Tuesday, July 5, 2016

மீண்டும் ஜானு - 1



ஆடி மாதக்காத்துக்கு முகத்துக்கு முன்னால் வந்து முத்தமிடும் முடிக்கற்றையை ஒதுக்கிக்கொண்டு உதடுகளில் சிரிப்போடு வருவது அவளா? ஒரு காலத்தில் நான் விழுந்து விழுந்து ரசித்த கண்களில் மின்னும் குறும்பு காணாமல் போய் மாறாக ஒரு தெளிவு… சிரிப்பில் ஒரு மின்னல்…. வழக்கமாக சிரிக்கும் போது வாயை கையால் மூடிக் கொண்டு சிரித்து விட்டு கேட்டால் பல் மிதப்பு தெரியாமல் இருக்க என்பாளே…… அந்த மிதப்பினைக் காண முடியவில்லை……… பற்களுக்குக் கிளிப் போட்டிருக்க வேண்டும்… கொஞ்சம் குண்டாகி முகம் ச்சபியா இருந்தாலும் எனக்குத் தெரியும்… அது அவள் தான்… இத்தனைக்கும் நான் அவளை அருகில் பார்த்தது மிகவும் சொற்பம்…. ஒன்றிரண்டு நாட்கள் தான்… நாம் ஒரேயொரு நாள் இதற்கென்று சந்தித்துக் கொண்டதாக ஞாபகம்… அவளைச் சந்திக்கணும் எண்டு ஆசைதான்... ஆனா எப்பவாச்சும் எங்கயாச்சும் காண மாட்டோமா எண்டு ஏங்குறனான் எண்டு அவளுக்கு பொய் சொல்லுற அளவு மோசமில்லை...

முந்தி என்னோட தான் படிச்சவள்… அப்பேக்க அவவை அசின் எண்டு எங்களுக்க சொல்லுவம்…. இன்னொரு பேரும் இருக்கு… “விஜயசாந்தி” எண்டு… அவள் ஸ்கூலில பிறிபெக்டா இருந்தவள்… நடக்கும் போது சரியான ஃபாஸ்ற்றா ஒரு விதத் துள்ளலோட நடப்பாள்…. பெடியங்களை ரொக்கட் அடிக்குறதுக்கு சத்தம் போடுறதுக்கு எல்லாம் கண்ட மாதிரி ஏசுவாள்… அப்பேக்க எனக்கு அவள் எண்டாப் பயம்…. தனியத்தான் திரிவாள்… சைக்கிள் ஓடுறது கூட ஒரு வித்தியாசம்… சனிக்கிழமை முழுகிட்டு முடியை உயர்த்திப் போணி போட்டுட்டு அவள் நடந்து வரேக்க, அவளின்ர துள்ளல் நடைக்கு சுருள் முடியும் சேர்ந்து துள்ள, யாரா இருந்தாலும் திரும்பிப் பாத்துக் காமெடியாச் சிரிச்சுட்டுப் போவினம்… நாங்க கும்பலா இருந்து சிரிச்சிருக்கம்… அதையும் கண்டுக்காம முகத்தை முறைப்பா வைச்சுட்டுப் போகும் லூசு மாதிரி…

பிறகு எனக்கு ரெண்டாவது லவ்வும் ஃபெயிலியராகி கம்பஸ் கிடைச்சு அவளுக்கும் கம்பஸ் கிடைச்சு நாம காணுறதே கஸ்டம் எண்டுற ஒரு நிலமையில தான் எங்களுக்க பழக்கம் ஆரம்பிச்சுது… கான்ட் போனால… அதுவும் அவளா ஆரம்பிச்சது தான்… அதுக்குக் கூட ஒரு கதை சொன்னாள்….அது உண்மையோ பொய்யோ தெரியாது…..

நடையில் வழக்கமாக இருக்கும் துள்ளல் கொஞ்சம் கூடக் குறையாமல் இருந்தது…. வழமை போல் மஞ்சள், பச்சை, சிவப்பு என்று இல்லாமல் ஆடை மிகவும் எடுப்பாக இருக்கிறது… முன்பெல்லாம் கால்களிற்கு அருகில் இருக்கும் பாவாடை, இப்போது முழங்காலை மூடியும் மூடாமலும் இருக்கிறது… ம்… படிப்பு ஏற ஏற பாவாடையும் ஏறுது என்று எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன்…..

