Thursday, May 22, 2014

களுத்துறை கலாட்டாக்கள் - 2

”ஙொய்....”

நுளம்பா நுளம்பு....

சொறிஞ்சு சொறிஞ்சே ரத்தம் வந்திடும் போல இருக்கு..  பெட்டுக்கு மேல நுளம்பு நெற் இருக்கு... அது எத்தனை வருசத்தானோ...

ஒரு மாதிரி பகல் அலைச்சல்... விடியப்பறம் அப்பிடியே தூங்கிப் போக....

“எழும்புடி... ”

கனவில கேட்குது..

”ம்ம்..”

மறுபடியும்..

”எழும்புடி...”

வீட்டயா இருந்தா கதை வேற...

”நான் எங்க இருக்கன்... இங்க எப்பிடி வந்தன்...” ரேஞ்சில முழிக்க அக்சன் குடுக்க ரைம் குடுக்காம ரியாக்சனும் குடுக்காம அவ்வளவு வெள்ளெண குளிச்சிட்டு வர சொல்லிட்டாங்கய்யா.... சொல்லிட்டாங்க...

நாங்க வந்த நேரத்துக்கு பிளேன்ரி முடிஞ்சுது... ரெண்டு ரீசேட் தந்தாங்க.. வெள்ளையில ரெட்டால ஃபியூச்சர் லீடர்ஸ் எண்டு அடிச்சது... அதை தான் ட்ரெயினிங் ரைம் போடணுமாம்.. வெள்ளைக் கலர்...  அந்த தூசுக்கு புசுக்குன்னு ஊத்தையாயிடும்... ஐயையோ அப்பத் தோய்க்கணுமா... சீ...  நாங்கெல்லாம் உந்த அளப்பரைக்காகவே எப்படா பள்ளிக்கூடம் படிச்சு முடிப்பம் எண்டு யோசிச்ச கும்பல்... இதுக்குள்ள....

எக்ஸஸைற்கு லைன் பண்ணி மாச்சிங் போற மாதிரி விட்டுட்டாங்க...

ஸ்கூல் படிக்குறப்போ கூட நான் அதுக்கெல்லாம் போனதே கிடையாது... அதுக்கெண்டு உயரமா ஸ்மாட்டான ஆக்கள் எங்கட ஹவுஸில இருப்பினம்...  ப்ரக்டீஸ் டைமில வலை போட்டுத் தேடுவினம்... நான் என்ன செய்வன்..  என்னைய மாதிரியே மெய்வல்லுனர் விளையாட்டில இன்ரெஸ்ட் இல்லாத பட் என்னைய விட வயசு குறைஞ்ச சின்னப் பிள்ளையளையும் கூட்டு சேத்துக்கிட்டு வேற ஒரு ஹவுஸிற்க போய் உட்கார்ந்திடுவன்... அந்தக் குட்டிப் பிள்ளயளோட சேர்ந்து அலம்புவனா... அலம்புவன்... பக்கத்தில இருக்குறவன் காதில ரத்தம் வந்திடும்.. அந்த ஹவுஸில தேடுதல் வேட்டை நடக்கும் போது நாங்க அந்த இடத்தில இருந்து “டொயிங்” என்று மாயமாக மறைந்திருப்போம்...  நான் என்ன செய்யட்டும்... விளையாடிக் கை காலை முறிச்சிட்டாலும் எண்டு என்னை அந்த வயசில இருந்தே மண்ணுக்கு கூட இறங்க விடுறதில்லை... விளையாட்டில இன்ரெஸ்ற் வாறதுக்கு குறைந்தபட்சம் நான் நேசரி கூடப் போனது கிடையாது...

அதுவும் லெப்ற் றைற் எல்லாம் இல்லை... வம் தக் தான்.....

