Saturday, February 24, 2024

96 & யமுனை ஆற்றிலே

பள்ளிக் காலத்தில், காதல் மகிழ்ச்சியில் உற்சாகம் துள்ளிக் குதிக்கும் போது, பிரிவின் பாடலை ஒதுக்கியிருக்கலாம். பாடலின் வலியை உணர்ந்து பாடுவதற்கு, அப்போது அவளுக்கு பிரிவின் அனுபவம் இருக்கவில்லை. கண்பார்க்கும் தூரத்தில் ராம் இருக்கும் போது, அதற்கான தேவையும் அவளுக்கு இல்லை. இல்லையென்றால் பிரிவின் பாடலை பாடுவது காதலுக்கு துரதிஷ்டம் என்றே தவிர்த்திருக்கலாம். அதுவும் இல்லையென்றால் ஒரு பாடலின் உணர்வை உயிரில் கலந்து பாடும் போதே அந்தப் பாடல் முழுமை பெறுகிறது. பிரிவின் உணர்வை, தனதுயிரில்- பாவனையாகக் கூட கலந்து பார்ப்பதற்கு விரும்பாது இருந்திருக்கலாம். ராம் நேரடியாகக் கேட்கவில்லை என்பது வெறும் சாட்டாக மட்டுமே இருக்கலாம்.

காலங்கள் ஓடி- ஜானுவுக்குத் திருமணமாகி- குழந்தைக்குத் தாயாக வந்திருக்கிறாள். பிரிவுக்கான காரணத்தை அவள் அறியாள். ஆனாலும் அவன் மீது பரிவு உள்ளது. கூடவே, ஏன் தன்னைத் தேடி வரவில்லை என்ற கேள்வி உள்ளது. அந்தக்கேள்வி, அவன் கேட்கும் பாடலைப் பாடாமல் அவனை வஞ்சிக்க வைத்திருக்கலாம். இருவரும் மட்டும் தனித்து விடப்படுகிற போது நடந்ததை அறிகிறாள். வேலை தவிர்த்து ஜானுவுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. ராமுக்கு இல்லை. தனிப்பட்ட வாழ்வில், அவளை எங்கு விட்டானோ அங்கேயே நிற்கிறான். காலம் சூறையாடிய கனவுகளுக்காக என்பதே நிதர்சனம். ஆனால் அவன் பார்வையில், அவள் மீது குற்றம் சொல்லக் காரணம் இருந்த போதும், தவறான புரிதல் இருந்த போதும்- எந்த வெறுப்பும் இன்றி இருந்து, பள்ளிப் பருவம் போல- இன்னும் மாறாது, அவள் நெஞ்சில் கைவைத்த போது மயங்கிப் போன ராமுக்கு, அவன் மீதான கேள்வியும் தீர்ந்து போய் தெளிவு கொண்டவள், எதைக் கொடுத்து விட முடியும். அவன் விரும்பிக் கேட்ட பாடலைத் தவிர? இனி எங்கே காணப் போகிறாள் அவனை?

 'இவனுக்கு கொடுக்க வேறென்ன உள்ளது என்னிடம்' என்று அவனுக்காகப் பாடி இருப்பாள். பிரிவின் துயரை முழுக்க உணர்ந்து, நெஞ்சம் சோகத்தில் பாரமாகி, அதிலிருந்து தன்னை மீட்க வழியின்றி, தன்னை அதிலிருந்து மீட்டுக் கொள்ளும் வழியாக, துயரத்தை பாடல் வழியாக வெளியே துரத்திவிட அவளுக்காகப் பாடியிருப்பாள். இத்தனைக்கும் பிறகு, அவள் இப்படியே திரும்பிச் சென்றால், அவள் வாழ்க்கையில் முன்னரைப் போல நிம்மதி இருக்கப் போவதில்லை. அவன் அன்பால் கிடைத்த அன்பு, யாரும் தீண்டாத மனமெனும் வனத்தில், வேறாரும் அறியாத நினைவுகள் புதைக்கப்பட்ட ஆழ்மனம் என்னும் ஏரியின் நீரில் விழுந்து- கோலம் கலைந்து-அடியில் சேர்ந்த இலையாய் அழுந்தி இருக்கட்டும். அவனால் கொண்ட சோகத்தை- அவன் கேட்ட பாடலாய் அவனிடமே கொடுத்துவிட்டு தான் மட்டும் நிம்மதியாகத் திரும்பிப் போவதற்காக சுயநலமாய் அவளுக்காகப் பாடியிருப்பாள்.