கண்களுக்கு மையிட்டிருக்கிறாள் என என்னால் அவ்வளவு தூரத்தில் இருந்து கூட கண்டுபிடிக்க முடிகிறது…. கீல்ஸில் ஏறி நிற்கிறாள்… அவள் என்னிலும் கட்டை… நான் ஒன்றும் பெரிதாகக் கட்டை கிடையாது… என் தம்பி வீட்டு நிலையை இடித்துக் கட்ட வேண்டும் என்று சொல்லிக் கிண்டல் அடிக்குற அளவு தான் கட்டை… நானே அவளை இந்த உயர விசயத்தில் நோண்டி போடும் அளவு அவள் கட்டை…

முடியைக் கட்டையாக வெட்டியிருக்கிறாள்… விரித்துப் போட்டால் பேய் என்று எல்லாரும் பயந்துடுவாங்க… மற்றவங்களைப் பயப்பிடுத்தக் கூடாது என்று சொல்லப்பட்ட அந்த முடியை என்னவோ பண்ணி விரிச்சு விட்டா மனேஜ் பண்ணக்கூடிய லெவலில இருக்குது… பெப்ரவரி ஃபோட்டீன் படத்தில ரேணுகாமேனனின்ர முடி மாதிரி சுருள் சுருளாக….. 

சுருட்டை முடிக்காரியளை நம்பக் கூடாது…. எண்டு நான் அவளைக் கலாய்த்திருக்கிறேன்…. அப்போதெல்லாம் ”ஆ… எனக்கு முழுகினாத்தான் சுருட்டையா நிற்கும்…” எண்டு சிணுங்குவாள்…. ”சரி… அவயளை பாதி நம்பக் கூடாது” எண்டு சொல்லக் கடுப்பாகி ”நம்ப முடியாத ஆக்களோட ஏன் கதைக்குறீங்க…. வையுங்க எண்டு” மரியாதையாக சொல்லி விட்டு போனைக் கட் பண்ணி விடுவாள்… பிறகு நான் எத்தனை தரம் அடிச்சாலும் ஆன்ஸர் பண்ணாது எருமை…சைலன்ரில போட்டுட்டு பாத்திட்டு சிரிச்சுட்டு இருப்பாள் போல…குரங்கு….  

சில நேரம் ஒஃப் பண்ணியும் விடுவாள்…  ”டயலொக் யூ கோல் இஸ் நொட் ரெஸ்போண்டட்….. பிளீஸ் ட்ரை எகெய்ன் லேற்றர்….” டயலொக் பெண்ணின் குரலை கேட்டாலும் நான் விடாம அடிப்பன்… எப்பவாச்சும் ஒன் பண்ணேக்க ஆன்ஸர் பண்ணாதா எண்டு ஒரு நப்பாசை… கல்லு மனசுக்காரி…ஓன் பண்ணவே மாட்டாள்…. 

அற்லீஸ்ற் ஒன் பண்ணேக்க எத்தினை மிஸ்ட் கால் அலேட் வந்திருக்கு எண்டுறதை வைச்சு நான் இத்தனை தரம் அடிச்சிருக்கன் எண்டு இரக்கம் வரும் எண்டு என் மனசில ஒரு நப்பாசை… சாட்டுக்கு டக்கு டக்குன்னு கோல் பண்ணிக் கட் பண்ணி ஆறு-ஏழு மிஸ்ட் கோல் ஆக்கிடுவன்… இல்லை என்றால் மகாராணி மனசு என்னில் இரக்கம் கொள்ளாது….
சனி – ஞாயிறு காலையில் குட்மானிங் மெசேஜில் தொடங்கி மெசேஜ் டைப் பண்ணுற பஞ்சியில கோல் பண்ணி ஆரம்பிக்கும் எங்கட சண்டை மத்தியானம் ”கொட்டிட்டியாடா எருமை மாடு?” என்று வரும் மெசேஜ் மேடத்துக்குக் கோபம் போயிட்டுது எண்டு சொல்லுவதுடன் நிறைவு பெறும்…… சண்டை போட்ட பின்னர் என்ன வேலை இருந்தாலும் பின்னேரம் தூங்கி எழுந்த பின்னர் மறுபடி கோல் செய்வேன்…
அப்போது அதிகமாக கொஞ்சிப் பேசுவாள்.. வாளி வைப்பாள்… நானும் சும்மா ஆளில்லை… நான் அண்டாவே வைப்பன்…. சும்மா தொடங்குகிற கதை மறுபடியும் சண்டையில் முடியும்… கடுப்பில் நான் கோல் பண்ணிப் பார்ப்பதில்லை… அது அவளுக்கும் தெரியும்…. அதனால் பின்னேர சண்டைகளின் போது அவளும் போனை ஓஃப் இல் வைப்பதில்லை… ம்.. சுருட்டை முடிக்காரியளை நம்பக்கூடாதுன்னு நான் சொன்னது பிழை… அவளை நான் தான் விட்டுட்டுப் போயிருக்கன்... அவள் என்னை வெறுக்கணும் எண்டு என்ன எல்லாம் செய்தன்... கண்கள் லேசாகத் துளிர்க்க அவள் விம்பம் சற்று மங்கலாகத்தெரிகிறது… கூடவே பத்திக் கொண்டு கோபமும்…. அந்த செம்மறிக்காக நான் ஏன் அழணும்…..? என்னில பிழை இல்லை எண்டு தெரிஞ்சும் ஃபேஸ்புக்கில என்னை அண்ஃபிரண்ட் பண்ணினவள்......பிறகு றிக்குவஸ்ற் குடுத்தா... நான் அட் பண்ணலையே... நீ மட்டும் திறமோ? அவளின்ர மெசேஜிற்கு ரிப்ளை பண்ணுறேல்லை... பாத்தா சீன் பை விழுந்திடும் எண்டு பாக்குறதுகூட இல்லை...

