Sunday, March 31, 2013

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...அங்கம் 8 - இறுதி அங்கம்


ஆண்டுகள் மூன்று ஓடி விட்டிருந்தன… பல்கலைக்கழகத்தில் ஸ்ரைக்… அடிக்கடி நடக்கும் கூத்துத் தான்…. அதையொட்டி அவளுக்கு விடுமுறை…

சனிப்பிரதோச விரதம்…. சிவன் கோயில்… அவள் கோயிலில் நின்று கொண்டிருந்தாள்…. மனம் ஏதோ பரபரத்தது….. யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதாய் உணர்வு… யாரென்று பார்க்க வேண்டும்… ஆனால் அவர்கள் பாராமல் பார்க்க வேண்டும்…. அது அவனாகக் கூட இருக்கலாம்…. பிரகாரப் பூஜைகள் முடிந்திருந்தன… நவக்கிரகப் பூஜை நடக்கும் போது லேசாக எட்டிப் பார்த்தாள்…. அவன் தான்…. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்…..அவள் பார்த்ததை அவன் பார்த்துவிட்டான்… பக்குப் பக்கென்று அடித்துக் கொண்டது மனம்… பின்னணியில் முதல் முறை பார்த்த ஞாபகம் பாடல் ஒலிப்பதாய் ஒரு பிரமை…..

அவன் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணை அப்போது தான் அவள் கண்டாள்…. அவள் சந்தேகம் உறுதியாகி விட்டது… அவள் முகத்தில் குங்குமம் இருக்கவில்லை… ஆகவே அவள் மனைவியில்லை… அவள் அவன் காதலியாக இருக்க வேண்டும்… இப்போது நான் யார்?

மனச்சாட்சி அவளைக் கேலி செய்தது….. ’நான் அப்பவே சொல்லச் சொல்லக் கேட்டியா? இப்ப பார் உன்ர நிலையை……’

’இந்த ஒரு தடவை மட்டும் தான் நான் தோற்று விட்டேன்….’

‘ஒரு தடவை என்றால் என்ன? இது தான் க்ளைமக்ஸ் கட்டம்… இனி போட்டியே இல்லை….’

’நீ வீணாகக் கனாக் காண்கிறாய்… நான் தோற்கவேயில்லை.. நான் ஆரம்பத்தில் சொன்னது போல அவன் என்னை நேசிப்பதற்காய் நான் அவனை நேசிக்கவில்லை…இப்போது மட்டும் அவன் வேறு ஒருத்தியை நேசிக்கிறான் என்பதற்காக மட்டும் ஏன் என் நேசத்தை மாற்ற வேண்டும்?’

‘நீ என்ன உளறுகிறாய்?’

‘உளறவில்லை…. நான் தற்கொலை செய்ய முடியாது… என் தாய்க்கு அவ்வாறு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்……அவன் வழியில் குறுக்கிடாமல் நான் அவனை நினைத்துக் கொண்டே அவனுக்காக வாழ்வேன்…’

’திருமணம்….’

’அவனைப் பார்த்த அந்த நொடியிலேயே அது அவனோடு முடிந்து விட்டது…’

’ஒரு வார்த்தை கூடப் பேசாத ஒருவனுக்காய் உன் வாழ்க்கையையே வீணாக்கத் துணிந்து விட்டாயே…..’

’இல்லை…. இது தான் சரியான முடிவு…. இதற்கு மேலும் நான் இன்னொருவனைத் திருமணம் செய்வது கள்ளப் புருசனை மனதில வச்சுக் கொண்டு கணவனைக் கட்டியணைப்பது மாதிரித் தான்…. அப்பிடி ஒரு அசிங்க வாழ்க்கை எனக்குத் தேவையில்லை…’

’அதுக்கு….’

’நான் சிஸ்டராகப் போறன்…’

’லூசா நீ? கிறிஸ்தவம் பற்றி உனக்கு என்ன தெரியும்? அப்பிடியே தெரிஞ்சு கொண்டாலும் மதம் மாறுவது தாயை மாத்துவது மாதிரித்தானே… அது மட்டும் உயர்ந்த செயலோ? அதோட ஏன் நீ கன்னியாஸ்திரி ஆனனீ எண்டு கேட்பாங்களே…. உன்ர தங்கச்சிமாரின்ர வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் யோசிச்சியா? காதல் கண்ணை மறைச்சிட்டுது… உனக்கு நீ தான் முக்கியம்… நீ ஒரு சுயநலவாதி… பிடிவாதக்காரி… உன்ர பிடிவாதத்திற்கு உன்னை மட்டுமல்ல…. உன்ர குடும்பத்தையே பலியாக்கப் போறாய்…. நீ படிச்சு நிறையச் சம்பாதிச்சு உன்ர குடும்பத்தின்ர கஸ்டத்தைப் போக்கணும் எண்டதெல்லாம் மறந்து போச்சோ…. பிரமாதம்…. உன்னை என்ன என்று சொல்வது…. நீ பாதகி… பாவி….’

’போதும்… என்னை வார்த்தைகளால் கொல்லாதே….நான் யாரையும் பலியிடப் போவதில்லை… இந்தக் காதல் என் தவறு தான்… என் கண்கள் தான் அவனைக் கண்டது… அதற்காக அவை காலம் முழுக்க அழ வேண்டும்….. திருமணம் முடித்தவள் போல இந்த உலகை ஏமாற்றி வாழ்வேன்… அதற்காக என் வேலையையும் வாழ்வையும் வெளிநாட்டிற்கு நகர்த்துவேன்….. இதனால் என்னைத் தவிர யாருக்கும் எதுவும் ஆகப் போவதில்லை….’

