அரகர சங்கரி நாரி மனோகரி
ஆதி புராந்தக அம்பிகையே
முரகரி மாதவ சோதரி மாதவி
மோகவிலாசினி முக்கனியே
மரகத ரூபிணி மாதுமனோன்மணி
மகபதி பாணிப வாணியளே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!
திருவருள் எங்கணும் தேக்கிட மங்கலச்
சீரறம் செய்யன்ன பூரணியே!
உருவருள் கொண்டுலகுய்ந்திட மாதவம்
ஓம்பிடும் காஞ்சியுமையவளே!
குருவருள் பொங்கிடக் குஞ்சித பாதமென்
கூப்பிய நெஞ்சினில் கோலிடுவாய்
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!
அருளுரு நெஞ்சினில் அம்புயக் கண்களில்
ஆட்சி புரிந்திடும் அன்னையளே!
பொருளுறு புன்னகை பொங்கிட வந்தருள்
பூங்கணை ஏந்திய பொன்மகளே!
மருவறு சேவடி வாழ்த்தி வணங்கிட
வல்லமை தந்தருள் வைணவியே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!
தனதன தந்தன தானன தந்தன
தாந்திடு தோமெனத் தாண்டவமே!
கனதனம் பம்பிடக் காற்சிலம்போங்கிடக்
காந்த கனன்றிடும் காளியளே!
மனதெனும் மன்றிலமர்ந்தனள் ஊக்கிடும்
மந்திர தந்திர மாமணியே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!
செகமதில் காணுமெச் சன்னிதியாயினும்
தேவியுன் ரூபமென் சிந்தனையே!
முகமதில் சந்திர பிம்பமெனும்படி
மோகனப் புன்னகை பூப்பவளே!
இகமதில் சாந்தியும் இல்லற மேன்மையும்
ஈந்திட வந்தருள் ஈகையளே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!
good. thanks
ReplyDelete