Saturday, December 10, 2011

எதிர்பார்ப்பு.


ந்த அழகிய தென்னந்தோப்பினூடே செல்லும் ஒற்றையடிப் பாதை வழியே ஆதவன் சென்று கொண்டிருந்தான்.அவன் மீது வைத்த விழியை வாங்க முடியாதவளாய் நின்றாள் அவன் தாய் பார்வதி.அவள் மனம் கடந்த காலத்தை ஒரு முறை மீட்டிப் பார்த்துக் கொண்டது....
யுத்தம்,இடப்பெயர்வு,வறுமையின் அவலத்திற்கு நடுவேயும் தந்தையில்லாத ஆதவனை மிகவும் கஸ்டப்பட்டு கூலிவேலை செய்து, சின்னச் சின்ன வீட்டுவேலைகளில் இருந்து கட்டடங்களிற்கு கல்லறுத்தல் வரை பல்வேறு வழியில் உழைத்துப் படிக்க வைத்தாள் அவன் தாய் பார்வதி.அவளுடைய உறவினர்கள், அவளின் கணவன் இறந்த பிறகு, அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைகளாய் உறவையும் அறுத்துக் கொண்டார்கள்.கணவனின் உறவுகளோ அவளை ஏமாற்றிப் பொருள் பறிக்கத் திட்டமிட்டார்கள்.சிறு சண்டைகள் புயலாகி சொந்தங்களை அவளை விட்டு விரட்டி விட்டது.அவளுக்கிருந்த ஒரே சொந்தம் அவளின் ஒரே மகனான ஆதவன் மட்டும் தான்.ஆதவன் மிகவும் சாந்தமானவன்:வீட்டுக் கஸ்டம் உணர்ந்து, மற்றைய நண்பர்கள் போலன்றி-ஊர் சுற்றாமல்,அரட்டை அடிக்காமல்,அது வாங்கித் தா இது வாங்கித்தா என்று அடம்பிடிக்காமல் தன் கல்வியே கண்ணென எண்ணிக் கற்றுவந்தான்.
அவன் கல்வியில் உயர உயர, அதற்குப் போட்டியாக பார்வதியின் உடல்நிலையோ அதிகரிக்கும் வீதத்தில் பாதிப்படைந்துகொண்டே வந்தது.அவள் கஸ்டங்களிற்கு எல்லாம் தீர்வாக,ஆதவன், “வைத்தியர்”  என்ற பெயருடன் தன் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.பார்வதி பரவசமடைந்தாள்.தன் மகன் Doctor என தன் வாய்வலிக்கும் வரை சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதமடைந்தாள்.அவளின் உழைப்பிற்கு விளைச்சல் கிடைத்திருக்கிறது. அவளின் பாடுபடலிற்குப் பரிசு கிடைத்திருக்கிறது. அவளின் இறுதி மூச்சுவரை அவள் நிம்மதியாய் வாழலாம் என்ற அவளின் எண்ணத்தில் மண்ணைப் போடும் விதமாக ‘பிரியாஎன்பவள் புதிதாக முளைத்தாள்.
பிரியா-நல்ல அழகி:அத்துடன் நல்ல படிப்பும் இருந்தது.பெண்ணுக்குப் பெண் ஆசை கொள்ளும் தோற்றம். நாகரிகத்தின் சிகரத்தில் அவள். அவளைப் பொறுத்தவரை பாசம், பரிவு, இரக்கம் இவை எல்லாம் ஏளனப் பொருட்கள். அவற்றை கிலோ எவ்வளவு என்று கேட்கும் ரகம். அவற்றையும் பட்டிக்காட்டுப் பொருட்களாக ஒதுக்கிவிட்டாள் போலும். உதட்டிலே புன்னகையும் முகத்திலே கடுகடுப்புமாய் வலம் வந்தாலும் ஆதவனை அவள் நன்றாகவே கவர்ந்து விட்டாள். இல்லாவிட்டால், திருமணமே செய்யாது, தன் தாய்க்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கப் போவதாகச் சொன்ன ஆதவன், அவள் பின்னால் அலைந்திருப்பானா?