அதைத் தாண்டி யமுனை ஆற்றிலே என்பது பிரிவாற்றாமை பாடல். அந்த உணர்வு இருவருக்கும் மட்டுமானது. அதைப் எல்லோருக்குமாகப் பாடுவதை ஜானு விரும்பாமல் இருக்கலாம். பள்ளியில் இருவருக்கும் காதல் மயக்கம். மீண்டும் சந்தித்தபோது இருவருக்கும் கேள்விகள் இருந்தன. தெளிவு கொண்டபோது இருவருக்குமே பிரிவாற்றாமைத்துயர். இப்போது வேறாருமில்லாத தனிமையில், கலைஞியும் ரசிகனும் ஒருமித்த உணர்வினின்று, அதுவும் ஒரே உணர்வினின்று, அந்த உணர்வைக் கலையாகக் கடத்தும் போது, கலைஞியின் தனிப்பட்ட உணர்வு, ரசிகனால் முழுமையாக உள்வாங்கப்படும். உள்வாங்கப்பட்டது. கலை முழுமை பெற்றது. 

பதிவேற்றப்பட்டு யார் யாரோ கேட்கும் பாடலை ஹெட் போனில் கேட்கும் போது எமக்கே எமக்கான பாடலாக எண்ணி நிலை மறப்பதில்லையா? இது உண்மையாகவே அவனுக்கே அவனுக்கான பாடல். அந்தப்பாடல் அவனுக்காக மட்டுமே ஜானு பாடினாள். இனி அவள் அந்தப் பாடலை என்றுமே பாடப் போவதில்லை. நீராடும் போதோ சமைக்கும் போதோ எந்த அன்றாட வேலையின் போதோ அந்தப் பாடல் மட்டும் பாடப்படாமல் ஒதுக்கப்படும்.

சரி. இப்போது நிஜ உலகிற்கு வருவோம். முற்றுப்பெறாத உணர்வு கலையாகும் போது மனம் பதைபதைக்கிறது. அவர்கள் எவ்வளவு பாடுபடுவார்கள் என்று. அது அவர்களுக்கு அந்த நேரத்து உணர்வு. அதைக் கலையாக்கி எமது தலையில் கட்டி விட்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஜானு என்ன ஆவாள் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். அதை அவள் புருசன் பாத்துப்பான். ராமுக்கு வேலை இருக்கு. அவன் அதில டிஸ்ராக்ட் ஆகியிருப்பான். இதை வாசிச்சு ஆர்கஸம் ஆகி கிறஸுகளுக்கு மெசேஜ் அனுப்பி எக்ஸ்ட்ரா மறிடல் அஃபெயார் ஆகி, உள்ளதையும் கெடுத்துக்காம, அல்லாட்டி இன்னொரு தரம் 96 ஐப் பார்த்து நல்லா ஹேர்ட் ஆகி அழுதிட்டிராம போய்ப் புழைப்பைப் பாருங்கடே. புள்ளகுட்டியைப் படிக்க வைங்கடே.

Thursday, November 10, 2022

பெண்ணும் மகாகாளியும்





அஷ்டாங்கயோகம் - சிவன் கதையில் இருந்து

1. இயமம்: செய்யும் வேலையை உணர்ந்து செய்தல். மன ஒருமைப்பாடு. செயல்களில் ஏற்படும் தூய்மை -> எண்ணங்களில் தூய்மையை கொடுக்கும் (உணர்ந்து குளித்தல்)

         1. அகிம்சை: செயலிலோ அல்லது நினைப்பிலோ பிறருக்கு ஊறு விளைவிக்காத செயல். (கொல்லாமை) - (பாம்பை கொல்லாமல் கை கூப்பி வணங்கி செல்ல அனுமதித்தல்)

         2. சத்தியம் (வாய்மை): பொய் சொல்லாமலும் நேர்மையுடனும் திகழ்தல். குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காமை. இந்த முதல் இரண்டுமே பிரதான இயமங்கள்.