மனச்சாட்சிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை… இனி உன் இஸ்டம் என்று விட்டு விட்டது…

அவள் வாழ்கிறாள்…. அவளது அன்பான உறவுகளுக்காக…. அவள் செய்து கொடுத்த சத்தியத்திற்காக…. அனுவுக்காக…. அவளது சின்ன மகனுக்காக…. எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்காக………. அவனை நினைக்காமல் இருப்பதற்காக முழுநேரம் சிந்திக்கும் வேலையைத்தேடிக் கொண்டு……நரம்பு இருந்தும் வாசிக்காத வீணையாக…

”வீணா வீணா ” கதவு தட்டப் படும் ஓசை கேட்டது…

”எழும்பு வீணா… சாப்பிட்டுட்டுப் படு….” அது அனு தான்….

”முகம் கழுவிட்டு வந்திடுறன்……”

அவள் எழுந்தாள்…. கண்களில் கண்ணீர் இல்லை… அது பாலைவனமாகி விட்டிருந்தது…..

முகத்தில் ஒரு தெளிவு இருந்தது…… 

அதில் கூட அவன் தான் தெரிந்தான்…..
      




முற்றும்….
           

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...அங்கம் 7


“என் காதல் சொல்ல நேரமில்லை….” அது அவனுடைய மனக்குரலாகக் கூட இருக்கலாமே….அவள் ஏங்கித் தவித்தாள்.

க.பொ.த(உ/த) பரீட்சை… அவள் மிகவும் கெட்டிக்காரிதான்… அவன் நினைவுகளால் படிப்பைத் தொலைத்து விடக்கூடாது என்று பயமாக இருந்தது….ஏதேதோ சாட்டுக்கள் சொல்லி அவனை மறந்து விட முனைந்தாள். ஒவ்வொரு முறையும் மறக்க நினைக்கும் போது, அதிகமாக அவனை நினைக்க வேண்டியிருந்தது.

ஒருமுறை மனம் தாளாமல் அவள் குமுறிக் குமுறி அழுதுவிட்டாள். இன்று மட்டும் அவனைக் காணாதுவிட்டால் அவனை அடியோடு மறந்து விடுவது என்று சபதம் வேறு எடுத்துக் கொண்டாள். எங்கோ இருக்கும் அவன் கண்டிப்பாக வரப் போவதில்லை…ஆகவே தான் அவனை மறப்பதற்கு அது தூண்டுகோலாக இருக்கக் கூடும் என்பதே அவள் எண்ணமாக இருந்தது.

அன்று பகல் பன்னிரண்டு அரை மணிக்கு அவளுக்கு இரசாயனவியல் விசேட வகுப்பு இருந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் கிளம்பிவிட்டாள்…கண்டி வீதிக்கு துவிச்சக்கரவண்டி ஏறியது..அவள் பாடசாலையை அண்மித்திருந்தாள். அவள் எதிர்பாரா வண்ணம் ஒரு காட்சி….

தூரத்தில் ஒரு ஹயஸ் வான் யாழ்ப்பாணம் நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது..அதற்குள் இருப்பது அவன்….அவனே தான்… அவளால் தூரத்திலே இனங்காணக்கூடிய முகம்…அவன் கையை அசைத்துப் புன்னகைத்தான்… அப்போதுகூட அவளுக்கு சிரிக்கத் தோன்றவில்லை… பிரமை பிடித்தவள் போல் போய்க் கொண்டிருந்தாள்…. அவனது வண்டி போய் விட்ட பிறகு அவளைத் தவிர வீதி வெறித்துப் போயிருந்தது….

யாருமேயில்லாது இருந்த விதி என்னும் அவள் வீதியில் திடீரென்று வந்து பாய் காட்டி பறந்துபோய் அவளைத் தனியாய் ஆக்கிவிட்ட சம்பவத்தை அது குறித்ததோ யாரறிவார்…..

ஆனால் அவளால் இனி அவனை மறக்க முடியாது என்பதே பெரிய பிரச்சினையாக இருந்தது…

பரீட்சை முடிந்திருந்தது…. பல்கலைக்கழக அனுமதி தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவளுக்கு போய்விட்டிருந்தது….

கல்லூரியில் அவள் கெட்டிக்காரிதான்…ஆனால்…ஆனால்…

அவள் இரண்டாவது தடவை படிப்பதற்காக வகுப்புக்கிற்கு சென்றாள்… ஆசிரியரே அதிர்ந்து போய்ப் பார்த்தார்…’இவளுக்கு என்ன தான் ஆகி விட்டது’

எல்லோருமே ஏசினார்கள்…. வகுப்பும் கைவிடப்பட்டது…. பரீட்சை முடிவுகள் வெளியாயின…

அவள் அரும்பொட்டில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியிருந்தாள். மற்றவர்களைப் பொறுத்தவரை அவர்கள் இதை எதிர்பார்த்தார்கள்…அவளுக்கு அது உலக அதிசயமாக இருந்தது…. கடைசி நேரத்தில் படிக்காமல் – படித்தது எல்லாம் மறந்து போயிருந்தவளுக்கு இது அதிசயமில்லாமல் வேறு என்ன? அவள் மட்டும் அவனைக் காணாது விட்டிருந்தால் அவளது இலங்கை நிலை இன்னும் முன்னணியில் வந்திருக்கக் கூடும்…

