Saturday, February 24, 2024

96 & யமுனை ஆற்றிலே

பள்ளிக் காலத்தில், காதல் மகிழ்ச்சியில் உற்சாகம் துள்ளிக் குதிக்கும் போது, பிரிவின் பாடலை ஒதுக்கியிருக்கலாம். பாடலின் வலியை உணர்ந்து பாடுவதற்கு, அப்போது அவளுக்கு பிரிவின் அனுபவம் இருக்கவில்லை. கண்பார்க்கும் தூரத்தில் ராம் இருக்கும் போது, அதற்கான தேவையும் அவளுக்கு இல்லை. இல்லையென்றால் பிரிவின் பாடலை பாடுவது காதலுக்கு துரதிஷ்டம் என்றே தவிர்த்திருக்கலாம். அதுவும் இல்லையென்றால் ஒரு பாடலின் உணர்வை உயிரில் கலந்து பாடும் போதே அந்தப் பாடல் முழுமை பெறுகிறது. பிரிவின் உணர்வை, தனதுயிரில்- பாவனையாகக் கூட கலந்து பார்ப்பதற்கு விரும்பாது இருந்திருக்கலாம். ராம் நேரடியாகக் கேட்கவில்லை என்பது வெறும் சாட்டாக மட்டுமே இருக்கலாம்.

காலங்கள் ஓடி- ஜானுவுக்குத் திருமணமாகி- குழந்தைக்குத் தாயாக வந்திருக்கிறாள். பிரிவுக்கான காரணத்தை அவள் அறியாள். ஆனாலும் அவன் மீது பரிவு உள்ளது. கூடவே, ஏன் தன்னைத் தேடி வரவில்லை என்ற கேள்வி உள்ளது. அந்தக்கேள்வி, அவன் கேட்கும் பாடலைப் பாடாமல் அவனை வஞ்சிக்க வைத்திருக்கலாம். இருவரும் மட்டும் தனித்து விடப்படுகிற போது நடந்ததை அறிகிறாள். வேலை தவிர்த்து ஜானுவுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. ராமுக்கு இல்லை. தனிப்பட்ட வாழ்வில், அவளை எங்கு விட்டானோ அங்கேயே நிற்கிறான். காலம் சூறையாடிய கனவுகளுக்காக என்பதே நிதர்சனம். ஆனால் அவன் பார்வையில், அவள் மீது குற்றம் சொல்லக் காரணம் இருந்த போதும், தவறான புரிதல் இருந்த போதும்- எந்த வெறுப்பும் இன்றி இருந்து, பள்ளிப் பருவம் போல- இன்னும் மாறாது, அவள் நெஞ்சில் கைவைத்த போது மயங்கிப் போன ராமுக்கு, அவன் மீதான கேள்வியும் தீர்ந்து போய் தெளிவு கொண்டவள், எதைக் கொடுத்து விட முடியும். அவன் விரும்பிக் கேட்ட பாடலைத் தவிர? இனி எங்கே காணப் போகிறாள் அவனை?

 'இவனுக்கு கொடுக்க வேறென்ன உள்ளது என்னிடம்' என்று அவனுக்காகப் பாடி இருப்பாள். பிரிவின் துயரை முழுக்க உணர்ந்து, நெஞ்சம் சோகத்தில் பாரமாகி, அதிலிருந்து தன்னை மீட்க வழியின்றி, தன்னை அதிலிருந்து மீட்டுக் கொள்ளும் வழியாக, துயரத்தை பாடல் வழியாக வெளியே துரத்திவிட அவளுக்காகப் பாடியிருப்பாள். இத்தனைக்கும் பிறகு, அவள் இப்படியே திரும்பிச் சென்றால், அவள் வாழ்க்கையில் முன்னரைப் போல நிம்மதி இருக்கப் போவதில்லை. அவன் அன்பால் கிடைத்த அன்பு, யாரும் தீண்டாத மனமெனும் வனத்தில், வேறாரும் அறியாத நினைவுகள் புதைக்கப்பட்ட ஆழ்மனம் என்னும் ஏரியின் நீரில் விழுந்து- கோலம் கலைந்து-அடியில் சேர்ந்த இலையாய் அழுந்தி இருக்கட்டும். அவனால் கொண்ட சோகத்தை- அவன் கேட்ட பாடலாய் அவனிடமே கொடுத்துவிட்டு தான் மட்டும் நிம்மதியாகத் திரும்பிப் போவதற்காக சுயநலமாய் அவளுக்காகப் பாடியிருப்பாள்.

அதைத் தாண்டி யமுனை ஆற்றிலே என்பது பிரிவாற்றாமை பாடல். அந்த உணர்வு இருவருக்கும் மட்டுமானது. அதைப் எல்லோருக்குமாகப் பாடுவதை ஜானு விரும்பாமல் இருக்கலாம். பள்ளியில் இருவருக்கும் காதல் மயக்கம். மீண்டும் சந்தித்தபோது இருவருக்கும் கேள்விகள் இருந்தன. தெளிவு கொண்டபோது இருவருக்குமே பிரிவாற்றாமைத்துயர். இப்போது வேறாருமில்லாத தனிமையில், கலைஞியும் ரசிகனும் ஒருமித்த உணர்வினின்று, அதுவும் ஒரே உணர்வினின்று, அந்த உணர்வைக் கலையாகக் கடத்தும் போது, கலைஞியின் தனிப்பட்ட உணர்வு, ரசிகனால் முழுமையாக உள்வாங்கப்படும். உள்வாங்கப்பட்டது. கலை முழுமை பெற்றது. 

பதிவேற்றப்பட்டு யார் யாரோ கேட்கும் பாடலை ஹெட் போனில் கேட்கும் போது எமக்கே எமக்கான பாடலாக எண்ணி நிலை மறப்பதில்லையா? இது உண்மையாகவே அவனுக்கே அவனுக்கான பாடல். அந்தப்பாடல் அவனுக்காக மட்டுமே ஜானு பாடினாள். இனி அவள் அந்தப் பாடலை என்றுமே பாடப் போவதில்லை. நீராடும் போதோ சமைக்கும் போதோ எந்த அன்றாட வேலையின் போதோ அந்தப் பாடல் மட்டும் பாடப்படாமல் ஒதுக்கப்படும்.

சரி. இப்போது நிஜ உலகிற்கு வருவோம். முற்றுப்பெறாத உணர்வு கலையாகும் போது மனம் பதைபதைக்கிறது. அவர்கள் எவ்வளவு பாடுபடுவார்கள் என்று. அது அவர்களுக்கு அந்த நேரத்து உணர்வு. அதைக் கலையாக்கி எமது தலையில் கட்டி விட்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஜானு என்ன ஆவாள் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். அதை அவள் புருசன் பாத்துப்பான். ராமுக்கு வேலை இருக்கு. அவன் அதில டிஸ்ராக்ட் ஆகியிருப்பான். இதை வாசிச்சு ஆர்கஸம் ஆகி கிறஸுகளுக்கு மெசேஜ் அனுப்பி எக்ஸ்ட்ரா மறிடல் அஃபெயார் ஆகி, உள்ளதையும் கெடுத்துக்காம, அல்லாட்டி இன்னொரு தரம் 96 ஐப் பார்த்து நல்லா ஹேர்ட் ஆகி அழுதிட்டிராம போய்ப் புழைப்பைப் பாருங்கடே. புள்ளகுட்டியைப் படிக்க வைங்கடே.