         3. கள்ளாமை: திருடல் இன்மை

         4. காமமின்மை: பாலியல் உணர்வைத் தவிர்த்து சக்தியைத் தேக்கி வைத்தல்

         5. பேராசையின்மை

2. நியமம்:  ஒழுக்க விதிமுறைகளை வழுவாது கடைப்பிடித்தல். உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், தவம், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல், தான் பசித்தும் பிற உயிருக்கு உணவளித்து மகிழ்தல் போன்றன நியமத்துள் அடங்குகின்றன.

3. ஆசனம்: இறையை எண்ணி தீப ஒளியை பார்த்து சுக துக்கம் மறந்து தியானம் செய்தல். குரு தீட்சை, காலை நீட்டி அமர்ந்து கைகளால் காலை தொடுதல், மரம் ஒன்றின் முன் நின்று, மனதை மரத்தில் வைத்துக் கொண்டு கையை கூப்பியபடி ஒற்றைக் காலில் நிற்றல், பத்மாசனத்தில் அமர்ந்து கைகளை மேலே கூப்பி மலை போல் ஆகுதல்

4. பிரணாயாமம்: மூச்சுப் பயிற்சி. தொடர்ந்து செய்ய வேண்டும். சக்தியை தாங்க உடம்புக்கு வலிமை தேவை. ஆன்மிக சக்தி ஒருங்கிணைப்பு.

5. பிரத்தியாகாரம்: மகா முத்திரை. ஓம். சாம்பவ முத்திரை. மூன்றாம் கண்ணை உணர்ந்து தியானித்தல். ஆத்ம சக்தியை செயற்படுத்த தொடங்குதல்.

6. தாரணை: ஒரு பொருளின் குணநலன்கள் மீது ஒருமைப்பாடு கொள்வதால் அந்த பொருளின் குணநலன்கள் கிடைக்கும். தாமரையை பார்த்துக் கொண்டு அதன் குணநலன்கள் மீது கவனம் பதித்து, ஓம் என்று கூறிக் கொண்டு மூச்சு செல்லும் வழியை கவனித்தல் (மூச்சு, உடலின் எந்தப் பகுதியில் எங்கு சென்று சேர்கிறது)

7. தியானம்: தனக்குள் இறையை உணர்தல்

8. சமாதி: சுயநலம், உணர்ச்சி, எண்ணங்கள் இருக்க கூடாது

Tuesday, November 1, 2022

Cat Lover

பூனைகளை வளர்ப்பவர்களுக்கு தெரியும். என்றோ ஒரு நாள் அது ஓடித் தான் போய்விடும் என்று. மறந்து விட முடியாத நேசத்தை அதன் மீது வைத்துவிடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையாக இருப்போம். அவை எம்மை சுற்றி சுற்றி வந்து, நம்பிக்கையை வெல்லத் துடிக்கும். என்றாவது ஒரு நாள் விடிகாலையில் கண்விழிக்கும் போது அதை எவ்வளவு நேசிக்கிறோம் என்று தெரிந்து கொள்வோம்.