தாயுடன் கோயிலுக்குப் போயிருந்தாள்…..’இனியாவது அவனை மறந்து விட வேண்டும்… அவன் எனக்குக் கிடைக்க மாட்டான்…எங்கோ இருக்கும் அவனை எங்கு போய்த் தேடுவது….கண்டுபிடித்தாலும் எப்படி என்னை அறிமுகம் செய்வது… அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமா என்ன…. அவன் ஆயிரம் பெண்களைக் கடந்திருப்பான்…. சில சமயம் அவன் வேறு யாரையாவது காதலிக்கலாம்… ஏன் அவனுக்குத் திருமணம் கூட ஆகியிருக்கலாம்… அதைப் பற்றிக் கூட எனக்குக் கவலை இல்லை…. ஆனால் அவன் நினைப்பால் என் லட்சியம் கெட்டுக் கொண்டு இருக்கிறதே…… அவனை மறந்து போவது தான் நல்லது….. கடவுளே அவனை மறந்து போவதற்கான மனப்பக்குவத்தைக் கொடு…’
முருகனுக்கு முன்னால் நின்று மனதுக்குள் மன்றாடிக் கொண்டிருந்தாள்…

முருகனின் தலையில் ஒரு ரோஜா மலர்… சட்டென்று ஏதோ ஒன்று பொறிதட்டியது…

’இந்தப் பூ எனக்குக் கிடைத்தால் அவன் அன்பை நான் பெறுவேன் என்று அர்த்தம்…இல்லை என்றால் நான் அவனை மறந்துவிட வேண்டும்…..’

மனதுக்குள் ஒரு நப்பாசை…. இப்போது பூசை நேரம் இல்லை… அந்தப் பூ என் கையில் வருவதற்கு வாய்ப்பே இல்லை…..

அவள் நினைத்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது….. அவள் கையில் ஒரு பூவினைத் திணித்தாள் தாய்…

”இந்தப்பூ எங்கால?”

“முருகனுக்கு வைச்சிருந்தது…. அபிசேகம் செய்யப் போயினமாம்… அதான் எறிய எண்டு ஐயர் எடுத்தவர்…. நான் தான் கேட்டு வாங்கினான்…..”

அவளுக்கு வாயடைத்துப் போய் விட்டது…. என்ன தான் செய்ய முடியும்….

Saturday, March 30, 2013

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...அங்கம் 6


அவள் வேலைகளில் மூழ்கியிருந்தாள்…..யன்னலருகே அசைவு…..யாரோ தன்னைப் பார்ப்பது போன்ற உணர்வு……

கோலம் போடுவதற்காகக் குனிந்துகொண்டிருந்த தலையை நிமிர்ந்துபார்த்த போது, அவன் தான் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்….

அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டாள்….அவனைக் காணாதது போல இருந்து விட்டு அவனை தன்னைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதா - இல்லை -முறைத்துப் பார்த்து அவனை விரட்டுவதா என்று தீர்மானிக்கமுடியாமல் தவித்தாள்…… இதற்கு முன்னர் கூட பல சந்தர்ப்பங்களில் சுமாரான தன்னையே பார்த்து ஜொள்ளுவிடும் ஆண்களை முறைத்துப் பார்த்துத் துரத்தி விட்டிருக்கிறாள்…இருந்தாலும் அவன் தன்னைப் பார்ப்பதையே அவள் உள்ளூர விரும்பினாள். வாழ்க்கையில் ஒரு ஆண் தன்னைப் பார்க்க வேண்டி அவள் ஆசைப்பட்டது அதுவே முதல்முறையாக இருந்தது……

’அவன் வேறு ஏதோ வேலைக்காக வந்திருக்கிறான்…நீ சும்மா அலையாதே…’ மனதுக்கு ஆணையிட்டு விட்டு லேசாக முறைத்தாள்…அவன் போய் விட்டான்…’இதற்கு நீ பார்க்காமலே விட்டிருக்கலாம்’ தன்னைத் தானே நொந்துகொண்டாள்…அவன் மீண்டும் வரமாட்டானா என்று யன்னலை அடிக்கடிப் பார்த்துக் கொண்டாள்.

“என்ன பிள்ளை களைச்சுப் போனியே? பூவின்ர ஒரு இதழுக்கே களைச்சுப் போனா என்ன நிலமை? விடு நானே போடுறன்…”

அவளுக்கும் அதுவே சரியெனப் பட்டது….’எதுக்கு அங்க பாத்துப் பாத்துக் கோலத்தை அசிங்கமாப் போடணும்…’

இப்போது பலகாரம் பொதி செய்யும் இடத்தில் அவள் நின்றிருந்தாள்…அதையாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்பது அவள் எண்ணம்…..நண்பிகளுடன் ஏதேதோ பேசிக்கொண்டு வேலையில் மும்முரமாக இருந்தாள்…

”அடி…எங்கட இங்கிலீஸ் இருக்குதானே…அவக்கு கல்யாணம் முடிஞ்சுட்டாம்…ஹஸ்பண்ட் தோட்டமாம்….”

”ஐயோ அப்ப அவர் பாவம்டி… எங்க மிஸ் இங்கிலீஸில பேசியே கொன்னிடப் போறா” என்று சொல்லிக்கொண்டே ஆசிரியை அடிக்கடி கூறும் அட்வைஸினை ஒப்புவித்தாள் வீணா.

கொல்லென்ற சிரிப்பு….இது பெண்களின் சிரிப்பல்ல!