”என்ன வேணும் டாக்டர்?”

அம்மா தந்த லிஸ்ற்றைக் காணேல்லை….. இந்த ஆறுமுகம் எண்டவன் இண்டைக்கெண்டு மனிசிக்கு பிள்ளைப் பெறு எண்டு வடலியடைப்புக்குப் போட்டான்… வீட்ட வேலைக்கு வரேல்லை….. நான் இருக்குற ரென்சனுக்க இதை எங்க வைச்சன் எண்டு தெரியேல்ல….

ஒரு கிலோ கத்தரிக்காய் மட்டும் தான் ஞாபகம்… இண்டைக்கு வீட்ட இறைச்சி காய்ச்சணும்… நாங்க சைவம்... கம்பஸ் வந்து நான் மச்சத்துக்கு மாறிட்டன்... அம்மா மட்டும் மாற மாட்டாவாம்...வரட்டுக் கவுரவம்.. அவட உடம்பு கிடக்குற கிடைக்கு... பட் கத்தரிக்காய் மஸ்ற்…. எனக்கு முந்தி சமைக்கத் தெரியாது…. அதாவது பரவால்ல… சமைக்குறதுக்கு என்னென்ன வேணும் எண்டுறது கூடத் தெரியாது… அந்தப் பக்கம் சாப்பிட மட்டும் தான் போறது… 

அப்ப அவளுக்கு சமைக்கத்தெரியாது எண்டு நான் அடிக்கடிக் கிண்டல் பண்ணுவன்…. றூம் எடுத்துக் கம்பஸில படிக்க எண்டு இருந்த மூட்டம் கூட சேர்ந்து இருக்குற பிள்ளையள் தான் அவளுக்கு ரீயே போட்டுக் கொடுக்குறது… லூசு.. எனக்கு தோசைக்கு மா கரைச்சுத் தந்தா நான் தோசை சுடுவன்… உனக்கு அதுவும் தெரியாது எண்டு கடிப்பேன் – ஒருக்கா அம்மா கரைச்சுத் தந்த மாவை தோசைக் கல்லை எண்ணெய்ச்சீலையால துடைக்காமல் சுட்டு எடுக்க வெளிக்கிட்டுப் பிச்சு, தோசை பிரமாதம் எண்டு தம்பி சொல்ல அவனுக்கு தட்டேப்பையால எறிஞ்சு அவன் குழறி அம்மாட்டப் போட்டுக் குடுத்துக் கலவரம் ஆன கதை எல்லாம் அவளுக்குத் தெரியாது எண்ட தைரியத்திலை…..