எவ்வளவு லேற்றாப் போனாலும் என்னையப் பிடிச்சு முன்னுக்கு விட்டுறாங்களே... சே...  லைஃப் இலயே ஃபெஸ்ற் ரைம் நான் உயரமா இல்லைன்னு வருத்தப் பட வேண்டியதாயிடிச்சு... பிறகு பிறகு அவங்க கண்டுக்கலைன்னு கடைசிக்கு முதல் லைனில என் ஃப்ரெண்ட்ஸோடயே அலம்பிக்கிட்டே மாச்சிங் செய்ய ஆரம்பிச்சிட்டன்...  விலாவாரியான அலம்பல் இல்லை.. அவயிட கருத்துக்கும் அக்சன்ஸிற்கும் நாங்க கருத்து வெளியிடுவம்.. தற்ஸ் ஓல்...

மாச்சிங் முடிய க்ரவுண்ட்ஸிற்க போய் எக்சசைஸ் செய்யணும்...

“வண் ரூ த்றீ ஃபோ..........”

மூசுது...

படிக்கும் போதாச்சும் சைக்கிள் ஓடுறது எண்டு பழக்கம் இருக்கு... எக்ஸாம் முடிஞ்ச பிறகு அதுவும் இல்லை... திங்குறது தூங்குறது தங்குறது... ஃபேஸ்புக் பாக்குறது எண்டு என் லைஃப் போயிட்டிருந்திச்சு...  இப்ப வந்து துள்ள சொன்னா முடியுமா?

ஒரு மாட்டர் சொல்லணும்... களுத்துறை பட்ச் மட்டும்தான் அதுவும் எங்கட ட்ரெயினிங் பட்ச் தான் லேசா இருந்தது.... மற்றவங்களையெல்லாம் பிழிஞ்சு எடுத்திட்டாங்க.... அதுக்கே என்னால முடியலை....

குடல் வெளிய வராத குறை... அந்த நேரத்தில்தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது... நான் செய்த பாவம் எங்கயோ மரத்தில இருந்து முசுறு வடிவத்தில எனக்கு மேல வந்து இறங்கி ரணகளமாகி பொலிஸ் அக்காமார் என்னைக் கூட்டிப் போச்சினம்... பா... எனிவே ஒரு நாள் எக்சசைஸில இருந்து தப்பிட்டன்.... தாங்ஸ் முசுறு... என்னால .... இல்லை இல்லை... எனக்காக நீ சூசைட் பண்ணிக்கிட்டியே...  ரெஸ்ற் இன் பீஸ்.... டொயிங்...
நான் டோம் இற்குப் போயிட்டன்.. எழுமணி அப்பிடி எல்லாரும் ஓடி வரினம்... ஏதாவது பிரச்சினையா எண்டு பாத்தா க்ரவுண்ட்ஸில இருந்து ஓடித் தான் வரணுமாம்...

காலமை சாப்பிடக்கூட்டிப் போனாங்க... எங்களுக்கெல்லாம் விடியக்காலமை ஆறு மணி வாற மாட்டர் மறந்து போனதை ஞாபகப் படுத்தினவங்க இவங்க தான்... ஜென்மத்துக்கும் ஏழுமணிக்கெல்லாம் காலமைச்சாப்பாடு சாப்பிட்டது கிடையாது.. ஒரேயொரு வாட்டி அதுவும் ஸ்கொலசிப் எக்ஸாமிற்கு நாங்க இருந்த இடத்தில இருந்து திரு-இதயக் கல்லூரி காண பஸ்ஸில போகணும் எண்டு வேளைக்கு இடியப்பமும் சம்பலும் அடிச்சுட்டுப் போய் போகப் போக சத்தியெடுத்தது எனக்கு ஞாபகம் இருக்கு... அப்பிடி இருக்க... டெயிலி வாமிற்றா.... மம்மீ..

நல்ல வேளை பிளேற்றில லஞ்சீற் விரிச்சுத்தான் சாப்பாடு... பெரிய்ய்ய கன்ரீன்... நீண்ட அகன்ற மேசைகள்... கிட்டத்தட்ட ஐம்பது பேர் எண்டாலும் ஒரேயடியா சாப்பிடலாம்...  பாணும் பருப்பும், பயற்றம் துவையல் வித் சீனி அண்ட் தேங்காய்ப்பூ ஓ(ர்) கட்ட சம்பல், அவிச்ச கடலை இப்பிடியான சாப்பாடு தான் காலமை.... நியூட்ரிசனாமா....