இதனை நினைக்கும்போது, பார்வதிக்குத் தன் மீதே வெறுப்பாய் இருந்த்து.அடி முட்டாளே, உன் மகன் கல்யாணம் செய்யாமல் வாழ்ந்து உனக்குக் கறுமாதி செய்யணும்னு எதிர்பார்த்தியா?என்று தன்னைத் தானே கடிந்துகொண்டாள். பிரியா எப்படிப்பட்டவளாக இருந்தாலும், அவளின் மருமகள்-இல்லை இல்லை அவளின் மகனின் மனைவி. ஆம்! பார்வதியைப் பொறுத்தவரை ஆதவனுக்கு அடுத்ததாகத் தான் அவள் பிரியாவைப் பார்த்தாள். ஆனால், ஆதவனோ, பிரியாவிற்கு அடுத்ததாகத் தான் பார்வதியைப் பார்த்தான். இல்லா விட்டால் தாயின் சம்மதம் இன்றி ஒரு வார்த்தையேனும் சொல்லாது, பிரியாவைத் திருமணம் செய்து இருப்பானா?
இந்தச் சம்பவம் அவளைப் பலமாக உலுக்கி விட்டது. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அவளே பிரியாவைக் கல்யாணம் செய்து வைத்திருப்பாள். ஒருவேளை, தன் தாய்க்கு அளித்த வாக்குறுதி அவனை உறுத்தி இருக்கலாம். அந்தக் கூற்றை மெய்யென்றெண்ணி வாழ்ந்த தன் தாய், திருமணத்திற்கு ஒப்ப மாட்டாள் என்று அவன் நினைத்திருக்கலாம். ஆனால், அவளால் அதைத் தாங்க முடியவில்லை. “நானென்ன அவ்வளவு கேவலம் கெட்டவளா-என் மகனைத் திருமணம் செய்யாது, எனக்குப் பணிவிடை செய்யுமாறு சொல்லஎன்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அவளின் தாயுள்ளம் தன் செல்ல மகனுக்காக பிரியாவையும் ஏற்றுக் கொண்டது. பிரியா தான் பார்வதியை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். நாகரிகத்தையே தன் நடையுடை பாவனைகளில் காட்டிக் கொண்ட அந்த நங்கை, தானும் ஒரு காலத்தில் ‘கிழவிஆகப் போவதை மறந்து விட்டாள் போலும். இல்லை என்றால், பார்வதியை-தான் அவளது மருமகள் என்று மனதில் எண்ணாமல், “எடி கிழவி, வெளியே போஎன்று திட்டியிருப்பாளா? சில சமயம் அவள் வேடிக்கைக்காகச் சொல்லியிருக்கலாம் என்று நினைத்தாள் பார்வதி. கால மாற்றத்தை அவள் அறிவாள். Generation gap ஐக் குறைக்க அவள் இறங்கி வந்தாள். அது தப்புக் கணக்காகிப் போய்விட்டது.என்ன பிள்ளை விளையாடுற நேரமே இது? என்று சிரிப்புடன் கேட்டாள் பார்வதி.
அதனைத் தொடர்ந்து, பிரியா என்னென்னவோ ஏசினாள். ஆங்கிலத்தில் ஏதேதோ எரிந்து விழுந்தாள். காதல் மொழி பிரெஞ்சு என்பார்களே! இப்படியான இடங்களில் ஏச்சு மொழியாக ஆங்கிலம் மாறிப் போனது சற்று வியப்பிற்குரியது தான். உணர்ச்சிப் பெருக்கில் தாய்மொழி வெளிப்படும் என்பார்களே! விதிகளிற்கான விதி விலக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியலின் அறுவடையில் இதுவும் ஒன்றோ? ஆங்கிலம் பார்வதிக்குப் புரியவில்லை. அவளின் பாசை புரியவில்லையேயொழிய அவளின் குணம் பார்வதிக்கு நன்றாகவே புரிந்து விட்டது. அவள் என்ன பாசையிலும் தன்னைத் திட்டட்டும். தன் மகனைத் தான் ஒருமுறையாவது பார்க்க அனுமதிக்கலாமே என்ற எண்ணம் தான் அவளிடம் மேலோங்கி நின்றது. அந்த நினைப்பு அவளை பிரியாவின் வீட்டுவாசலில் தொடர்ந்து நிற்பதற்குத் துணை புரிந்தது.
