Monday, July 18, 2016

உன்னுடைய பார்வையொன்றே உறுதுணையாய் வருகுதம்மா

உன்னுடைய பார்வையொன்றே உறுதுணையாய் வருகுதம்மா
கும்மிருட்டுப் பாதையிலும் பேரொளியாய்த் தெரியுதம்மா
என்னுடைய ஆட்டமெல்லாம் நீயமைத்த மேடையிலே
இசைவதும் அசைவதும் நின் கடைக்கண் ஜாடையிலே

சிற்றிடையில் சிவந்தபட்டு திருக்கரத்தில் திரிசூலம்
நெற்றியினில் செந்தூரம் நீள்விழியில் கருணைமழை
தெல்லிநகர்த்துர்க்கை அம்மா உன்னழகைப் பார்ப்பதற்கு
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ

சிங்கத்திலே நீவந்து சிறியேமைக் காத்திடுவாய்
எங்கள்பல குறையனைத்தும் ஈன்றவளே நீயறிவாய்
சிறியேங்கள் அழைத்தகுரல் திருச்செவியில் ஏற்றருள்வாய்
அறிவேதும் இல்லாதேம் அன்பு மொழி கேளுமம்மா

அம்பிகையே உலகீன்ற ஆரணியே காரணியே
செம்பவளமேனியளே சிவக்கொழுந்தே வந்தருள்வாய்
அணுவாகி உயிராகி ஐம்பூதப் பொருளாகி
துணையாகி எமைக் காக்கும் துர்க்கை அம்மா வந்தருள்வாய்

சுற்றி நிற்கும் உலகமெல்லாம் துர்க்கை என்று சொல்லுதம்மா
சூழ்ந்திருக்கும் உலகமெல்லாம் துதிக்குதம்மா உன்புகழை
வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் வணங்கிடுவேன் உன்னடியை
வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் உன்னருளை

கேட்டவரந்தந்தருள்வாய் கேதார நாயகியே
சூட்டுமலர்த்தாள் சரணம் சுந்தரியே சரணமம்மா
சர்க்கரையாய் முக்கனியாய் தமியேங்கள் மனத்தினிக்கும்

துர்க்கா மகேஸ்வரியே சரணமலர் சரணமம்மா!

No comments:

Post a Comment