Monday, December 29, 2014

இன்பமான வலி

29/12/2014

நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்தபோது ஒரு இளம் அம்மா, அவரின் நான்கு தவ்வல்களோட எனக்கு பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தார்... திடீரென்று புறப்பட்டதாகவும் வந்த மூன்றுசக்கரவண்டி விபத்தானதாகவும் பஸ்ஸில் இருக்கை போதவில்லை என்றாலும் பரவாயில்லை என்றும் சொன்னார்... மூன்று இருக்கைகள்... ஒன்றில் நான்.. (ஒரு இருக்கை எனக்கு ரொம்ப அதிகம் என்பது வேறுகதை...) மற்றைய இரண்டிலும் அந்த அம்மாவோடு சேர்த்து ஐந்து பேர் இருந்தாக வேண்டும்....  அம்மாவின் மடியில் ஒரு குழந்தை... மூன்று - நான்கு வயது இருக்கலாம்... பக்கத்தில் ஒரு பிள்ளை... மூத்த பிள்ளையாக இருக்க வேண்டும்.... எட்டு- ஒன்பது வயது மதிக்கலாம்... அவன் மடியில் ஒரு குழந்தை...  மூத்த பிள்ளையின் பொறுப்புணர்ச்சி... எனக்கும் அவனுக்கும் இடையில் என் இருக்கையில் நான் இருந்த இடம் போக எஞ்சிய இடம் இருந்தது...  அது இடையில் இருந்த ஆறு-ஏழு வயது மதிக்கக்கூடிய சிறுவன் இருக்கப் போதாது... அவன் நின்றுகொண்டிருந்தான்....

மடியில் இருந்த பையைத் தூக்கி காலிற்குள் போட்டு விட்டு அவனை மடியில் இருத்தலாம் என்று கூப்பிட்டேன்... எங்கள் வீட்டிலும் நாங்கள் ஐந்து சகோதரர்கள்... எங்கு போனாலும் அனைவரையும் இழுத்து திரிய வேண்டிய வயதுகளில் ஓரிரு வருட இடைவெளிகளில் நாங்கள் இருந்தோம்... எங்களை யாரை நம்பியும் விட்டுப் போக முடியாது... அம்மா வேண்டுமென்றால் நாங்கள் கற்காத வித்தையையும் இறக்குவோம்.... அப்போதெல்லாம் அக்காமாரின் மடிகளில் இருந்து தான் சவாரியாக இருக்கும்...

பையன் வெட்கப்பட்டுக் கொண்டே ஏ எண்டு மாட்டேன் என்பதைக் கூறுமுகமாய் தலையசைத்தான்...வளர்ந்திட்டாராம்... எங்களைப் போல மடி சவாரி கேட்ட பையன் அல்ல.. காட்டூன் பார்த்து வளர்ந்திருப்பான்... அந்த இருக்கையைக் கொடுத்து விட்டு நான் பின்னால் போய் உட்காரவும் முடியாது.. பஸ்களில் சொறிவதற்கென்றே ஒரு கும்பல் வந்திருக்கும்...  இன்னும் என்னை ஒடுக்கிக் கொண்டு உட்கார்ந்தேன்...

“இதில வந்து இருமன்...”

பயல் வந்து உட்கார்ந்தார்....

”இவவும் அவரும் ருவின்ற்ஸ்...” அம்மா தன் மடியில் இருக்கும் குழந்தையையும் மூத்தவன் மடியில் இருந்தவனையும் காட்டி சொன்னார்...

”உங்களுக்கும் கஸ்டம் தான்...  திடீரெண்டு வெளிக்கிட்டது...” அம்மாவுக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது.. சின்னப்பிள்ளையள்... இடம் விடும் எண்டு ராங்கியாகச் சொல்லக் கூடிய தலைமுறையில் அவர் இல்லை... மற்றவைக்கு தொல்லை எண்டு நினைக்கக் கூடிய வயது... சங்கடத்தில் நெளிந்தார்...