திரும்பினால் மிக அருகில் அவன் நின்று கொண்டிருந்தான்…சிரித்தது அவன் தான்…
அவளுக்கு ஒருமாதிரி இருந்தது….அவன் தன் பரிவாரத்துடன் வந்திருந்தான்…அவன் நண்பர்கள் அவன் பெயரைக் கூறி அழைத்துக் கேலி செய்தார்கள்.

“டேய்…பாலா…”

‘பாலா அதுதான் அவன் பெயரா?’

சற்றுநேரத்திற்கெல்லாம் அவள் ஆசிரியையின் அட்வைசினைப் பீட்டர் விட்டுக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.

‘அதில் எத்தனை க்றமர் மிஸ்டேக்கோ?’ என்று சற்று அசவுகரியமாய் உணர்ந்தாள். ‘எத்தனை முறை வகுப்பில் பிழையான உச்சரிப்புக்காக குட்டு வாங்கியிருக்கிறாய்? வகுப்பே உன்னைப் பார்த்து சிரித்திருக்கிறது….இப்போது மட்டும் என்ன பெருசா சீன் போடுறாய்’ என மனசாட்சி கேலி செய்தது

’இந்த நேரம் பார்த்து எல்லா எருமைகளும் எங்குபோய்த் துலைந்தார்கள்?’

ஆனாலும் மனம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது…’அவனும் என்னை விரும்புகிறான்’

‘மூடப் பெண்ணே….இதுதான் அண்மைக்கவர்ச்சி…அடிக்கடிப் பார்ப்பதால் வருவது….அவன் வந்தது பலகாரம் ஆட்டயப் போடுவதற்கு…..’

இப்போது அவள் அவனைத் தேடினாள்..அவன் போய்விட்டிருந்தான்…ஒருவேளை இது கனவாக இருக்குமோ? அவள் ஒன்றிற்கு மூன்று முறை கையைக்கிள்ளிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டாள்.

’கிறுக்கி…இப்போதாவது அவனை மறந்து விடு…அவன் உன்னைக் காதலிக்கவில்லை…. சைட் அடித்திருக்கலாம்…நீ பட்டிக்காடு…அசடு…உனக்கு சைட்டுக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை…அவன் பட்டணத்துக்காரன்…அவர்களுக்கு சைட் என்பது பொழுதுபோக்கு….அவன் உன்னை உடனேயே மறந்து போய்விடுவான்….’ மனசாட்சி ஆணையிட்டது…

‘அவன் என்னை மறந்தால் என்ன – மறக்காவிட்டால் என்ன- அவன் என்னை விரும்புகிறான் என்பதற்காகவா நான் அவனை விரும்பினேன்? இல்லையே…பின்னர் அவன் என்னை விரும்பவில்லை என்பதற்காக மட்டும் நான் ஏன் அவனை மறக்க வேண்டும்?’

இப்போது மனச்சாட்சியின் நிலமை கேள்விக்குறியாகி விட்டது…அது என்ன செய்யும் பரிதாபம்…காதல் பைத்தியம் முத்திப் போன கேஸுகளுடன் டீல் பண்ணுவது கஸ்டம் என்று அதற்கு விளங்கிவிட்டது… கூடவே ஒரு பயமும் வந்து ஒட்டிக் கொண்டது…

’இவள் பாட்டுக்கு இப்பிடிப் பைத்தியம் பிடித்து அலைவது பத்தாது என்று தன் நேசத்தை இவளே வெளிப்படுத்தவும் துணிந்துவிட்டால் என்ன செய்வது? இவ்வளவு காலமும் நான் வாழ்ந்திருந்த மரியாதையான வாழ்க்கை என்ன ஆகும்? அதுவும் அவன் இவளைக் கேவலமாக நினைக்க மாட்டானா? இவளைப் பார்த்து இப்பிடி எத்தனை பேருக்குப் பின்னால் அலைந்தாளோ என்று கூட சந்தேகப்படுவானே….. காதல்கொண்ட தமிழ்ப்பெண்ணுக்கு தன் காதலை வெளிப்படுத்த உரிமை இல்லையே….இந்த அவமானம் அவளுக்கு மட்டுமா? எனக்கும் தானே’

இப்போது மனச்சாட்சி ஒரு முடிவுக்கு வந்தது…

’நீ அவனை இந்தத் திருமணத்திற்குப் பின்னர் மறந்து விடுவாய் என்றே நான் நம்புறன்….அப்பிடி மறக்காமல் அவனைத் தேடுவதைப் பற்றியோ – நினைப்பதைப் பற்றியோ எனக்கு ஆட்சேபணை இல்லை…. நீ சத்தியத்தை மீறமாட்டாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்….ஆகவே எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடு…எந்த சந்தர்ப்பத்திலும் உன் காதலை நீயாக முதலில் வெளிப்படுத்தக் கூடாது….’

’அதற்கென்ன…நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் அவ்வாறு செய்ய மாட்டேன்…நான் ஒரு தமிழ்ப்பெண் என்பதை மறந்து இவ்வாறு நீ சொல்வது சரியில்லை…’

இப்போது மனச்சாட்சியின் பாரம் இறங்கிவிட்டிருந்தது…மனதின் பாரம் கூடிவிட்டிருந்தது…காரணம் அது புதிதாக நினைக்கத் தொடங்கியிருந்த அவன் தான் என்று சொல்லவும் வேண்டுமோ?

திருமணம் முடிந்து அவர்கள் புறப்படும் நேரம்… அவன் வழியனுப்ப வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள்….அவன் வரவில்லை… 

‘ஏதாவது வேலையாக இருக்கலாம்… சில நேரம் அவன் முதலே கிளம்பியிருப்பானோ யார் கண்டது….’