பிரியாவோ அவள் மனதைப் புரியாதவளாகவே இருந்தாள். நினைவெல்லாம் தன் மகனே என்று தனக்காக ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு வாழ்ந்த அந்தத் தாயுள்ளத்தை அவள் அறிந்திருக்க நியாயமில்லை தான். அவள் முகத்தில் இருந்த ரெளத்திரம், உக்கிரம் கூடிக்கொண்டே வந்தது. ஏச்சு வல்லினத்தில் உச்சஸ்தாயியில் தொடர்ந்தது. அவள் பேசும் வார்த்தை புரியவில்லை. அது புரிந்தாலென்ன? புரியாவிட்டாலென்ன? அவளின் நிலை புரிந்தது பார்வதிக்கு. தனக்காகத்தான் கடவுள் உணர்ச்சிகளை முகத்தில் காட்டும்படியாய் மனிதனைப் படைத்தானோ என பார்வதியின் மனம் எண்ணமிட்டது. பிரியாவின் ஏச்சிலே அவள் மனதில் அவள் தன் மகன் மீது வைத்திருந்த பாசத்துடன் சேர்த்து கவலையும் வந்து குடிகொண்டது. கவலைக்கு இடம்கொடுப்பதற்காகவோ என்னமோ அவளின் பாசம் கண்ணீராய் கன்னம் வழியே வெளியேறிக் கொண்டிருந்தது. ஆனால், அவளின் உடல் முழுவதும் பரவியிருந்த பாசத்தை வெளியேற்றவா முடியும்? அவளின் நாடி, நரம்பெங்கும் அவள் மகனல்லவா நிலைத்திருக்கிறான்! அவள் எண்ணம் முழுவதும் அவனல்லவா வியாபித்திருக்கிறான்! அவளின் உயிர் கூட அவனுக்காக அல்லவா வாழ்ந்தது-வாழ்ந்துகொண்டிருக்கிறது.
பலிக்கடா வெட்டப்போகும் கொலையாளியைப் பார்த்துக் கத்துவது போல ஈனஸ்வரத்தில் தன் மகன் எங்கேயென்று கேட்டாள். “அவர் வேலைக்குப் போட்டார்என்ற பதில் மட்டும் பதிந்து வைக்கப்பட்ட ஒலிப்பேழையின் குரலாய் வெளிவந்தது. அதனைப் பொய்ப்பிப்பதாய் அமைந்தது ஆதவனின் வீட்டுக்குள்ளிருந்தான வருகை! “ஏனப்பா இப்படிக் கத்துகிறாய்? என்றவாறு வந்தான் அவன். தரிசனம் கிடைத்த திருப்தியோ பார்வதிக்கு. பிரியா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பார்வதி மகனைப் பார்த்தாள். அவன் தாயைப் பார்த்தான். தாயின் பார்வையிலே பரிவு பொங்கியது. அவன் பார்வை வித்தியாசமாக இருந்தது. வழமையாக அவன் கண்ணில் மிதக்கும் பரிவை அவளால் காணமுடியவில்லை. ஸ்றீராமன் கண்ட புதுக் கைகேயியும் (காட்டுக்குப் போகக் கட்டளை விதிக்கையிலான தோற்றம்) இப்படித் தான் இருந்திருப்பாளோ?
முதல்ல நீங்க உள்ள போங்கபிரியாவின் கட்டளையைச் சிரமேற்தாங்கி ஆதவன் உள்ளே போனான் பாரவதியின் கண்கள் அவனைத் தொடர்ந்து வர. “ஏ கிழவி, உனக்கு என்ன வேணும்கூச்சலில் திடுக்கிட்டாள் பார்வதி. “என் மகனுக்கு வெட்டுப் பலகாரம் என்றா உசிரு. அது செய்து கொண்டு வந்திருக்கிறன். ஒருக்கா நானே ஊட்டி விட்டுட்டுப் போகட்டா?.......திக்கித் திணறி ஆயுததாரியின் அதட்டலுக்கு பதில் சொல்லும் இளைஞனாய்க் கூறி முடித்தாள்.
“வெட்டுப் பலகாரம்....what? பட்டிக்காட்டுப் பலகாரம். அவர் ஒரு doctor. பட்டிக்காட்டுப் பலகாரம் சாப்பிடணுமா? அதை நீ ஊட்டி விடணுமா?சற்று இளக்காரமாகவே கேட்டாள் பிரியா. பட்டிக்காடு என்று அவள் நினைக்கும் அந்தத் தாயின் இரத்தம் தன் கணவன் உடலில் ஓடிக் கொண்டிருப்பதை மறந்து விட்டாள் போலும். “அடியே ராட்சசி, அவன் doctor ஆக முந்தி அதைத் தாண்டி திம்பான். அவனைச் சுமந்த உடம்புடி இது. இந்த வயிறு வேகுதே. நீ நல்லா இருப்பியா? இந்தக் கையால் தான் இத்தனை நாளா ஊட்டி விட்டேன். இப்ப அதே சாப்பாட்டை என்னோடை கையால ஊட்டி விட்டா என்ன? நோயா தொற்றும்?