Sunday, September 9, 2012

முதல் தொலைபேசி உரையாடல்

அப்ப எனக்கு அஞ்சு வயசு இருக்கும். அப்ப எல்லாம் ரெலிபோன் கதைக்கோணும் எண்டு எனக்கு ஒரு ஆசை பாருங்கோ. சிரிக்காதயுங்கோ. அப்பெல்லாம் இப்ப மாதிரிக் காண்ட் போன் எல்லாம் எங்கட யாழ்ப்பாணத்தில இருந்ததே? யாழ்ப்பாணம் ஒரு செல்வந்த நகரம். வெளிய இருந்து பார்த்தா அது நரகம் தான். ஒரு ஆறு, மலை ஏதேனும் இருக்கே?
கன இடத்தில கறண்ட் இல்லை. தொலைத் தொடர்பாடல் வசதியள் குறைவு. குறைவு எண்டால் பெருசா இல்லை… என்ன ஒரு கோல் கதைக்கோணும் எண்டால் யாழ்ப்பாணம் போகோணும். அது தலை போற விசயமா இருந்தாக் கூட யாழ்ப்பாணம் தான். அப்பெல்லாம் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போகோணும் எண்டால் எத்தினை சென்ரி பொயின்ற் தாண்டோணும். அதுவும் நாவற்குழிக் களஞ்சியம் இருக்கிற இடத்தில இருந்த பெரிய பொயின்ரில இறங்கி ஏறுற எண்டால் சத்தியமா சொல்லுறன். கருவில இருக்கிற குழந்தைக்குக் கூட இனத்துவேசம் பிடிச்சிடும். ஆனாலும் யாழ்ப்பாணம் எங்களுக்கு சொர்க்கம் தான்.
ஒரு நாள் என்ர ஆசை நிறைவேறுற நாளும் வந்திச்சு. ஜேர்மனியில இருக்கிற மாமாவோட கதைக்க அம்மா யாழ்ப்பாணம் போறாவாம்.
“அம்மா அம்மா நானும் வரட்டே?”
“உனக்குப் பள்ளிக்கூடம் இருக்கெல்லோ”
“என்னம்மா…என்னம்மா…ஒரு நாள் தானே?”
“நான் எண்டால் மினக்கெட்டாலும் பரவாயில்ல. நீ லைனில நிற்க மாட்டாய். அங்க போப்போறன். இங்க போப் போறன் எண்டு வீணை வாசிக்கத் தொடங்கிடுவாய்….”
“அம்மா நான் அழ மாட்டன். சனத்துக்க நெரிச்சாலும் கத்த மாட்டன். அது வாங்கித்தா இது வாங்கித்தா எண்டு உயிரெடுக்க மாட்டன்.”
“சத்தியமா?”
“சத்தியமா…”
“வேண்டாம் நீ பள்ளிக்கூடம் போ…..”
“அம்மா……”
எனக்கு வலுத்த ஏமாற்றம். கடுப்பு. சினம். பின்ன என்ன? சத்தியம் பண்ணியும் கூட்டிக்கொண்டு போகேலாதாம். நானா அம்மாவா? எனக்கு இண்டைக்கு ரெலிபோன் கதைச்சே ஆகோணும். நான் முடிவு பண்ணிட்டன்.
பள்ளிக்கூடம் போறன் எண்டு போட்டு, வேப்ப மரத்துக்குப் பின்னால ஒளிச்சு இருந்தன். எங்கட வேம்புக்கு கீழ அம்மா பூ வைக்கிறவா. வைக்க வரேக்க என்னைக் கண்டுட்டா. பள்ளிக்குடத்திற்கு நேரம் போட்டுது.
“நீ பள்ளிக்குடம் போகேல்லையோ?”
“……………………………………………………”
“சொல்லச் சொல்லக் கேட்காம இப்ப என்னத்துக்குப் பள்ளிக்கூடம் கட் அடிச்சனீ” எண்டு கேட்டுக் கொண்டே ஒரு பூவரசம் தடி உருவி, சாத்துத் தான். அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு, அழுது கொண்டும் நான் சொன்னன்.
“அம்மா, நான் வரப் போறன்”.
அ.தி.மு.க.(அடித்தும் திருத்த முடியாத கழுதை) எண்டு இதைத்தான் சொல்லுவாங்களோ?