அவள் வீட்டை அடைந்திருந்தாள்….இருந்தாலும் மனம் அவனைச் சுற்றியே வட்டமிடத் தொடங்கியது….

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...அங்கம் 5


அப்போது அவள் வாழ்க்கைப் பிடிப்பைத் தொலைத்து விட்டிருந்த காலம். சண்டைகளும் அதைத் தொடர்ந்து சபதங்களுமாய் தொட்டதுக்கெல்லாம் கோபம் வரும் சிடுமூஞ்சி வீணாவை வீட்டில் யாருக்கும் பிடிப்பதில்லை…வீட்டில் இருக்கக்கூடாது என்பதற்காக நன்றாகப் படித்து எங்காவது தூரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போய்விட வேண்டும் என்பதும் நிறைய சம்பாதித்து தான் பிறந்த கடனைக் கட்டி விட வேண்டும் என்பதும் மட்டுமே அவளது ஒரே மூச்சாக இருந்தது…வேகமாகப் போய்க் கொண்டிருந்த அவள் வாழ்க்கைச் சக்கரம் அவன் வந்த பிறகு அச்சாணியைத் தொலைத்துவிட்டிருந்தது என்பது உண்மை தான்.

அவளுக்கு அப்போது காதல் என்றால் என்ன என்றே தெரியாத வயது அல்ல….அவளுக்கு காதல் என்பதையே பிடிப்பதில்லை….அதை ஒரு வேண்டாத பொருளாகவே பார்த்தாள். லட்சியத்திற்கான தடை என்பதே காதலுக்கான அவளின் வரைவிலக்கணமாக இருந்தது.
நண்பியின் அக்காவின் திருமணம். அங்கே அவன் வந்திருந்தான். அங்கு தான் அவள் அவனை முதல்முறை கண்டாள்.

நண்பிகள் சகிதம் வீட்டுக்குள் போனவள், அவளை அறியாமல் நிமிர்ந்து மாடியைப் பார்க்கவும் மாடியில் ஏதோ வேலையாய் இருந்தவன் அதே நேரம் கீழே பார்க்கவும், சீதை பந்து வீழ்ந்தது எனக் கீழே பார்க்க ராமன் அத்தருணம் மேலே பார்த்தது போல் அந்த ரைமிங் அப்பிடிப் பொருத்தமாக இருந்தது.

அவள் ஒரு கணம் பார்வையிழந்ததைப் போல உணர்ந்தாள். தலை சுற்றி மயக்கம் வருவது போன்ற பிரமை. இது வரை அப்பிடி ஒரு உணர்வை அவள் உணர்ந்திருக்கவில்லை. எத்தனையோ அழகான ஆண்கள் அவளைக் கடந்து போயிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நின்று பார்க்கக்கூட அவளுக்கு நேரம் இருக்கவில்லை. இப்போது ஒரு சுமாரானவன் முன்பு தோற்றுவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றிற்று. இது முன் ஜென்ம பந்தமா என்று அவனை உற்று நோக்கினாள்.
இவையெல்லாம் ஒரு கீறிட்ட துண்டுக் கணத்துள் நடந்து முடிந்து விட்டிருந்தன. ஆனால் அந்தக் கணம் ஒரு யுகமாக அவளுக்குத் தோன்றியது.

அவன் ஏதோ தெரிந்தவர்களைப் பார்த்துப் புன்னகைப்பது போல புன்னகைத்தான்.
’நான் உற்றுப் பார்ப்பது தெரிந்து விட்டதோ….’ சட்டென்று அவள் விழித்துக் கொண்டாள். மனச்சாட்சி அவளைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக் குடையத் தொடங்கியது.
’முட்டாள் மனமே! கேவலம்…உன் லட்சியத்தை விட்டு ஒரு ஆணின் பின் அலைகிறாயே’
‘நான் அலையவில்லை….சும்மா பார்த்தேன்…..’ தான் இது வரைக் கட்டிக்காத்து இப்போது இற்றுப் போன கர்வத்தை மனம் காப்பாற்ற முயன்றது…

‘நீ பொய் சொல்வது புதிதல்ல…… இந்த வயசு இரண்டும் கெட்டான் வயசு….இதில் வருவது காதல் அல்ல….இது வெறும் பருவக் கவர்ச்சியே! காதல் என்றால் என்ன? ஒருவருடன் பேசிப் பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்டு நன்றாகப் புரிந்துகொண்டு அதன் பின்னர் வர வேண்டும்…உன்னை மாதிரி சும்மா ஒருவன் சுமாராக இருந்தவுடன் அவன் பின்னால் ஓடிப் போவது காதல் அல்ல..’

‘நான் எல்லாருக்குப் பின்னாலும் அலையவில்லை….இவன் பின்னால் மட்டும் தான்….அது தப்பா?’ இப்போது கொஞ்சம் இறங்கி உண்மையை ஒத்துக் கொண்டது மனம்.
‘ஆஹா ஆஹா….இது பருவக்கவர்ச்சியே தான்…..நீ வேணும் எண்டால் பார் இந்தத் திருமணம் முடிந்து ஒரு கிழமைக்குள் நீ அவனை மறந்து விடுவாய்…..ஆதலால் மனதை அலைய விடாதே! உன் லட்சியத்தை மறந்து விடாதே!’