“பரவால்ல... எனக்கு ரெண்டு தம்பியும் ரெண்டு தங்கச்சியும் இருக்கினம்..”

நிறையப் பிள்ளையள் எண்டு அவர் வெட்கப்பட்டதை மாற்றுவதற்காக சொன்னேன்... (நாளைக்கு நம்மளைப் பார்த்து பள்ளிக்கூடம் நடத்துற அளவு பிள்ளையள்னு யாரும் சொல்லும் போது இப்பிடி நமக்கும் யாராவது வக்காளத்து வாங்கணும் கடவுளே.... தர்மம் தலை காக்கும்.. அவ்வ்வ்வ்)

இப்போது வெட்கப்பட்ட பயபுள்ளை நித்திரையில் முன் பக்கம் சாயத் தொடங்கியிருந்தார்... அவரை மெதுவாக பின்பக்கம் சரித்து விழ விடாது என் கையால் தாங்கினேன்... உடனே என்னவோ பஸ்ஸில் வேண்டும் என்று இடித்ததும் இரண்டு இருக்கைகள் முன்னுக்கு நடந்து போகும் யுவதி போல அவர் எழுந்து அம்மாவுக்கு முன்னால் போய் நின்று கொண்டார்... ம்ஹூம்... (டேய்.. உன் கையைப் பிடிச்சா இழுத்தன்... நான் பொண்ணுடா.... அதோட அக்கா... ) எனக்கு ஒரே அவமானமாப் போயிட்டுது... நின்று பார்க்கட்டும்... அப்ப தெரியும் கால்வலி...

மூத்தவனுக்கு கால் வலித்திருக்க வேண்டும்.. அதோடு வெட்கப்பட்ட தம்பியின் இடம் இப்போது காலியாக இருந்ததும் அதில் தான் மடியில் வைத்திருந்த தம்பியை இருத்தினான்...

“இது ரெயில்வே ஸ்டேசன்...”

அம்மா மூத்தவனுக்கு இடங்களை சுற்றுலா வழிகாட்டி போல சொல்லிக் கொண்டிருந்தார்....

குழந்தைக்கு தூக்கக் கலகம்... என் மடியில் இடம் இருந்தது.... குழந்தை அதில் சாய்ந்து கொண்டான்... காலை அவனின் அண்ணனின் மடியில் போட்டுக் கொண்டான்... (அடடே என்ன ஒரு வில்லத்தனம்... சுட்டிப் பயலே...)  என் மடியில் இன்னும் இடம் மீதம் இருந்தது...  பிடிவாதம் கரைந்து நின்று கால் வலித்திருக்க வேண்டும்... எழுந்து சென்ற பிள்ளை என்னைப் பரிதாபமாகப் பார்ப்பது கண்ணின் பக்கப் பார்வையில் விழுந்தது...

“வந்து இருமன்...”

“வேண்டாம்... அவன் என்ரை காலடியில இருக்கட்டும்... “

எனக்கு ஏன் வீண்சிரமம் என்று அவனின் அம்மா குரல் கொடுத்தார்....

“இல்லை... இடம் இருக்கு தானே... இருக்கட்டும்...”

“நீங்க பாவம் தானே....”

(என்னைப் பார்த்து பாவம் எண்டு சொன்ன முதல் ஆள் நீங்கதான்...)

பயலும் மாட்டன் எண்டு வீம்பு பண்ணி அம்மாவின் காலடியில் உட்கார்ந்து விட்டான்... சரியான அம்மாப் பிள்ளை.... க்கும்...