என்று கத்த வேண்டும் போல் இருந்தது பார்வதிக்கு. தன் மகனுக்காகப் பொறுத்துக் கொண்டாள். தான் அவ்வாறு கத்துவது மகனுக்கு மரியாதை இல்லை. சுற்றி இருப்பவர்கள் தன் மகனைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மெளனியானாள் அவள். அவளின் எண்ண அலைகள் ஆதவனைத் தாக்கியோ என்னமோ, அவன் வெளியே வந்தான். “இருக்கிற தலையிடிக்க உன்ர தொல்லை பொறுக்கேலாதாம்.போ....போ....இனி மே வராதே”. அவன் போய் விட்டான். சற்று ஆடித் தான் போய் விட்டாள் பார்வதி.
திரும்பினாள் வீடு செல்ல. அதற்கு மனம் இல்லை. ஊர் எல்லையில் தென்னந்தோப்பிற்கு காவல் போல் நின்ற அரச மர நிழலில் அமர்ந்தாள். இப்போது சின்னதாய் நிற்கும் தென்னம்பிள்ளைகள் நாளை வளர்ந்ததும் அரச மரத்தை விரட்ட நினைக்குமோ? அவற்றிற்கு கீழே நிற்கும் அன்னாசிகளும் அதைப் பின்பற்றக் கூடும். அவள் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அரச மரம் “பாசம் பொய் என்று ஞானமும் கொடுக்கவில்லை அவளுக்கு. அவள் மகன் மீது கொண்டிருந்த பாசம், அவன் சற்று நேரத்திற்கு முன்னர் கொட்டிய வார்த்தைகளின் உஸ்ணம் தாங்காமல் கண்ணீராய் உருகிக் கொண்டிருந்தது. ஆனால் அவளால் மகனை வெறுக்க முடியாது. அதனால் தான் கண்ணீர் வெளிவர முடியாது கண்ணிற்குள் த்தும்பி வெளிக் கிளம்ப வழியின்றித் துடிக்கின்றது போலும்.
கண்ணை மெல்ல விழித்தாள். கண்ணை விழித்ததும், கண்ணெதிரே அவள் கண்ணன் நின்றுகொண்டிருந்தான். அவள் யசோதாவாய் உருகினாள். மன்னிப்புக் கேட்க வந்திருப்பானோ? நினைக்கவே இனித்தது. ஆதவன், தான் அந்த உயர்ந்த உள்ளத்திற்கு-யசோதைக்கு மகனாக நடந்துகொள்ளும் தகுதி தனக்கு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஏசினான். வார்த்தையில் கனல் பறந்தது. “உனக்கு நான் நிம்மதியாய் இருப்பது பிடிக்கேல்லையோ? ஏன் அங்க வாறாய்?என்றெல்லாம் ஏசினான். அவளுக்குப் பிரியா சொன்ன வார்த்தைகள் மண்டையில் ஏறவேயில்லை. ஆனால்......ஆனால்....அவள் மகன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சைப் பிளந்து விட்டன: உறைத்தன: திரும்பத் திரும்ப எதிரொலித்தன. மண்டையில் யாரோ ஓங்கி சுத்தியலால் அடித்தது போன்ற ஒரு பிரமை. அவள் மகனை நோக்கினாள். அவனோ சினிமா நாயகன் நடக்கும் பாணியில் போய்க் கொண்டிருந்தான்.
தன் குடிசைக்கு ஓடினாள்: தான் வணங்கி வந்த கருமாரியம்மனிடம் தன் மகன் நன்றாக வாழவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். கண்கள் இருண்டன; உலகமே இருள்வது போலத் தோன்றிற்று. அவள் நெஞ்சு பிளப்பது போன்ற பிரமை! கணநேர அமைதி! புயலுக்கு முன்னான அமைதி! அவள் இதய நாடிகள் வெடித்து.......அவள் ஜீவன் புறப்பட்டு விட்டது. தன் மகன், தனக்கு இறுதிக்கிரியை செய்யவாவது வருவான் என்ற எதிர்பார்ப்போடு அந்தப் பாசப்பறவை போய்க் கொண்டிருந்தது இறுதி நோக்கி!
முற்றும்.