’இல்லை…இனிமேல் அவன் தவிர்ந்த வேறு எந்த ஆணுடனும் எனக்கு வாழ்வில்லை….’
‘சரி….உன் வழிக்கே வருவோம்….இவ்வளவு பேசுகிறாயே…. இன்றில் இருந்து ஒரு வருடத்துக்குள் நீ அவனை மறந்து விட்டால் நீ என் சொல்லைக் கேட்க வேண்டும்…..இல்லை என்றால் நீ சொல்வது போல இது காதல் தான் என்று நான் ஒத்துக் கொள்வேன்!’

அவள் மனதுக்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்து முடிந்திருந்தது……அதுவும் ஒரு ஒப்பந்தத்துடன்…..

Wednesday, March 27, 2013

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...அங்கம் 4


மீண்டும் சிங்கப்பூர்…..

விமான நிலையத்திலே ஒரு பெண் காருடன் காத்திருந்தாள்…இந்தியப் பெண்…இங்கே வீணாவுக்குக் காரோட்டி, நண்பி, தாய் எல்லாமே அவள் தான்…வீணாவுடன் தான் தங்கியிருந்தாள்…கணவனை விவாகரத்து செய்து விட்டு தன் மகனைப் படிக்க வைக்கக் கார் ஓட்டுகிறாள்…வரதட்சணைக்காக அவர்கள் செய்த கல்யாணம், அவளை இன்றைக்கு இந்த நிலைக்குத் தள்ளியிருந்தது…

“பயணம் எப்படி?”

“பரவாயில்ல…”

“ரெண்டு கிழமையாகும் எண்டீங்க….”

“மனசு சரியில்ல…அவர் வேற இங்க தனிய…”

“என்ன வீணா….எல்லாரிட்டயும் பொய் சொல்லி சொல்லி என்னட்டையும் பொய் சொல்லுறாய்….” சிரித்தாள் அவள்…

”ஆமா ஆமா அவர் எனக்குள்ளயே இருக்கேக்க நான் இப்பிடி சொல்லுறது பொய் தானே….” கண்சிமிட்டி சிரித்தாள் வீணா...

”அது கிடக்கட்டும்…உன்ன நான் ஒண்டு கேட்டா குறை நினைக்கக் கூடாது…”

”கேளுங்க…”

”நீ ஏன் கல்யாணம் கட்டல…? எதுக்கு கட்டின மாதிரி ஊரை ஏமாத்திட்டுத் திரியுறாய்?”

வீணாவின் முகத்தில் இருந்த புன்னகை காற்றில் விளக்கு அணைவது போல திடீரென்று எங்கோ ஓடிப் போய்விட அதில் துயரத்தின் சாயல் இருளாக வந்து ஒட்டிக் கொண்டது….

“எனக்கு முந்தில இருந்தே ஆம்பிளையளில நம்பிக்கை இல்ல….அதோட என்னை வச்சு சோறு போடேலாது எண்டு அப்பா சொன்னதில இருந்து என்ர செலவுக்கான கணக்கு எல்லாம் எழுதி வைச்சு இப்ப வரைக்கும் கணக்கு முடிச்சுக் கொண்டிருக்குறன்…….இதெல்லாம் நான் கட்டினா நடக்குமா?” சாட்டுக்காக சொன்னாள்…..

“நீ சொல்லுறது சாட்டு வீணா…. கோபத்தில சொல்லுறதைக் கூட இப்பிடி எடுக்குறதா?”

“அது மட்டுமில்லை அனு....அதோட நான் சிஸ்டர் ஆவம் எண்டு தான் இருந்தன்.....ஆனா அது என்ர தங்கச்சியாக்களின்ர வாழ்க்கையைப் பாதிக்கும் எண்டும், நான் ஏன் சிஸ்டர் ஆனன் எண்டும் கேட்பினம் எண்டதால தான் இப்பிடி ஒரு வேசம்......”

“அதில்ல வீணா....நான் சொல்லுறதைக் கேளு....உன்ர லைஃபை நீயே ஸ்பொயில் பண்ணிக் கொண்டிருக்குறாய்...”

வீணா பதில் பேசவில்லை….அவள் உலகத்தில் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் தனி மதிப்பு இருக்கிறது…அது யாரிடமும் இல்லை….யாருக்குமே சொன்னால் புரியாது….

“நான் ஏதாச்சும் பிழையாக் கேட்டிருந்தா ஸொறி…..” என்றாள் அனு

“அதெல்லாம் ஒண்டும் இல்லை…..காரைப் பாக் பண்ணிட்டு வாங்க”

வீணா திரும்பிப் பாராமல் படியேறிக் கொண்டிருந்தாள்…அவள் ஏறும் வேகத்துடன் கண்ணில் நீர் பெருகும் வேகம் போட்டியிட்டது….

”ஐய் வீணா அன்ரி”

அனுவின் மகன் வந்து ஒட்டிக்கொண்டான்..

அவனுக்கு பையில் இருந்த சொக்லேற்றுகளை எடுத்துக் கொடுத்து விட்டு,
“அன்ரிக்கு களைப்பா இருக்கு….”என்று சொல்லி விட்டு அறைக்குள் போய் தாளிட்டுக் கொண்டாள்…

கண்களுக்குள் கடந்தகாலம் கனவாய் விரிந்தது…..

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...அங்கம் 3


திருமணம் முடிந்து விட்டது….வீணாவுக்கு ஆட்களை முகங்கொடுப்பது சிரமமாகவே இருந்தது.

கடினமான பரீட்சை ஒன்று முடிந்து விட்டதாய் இப்போது உணர்ந்தாள்…போலிப் புன்னகைகள்…அடுக்கடுக்கான பொய்கள்….இந்த உலகம் என்னை ஏமாற்றுவதை விடவா நான் உலகத்தை ஏமாற்றுகிறேன்…..கண்டிப்பாக இல்லை…..