மடியில் கிடந்த குழந்தை காலை ஆட்டியது... பஸ்ஸின் குலுக்கல் தூக்கத்தைக் கலைத்திருக்க வேண்டும்...  ஒரு கையில் பஸ் தலையில் இடிக்காமல் தலையைத் தாங்கிக் கொண்டு மற்றக் கையை எடுத்து முன்புறம் விழுந்து விடாமல் பிடித்தேன்...  ஏஸி இல்லாமலேயே மழை குளிரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தது.. குழந்தை என் கையை இறுகப் பிடித்துக் கொண்டான்... ஒரு பக்கம் நான் பிடித்திருந்ததால் பஸ்ஸின் முன்னோக்கிய வேகத்தால் நியூட்டனின் விதி அவன் கால்களில் மட்டும் செயற்பட முன்னோக்கி இயங்க முனைந்த கால்களை சரி செய்ய வைத்த என்னுடைய கை தளிர்க்கரங்களில் நன்றாக மாட்டிக் கொண்டது... குனிந்தும் குனியாமலும் இருந்த நான் அப்பிடியே இருக்க வேண்டியதாயிற்று...  நிமிர்ந்தால் கை விடுபட்டு விடும்.... தூக்கம் கலைந்து விடும்....

காலை வேளைகளில் என்னை எழுப்பினாலே நான் பத்திரகாளியாகி விடுவேன்...  சின்னப் பிள்ளையின் நித்திரை கலைந்தால் கேட்கவே வேண்டாம்...  சிணுங்கிக் கொண்டே இருக்கும்.... என்ன சொன்னாலும் கேட்காது... அப்படியே தூங்கினாலும் திரும்பத் திரும்ப முழித்து அழும்....  அந்த இரவு பிறகு சிவராத்திரியாகி விடும்.... குழந்தைக்கென்ன? தூக்கம் அதுக்கு முழு நேர வேலை மாதிரி.. பகலில் தூங்கி சரி பண்ணிக் கொள்ளும்.. நமக்கு முடியுமா? (ஆமா நீ எத்தனை பிள்ளை வளர்த்தாய்... இவ்வளவு டீற்றெயிலா சொல்லுறாய் எண்டு நீங்க கேக்குறது புரியுது பாருங்கோ... எல்லாம் எங்கட தம்பி தங்கச்சியாக்கள் பண்ணின அளப்பரைகள் தான்...)

குழந்தை தூங்கி விட்டதால் இப்போது மடியில் கனம் அதிகரித்து விட்டது... தூங்கி விட்டால் ஏன் எடை கூடுவது போல இருக்கிறது என்று எனக்குத் தெரியாது... ஆனால் அதை நிறைய சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்..  அடம்பிடித்து அழுது விட்டு சாப்பிடாமல் அழுத இடத்திலேயே தூங்கிப் போகும் தங்கையைத் தூக்கி சரியான இடத்தில் படுக்க வைக்கும் போது அவளின் எடை இரண்டு மடங்கானது போன்று தோன்றும்...

இப்போது குனிந்திருப்பதால் குழந்தையின் வாசனையை என்னால் உணரமுடிந்தது... அது பேபி செரமி வாசனையோ சென்ற் வாசனையோ அல்ல..  எல்லா உடலுக்கும் ஒரு வாசனை உண்டு.. (ஆமாமா அதால தான் அதை மறைக்க சென்ற் அடிக்குறம்... அதில்லப்பா...) வியர்வை வாசனையை விட்டாக் கூட எல்லாருக்கும் ஒரு வித வாசனை இருக்கு.... அதுவும் ஒருவகையில யுனிக் தான்...  மீன் முட்டை இட்டுப் போன இடத்தில நிறைய மீன் முட்டை இட்டிருக்கும்....  எப்பிடி தன் குஞ்சைக் கண்டுபிடிக்கிறது...? வாசனை... அது மாதிரி மனிதருக்கும் இருக்கிறது... ஜென்ம ஜென்மம் தாண்டி அதே வாசனை இருக்கும்...  அப்பிடின்னா அது ஆன்மாவின் வாசனையாக இருக்கலாம்.. என்ன ஆணியோ... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாசம் இருக்கிறது...  குழந்தைகளின் வாசனை ஒரு தனிரகம்... (கலாரசிகா... அவ்வ்வ்) அது ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தும்... குழந்தைகளைக் காணும் போது இதயத்தில் அன்பு நிரம்புவதற்குக் காரணம் அதுவாக இருக்கலாம்...