அதன் கட்டளைகளை சிரமேற் கொள்வோம். மியாவ் என்ற சத்தத்துக்கு, அழுகிறதென்றும் சிரிக்குறதென்றும் பசிக்கிறதென்றும், ஒரு அன்னையைப் போல பேதமான அர்த்தங்களை அறிவோம். கடவுளிடம் கூட பகிரமுடியாத, காதலின் கண்டுகொள்ளாத தன்மையையும் ஊடல்களையும் காமடி என்ற பெயரிலான காயப்படுத்தும் வார்த்தைகளையும் கூட நம்பி சொல்லி வைப்போம். யார் இல்லாது போனாலும் அது இருக்கும் என்று இறுமாப்பு கொள்ளும் ஒரு நாளில் அது ஓடிப் போகும்.
கண்ணீர்-ஏமாற்றம்-விரக்தி. ஆசையாய் வளர்த்த பூனை இன்னொரு வீட்டில் அசைவ உணவுண்ணுவதை காண கிடைக்காதவர்கள் பாக்கியசாலிகள். "இனியொரு பூனைக்கு என்வாழ்வில் இடமில்லை" என்று திடசங்கற்பத்துடன் உறுதிமொழிகளை எடுத்துக் கொண்ட பின்னர், இன்னொரு பூனை எங்கிருந்தோ வரும். "இங்கிதனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்று எண்ண வைக்கும். இதுவும் என்றோ ஒரு நாள் ஓடி தான் போய்விடும் என்று தெரிந்தே எந்தக் கவலையும் இல்லாது நேசிப்போம்.
நாய்கள் விசுவாசமானவை. தாலி கட்டிய கணவன் என்று வாழும் எங்கள் பெண்களை போல, நாம் கொடுக்கும் ஒரு பங்கு உணவை அன்பென்று நம்பி-அதை விட பல மடங்கு அன்பைத் திரும்பக் கொடுப்பவை. அவற்றை நேசிப்பதில் என்ன இருக்கிறது? ஒரு பங்கு முதலில் பத்து பங்கு கிடைக்கும் வியாபாரம் அது. அவற்றுக்கும் வேறு வழியில்லை. சுதந்திரமாக வேட்டையாடி வாழ்ந்த அவற்றை, தமது வேட்டைக்கு என்று பழக்கி, பின்னர் தமது தனிமைக்கு என்று வளர்த்து, மனிதர்கள் அவற்றின் சுயத்தையே அழித்து விட்டார்கள். தம் சுயத்தை தொலைத்த அவை, வேறு வழியில்லாமல் மனிதர்களை சார்ந்தே வாழவேண்டிருக்கிறது.
அன்பையும் விசுவாசத்தையும் உணவுக்கு பதிலாகக் கொடுப்பது தான் தமது வாழ்வின் அர்த்தம் என்று எண்ணிக்கொண்டு நாய்கள் வாழ்கின்றன. முதலாளிகள் கொழிக்க உழைப்பைக் கொடுக்கும் வர்க்கம் போலவே நாய்கள். பூனைகள் அப்படி அல்ல. திமிர் பிடித்தவை. சுய கவுரவம் அதிகம். உண்பதற்கும் உறங்குவதற்கும் தமக்கென்று ஒரு தரநிலையைக் கொண்டவை. தமது தரநிலைக்கு கீழானவற்றைத் திரும்பியும் பார்ப்பதில்லை.
ஓடி தான் போகும் என்று தெரிந்தும் பூனைகளை நேசித்து இருக்கிறீர்களா? தனது உணவுக்காக வேட்டையாட தெரிந்தும் , அவை உங்கள் கவனத்துக்காகவும் நீங்கள் போடும் உணவுக்காகவும் காத்திருந்திருக்கிறதா? தொலைந்து போன பூனைக்குட்டி திரும்ப வந்ததாய் கனவு கண்டு இருக்கிறீர்களா? பக்கத்து வீட்டுப் பூனை கத்தியதை, "உனது பூனையா" என்று அன்னை சொல்ல, "இல்லை, அதன் குரல் வேறு" என்று சரியாகக் கணிக்க முடிந்திருக்கிறதா? புதிதாக ஒரு பூனை வந்த பிறகு, உங்களுக்கு என்றோ பிடித்திருந்த பழைய பூனையின் தோற்றத்தையும் இயல்புகளையும் புதிய பூனையில் தேடாமல் நேசிக்க முடிந்திருக்கிறதா? நிபந்தனையற்ற அன்பைக் கொடுக்க முடிகின்றமைக்காய் நீங்கள் என்றென்றைக்கும் பெருமை கொள்ளலாம்.