Friday, September 9, 2011

உலக அழகியாவதற்கு வேண்டிய அங்க லட்சணங்கள்

உலக அழகியாவதற்கு வேண்டிய அங்க லட்சண்ங்கள் என்னவென்று ஜரோப்பாவில் கூடிய
சர்வதேச நாகரிக மகளிர் அமைப்புச் சொல்கிறது
1. இங்கிலாந்துப் பெண்ணின் நிறம்
2. ஜரிஸ் புன்னகை
3. பிரெஞ்சுக்காரியின் உடல் வளைவுகள்.
4. ஸ்பானிஸ் நடை.
5. இத்தாலி தலைமுடி.
6. எகிப்துக் கண்கள்.
7. கிரேக்க மூக்கு.
8. அமெரிக்கப் பெண்ணின் பற்கள்.
9. வியட்னாக் காரியின் குரல்.
10. ஜப்பானியரின் சிரிப்பு.
11. அர்ஜண்டீனாக் கழுத்து
12. ஸ்கண்டிநேவியக் கால்கள்
13. சீனாக்காரியின் பாதங்கள்.
கூடவே இதையும் நாம் சேர்த்துக் கொள்வோம்,
14.ஈழப் பெண்ணின் மனம்.
இதை ஒரு புத்தகத்தில் படித்தனான் அதை உங்களுக்காக

Sunday, August 28, 2011

லவ் கண்ணா லவ்.


ஒரு தலைக் காதல் பற்றி ஒரு நண்பர் சொன்னது இது. அந்நண்பரின் அனுமதியுடன் இதனை உங்களுக்குக் கூறுகிறேன்.Bracket  கருத்துக்கள் என்னுடையவை. ஸோ நான் சொன்னதா சொல்லிக் கொண்டு நீ ஏதோ உளறி இருக்கியேன்னு கோவிக்க வேண்டாம்னு அந்த நண்பரைக் கேட்டுக் கொள்கிறேன்.நிலவை வானத்தில் பார்க்கிறோம். அவ்வாறு பார்த்துக் கொண்டே நாம் நடந்து சென்றால் நிலா நம் கூடவே நடந்து வாற மாதிரி ஒரு தோற்றப்பாடு ஏற்படும். ஆனா அப்பிடித் தான் மற்றவங்க கூடவும் நிலா போய்க்கொண்டிருக்கு என்று ஒரு குழந்தைக்குத் தெரியாது. அது மாதிரித் தான் ஒருதலைக் காதலும்.......நாம அவங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பம். அவங்க தற்செயலாத் திரும்பும்போது நம்மைப் பார்க்க நேரிட்டாலும் என்னவோ நம்மைப் பார்க்கத் திரும்பியது போல் தான் இருக்கும். அவங்க சிரிக்கும்போது என்னவோ நம்மைப் பார்த்து சிரிப்பது போல்தான் இருக்கும்.(காவலனில் வடிவேலுக்கு அப்பால் இருந்த பெண்ணைப் பார்த்து சிரிக்க வடிவேலுக்குத் தன்னைப் பார்த்து சிரித்தது போல் தோன்றுமே.....கிட்டத்தட்ட அப்பிடித்தான். ). காதல் வந்தால் ஒரு சில பாடல்களைக் கேட்கும் போது ஏற்படும் கிறக்கம் சொல்லில் அடங்காது. அது ஒரு வகை போதை....தனி சுகம்.....சிறகு கட்டிப் பறப்பது போன்ற உணர்வு......மனதுக்குள் மழை கொட்டுவது போல் இருக்கும். காதல் வந்தால் எந்த மடையனுக்கும் கூட கவிதை வரும்......(பேப்பரும் பேனாவும் வச்சுக்கொண்டு கவிதைக்கு எதுகை மோனை தேடி முழி பிதுங்குபவர்கள் கவனத்திற்கு....). (காதலிப்பவன் எழுதும் கவிதைக்கும் காதலிக்காதவன் எழுதும் கவிதைக்கும் ஒரு வித்தியாசம் தான்.....கவிதையில் உயிரோட்டம் இருக்கும் என்றால் அது முதலாம் வகை தான்...அல்லாமல் வெறும் அலங்கார வார்த்தைகளுடன், நல்லா இருக்கு....ஆனா ஏதோ ஒண்டு குறையுதே.....என்பது போல் இருந்தால்(ஃபோ(ர்) எக்ஸாம்பிள் கவிதை என்ற பெயரில் நான் எழுதுவது) அது இரண்டாவது ரகம்தான்....ஸோ ஒருவரின் கவிதையே காட்டிக் கொடுத்திடும் அவங்க காதலிக்கிறாங்களா இல்லையான்னு...எவருமே காதலித்துக் கொண்டு நான் யாரையும் காதலிக்கலை....அப்பிடின்னு காதில (B)பொக்கே எல்லாம் வைக்க முடியாது. ஏன்னா காதில வச்சா (B)பொக்கே விழுந்திடும்.....உன் மொக்கை போதும்...மேட்டருக்கு வா என்கிறீர்களா? ஓக்கே...தங்கள் சித்தம் என் பாக்கியம்). வாழ்க்கையில் திடீர்னு ரொம்ப சந்தோசமாக இருக்கணும்னு தோன்றினா காதலியுங்க...காதல் கை நழுவினா கிடைத்த சந்தோசத்திலும் அதிக கவலை ஏற்படும்.(காதல் போதை மருந்தாக்கும். அது தானே திடீர் உற்சாகம் தரும். பிறகு ஆப்பு வைக்கும்......) ஆனா....காதலிக்கிறவங்க ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. (ஹப்பி வேஸஸ் ஒருவரின் லைஃப் டேய்ஸ் கிராஃப் கீறினா அதில் திடீர் அதிகரிப்பு ஒண்டு இருந்தா அது லவ்வால வந்தது ஆக இருக்கும்.....அடடா....கோபப்பட்டாலும் நீங்க அழகு தான்.....கூல்)....”.......இவ்வளவு இருக்கா லவ்வில? எனக்குத் தெரியாதுங்கோ....உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.....பி.கு:தயவு செய்து என்னோட மொக்கைக்காக இல்லாட்டிக்கும் நண்பரோட கருத்துக்காகவாவது இதை லைக் பண்ணிக் கொமன்ற் பண்ணுங்க...ப்ளீஸ்....இதுக்கு நீங்க கொடுக்கிற ஆதரவில் இருந்து தான் இந்த ரொபிக்கில் எழுதுவதை தொடர்வதா இல்லையான்னு நான் தீர்மானிக்கலாம்...எங்கிட்டை இன்னும் வேற நண்பர்கள் சொன்னதும் இருக்கு.....ஆதரவு கொடுப்பீங்க தானே! ஏன்னா லவ் என்பது நடைமுறைக்கு எப்படியோ எனக்குத் தெரியாது...கதைக்குறதுக்கும் எழுதுவதற்கும் இன்றெஸ்ரிங் சப்ஜெக்ட்டாமே! உண்மையா?