அம்மாக்கு அழுகையே வந்திட்டு.
“வந்தா உனக்குத் தான் கஸ்டம் மீரா…சொன்னாக் கேள்.”
“என்ன ஆனாலும் பரவாயில்ல. நான் வருவன்.”
(ஆமா, இவ பெரிய ஜான்சிராணி. எதுக்கும் துணிஞ்சிட்டா…..போடி அப்பிடின்னெல்லாம் என்னைத் திட்டப் படாது.)
சந்திக்குத்தான் பஸ் வரும். அடிச்சுப் பிடிச்சு சந்தி காண நடந்து போய், மணிக்கணக்கா நிண்டு, பஸ்ஸிற்குள்ள மூச்சு விட முடியாமல் நெரிந்து கொண்டிருக்கும் சனக்கும்பலுக்குள்ள ஏறினன். என்னை மிதிக்காத குறை. ஏன் நெரிக்குதுகளோ தெரியேல்ல. சீ எண்டுட்டுது.
ஆனா என்ன நான் அது பற்றிக் குறைகூற முடியாது. அதுதான் சத்தியம் பண்ணிக் குடுத்திட்டமே! ம்…காலம்.
ஒரு மாதிரி பஸ் வெளிக்கிட லேசாக் காத்து வருது. பஸ்ஸிற்குள்ள பாட்டு…
”அழகான ராட்சசியே…அடி நெஞ்சை உலுப்புறியே”….. பாட்டு…
.அது அந்தக் காலத்தில நம்மட ஃபேவரிட் சோங் பாருங்கோ. அதுக்கு அர்த்தம் எல்லாம் தெரியாது. இலங்கை வானொலி கொழும்பு சர்வதேச ஒலிபரப்பில அது போச்செண்டால் நான் எங்க இருந்தாலும் ரேடியோவிற்குக் கிட்ட வந்திடுவன்.
பாட்டு முடியிறதுக்கு முதலே செக் பொயின்ற். எல்லாமே இறங்குதுகள். அறுவாங்கள். வரிசையில நிற்குறம். எங்களுக்கு முதலே எக்கச்சக்கம் பேர் நிற்கினம். வாகனங்களில கிடந்த சாமான் எல்லாம் இறக்கி அவிட்டுத் திறந்து காட்டித் தூக்கி வைக்கோணும். பொடி செக்கிங். ஏன் தான் இப்பிடிப் போட்டுத் தேய்க்கிறாளுகளோ… எனக்கு வயித்தப் பிரட்டிக் கொண்டு வந்தது.
அம்மாக்கு முன்னால நான்.
“ஐ சின்னத் தங்கச்சீஈஈ” கொச்சைத் தமிழில் அந்த அக்கா என்ர சொக்கைப் பிடிச்சுக் கிள்ளினா.
“விடுங்கோ வலிக்குது….”
அது அவக்கு விளங்கிச்சோ இல்லையோ… நான் கையைத் தட்டி விட்டது ஏனெண்டு நல்லா விளங்கியிருக்கும்.
‘எங்கள இறக்கி விட்டு இவ்வளவு நேரம் நிற்க வைச்சிட்டு….தங்கச்சியாம். அவயின்ர தங்கச்சியை அவை இப்பிடி நிற்க வைப்பினமே?’ எனக்குள் திட்டிக் கொண்டேன்.
”மீரா பேசாம வா”
ஏன் எண்டு கேட்க முடியாது. சத்தியம்……
கேட்டு அம்மா சொன்னால் கூடப் புரிந்துகொள்ள எனக்கு வயது போதாது.
மீண்டும் மீண்டும் இறங்கல்கள்-ஏறல்கள்- எங்களுக்காக இரங்கத் தான் யாருமில்லை.
ஒரு மாதிரி கிட்டத்தட்ட மூணரை மணி நேரத்தவம். ரவுணுக்குள்ள இறங்கிட்டம். கொமினிக்கேசன் தேடிப் பிடிச்சு, போனாச்சு. என்னவோ ஃபிறீயாக் கொடுக்கிற மாதிரி கியூ நிற்குது. இங்கயுமா? ஒரு வேளை செக் பண்ணப் போகினமோ?
