Monday, July 18, 2016

கந்தவீரமாகாளி கமல மங்கலை

கந்தவீரமாகாளி கமல மங்கலை
கருணையான வடிவழகி கனிந்து நின்றனை
விந்தையாகி விளக்குமாகி விளங்கி வந்தனை
விண்ணுமாகி மண்ணுமாகி வெற்றிகண்டனை
மந்தமான புத்தியோட்டி மனமும் தந்தனை
மலரின் வேதன் உன்னைப் பாட மயக்கம் தீர்த்தனை
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

நந்தவீர மாகாளி நயனமாலினி
நம்பிவந்த எம்மிடையே நலனும் காட்டுவாய்
இந்தவாழ்வில் உன்னையன்றி இங்கு யாருளார்
இன்று நல்லகாலைவந்து இனிமை காட்டுவாய்
மந்தையாடு போலவாழ்வில் மயங்கி நில்லாமல்
முத்தியோடு செல்வபோகம் முழுதும் நாட்டுவாய்
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

பொங்குவீரமாகாளி பொய்மை தீர்மணி
பொறுமையோடு பெருமையாகிப் பொருளும் கூட்டினாய்
எந்தையான சிவனைத் தூது எடுத்து அனுப்பினாய்
எழிலியாகி வண்ணமாகி என்னுள் ஆடினாய்
பந்தணைந்த விரலி நீயும் பகைமை என்றதும்
பரந்துவந்து படைகளோட்டிப் பசுமை காட்டினாய்
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

விந்தைவீரமாகாளி விரைந்துவந்திடின்
சொந்தநோயும் வந்தநோயும் தொலைவில் ஓடிடும்
எந்தமாயம் எம்மைத்தேடி வந்த போதிலும்
என்னையீன்ற தாய் நினைப்பில் எரிந்து போய்விடும்
சிந்தைவாழும் உந்தன் மஞ்சள் சிறிது பூசிடின்
கந்தனோடு கரிய நீலகண்டன் காணலாம்
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

ஆதிசக்தி சோதிசக்தி ஆளவந்த சக்தியே
ஆகமங்கள் ஆனசக்தி ஆத்மசோதி சக்தியே
நீதிசக்தி நித்தியசக்தி நீறுபூசும் சக்தியே
நீலிசக்தி நிருத்தசக்தி நீலமேனி சக்தியே
காதிசக்தி கானசக்தி காணுமின்ப சக்தியே
காளிசக்தி காயசக்தி காட்சிதந்த சக்தியே
வீரசக்தி தீரசக்தி வீடுகாக்கும் சக்தியே
சூரசக்தி சூலசக்தி சூழும் சக்தி சக்தியே

துர்க்கா சரணம் சரணம் தாயே
துர்க்கா சரணம் சரணம்
தேவி சரணம் சரணம் தாயே
தேவி சரணம் சரணம்
அம்மா சரணம் சரணம் தாயே
அம்மா சரணம் சரணம்
ஆத்தாள் சரணம் சரணம் தாயே
ஆத்தாள் சரணம் சரணம்

No comments:

Post a Comment