளும் கரை போல் தான்...
என் எண்ண அலைகளில் அழைத்தாலும்
என் செயல் அலைகளால் அவள் கரையவில்லை என்று.
நீ கரைதான் அன்பே!
என் மனதில் பொங்கும்
காதல் கடலைக் கட்டுப்படுத்துவதால்
மட்டுமல்ல.
நான் உன்னை உணர்வு பூர்வமாகத்
தொட்டுப் போக முயன்று
தோற்றுப்போனாலும்-
தொட்டுப்போனாலும்
நீ என் பக்கம் வர மறுப்பதால்.
என் காட்டில் மழை-கவிதை மழை.
என் இதயத்தினை உடைத்து
உணர்வை ஊற்றி
மனதை நிறைக்கும் பக்கங்களான
பிரியமான உன்னை
என் கவிதாதேவியாகவே
இதயத்தில் பூஜிக்கிறேன்.
நான் கடன்காரனானேன் உன்னால்-
உன்னை வர்ணிக்க வார்த்தை போதாமல்
விஞ்ஞானத்திடம் கையேந்தி நின்று.
பனிக்குடங்களாய் உதிரும் கண்ணீர்த்துளிகள்
உன் பார்வை வெப்பத்தால் உருகி நீராகின்றன.
அணுவின் பெரும்பகுதி வெற்றிடம்-
உனக்கும் எனக்குமான தொடர்பு போல.
உனக்கும் எனக்குமான தூரம்
இலத்திரனுக்கும் கருவிற்குமான தூரம் போன்றது.
உன் கவர்ச்சி விசையால் தான்
உன்னையே வலம் வருகிறேன்
இலத்திரன்போல.
ஆரை கூடிய தாக்குதிறன் குறைந்த
ஒரேயொரு திண்மமூலகம்
நீ தான்!
நீயோ மெய்வாயு-அதனால் தான்
எந்த வாயுச் சமன்பாட்டையும்
திருப்தி செய்ய மறுக்கிறாய்.
உன்னை மறக்க யுகங்கள் போதாது.
பிரளய கால வெள்ளத்திலும் அதிகமாக அல்லவா
நான் உன் மீது காதல் கொண்டு விட்டேன்.
கனிவாகத்தான் நீ பார்க்கிறாய்.
எனக்குள் எரிமலை வெடிக்கிறதே!
அசோகவனத்துச் சூர்ப்பனகை போல
ஆண்வர்க்கச் சூர்ப்பனகனாகத் தான்
என்னை நீ பார்க்கிறாயா அன்பே!
காலையில் கல்யாணியும்
இராத்திரியில் நீலாம்பரியும்
மாலையில் ஹம்சத்வனியும்
இசைத்த என் மனம்
எந்நேரமும் முராரி இசைப்பது
உனக்கு ரீங்காரமாய்க் கேட்கவில்லையா?
உன் நினைப்பால்
என் நிஜவாழ்க்கைக்கோ சோகம்.
என் கவிவரிகளுக்கோ லாபம்!
இதயத்தில் ஒரு பாரம் தான் நீ!
நீ போனால் எளிதாகும் என்று சொல்ல மாட்டேன்.
நீ என்னைத் திரும்பிப் பார்க்கமாட்டாயா?
உடைந்த கண்ணாடி போல் இருக்கும்
நமக்கிடையான உறவு ஒட்டாதா
என ஏங்குகிறேன்.
நெப்போலியன் ஒரு மாவீரனல்லன்.
அவன் வீரம் ஜோசபைன் முன்னே
தோற்றுப் போனது.
அலெக்ஸாண்டரின் வீரம் கிளியோபாட்ராவின் முன்
மண்டியிட்டது.
மாவீரன் உண்மையில் யார் தெரியுமா?
தன் காதலி கண் பார்த்து
காதல் சொல்பவன் தான்.
என் உணர்வு வெளியே சொல்லாததால்
நெஞ்சை அழித்து-சிறுகச் சிறுக
உடலை அழித்து
உயிரைக் குடிக்குமுன்
வந்துவிடு அன்பே!
உன் நேசத்தை
நெஞ்சம் நெகிழ எடுத்துரைக்க.
காத்திருப்புடன்
அன்பகலாப் பிரியங்களுடன்
உனக்காக உயிர் வாழும் ஒருவன்!
No comments:
Post a Comment