அவள் எங்கேயெண்டு பாத்தன்…. நிண்டுகொண்டு போன் கதைச்சுட்டிருந்தாள்…. போனின் கவர் நீட்டிக்கொண்டிருந்தது…. லேற்றஸ்ற் மொடல் போன் எண்டு நினைக்குறன்… அப்பெல்லாம் அவள் வைச்சிருந்த போனிலை போட்டோ கூட எடுக்க முடியாது… நோக்கியான்ர கதைக்குறதுக்கு மட்டும் பாவிக்குற போன் தான் அவளிட்ட இருந்திச்சு…. அது கூட கோல் கதைச்சுட்டு இருக்கும் போது இடையில கவரேஜ் போய் கட் ஆயிடும்… அது என்ர பிழை எண்டு நான் காட்டுக்க இருக்குறதால தான் கவரேஜ் கிடைக்குதில்லை எண்டு கத்துவாள்…. இத்தனைக்கும் ஒரு நாள் கூட நான் இருக்குற இடம் எப்பிடி இருக்கும் எண்டு வந்து பாத்தது கிடையாது… நானும் அப்பிடித்தான்…… பிறகு நான் கட் பண்ணுறன் எண்டு தொடங்க – நான் ஏன் கட் பண்ணணும் எண்டு கேட்க – என்னோட கதைக்க விருப்பமில்லை எண்டு சொல்ல- நான் சொல்லுறதை நம்பேல்லத்தானே? நம்பிக்கை இல்லாதவங்களோட ஏன் கதைக்குறீங்க எண்டு சொல்லி நான் கோலை கட் பண்ணி ஒஃப் பண்ணிடுவன்….
ஆனா நமக்கு மனசுக்க ஒரு நப்பாசை…நம்மளை மாதிரி அவளும் எடுத்துப் பாப்பாளோ எண்டு…. இடையில லைற்றா ஒன் பண்ணிப் பாப்பன்… போன் ஒஃப் இல இருக்கேக்க என்னைக் கொஞ்சி “புன்னகை மன்னன், செல்லம்” என்றெல்லாம் கொஞ்சி அவள் அனுப்பியிருக்கும் மெசேஜ்கள் பெண்டிங் இல இருந்து டிலிவேட் ஆயிடும்… உடனேயே அமத்தி ஓஃப் பண்ணிடுவன்…. ஆனா பிடிபட்டிடும்…. அவளா… கொய்யால… சில நேரம் சண்டை பிடிச்சா எனக்கு வேலை இருந்தா – இவளோட மல்லுக் கட்டேலா எண்டு போனை ஒஃப் பண்ணிடுவன்…. அப்புறமா தன்ரை போனில தான் பிரச்சினை எண்டு ஒத்துக் கொண்டா….

யார் சண்டை பிடிச்சாலும் விசர்ப் பிடிக்குறது என்னவோ எனக்குத் தான்…. அந்த குட்டி (அல்லது குட்டை) ராட்சசியோட சண்டை போட்டுட்டு என்னால ஒண்டுமே கிழிக்க ஏலாது… அதெல்லாம் அவளுக்கு சொல்லியிருக்கன்…..  அவளை அழகு எண்டு சொல்லி வர்ணிக்க அத்தனையும் உனக்குத்தான் எண்டவள்... அப்பிடியெல்லாம் இருந்த உறவு....
 
கல்யாணம்…… அவளுக்கு ஆகியிருக்கலாம்….

அவள் முகத்தைப் பார்த்தேன்…. நெற்றியில் வந்து மோதிய முடிக்கற்றையை எனக்காக எடுத்து விட்டது போல எடுத்து விட்டாள்….. நெற்றியில் குங்குமப் பொட்டு இல்லை… அற்லீஸ்ற் சிவப்புக் கலர் ஸ்ரிக்கர் கூட இல்லை… 

ஸ்ரைல்…. பொட்டு வைக்காத ஸ்ரைல்… புருசனுக்காகப் பொட்டுக் கூட வைக்காத ஸ்ரைல்…. அப்பவே சிங்களத்தியள் மாதிரி ஸ்ரைலா பொட்டு வைக்காமத்தான் திரிவாள்... அவள் சொன்னமாதிரி கல்யாணம் முடிக்கலை எண்டுறதை நான் நம்பத் தயாரில்லை.. ஏன்னா அவளுக்கு ஆசை அதிகம்... அந்த ஆசை பேச்சில கொஞ்சும்.... டேய் நீ மட்டும் குறைவா? லவ் பண்ணின மூட்டம் லெக்சர்ஸ் கூட என்னால கொன்சன்றேற் பண்ணேலா... அவ்வளவு மோசம் நான்.... ஆனாப் பயம்... எங்க என்ரை லவ்வை அவ்வளவுதான் எண்டு நினைச்சுடுவாளோ எண்டு...

ஸ்ராட்டில எனக்கும் அவளுக்கும் காதல் எண்டு புரளி வந்த மூட்டம்- டீ போட்டுப் பேசுறது மனிசிக்கு அல்லது லவ்வருக்கு மட்டும் தான் சரியெண்ட கருத்தையும் போட்டு நான் இனி உன்னை டீ போட்டுக் கூப்பிட மாட்டன்ரீ எண்டு ஃபேஸ்புக்கில மெசேஜ் போட்டன்… அதையும் நாங்க விடல்லை… பாக்குறதில்லை எண்டுறது மட்டும் தான் ஒரு குறையே தவிர உடனுக்குடன எனக்கு அவள் எங்க இருக்குறாள் எண்டும் அவளுக்கு நான் எங்க இருக்குறன் எண்டும் ஜாவாட ஒப்சேவர்- ஒப்சேவபிள் கான்செப்ட் மாதிரி உடனேயே அப்டேட் ஆகிடும்… ரெண்டு பேரும் ஒப்சேவர்- ரெண்டு பேரும் ஒப்சேவபிள்… மோஸ்லி நான் ஒப்சேவபிள் தான்… அவளுக்கு சுதந்திர மனப்பான்மை அதிகம்… எல்லா நேரமும் தான் போற இடம் பற்றி சொல்வதில்லை…. 