”நான் நாளைக்கே கிளம்புறன் அம்மா….அவர் அங்க தனிய…..”

”ஒரு ரெண்டு நாள் இருந்திட்டுப் போவன்….அங்கயும் வேலை வேலை எண்டு திரிவாயாக்கும்…”

’அப்பிடித் திரியுறதால தான் பழைய நினைவுகள் இல்லாம நான் நிம்மதியா இருக்கன்….’ மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

“இல்ல…நாலு நாள் தான் லீவு….பதினேழாந்திகதி ஒரு பெரிய ப்ரொஜெக்ட் வருது….நான் கட்டாயம் போகோணும்…”

அதன் பிறகு தாய் வற்புறுத்தவில்லை…புறப்பட அனுமதி தந்து விட்டாள்….

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...அங்கம் 2


”நாங்க எல்லாரும் கோயிலுக்குப் போறம்… நீயும் வாவன்…அங்கினேக்க கோயிலுகள் இருக்கே?”

வழமை போல அம்மா நச்சரித்தாள்.

வீணாவுக்கு பழைய ஞாபகங்கள் வேர்விட்டன. அப்போதெல்லாம் அடிக்கடி கோயிலுக்குப் போ எண்டு நச்சரிப்பாள். அவள் அதைக் கண்டு கொள்வதேயில்லை…நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் என்று சொல்லி தன் சோம்பேறித்தனத்தை மறைத்துக் கொள்வாள்.

அவன் வந்த பிறகு கோயில்,பக்தி,விரதம் என்று கடவுள் பின்னே கொலைப்பக்தி கொண்டு அலைந்த காலமும் இப்போது எதுவுமே இல்லாமல் வெறுமனே வாழ்ந்து கொண்டிருக்கும் காலமும் கண்முன்னே நிழலாடின.

“நான் வரேல்ல…”

“நீ திருந்த மாட்டாய்…”

”ஏன் இப்ப நான்? அப்ப தான் நாலுபேர் நாலுவிதமாக் கதைப்பினம்….அவயிட வாய்க்கு நான் அவல் தானே…”

காலையில் கேட்ட கதையின் பாதிப்பு அவள் வாயில் இருந்து வந்து விட்டது.

”பிள்ளை இல்லை எண்டதைப் பற்றி எதும் கதைச்சவையே?”

’ஆஹா அம்மாவே பொய் சொல்ல ஏதுவான காரணங்களை சொல்லுகிறாளே…தாங் கோட்’

”ம்ம்ம்………”

“உன்னை நான் என்ன சொன்னன்….கந்தசஸ்டி பிடி எண்டு சொன்னன்....நீ உன்ர பிடிவாதம் தான் பெருசு எண்டு அலை…..”

”ஆமா நான் விரதம் பிடிச்சாப்போல கடவுள் வந்து என்ர கையில பிள்ளையைக் கொடுத்துடுவார்….சும்மா போம்மா….” விரக்தியில் வெடித்தாள்.

அம்மா போய்விட்டாள்….வீணா மெல்ல மெல்ல நடந்து தன் பயணப்பைக்குள் இருந்த சுவாமிப்படத்தை எடுத்தாள். எல்லாரும் கோயில் போய்விட்டார்கள். கடவுளிடம் ஏதேதோ சொல்லி சொல்லி கத்தியழுதாள்….

“நீ செய்தது சரியா? நான் உன்னைத்தானே நம்பியிருந்தன்…நான் உன்னட்டக் கேட்டது என்ர தகுதிக்கு மிஞ்சினதுதான்….அதுக்காக இப்பிடி ஒரு வார்த்தையை என்னைக் கேட்க வைச்சிட்டியே…..இண்டைக்குக் காலமை சரசுமாமி என்ன சொல்லுறா தெரியுமா? நான் அடிக்கடிக் ஹெல்த் சென்ரர் போனனானாம். எனக்குத் தான் ரெண்டு துளி மழை பட்டாலே காய்ச்சல் வரும் எண்டு அவக்குத் தெரியாதா? என்னைப் பற்றிக் கேவலமா எல்லாம் கதைக்கிறாங்கம்மா….எனக்கு சொல்லத்தெரியல்ல….”

நீண்ட நேர அழுகை…நன்றாகக் களைத்து விட்டாள்…முகம் கழுவி விட்டு வந்து படுத்துத் தூங்கிப் போனாள்…

”என்ன வீணா என்ன நேரம் இப்ப? எழும்பி சாப்பிடு……”

“அவயள் ஆயிரம் சொல்லுவினம்….நீ யோசியாத…..நான் முருகனுக்கு ஒரு நேர்த்தி வைச்சிருக்குறன்......அடுத்தமுறை நீ வரேக்க ஒரு குட்டிப் பையனோட தான் வருவாய்…..”

’அடுத்தமுறை நான் வந்தாப் பாத்துக்கோங்க’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்……

“மாப்பிளைக்கும் அதால தான் கோபம் போல…..அது தான் வரேல்லையா?”
“ம்ம்ம்” என்று சும்மா ஒப்புக்குத் தலையாட்டினாள்.