என் கருவறை மெதுவாக விரிவதாய்ப் பிரமை... மூன்று இருக்கையில் ஒண்டியாய் உட்கார்ந்திருந்தேன்...  என் தொலைபேசி கூட சிணுங்கவில்லை... அதற்காக அது சைலன்ற்றில் போட்டதாய் அர்த்தமில்லை... அதுவரையில் வெறுமையாய் இருந்த என் உலகத்தில் ஒரு வெள்ளைரோஜாப்பூ மலர்ந்திருக்கிறது....  என் மடியில் களங்கமில்லா பூரணசந்திரன் ஒன்று சயனித்திருக்கிறது...  பேரூந்தினுள் வெளிச்சம் இல்லாவிடினும் அது தூங்கும் அழகை என்னால் ரசிக்க முடிகிறது...  வெளிச்சம் இல்லாததால் அதன் அழகு இன்னும் இரட்டிப்பாய் தெரிகிறது... பாதிக் கண்கள் மூடிப் பாதிக் கண்கள் திறந்து.... பூனைக்குட்டி... பூனைக்குட்டி அழகு... இருட்டான இடத்தில் அது இருக்கும் போது இன்னும் அழகாகத் தெரியும்.. மழை நேரத்தில் கால் சூடு தேடி வந்து முகத்தால் வருடிக் கொண்டே பாதிக்கண்ணால் தூங்கும் கொள்ளை அழகு...

உதடுகள்... நமக்கெல்லாம் உதடு என்ன நிறம் என்றால் ராக்கிங் நேரம் ”பீடி அடிக்கிறனியோ?” என்றும் ”தண்ணி அடிக்கிறனியோடி?” என்றும் கேட்கும் அளவு நிறம்...  இது.....ஆரஞ்சு நிறம்... இயற்கை வர்ணம்.... சற்றே திறந்து கிடந்தன... உயிர் வெண்டிக்காய் விதைகள் போன்ற பற்கள் இரண்டு வெளியே தெரிந்தன... அவை காந்தமாகி என் உதடுகளை இழுக்கவில்லை... மாறாக என் உதட்டில் புன்னகைப் பூவைப் பூக்கச் செய்தன... என் கைவிரல்கள் அவற்றில் காதல் கொண்டு, இந்த அழகுப்பற்கள் வெளியே தெரிந்தால் பெற்றோலுக்கூடாக நெருப்பைக் கடத்த வல்ல பஸ்ஸில் பிக்பொக்கட் அடிப்பவர்கள் நான் விழித்திருந்தாலும் கொள்ளையிட்டுவிடுவார்கள் என்று காக்க எண்ணி ஓடி வந்தன... திறந்திருந்த அழகிய ரோஜாக் கதவுகளை மூட விழைந்தன... ம்கும்.. பூத்திருந்த இதழ்கள் மூடிக் கொள்ளாமல் எவ்வளவு சொல்லியும் கேளாமல் மானம் ரோசம் இல்லாமல் அவனைக் கண்டதும் திறந்து கொள்ளும் என் மனக் கதவுகள் போல் மறுபடியும் திறந்துகொண்டன...

வழக்கமான என் தனிமைப் பயணங்களில் நான் வெளிப்புறம் பார்த்தவண்ணம் இருப்பேன்...  அதற்காக நான் இயற்கை அழகை ரசிக்கிறேன் என்று அர்த்தமில்லை... வெறுமனே வெறித்துப் பார்த்திருப்பேனே ஒழிய வெளியில் நடப்பவை என்னை ஈர்ப்பதில்லை...  இந்த முறை அழகு முகத்தைத் தவிர வேறெங்கிலும் கண்கள் போகவில்லை....  அழகு என்பது ஆண்டவனாகும்... அது குழந்தையாகும் என்றெல்லாம் என் உள்ளம் பேசவில்லை... வழமையாக கண்கள் வேலையில்லாமல் வெறித்தபடி இருக்க உள்ளம் ஏதேதோ எண்ணிக் கலங்கும்.... இம்முறை கண்கள் அழகை ரசித்தபடி இருக்க உள்ளம் சிலையாகி ஊமையாகிப் போய்விட்டிருந்தது....தெய்வீக அழகு என்பது குழந்தையேயாகும்.... அன்பு... பக்திப் பரவசம்.... உள்ளம் மூர்ச்சையாகியிருந்தது....  என் கைகள் குழந்தையின் தலையைத் தடவியபடியிருந்தன...உதடுகள் குழந்தையின் நெற்றியை முத்தமிட வேண்டி அடம்பிடித்தன....