அடுத்த நாள் குட்மோனிங் மெசேஜ்…. அவள் தான் முதல்ல போட்டாள்…. இது கூட சண்டையாகி இருக்குது… யார் முதல்ல குட்மோனிங் போடுறது எண்டு… “நான் போடாட்டி நீ போட்டிடாத” எண்டு ஏளனமாக கடுப்புடன் சொல்வாள்… பிறகு நான் கடுப்பில வைச்சிடுவன்…. “கடுப்பாயிட்டியா” எண்டு மெசேஜ் வரும்… தெரியாதா உனக்கு செம்மறி….. முந்தி நான் ”ம்ம்…” எண்டு ரிப்ளை பண்ணினா….. “என்ன செய்தா கடுப்புப் போகும்” எண்டு வரும் மெசேஜ் பிறகு ”ஐ ஜாலி” எண்டும் “கடுப்பானாப் பரவால்ல” எண்டும் மாறிட்டுது…….

“குட்மோனிங் புருஸ்”

“புருஸ் எண்டா என்ன”

“புருசனை செல்லமா புருஸ் எண்டு….”
”புருசனோ???”

“டீ போடுறதுக்கு புருசனா இல்லை இருக்கணுமாம்… ” எண்டு கூடவே :p சிம்பல்….

எனக்கு சிரிப்பு… 

“ஐ ஆம் ப்றவுட் டு பீ யுவ புருஸ்”

”லூசு.. இது என்ன பதவியா… பெருமைப்பட….”

எங்கட மெசேஜ் சம்பாசணை முடிந்திருந்தது… எங்களுக்குள்ள நடக்குற குட்டி குட்டி சண்டையளை விட – இல்லை ரணகளங்களை விட பெரிய ஒரு ரணகளம் நடக்குறதுக்கு அதுவும் ஒரு மூலகாரணம்…..

அவள் இப்போது என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்… 

’ஓடலாமா… சீ நான் ஏன் ஓடணும்… தெரியாத மாதிரி நிற்பம்..’ எனக்கு ஒண்டும் இது புதுசில்ல... கதைக்காம விட்டாப் பிறகு அவளைக் காண நேர்ந்தா செய்யுறது தானே...

நான் அங்கால மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு கடைக்கண்ணால அவளைப் பார்த்தேன்…. அவள் என்னைப் பார்க்கவில்லையா இல்லைப் பார்க்காதது மாதிரி நடிக்கிறாளா? 

அப்பிடியே வந்து என்னைக் கடந்து போய் விட்டாள்…. என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை… பார்க்காதது மாதிரிக் காட்டிக் கொள்ளவுமில்லை… முன்னால் வழியைப் பார்த்துக் கொண்டு…. அவள் என்னைக் கடந்து போன போது என் பிடிவாதம் அவளோடு ஓடிப் போய் விட்டது… அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ”கண்ணுக்குட்டி ஐ லவ் யூ” எண்டு அழணும் போல இருந்தது… அவ்வாறு செய்யாமல் கைகளை இறுக்கப் பொத்திக் கொண்டேன்…

”என்னோட எல்லோரோடையும் பழகுற இந்தப் பழக்கத்தை நீ தப்பாப் புரிஞ்சிட்டாய்… என்ன வேணும் எண்டாலும் நான் பசங்களோட கதைப்பன்….பட்…பசங்களுக்கு கை குடுக்குறதைக் கூட நான் அசிங்கமா நினைப்பன்…” இது முந்தி ஒருக்கா அவள் சொன்னது…. அதோட அவள் இப்ப வேற ஒராளின்ர மனிசி... எப்பிடி முடியும்...

அப்பிடின்னா இத்தனை வருசமா இல்லை எண்டுற மாதிரி ஒழிச்சு வைச்சிருந்த என் காதல் மீண்டும் வெளிய வந்திட்டா? அம்மாக்கு செய்து கொடுத்த சத்தியம்... எனக்கு கண்ணீர் முட்டியது........

”சார் என்னாச்சு…..?”

“ஒண்டுமில்லை…. நான் வாறன்….”

நான் விறு விறு என்று நடந்துகொண்டிருந்தேன்…..

No comments:

Post a Comment