மறுபடியும் பொலிஸ் ஸ்கூலை சுத்தி ஓட விட்டுட்டாங்க...  சனியன் பிடிச்ச ஸூ லேஸ் அவிழுது... அதுக்கு வேற ஒரு பொலிஸ் விளக்கம் சொல்றார்... சூலேஸ் கட்டுறது எப்பிடின்னு...

எங்க அம்மா சாறிட பாவாடை கட்டுறது எப்பிடி எண்டு சொன்ன ரெக்னிக் அது... அவருக்கு ”அட்வைஸ் அருணாசலம்” என்ற அர்த்தத்தில ”ஏஏ” எண்டு பேர் வைச்சாச்சு... எங்களுக்கு எங்கட க்ரூப் ஹெட் அட்வைஸ் பண்ணும் போது இன்னொருத்தர் பக்கத்தில இருந்து எப்ப பாரு கருத்து வெளியிடுவார்.. அவருக்கு ”கருத்துக் கந்தசாமி” அதாவது “கேகே” எண்டு பேர்... (பாவம்... மூண்டு கிழமை சைட் அடிக்காம இருக்குதுகளே... காய்ஞ்சு போயிடுங்களே... எண்டு எங்கட க்ரூப்பிற்கு தேறக்கூடிய ஆக்களைப் பொறுப்பானவங்களா அனுப்பி வைக்குறதில்லையா? என்ன பொறுப்பில்லாத மனுசங்கய்யா நீங்க... நீங்க எல்லாம் பெரிய மனுசரா? பட் இற்ஸ் ஓகே... பிகோஸ் எங்கட டோமிற்கு பொறுப்பா இருந்த அக்கா (துஸாரி அக்கே) நல்ல வடிவு... ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை எண்ட மாதிரி அவவையாச்சும் சைட் அடித்து எங்க மனதை ஆத்திக்குவம்....)

திண்ட உடனே ஓட விட்டா திண்டதெல்லாம் வெளிய வராதா? ஏண்டா ஏன்?
அதுக்குள்ள சில ஏரியாக்கள் உயரமா இருக்கும்... சிலது பள்ளமாப் போகும்... என்னமோ எங்களுக்கு ட்ரெயின்ங் குடுக்குறதுக்காகவே அப்பிடிக் கட்டின மாதிரி எங்கட “கேகே” கருத்து சொல்றார்.... இப்பிடி ஓடுறதும் ஒரு பயிற்சியாம்....

அந்த அளப்பரை முடிய லெக்ஸர்ஸ் எண்டு சொல்லி லைன் பண்ணி அனுப்பி வைச்சாங்க.. ஒரு ஹோலுக்கு.... எல்லா டோம் இல இருந்த பிள்ளையளும் ஒண்டா சேர்ந்து அலம்பத் தொடங்க வந்து வதைக்க ஆரம்பிச்சாங்க... என்னவோ ஐஸ்கிரீம் ஐக் காணாத பிள்ளை வைச்சு வைச்சு சூப்புற மாதிரி மைக் கிடைச்சதும் சூப்புறான் சூப்புறான்.... டேய் நீ உண்மையை சொல்லு.... நீ இப்பதானே ஃபெஸ்ற் ரைம் மைக்கைக் கண்ணால காணுறாய்.... அதுக்காக இப்பிடியா?

சட்டம், யாப்பு, வீதி ஒழுங்குகள், முதலுதவி, சாறி கட்டுறது, மேக் அப், ரேபிள் டைனிங் மனர்ஸ் எண்டு நிறைய.... ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்டு...  இதுக்க சிலருக்கு இங்கிலீஸ் தெரியாது... அதுக்காக அவை சொல்லுறது- அதுக்கு ட்ரான்ஸ்லேசன் வேற... நாங்க ரெண்டையுமே கேட்கலை... போங்க சேர்... போய் புள்ளகுட்டியைப் படிக்க வைங்க...