Sunday, July 10, 2022

Mens பட விளக்கம்

Mr.tamilan விளக்கம்

எனது விளக்கம்

"ஆம்பிளை எண்டா எப்பிடியும் இருக்கலாம். என்னவும் செய்யலாம். அதுக்கு பொண்ணுங்க அடங்கி போகணும்" எண்டு ஒரு மூட நம்பிக்கை இருக்கு. மூட நம்பிக்கையோட இருக்கிறவன் ஒரு மரம் மாதிரி. அவனுக்கு சூடு சுரணை இராது. சொந்தமா யோசிக்க முடியாது. அதனால தான் மரம். அந்த நம்பிக்கை உள்ள எல்லா ஆண்களும் ஒரே குணத்தை தான் பிரதிபலிப்பாங்க. பெரும்பாலும் நிறைய பேர் அப்பிடி தான். அதால தான் அந்தம்மா புருஷனின் முகத்தை எல்லா ஆண்களிலும் வைச்சாங்க. கவனிக்கவும். நல்ல ஆண்களும் இருக்கலாம். ஆனா அந்தம்மா சந்திச்ச எல்லா ஆணும் மோசம். அந்த மூட நம்பிக்கை வேற வேற ஆக்களுக்கு இருக்கும் போது அவங்க தங்கட புத்தியை எப்பிடி காட்டுவாங்க எண்டது தான் வித்தியாசமான பாத்திரங்கள்.

முதல்ல அந்த மூட நம்பிக்கையை சமூகம் கொடுக்குது. அதன் விளைவா அந்த சின்ன பையன் பிறக்கிறான். பிறக்கிறான்  எண்டு உருவாகிறான். அந்த பொண்ணை கடுமையா பேசுறான். அது தான் மோசமான நடவடிக்கையின் முதல் நிலை. அவனுக்கு சமூகத்தில மதிப்பு இல்ல. அவன் மோசமான நம்பிக்கை போட்ட மலம். அதான் பின்னால இருந்து வாரான். அவனால திட்ட மட்டும் தான் முடியும். அடுத்தது அவனுக்கு பாதிரியார் பிறக்கிறார். மற்றவனுக்கு அறிவுரை சொல்லுற நிலையில உள்ளவர். சமூகத்தில மரியாதை இருக்கு. மோசமா பேசுற ஒருவனிடம் இருந்து நன்மையை அனுபவிக்கனும் எண்டா அவனுக்கு ஜால்றா அடிச்சா தான் முடியும். அந்த மாதிரி ஜால்றா அடிச்சு இன்னொருவருக்கு அறிவுரை சொல்லுற நிலைக்கு வந்த ஒருத்தன் "ஆண்களுக்கு அடங்கி போ" எண்டு தான் இன்னோராளுக்கு அறிவுரை தான் சொல்லுவான். "எதிர்த்து நில்" எண்டு சொல்ல மாட்டான்.  தொப்புள் கொடி எண்டுறது அவனால இவன் இப்பிடியான நிலைக்கு வந்திருக்கிறான் எண்டதுக்கு. அது ரெண்டாவது மோசமான நிலை. 

அப்பிடி போதனை செய்யுற ஆக்கள் தான் அந்த ஓனர் மாதிரி ஆட்களுக்கு முதுகெலும்பு. அவனுக்கு சொத்து இருக்கு. அதை வைச்சு அந்த பொண்ணை துரத்துறான். "அவனை மாதிரி மோசமான ஆண்கள் வாழுற உலகத்தில தனியா வாழ ஏலாது. அதனால கொடுமை படுத்துற புருஷன் இருந்தாலும் அட்ஜர்ஸ்ட் பண்ணி தான் ஆகணும்" எண்டு சொல்லுற தைரியத்தை ஒரு புருசனுக்கு கொடுக்குறது அந்த ஓணர் மாதிரி ஆக்கள் தான்.  அதனால தான் அவன்ர வாய் வழியா அந்தம்மாட புருஷன் வாறான். இதான் மோசமான ஆண்களின் கதை.

