புவனமுழுதாளுகின்ற
புவனேஸ்வரி
புரமெரித்தோன்
புறமிருக்கும் பரமேஸ்வரி
கண்ணிரண்டும்
உன்னுருவே காண வேண்டும்
காலிரண்டும் உன்னடியே
நாடவேண்டும்
நவநவமாய் வடிவெடுக்கும்
மகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே
சர்வேஸ்வரி
பண்ணமைக்கும்
நாவுனையே பாடவேண்டும்
எண்ணமெல்லாம்
உன்னினைவே ஆகவேண்டும்
கவலைகளைத் தீர்த்துவிடும்
காமேஸ்வரி
காரிருளில் தீச்சுடரே
ஜோதீஸ்வரி
நெற்றியினுள்
குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினில் திருநாமம்
வழிய வேண்டும்
துன்பமெல்லாம்
போக்கிடும் துர்க்கேஸ்வரி
தொழுதகைக்கு வளமளிக்கும்
ஞானேஸ்வரி
கற்றதெல்லாம்
மென்மேலும் பெருகவேண்டும்
கவிதையிலே உன்நாமம்
வழிய வேண்டும்
பார்வையிலே பரிமளிக்கும்
பரமேஸ்வரி
பக்தர்களின் துதி
சுமக்கும் கமலேஸ்வரி
சுற்றமெல்லாம்
நீடூழி வாழவேண்டும்
தொல்லை இந்த வாழ்வை
விட்டு ஓடவேண்டும்
இன்பமான அமைதி
எங்குமோங்க வேண்டும்
இதயமெல்லாம் ஈசன்
கோயிலாக வேண்டும்
மண்வளமும் மனவளமும்
பெருக வேண்டும்
மாநிலத்தில் உன்
கருணை வழிய வேண்டும்
No comments:
Post a Comment