லெக்சர்ஸ்ஸிற்காக நாங்க கப் உம் பிளேற்றும் கொண்டு போவம்.. பிறகு அப்பிடியே சாப்பிட்டு வரலாம் எண்டு.... பிறகு லெக்ஸர்ஸ் அளப்பரையைத் தாங்கமுடியாத நிலை வரும் போது- எங்கள் பொறுமை எல்லை மீறும் போது அவற்றைக் கீழே போட்டு சத்தம் எழுப்பி நாங்க தூங்கீட்டம்...தொல்லையை நிறுத்துமாறு சிக்னல் குடுப்பதுண்டு....

மத்தியான சாப்பாடு பற்றி சொல்லியே ஆகணும்.... எனக்கு மரக்கறி பற்றித் தான் தெரியும்... அசைவமும் சுவை குறைந்ததல்ல என்று என் நண்பி சொன்னாள்... செம வெட்டு... அதுவும் டெசேட் வேற... அன்னாசிப் பழம், பப்பாசிப்பழம், ஐஸ்பழம் என்று குறையேயில்லை...  பொலிஸ் ஸ்கூல் ஒரு பெரிய ஏரியா... பெரதேனியாக் கம்பஸ் மாதிரி...  அங்கயே ஒரு பக்கம் அன்னாசிக் காடு இருக்கு.... இன்னொருபக்கம் பப்பாசிக் காடு...பிலாப் பழம் கூட இருக்கு... என்ன இனிப்புக் கொஞ்சம் காணாது.... ஸோ என்ன குறை எங்களுக்கு... தாராளமா டெசேட் வரும்....

முடிய லெக்ஸஸ் எகெயின்... அதுலயும் தூங்கிட்டு பிறகு ஒரு பிரேக் விடுவாங்க... அதுக்கும் தூங்கிட்டு பின்னேரம் விளையாடப் போயிடணும்.... சும்மா சின்ன சின்ன விளையாட்டுக்கள் தான்...

களுத்துறைல எப்ப மழை பெய்யும் எண்டே தெரியாது... புசு புசு எண்டு எங்க இருந்தோ வாற மேகங்கள் மழை பெஞ்சிடும்....  ஓடி வாற காத்து அதைத் தள்ளிட்டுப் போயிடும்.... அந்த கப்பில வெளிய காயப் போட்ட எங்கட உடுப்பெல்லாம் பரிதாபமாக் கண்ணீர் சிந்தும்...   வெளிய நிண்டுட்டு பிரேக் நேரம் மழை முடிய வந்து உடுப்பைப் பாக்குற எங்களைப் பாத்து சூரியன் கண்ணடிச்சு பல்லிளிக்கும்..... கிறுக்கு பயபுள்ள...

பாத்துப் பாத்து உந்த வெயிலை நம்பேலா எண்டு டோம் இற்குள்ளயே கட்டில் கம்பில நாங்க உடுப்பு போட வெளிக்கிட்டம்... வெள்ள உடுப்பு.... கறள் பிரள வெளிக்கிட்டுது...  எம் முயற்சியில் இருந்து சற்றும் தளராமல் ஒரு கொடி கட்டி அதிலயே உடுப்பப் போட வெளிக்கிட்டம்.... என்ன... வெயிலுக்க கிடந்து காய ஒரு நாள் எடுக்கும் எண்டா உள்ளுக்க காத்தில காய ரெண்டுநாள் எடுக்கும்...  பரவால்ல... நாலு தரம் தோய்க்குறதுக்கு இதுவே தேவலாம்....