Sunday, September 26, 2021

எனக்குப் பிடித்த காதல்

 


மகாகாளியின் தன் கர்ப்பத்தில் இருந்து பிரம்மா, விஷ்ணு, மகாதேவரைத் தோற்றுவித்தாள். தன் ருத்ரமுகத்தை அருகில் கொண்டு போய்க் காட்டினாள். அஞ்சிய பிரம்மனுக்கு ஞானத்தை உணர்த்த கலைவாணியை அளித்தார். விஷ்ணு, "அவள் அழகி என நம்பு மனமே. அஞ்சாதே" என தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். அவருக்கு மாயையை கையாளும் திருமகளை அளித்தாள். மகாதேவரோ மகாகாளியின் ருத்ர உருவில் அஞ்சாமல் தன் தாயைக் கண்டார். அவளது உருவில் இருக்கும் பேரழகை உணர்ந்தார். "அன்னையை உன்னில் காண்கிறேன்" என மகாதேவர் சொல்ல, மகாகாளி பேரன்பின் ஆனந்தத்தை முதன்முதலில் அறிகிறாள். அவருடைய தாயாக இல்லாமல் மறுபிறப்புக் கொண்டு, தானே அவரைத் தேடி வருவதாக மகாகாளி வாக்களித்தாள். அவள், பேரழகியான 'சதி'யை "இதுவே உங்கள் துணைவி" எனக் காட்ட, மகாதேவர் "இது நீயில்லையே. நீதான் வேண்டும்" என்கிறார். மகாகாளி ஆனந்தம் கொள்கிறாள். பேரழகியான அமைதியான 'சதி'ஐ விடுத்து "நீதான் வேண்டும்" என ருத்திர ரூபம் கொண்ட அவளை மகாதேவர் கேட்டது அவள் மனதை மகிழச் செய்கிறது. "இவளுக்குள் இருப்பது நானே. இவளுக்குள் இருந்து என்னை நீங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். அதுவும் நேரடியாக சொல்லக் கூடாது" என வாக்குறுதி வாங்குகிறாள். "நீங்கள், நான் வரும்வரை தவத்தில் காத்திருங்கள்" எனக் கூறி மகாகாளி மறைந்து விடுகிறாள்.


மகாகாளிக்காக பன்னெடுங்காலம் தவத்தில் காத்திருக்கிறார் மகாதேவர். அந்த மகாகாளியை துணையாகப்பெற எவ்வளவு காலம் காத்திருப்பதும் தகும் என அவர் அறிவார். 'சதி' யாகப் பிறந்து மகாதேவரை மணந்த தேவி, மகாதேவர்மேல் சொல்லப்பட்ட வார்த்தைகள் தாளாமல் அக்கினிப்பிரவேசம் செய்கிறாள். தேவியை அவள் தான் மகாகாளியென உணரவைக்கும் மகாதேவரின் முயற்சி தடைப்படுகிறது. மகாதேவர் மீண்டும் தாடி வளர்த்து, "இனி பெண்களே வேண்டாம்" என கடும் தவத்தில் இருக்கிறார். 'பார்வதி'யாக மறுபிறப்பு எடுக்கும் மகாகாளி ஒருவாறாக மகாதேவர் மனதில் இடம்பிடிக்கிறாள்.  பார்வதியிடம் 'சதி' பற்றிக் கூறுகிறார் அவர். பார்வதியோ, தானே 'சதி' என அறியாள். மகாதேவர் 'சதி'யிலும் 'பார்வதி'யிலும் மகாகாளியையே காண்கிறார். அவர் 'சதி' பற்றி சொன்னது அவளுக்கு பழைய பிறப்பு ஞாபகம் உண்டா என அறியவே. இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். 


தேவி கோபக்காரி. ஒரே சண்டை தான். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒன்று அவளது வலிமையின் எல்லையை அவள் அறியாதது. மகாதேவரையே அவள்தான் தோற்றுவித்தாள். அவ்வளவு வலியவள். அத்தோடு மகாதேவரிடம் 'நாம் தானே காதலை சொன்னோம். அவராக என்னைக் கண்டடையவில்லை' என்ற எண்ணம் கூட அவளிடம் இருந்தது. அத்தோடு அவரது முதல் மனைவி 'சதி' பற்றி சொன்னதும் எரிச்சலைக் கொடுத்தது. இன்னும் அவளை மறக்கவில்லை எனக் கோபம். ஆனால் அவர் அவளுக்காகக் காத்திருந்த காலங்கள், அவள் பிரிந்த போது அவர் அடைந்த துயர் அவள் அறியாதது. அதற்கும் மேல் காளி கறுப்பழகி. மகாதேவர் செந்நிறம். அதற்கும் மேல் தேவி பிறப்பால் மனிதகுலத்தவள். மகாதேவரோ கடவுள். இவருக்கு நான் தகுதியானவளோ என்று எண்ணம் - தாழ்வு மனப்பான்மை. சர்வவல்லமை படைத்த மகாகாளி, மகாதேவனின் காதல் போதாதென எண்ணி மனம் வருந்தி பிரிந்து செல்வது ஒருபக்கம் மகாதேவருக்கு சிரிப்பைக் கொடுத்திருக்கும். இல்லையா?