மெல்ல மெல்ல லைன் நகருது. பார்த்தா உள்ளுக்க நாலு கியூ நிற்குது. நான் கதைக்கேல்ல. அதிலயே மத்தியானச்சாப்பாடு. தண்ணி எல்லாம்……..நாங்க உள்ளுக்க போக வேண்டியது தான். ஏனெண்டா அடுத்தது எங்கட முறை.
“அஞ்சரையாப் போச்சு. கொமினிக்கேசன் பூட்டப் போறம்”
எனக்கு வந்த விசருக்கு, நாங்கள் என்ன இளிச்ச வாயளே….இவ்வளவு நேரம் லைனில நிற்கிறம்.
“வெளிக்கிடேக்கயே கத்தன். போற வேலை உருப்படும்” அம்மா என்னைத் திட்டினா…..நான் பேசேல்ல. வழக்கம் போல எனக்காக வக்கீல் வேலை பார்க்க என்னால ஏலும் தான்….ஆனா….சத்தியம்….
”மிச்சம் இருக்கிற ஆக்கள் ரோக்கன் வாங்கிக் கொண்டு போங்கோ. நாளைக்கு டோக்கன் ஓடரில கதைக்கலாம்.”
ஒரு துண்டைத் தந்தாங்கள்.
அதைப் பத்திரமா அம்மா பாக்கிற்குள்ள வைச்சா. ஆமா பெரிய சொத்துப் பத்திரம் பாருங்க.
திரும்பி வருவதற்கும் போராட்டம்.
அடுத்த நாள் போனா அம்மாக்கு அடுத்த என்ர முறை.
“அம்மா ரெலிபோன் எப்பிடி இருக்கும்? அதுக்கால என்னெண்டு சத்தம் வருது? எதில வைச்சுக் கதைக்கிறது?”
அடுக்கடுக்கான கேள்விகள். அதற்கான பதில்களை அம்மா சொல்ல அதையெல்லாம் லேப் பிறக்டிகலிற்கு முன்னரான எக்ஸ்பிளனேஸன் மாதிரிக் கவனமாக் கேட்டு ஞாபகப் படுத்திக் கொண்டேன்.
என் முதல் போன் பேசல். சொதப்பி விடக்கூடாது….
கடவுளே…. இண்டைக்கு கட்டாயம் எங்களைக் கதைக்க விடணும்.
அம்மா கதைச்சிட்டு வெளிய வந்தா…
அடுத்தது நான்…
“ஹலோ மாமா…”
“ஹலோ மீராவோ”
“ஓம் மாமா, எப்பிடி இருக்குறீங்க?”
“சுகம். நீங்க….”
“நல்ல சுகம் மாமா”
அவ்வளவும் தான். இப்பவும் மனசுக்க நிற்குது.
வெளில வந்தன். உலகத்தையே வெண்ட மாதிரி ஒரு பூரிப்பு.
“அம்மா, அந்த ஓட்டைக்குள்ளால சத்தம் வருது. அப்ப மாமா அதுக்கயோ இருக்கிறார். பேசாமல் அதுக்குள்ளால நாங்களும் அங்க போவமே? இங்க இருந்து கஸ்டப் படாமல்”.
அம்மா என்னைத்தூக்கிக் கொஞ்சினா.
“எவ்வளவு?”
பெறுமதி நினைவில் இல்லை.
ஏனெண்டால் நான் குதூகலத்தில் பறந்து கொண்டிருந்தேன்.
“அறுவாங்கள். கொஞ்ச நேரம் கதைச்சதுக்கு இவ்வளவு வாங்கிட்டாங்கள்….
இவங்கள் நல்லா இருப்பாங்களோ?”
எல்லாச்சனமும் எங்களைப் பார்த்துது.
“அம்மா சத்தம் போடாதேங்கோ”
எனக்குப் பயம். அம்மா ஏசினால் அதுகள் பலிச்சிடும். அவ அவ்வளவு ஃபேபெக்ட்.
ஒரு மாதிரி வீட்ட வந்தம். பிறகென்ன வகுப்பு முழுக்க நான் ரெலிபோன் கதைச்ச கதை தான்.(ஆமா இவ என்னவோ சந்திர மண்டலம் போய் வந்திட்டா)
வெரி ஸொறி…என்ர போன் ரிங் பண்ணுது. பிறகு கதைப்பமா?

No comments:

Post a Comment