எங்கட க்ரூப்பிற்கான ஈவினிங் கேம்ஸ் க்ரவுண்ட்ஸ் சரியான பள்ளத்துக்கான் இருக்கு... மழை பெய்ஞ்சா அது குளம் ஆகி ரீ நிறத்தில தண்ணி நிற்கும்... எங்களுக்கு றெஸ்ற்... அதனால பின்னேரம் மழை பெய்யணும் எண்டு கூட நான் வேண்டியிருக்கன்....  கொஞ்ச நாள் பாத்திட்டு இது சரிவராதுன்னு எங்களுக்கான க்ரவுண்ட்ஸை மாத்திட்டாங்க மழை நேரத்தில மட்டும்...

ஈவினிங் கேமிற்கு முன்னாடி பிளேன்ரீ கல்பணிஸோட அல்லது பணிஸோட வரும்...

நைட் ஏழுமணிக்கு டின்னர்... அது முடிய ப்ரேக்... அப்புறம் டோம் இல இருக்குற சின்ன க்ளாஸ்றூமில அற்றெண்டன்ஸ் எடுப்பாங்க... அப்புறம் அனுப்பிடுவாங்க...

ஒரே ஒருநாள்தான் மோனிங் குளிச்சிருப்பம்... தெரிஞ்சு போச்சு இது வேலைக்காகாதுன்னு...  விடியத் தூங்குற சந்தோசத்தை இழக்கவும் கூடாது... குளிக்கவும் வேணும்..  ஸோ நைட் தூங்க முன்னாடி குளிச்சிட்டு உடுப்புத் தோய்ச்சிட்டுப் படுப்பதாக எங்கள் சங்கம் தீர்மானித்து அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தது... எல்லாரும் விடிய எழும்பிக் குளிக்கக் க்யூவில் நிற்கும் போது நாங்க மட்டும் ஏதோ வெட்டிக்கிளித்து விட்டது போல லேற்றா எழும்பி முகம் மட்டும் கழுவிவிட்டு தயாராகிவிடுவோம்....

இரவு மக்சிமம் போனில் அம்மாவுடன் அன்றைய அளப்பரைகளை சொல்லி ஃப்ரெண்ட்ஸுடன் அலம்பி விட்டு நுளம்பின் தாலாட்டுடனே தூங்கி விடுவோம்...  எங்கட பெட்டுக்கு மேல கட்டியிருந்த நுளம்பு நெற் பாதுகாப்பானது என்று சொல்லி விட்டு நுளம்பு நெற்றை எப்பிடி விடியற்காலையில் சுத்திக் கட்டி அதை பெட்டில் டிஸ்ரப் இல்லாமல் வைத்திருப்பது என்று கூட சொல்லித் தந்தார்கள்...  விடியற்காலையில் அதைக் கட்ட வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே அதை இரவில் போடாமல் பெட்சீற்றுக்குள் முடங்கி விடும் எங்கள் சங்கம்.... போகப் போக நைட் நெற்றைப் போட்டு விட்டு அவங்க கண்டுக்கலை எண்டு குத்துமதிப்பா சுத்திக் கட்டி விடுவோம்...

எங்கள் விடியற்காலை துஸாரி அக்கேயின் “தங்கச்சி... இக்மனட்ட யன்ன” உடன் விடியும்....  முழிச்சுப் பாத்தால் நித்திரைத் திரையூடாக என் நண்பி ஸூ உடன் நடனமாடிக் கொண்டிருப்பாள்... பிறகென்ன நானும் அவள் நாட்டியத்தில் இணைந்து கொள்வேன்... அறைக்குள்ளே செருப்பு போட்டு பழகினது என்றால் அங்கு தான்...  ம்ம்...

இன்னும் என்ன எல்லாம் இருக்கு தெரியுமா? சும்மா சொன்னதுக்கு அழுத பொண்ணு, லிப்ஸ்ரிக் அடிப்பது அடிச்ச மாதிரித் தெரியாம இருக்க என்ன செய்யணும், மயங்கி விழுந்தா எப்பிடி இருக்கும், மலை ஏறினம், இவங்க இன்ஞினியரிங்கா இப்பிடி நிறைய மாட்டர்ஸ் இருக்கு... ஸோ தொடர்ந்தும் அலம்புவன்... கேட்க வந்துடுங்க....

No comments:

Post a Comment