தேவியை சாதாரண கணவன் போல காத்துக் கொள்ளாமல் அவளது வல்லமையை அவளறியச் செய்ய அவளை ஆபத்து நேரத்தில் நீயே உன்னைக் காப்பாற்றிக் கொள்ளென விட்டுவிடுகிறார் மகாதேவர். தானே மகாகாளியென தேவி அறிகிறாள். ஆனால் அவளது வலிமையின் எல்லையை அவள் அறியாள்.  ஒருமுறை மகாதேவர் அவளை 'கறுப்பி' என சொல்லிவிடுகிறார். சாதாரண பெண் போல சண்டையிட்டு பிரிந்துசென்று தவம்செய்து தானும் சிவப்பியாகி நின்றாள். பின்பொருமுறை பணியாள் ஒன்று பகடை விளையாட்டில் மகாதேவருக்கு வக்காளத்து வாங்கியதற்கு சண்டையிட்டாள்.


எப்போதும் சண்டையிட்டால் பிரிந்து சென்றுவிடுவாள். சிலசமயங்களில் பிரியும் போது, சிலகாலங்களின் பின்னர் தானே வந்துவிடுவதாக கூறுவாள். சிலசமயங்களில் நீங்கள் தேடிவந்தால் மட்டுமே வருவேன் என்று கூறுவாள். சிலசமயங்களில் செல்வதைத் தடுக்கவில்லை என்பதையும் கூறி மேலும் கோபமுற்று பிரிந்து செல்வாள். என்ன ஆனாலும் அவளது துயர் தீர்ந்த பின்னர் அவரை சேர்ந்து விடுவாள். அவள் நதி. மகாதேவர் சமுத்திரம். எங்கெங்கே அவள் சென்றாலும் கடைசியில் சேர்ந்தே ஆகவேண்டும். அவ்வளவு தவம் செய்துதான் மகாதேவர் அவளை துணையாகப் பெற்றார். சுயாதீனமான சர்வவல்லமை கொண்ட தேவி எண்ணிலடங்கா சண்டைகளின் பின்னரும் மகாதேவரையே நாடுவதற்கு அதுவே காரணம். மகாதேவரின் அந்தத் தவம் - அவருடைய தீராக்காதல் அவளை அவரிடமே சேர்க்கும் வல்லமை கொண்டது. ஆம். தேவி பிரிந்து செல்லும் போதெல்லாம் மகாதேவர் அமைதியாகத் தியானத்தில் அமர்ந்து விடுவார். தனது தொழிலைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பார். அதிகமாகத் தேவியின் இன்மையை உணரும் போது அவர் அவளைத் தேடிச்செல்வார். அல்லது அதிகமாக மகாதேவரின் இன்மையை உணரும்போது அவள் அவரைத் தேடிச் செல்வாள்.  ஒரேயொரு முறை மகாதேவர் தேவியைப் பிரிகிறார். அப்போது தேவியோ உலகை அழிக்கத் துணிந்துவிடுகிறாள். அந்த ஒரு பிரிவில், அவள் ஒவ்வொரு முறையும் பிரியும் போதும் அவர் அடைந்த வலியைத் தேவி அறிந்து கொள்கிறாள். "வெளியே இருக்கும் நான், உன்னைப் பிரிந்தாலும்- உனக்குள் இருக்கும் என்னைத் தேடு" என பிரிவிலும் வழிகாட்டியாய் இருக்க முன்பொருநாள் மகாதேவர் சொன்ன வார்த்தைகளுடன் தேவி மீள்கிறாள். அதன் பின்னர் தேவி மகாதேவரைப் பிரிந்ததேயில்லை. அதன் வலியை அவள் உணர்ந்து விட்டாள். தான் உணர்ந்த வலியை தன் காதலனுக்குத் தேவி கொடுக்க மாட்டாள். பிள்ளைகளுக்கு மணமுடித்து வைக்கும் தேவி மனநிறைவு அடைகிறாள். அவளுக்குள் அந்த நொடியே அனைத்தும் அடங்கி விடுகிறது. தேவி தனித்து நிற்கிறாள். "எங்கே எனது வீடு. எங்கே என் பிள்ளைகள். எங்கே என் கணவன்" என கண்கலங்கி நிற்கிறாள். அவளுக்குள் இருக்கும் அவளது மகாதேவன் "நீ மட்டுமே சத்தியம். அனைத்தும் உன்னுள் அடக்கம். உன்னால் மீண்டும் உன்னுள் இருந்து அனைத்தையும் தோற்றுவிக்க முடியும்" என்கிறார். மகாதேவரின் காதலின் எல்லையையும் தனக்குக் கொடுத்த வாக்கிற்காய் அவர் பட்டபாட்டையும் தனது வலிமையையும் ஒருங்கே அறியும் தேவி மீண்டும் தனக்குள் ஒடுங்கிப்போன அனைத்தையும் மீள பிரித்து ஆனந்தம் காண்கிறாள். இனி சந்தேகங்கள் இல்லை. சண்டைகளும் இல்லை. 