அச்சும்......அச்சும்.....


தும்மல் வரும்போது யாரோ நினைக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் தானே! தூசி பட்டுத் தும்மல் வந்தாலும் பிரியமானவர்கள் தான் நினைக்கிறார்கள் என்று மனதுக்குள் பீத்திக்கொள்ளும் பைத்தியக்காரக்(sorry.....sorry...இடைக்கிடை உண்மைகளும் சொல்லுவன்....மன்னிச்சிடுங்க) காதலர்களுக்கும் இது எல்லாம் பொய்....மூட நம்பிக்கை...என்று சொல்லிக் கொண்டு திரியும் பகுத்தறிவுவாதிகளுக்கும் ஒரு விசயம் சொல்லப் போகிறேன்...தும்மல் பற்றி.....அட...தூசித்தும்மல் பற்றி இல்லைங்கோ...உண்மைத் தும்மல் பற்றி...நாம யாரையாவது ஊன்றி நினைத்தால் அந்த நினைவால் எமது மூளையில் ஒரு அதிர்வு உண்டாகிறதாம்...அதன்போது நினைவு அலைகள் எனப்படும் ஒரு வகை அலை காலலாக்கப்படுமாம்...அது எங்கு சேரும் என்றால் நாம் யாரை நினைக்கிறோமோ அவர்களின் மூளையில் தும்மலைத் தூண்டும் பகுதியைத் தான்....உடனே ஒரு அச்சும்....இருபத்தாறுக்குள் ஒரு நம்பர் சொல்லு....அதை விடுங்க....எல்லாரும் நான் ஒரு அறிவாளி(??????சும்மா ஒரு மன சந்தோசத்துக்காக என்றாலும் பொய் சொன்னாத் தப்பா?) என்றதால இது நான் கண்டு பிடிச்ச விசயம்னு எல்லாரும் நினைப்பீங்க என்று எனக்குத் தெரியும்....(நோ..நோ....பேச்சுப் பேச்சா இருக்கணும்...)ஆனா இது நான் சொல்லலை..."Mesmerism & Hypnotism"
இல் தான் இருக்கு....சத்தியமா....நம்புங்க...

