Sunday, September 9, 2012

தண்ணீர் குடிக்காத ரோசம்!

வணக்கம் வணக்கம். ஸாரிங்கோ…நாம கொஞ்சம் பிஸியா இருந்ததால ஒண்டுமே எழுத முடியல. நீ எழுதாட்டி என்ன குறைஞ்சிட்டுது எண்டு நீங்க திட்டுறது எனக்கு விளங்குது. ஆனாலும் இதெல்லாம் ஒரு ஃபோமாலிட்டி தானே. அதுகளையும் நாங்க ஃபொலோ பண்ணோணும்.
ஒரு குட்டி பிரேக்கிற்குப் பிறகு வந்திருக்கிறன். ராகிங் கலாட்டாவையே ஓட்டாமல் புதுசா வேற கதை ஒண்டு சொல்லப் போறன். (அதுக்காக அதை நிப்பாட்டிட்டன் எண்டு நினைக்க வேண்டாம். வதைக்காம விட மாட்டன். ஒன்லி ஃபோ நெள. ஓ.கே.)என்ர சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம் பாருங்கோ அது.
அப்ப எனக்கு ஏழு வயசு இருக்கும். நான், என்ர மச்சாள், அப்புறம் இன்னொரு பையன் நாங்க மூண்டு பேரும் எங்கட கிளாசில ஒரு தனிக் (g)காங். நாங்க ரியூசனுக்கு வாற எண்டால் சந்திக்கு நடந்துதான் வரோணும். போய் வாற வழியில நிற்குற நாவல் மரங்களில நாங்க ஏறவே மாட்டம். போற வாற ஆக்கள நாங்க கேலி பண்ணவே மாட்டம். குளத்துக்க இறங்கித் தாமரைப்பூ பிடுங்கவே மாட்டம். சோடி சோடியா சைக்கிளில போற அக்கா அண்ணாமாரைக் கலாய்க்கவே மாட்டம். ஒருத்தரின்ர வயலுக்கையும் இறங்கி நெல்லுக்குடல் பிடுங்கித் தின்னவே மாட்டம். புளிய மரத்திற்குக் கல் எறிய மாட்டம். கிளாசிற்குக் கட் அடிக்கவே மாட்டம். ஒருத்தருக்கு ஒருத்தர் மாறி மாறி அடிச்சுக்கிட்டு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு வீட்டுக்கு லேட்டா வரவும் மாட்டம். என்னங்க நம்புறீங்களா? இதெல்லாம் பண்ணுவமுங்க. நாங்கெல்லாம் அப்பவே அந்த மாதிரி. ஓகே. லீவ் தட். கம் ரு பாயின்ட்.
எங்கட ரியூசனில கிணறு இல்லைப் பாருங்கோ. (அப்ப ரப் இருந்ததாக்கும் எண்டு கேட்கப்படாது. நீங்க ரவுணில இருந்து கொண்டு லொள்ளுத் தனமா நினைக்கப் படாது.) பக்கத்து வீட்டில தான் போய்த் தண்ணி குடிக்கிறனாங்கள். துலாக்கிணறு. அங்கயும் ஒரு ரப் இருக்குத் தான். எங்கட ஏரியாவில கறண்ட் இருந்த காலத்தில கட்டினதாம். (இப்ப மறுபடியும் கறண்ட் வந்திட்டுது.)
ஒரு நாள் எங்கட நண்பன் இருக்கிறான் தானே. அவன் என்ன செய்தானெண்டால் அந்த ரப்பைத் திறந்து பார்த்தான். எத்தினை வருசத்திற்கு முதல் ஏற்றப்பட்ட தண்ணியோ, அதில இருந்து ரெண்டு துளி விழுந்துது.
அந்த நேரம் பார்த்து வெளிய போயிருந்த அந்த வீட்டுக்காரன் என்னவோ கழுகுக்கு மூக்கில வேர்த்தது மாதிரி, வந்திட்டான். என்ன ஒரு டைமிங். வந்த வேகத்தில சைக்கிளைப் போட்டிட்டு, என்னவோ எங்கட தமிழ்ப்பட வில்லன் கணக்கு கத்திக்கொண்டு ஓடிவந்து விட்டானே ஒரு அடி நண்பன்ர முதுகில. ஆளுக்கு சரியான வெறி. அவன் சைக்கிளில வரேக்கயே எனக்கு மணத்திட்டு. “வாடா போவம்” எண்டு நண்பனின்ர கையைப் பிடிச்சு இழுக்க அவன் திரும்புறதுக்குள்ள அடி விழுந்திட்டுது. அடுத்த அடி எனக்கு விழுறதுக்கு இடையில அவன்ர கையை விட்டிட்டு நானும் மச்சாளும் பறந்திட்டம். நாவல் மரத்தடிக்கு வந்த பிறகு தான் உயிரே வந்திச்சு. அந்தளவு வேகமா நானா ஓடினன்? அதிரினலீன் வாழ்க.
அதுக்குப் பிறகு அந்த வீட்டுக்கு நாங்கள் தண்ணி குடிக்கப் போறதில்லை. விடாய்ச்சாலும் பேசாம இருப்பம். ஏன்னா நாங்க ரோசக்காரர். நாங்கெல்லாம் அப்பவே அந்த மாதிரி. இப்ப கேட்கவா வேணும்?

No comments:

Post a Comment