மகாதேவரின் காதல் அளப்பரியது. மிகச்சிறந்த காதல் ராதாகிருஷ்ணருடையது இல்லை. அது மகாதேவர் மற்றும் மகாகாளியின் காதலே. எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு மகாகாளி இருக்கிறாள். என்ன செய்வதென அறியாது நிற்கும் போது, வழி சொல்லும் கலைவாணியாகவும், ஏதும் இல்லாத நிலையிலும் எல்லாம் இருப்பதாய் நிறைவு தரும் மகாலக்ஷ்மியாகவும், அனைத்தையும் ஜெயித்து விட முடியும், அதற்கு தான் துணை நிற்பதாகக் கூறும் பார்வதியாகவும், மோட்சத்திற்கு வழிகாட்டியாகவும்-மோட்சமாகவும் அந்த மகாகாளி நிற்கிறாள். தன் துணையின் திறமைகளை வெளிக்கொணரும் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் மகாதேவர் இருக்கிறார். அதிகம் பேசாவிடினும் அவரின் தீராக்காதல் தெய்வீகமானது. அவ்வாறு துணைநிற்கும் பெண்களிலும் ஆண்களிலும் மகாகாளியையும் மகாதேவரையும் காண முடியாதவர்களே நாத்திகர்கள். அவர்கள் வாழும்போதே நரகத்தில் உழல்வார்கள். நரகத்துக்குச் செல்ல அவர்களுக்கு மறுபிறப்புத் தேவையில்லை.

Monday, August 24, 2020

சுட்டது

 பண்பின் நாகரீகத்தை

நேர்மையின் பெருமையை
பக்குவத்தின் புரிதலை
என்னுள் வெறுக்கச் செய்கிறது
உன் மீதான காதல்…

விலகும் தூரத்தில்
உன்னை நிறுத்தி,
காதலின் கசிவில்
ஒழுகும் காமத்தைத் துரத்தி,
கடந்துபோகும் காலம் வரை
வாழ்வது என்ன வாழ்வு?

நான் நானாகவும்
நான் நானல்லாமலும்..
இருப்பின் இருத்தலாகவும்
மாறுதலின் இருத்தலாகவும்…
இயங்கிக் கொண்டிருக்கும்
இதய துடிப்பின்
கொடுமை ஒரு பொழுதும்
உனக்குத் தெரியாது..

அக்கினிக் குஞ்சுகளால் கூட
அணையாமல் அழமுடியுமா?
உன்பார்வை
சொல்லித் தந்த பாடமது..
அணையாமல்
அழுது விட்டுப் போகிறேன்…

-சுட்டது