“பேசாமல் இரு... நீ பார்க்கும் பார்வைக்கு இவ்வாறு கண் வைப்பதாய் அந்த அம்மா எண்ணுவார்... இதற்குள் எச்சிலில் வேறு குளிப்பாட்டப் போகிறாயா?”

என் வாய் என்னும் குகைக்குள் ஒளித்து வைத்திருந்த கூரான ஆயுதமான என் பற்களை வெளியே எடுத்து உதட்டைக் கடித்து என்னை அடக்கிக் கொண்டேன்... பக்கத்தில் இருந்த பிள்ளை இப்போது நித்திரை அசதியில் என் தோள் மேல் சாய்ந்திருந்தது... என் தோள் சிறிதாக இருப்பது குறித்து இப்போது தான் எனக்குக் கவலை ஏற்பட்டது... பெரிய தோளாக இருந்திருந்தால் குழந்தை செளகரியமாக சாய்ந்திருக்கும்... சே...!

தூங்கவில்லை நான்... ஆயினும் இரவு சீக்கிரமே கரைந்தது...

“நீங்கள் வந்த படியால் தான் நான் நிம்மதியா வந்து சேர்ந்தன்... தாங்ஸ் தங்கச்சி... இறங்கப் போறம்...”

மெதுவாக அசைத்து சிவப்பு வஸ்திரம் அணிந்திருந்த தங்க விக்கிரகமான குட்டிக்கந்தனின் தூக்கம் கலைத்தேன்... “எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...” என்று உள்ளம் கூறியது...

அவன் அன்னை காணாமல் திருஸ்டி நெட்டி முறித்தேன்...  பின்னே இவ்வளவு நேரம் பார்த்தால் கண்படாதா என்ன? அதற்காக தாய் பார்க்கும் போது செய்ய முடியுமா? என்ன நினைப்பார் என்னைப் பற்றி...?

“நாங்க வாறம்... நீங்க எந்த ஹோல்ட்?”

“அடுத்த ஹோல்ட் தான்...”

என் மனதில் இருந்த உற்சாகம் போய்விட்டது...  மடியில் இருந்த அழகான கனமும் துயில் நீங்கி அன்னை பின்னால் போய்விட்டது... மீண்டும் தனிமை என்னை ஆட்கொண்டது... நீயாவது நான் உன்னை விட்டு விலகினாலும் என்னை விட்டு விலகாது ஓடிவந்து சேர்ந்தாயே என்று அதனுடன் ஐக்கியமானேன்... வெள்ளவத்தையின் குளிர்காற்று தோலைத் துளைக்க கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்கலானேன்... ஒடுங்கி உட்கார்ந்திருந்ததால் உண்டான வலி துன்பத்தை ஏற்படுத்தவில்லை... மாறாக புன்னகையையே ஏற்படுத்தியது... என் கருவறை மீண்டும் சுருங்கத் தொடங்கியது...  ஆனாலும் என் மூளைக்கு கர்ப்பம் அனுப்பப்பட்டு அது விரல் வழி பிரசவிக்கக் காத்திருந்தது.... சற்று நேரத்திற்கு முதல் என் மடியில் ஒட்டியிருந்த பிஞ்சுக் குழந்தையின் வாசம் கொஞ்சம் கொஞ்சமாய் காற்றோடு கரையத் தொடங்கியிருந்தாலும் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தது....