அதிசயம்...ஆனால் உண்மை

மூலகங்களின் கதிர்த் தொழிற்பாடு பற்றி படித்திருப்பீர்கள். ஆனாலும் நான் சொல்லப் போவது உங்களுக்குப் புதுமையானதாக இருக்கலாம். மனித உடல் கூட கதிர்த் தொழிற்பாட்டு மூலகம் போலத் தானாம். சிறிய அளவில் கதிர்களை வெளிவிட்டுக் கொண்டு தானிருக்கிறதாம்.நம்மில் சிலருக்கு சிலரைக் கண்டாலே ஆகாது. அவர்கள் நமக்கு கூடாதது எதுவுமே செய்திருக்க மாட்டார்கள். ஏனோ பிடிக்கவில்லை என்பது போல...ஆனால் சிலரை ஏன் என்று தெரியாமலே பிடிக்கும். ஆனால் அவர்கள் நமக்கு நல்லது எதுவுமே செய்திருக்க மாட்டார்கள். ஏனோ பிடிக்கிறது என்பது போல.....இதுக்கெல்லாம் காரணம் இல்லாமலில்லை. உங்கள் உடலில் இருந்தான கதிர்ப்பு இன்னொருவரின் உடலில் இருந்தான கதிர்ப்புடன் ஒத்துப் போவதாக இருந்தால், அவர்களுடன் உங்களுக்கு ஒத்துப் போகும். இல்லைன்னா மல்யுத்தம் தானுங்கோ...அது சரி சிலரை மட்டும் எல்லாருக்கும் பிடிக்குதே(என்னை மாதிரியான ஆக்கள்...ஐயோ...சும்மா ஒரு பேச்சுக்குத் தானே சொன்னன். ஏன் இப்படி ஆந்தை மாதிரி முறைச்சுப் பாக்கிறீங்க?) ஏன்? அவங்க கண்ணில மற்றவங்களுக்கு இருப்பதை விட அளவுக்கு அதிகமான ஆகர்ஸண சக்தி இருக்கெண்டு அர்த்தமாம். எங்க ஆகர்ஸண சக்தியை எப்புடி கூட்டலாம்னு என்னைக் கேட்காதீங்க. எனக்குத் தெரிந்தால் நான் இப்படியா இருப்பேன்? தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கப்பா...

1 ஏப்ரல் 2011 முட்டாள்கள் தின செய்தி


முதலில் எல்லோருக்கும் உலக முட்டாள் தின நல்(?)வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முட்டாள் தினம் என்பது வெறுமனே மற்றவர்களை நோண்டியாக்குவதற்காக அல்ல. மற்ற நாட்களில் மற்றவர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்று விழிப்பாக இருக்கிறோமோ இல்லையோ முட்டாள் தினத்தில் விழிப்புடன் இருப்போம். இருந்தாலும் சில நேரங்களில் நாம் அசரும் நேரம் பார்த்து யாராவது நம்மை ஏமாற்றி விடுவார்கள். வாழ்க்கையில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றேல்,யாராவது நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்ற உண்மையை இது புலப்படுத்துகின்றது. சில நேரங்களில் யாராவது அசரும் நேரம் பார்த்து நாம் அவர்களை ஏமாற்றிட முயல்வோம். அவர்கள் விழித்துக் கொண்டிருந்தால் ந்ம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கி விடுவார்கள்.அதாவது நாம் யாரையும் ஏமாற்ற நினைத்தால் நாமே ஏமாந்து விடுவோம். யாரையும் ஏமாற்றாதீர்கள்.யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள் என்பதே முட்டாள்தினம் நம் ஒவ்வொருவருக்கும் சொல்லும் செய்தியாகும். முட்டாள்கள் சங்கத் தலைவி
(ஏமாந்தீங்களா? என்னை முட்டாள்கள் சங்கத் தலைவி என்று நம்பி.....)