Tuesday, March 26, 2013

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...அங்கம் 1


”என்னடி உன்ர வீட்டுக்காரர் இந்த முறையும் எங்கட ஊருக்கு வரேல்லயா? அந்தளவு வேலையாக்கும்…..மனிசின்ர தங்கச்சியின்ர கலியாணத்துக்குக் கூட வரேலாத அளவுக்கு”

வீணாவுக்கு மாமியின் பேச்சில் தெரிந்த குத்தல் விளங்காமல் இல்லை. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“இல்ல மாமி, அவருக்கு ஒபிஸில லீவு குடுக்க மாட்டாங்கள்……சரியாக் கவலைப் பட்டவர்….இஞ்ச பாருங்க இந்த நெக்லெஸை செலக்ற் பண்ணினதே அவர் தான்…..”

வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டே சொன்னாள். பொய்…பொய்….அதை மறைக்கத் தெரியாமல் கண்ணுக்குள்ள கண்ணீர் வந்து முட்டிக் கொண்டது.

காலையில் முழுகி விட்டு தலை துவட்டும் போது, தன்னை இனங்காணாமல், சரசு மாமி தன் சகாக்களுடன் பேசிக் கொண்டது இன்னும் குத்திக் கொண்டேயிருந்தது.

”உவள் கள்ளி….கதை விடுகிறாள்….அவளுக்கு கல்யாணம் ஆகேல்ல….அவள் சிங்கப்பூரில யாரோ வேற வேற பெடியளோட வேற வேற நேரத்தில கதைச்சுக் கொண்டு போனதை என்ர மகன் எனக்கு சொன்னவன்…..அப்ப அவள் பொட்டு வச்சிருக்கேல்ல….தாலி போடேல்ல….”

”அது சிங்கப்பூர் தானேக்கா….வெளிநாட்டில பொட்டு வைக்காதது, தாலி போடாதது எல்லாம் புதுசில்ல….அவள் அங்க வேலை செய்யுற இடத்தில அவள் பெடியளோடயும் பழகவேண்டித் தானே வரும்” இது ரமணி அன்ரி

”ஆமா…ஆமா….கலியாணம் கட்டாமல் கட்டாக்காலியாக நாலைஞ்சு பேரோட வாழுறதும் புதுசில்ல”

“என்ன கதை அக்கா இது….அவள் சிஸ்டருக்குப் படிக்கப் போறன் எண்டவள்…அதால தானே உங்கட மகனுக்கு கேட்க மாட்டன் எண்டவள்….பிறகு பாத்தா வெளில போன இடத்தில யாரையோ காதலிச்சு கட்டிட்டன் எண்டவள்….அவளைப் போய்….”

”அந்த அடங்காப்பிடாரி பற்றி உனக்கு என்ன தெரியும்? சரி அவட புருசன்ர படத்தை நீ பாத்திருக்கிறியே? எல்லாம் பொய்…நடிப்பு….என்ர மகனைக் கட்டினா அவளின்ர இஸ்டத்துக்கு ஆடேலா எண்ட பயம் தான்….அவள் படிக்குற காலத்திலயே அவளுக்கு நிறையப் பெடியங்கள் தான் ஃபிரண்ஸாம்…எப்ப பாத்தாலும் அவளின்ர போன் றிங் பண்ணிக் கொண்டிருக்குமாம்……செம்மறியை நெடுகலும் கம்பஸ் பாமசிக்க காணலாமாம்….”

”என்ன அக்கா நீங்கள்? கம்பஸ் எண்டா நிறைய பெடியங்கள் தான் இருப்பாங்கள்….பெட்டையள் குறைவு தானே? ஏதேன் தேவையெண்டா அவள் ஆரைக் கேட்குறது? அவளுக்கு வேற ரோசம் அதிகம்….பெட்டையளோட என்ன மனஸ்தாபமோ யார் கண்டது?”

“நீ என்ன அவளுக்காகப் பாடிக் கொண்டிருக்குறாய்? போன வருசம் வந்த போது உனக்கு கனக்க காசு தந்தவளோ….? அதுக்கான நன்றிக்கடனோ இது?”

எண்டு சொல்லி மாமி நிமிரவும் கதிரையில் இருந்து தலையைக் கவிழ்ந்து கொண்டு, தலை துவட்டிக் கொண்டிருந்த வீணா தலை முடியை கையால் உயர்த்தவும் சரியாக இருந்தது…

“யார் வீணாவோ?”

“இல்ல….நான் உஸா” தங்கையும் தானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் மாமியால் கண்டு பிடிக்கேலாது எண்ட நம்பிக்கை வீணாவுக்கு.

“பார் பிள்ள…இந்தக் கதை காதோடயே இருக்கட்டும்…நீ அவளிட்ட சொல்லாத…மாப்பிளை வீட்டுக்காரர் கேள்விப்பட்டா என்ன ஆகும்? அவளிட்டக் கேட்டா அவள் குத்தப்பாச்சலில கிளம்பிடுவாள்…பிறகு பிரச்சினை உனக்குத் தான்….”

“சரி மாமி…”

’என்ன ஒரு கெட்ட எண்ணம்…என்ன மனிதர்கள்….வாய் கூசாமல் வந்த வார்த்தைகள்…..இவர்கள் எல்லாம் முகத்துக்கு நேர என்ன மாதிரிப் பேசுகிறார்கள்…..’

”நான் சாப்பிடப் போறன் மாமி….”

அவள் போய் விட்டாள்…..அவளுக்கு இன்றைக்குப் பசிக்கவே போவதில்லை….

”ம்ம்….ஒரு மாதிரி அவளிட்டப் போட்டுக் கொடுக்க விடாமப் பண்ணிட்டன்….” வெற்றிக் களிப்பு சரசு மாமியின் முகத்தில் தெரிந்தது….