“என்னடா இப்ப உன்ர புறபைல் பிக்சரில இருந்து எல்லா போஸ்றுகள் எல்லாம் ஒரே விண்ணைத் தாண்டி வருவாயா ஸொட்ஸா இருக்கு? ஒருவேளை ஸேர் யாரோ அக்காவை ஆட்டயப் போடுறீங்களோ?”
நான் விளையாட்டாய் கலாய்த்தேன் வழமை போல.
நண்பன் சொன்னான்.
“அடி உனக்கு கீதா ராஜாவைத் தெரியுமோ ஃபேஸ்புக்கில இருக்கிறாள். அவள் இப்ப என்ர போஸ்றுகளுக்கு லைக் பண்ணுறவள். எனக்கும் அவளுக்கும் ஒரே ரேஸ்ற். நான் யூஸ் பண்ணின பிறடிக்ஸன் அப்பிளிக்கேஸனில என்ர லைஃப் பாட்னரை சட் றூமில சந்திப்பன் எண்டு வந்தது. சற் றூம் இல்லை… அது சற் ஃபொக்ஸ்.”
அப்பிடி இப்பிடி எண்டு அவன் என்னை வதைக்கத் தொடங்கிட்டான். என்னவோ வயசுக்கோளாறு. பயபுள்ளைக்குப் பட்டுத் தெளியாட்டி விளங்காது… நான் ஒண்டும் சொல்லேல்லை. இந்த லவ் விசயத்தில நாங்கள் ஆருக்கும் அட்வைஸ் சொல்ல ஏலாது. பிறகு எங்களை மூண்டாம் ஆளாப் பாப்பினம் எண்டதை விட உனக்கென்ன தெரியும்…லவ் பண்ணிப் பாத்தாத் தான் தெரியும் எனக்கே அட்வைஸ்….தேவையா எனக்கு? அதுக்காக அவள் உன்னைத்தான்ரா பார்க்கிறாள் எண்டு அவனை உசுப்பேத்தி விட்டுட்டு பிறகு அவன் கஸ்டப்படுறதைப் பார்க்கவும் விருப்பம் இல்லை…..
நண்பனின் அளப்பரை தாங்கேலாமப் போட்டுது. கண்ட கண்ட நேரத்தில எடுத்து, கேர்ல்ஸிற்கு என்ன பிடிக்கும், பிடிக்காது எண்டு விசாரிப்புகள். விட்டா என்னை தூது அனுப்பியிருப்பான்…
“உனக்கு ஒண்டு தெரியுமோ…நான் ஏல் படிக்கேக்கயே அவளுக்குப் பின்னால சுத்தினான்….அவளின்ர பேரைப் பார்க்கேக்கயே எனக்குத் தோன்றிச்சு அவள் எனக்காகவே பிறந்தவள் எண்டு….”
ஐயோ….நிப்பாட்டு உன்ர புராணத்தை…காதால ரத்தம் வருகுது….நான் வாய்விட்டுக் கத்தேல்ல….மனசுக்க திட்டத் தொடங்கிட்டன்…சும்மா நண்பனாச்சே எண்ட கடமைக்காக ம் கொட்டிக் கேட்டன். இடைக்கிடை நான் அவன்ர கதையைக் கேட்கிறனோ இல்லைத் தூங்கிட்டனோ எண்டு பார்க்கிறதுக்காக உனக்கு லூஸ் என்ரி என்பான். நான் அதுக்கும் ம் கொட்டினாப் பிடிபட்டிடும்….நான் அவன் சொன்னதைக் கேட்கலை எண்டு…
காதல் கவிதைகள் அது இது எண்டு நண்பனின்ர பேஜ் சும்மா கலர்புல்லா இருக்கும்….அவனின்ர ஆள் பார்க்கிறாளோ இல்லையோ நாம போய் லைக் பண்ணி நல்லா இருக்குடா யாருக்காக எழுதினாய் எண்டு கொமன்ற் பண்ணோணும். அல்லாட்டி எடுத்து வறுத்துக் கொண்டிருப்பான் வதையன்…அதுக்குக் கீழ அவன்ர ஆளின்ர பேரை போடுறதுக்கு எண்டும் ஒராளை செற் பண்ணி வைச்சிருப்பான் போல…அவரின்ர காதலை மறைமுகமா வெளிக்காட்டுறாராம்…. நீங்க எல்லாம் சொல்லத் தைரியம் இல்லாட்டி ஏன்ரா லவ் பண்ணுறீங்க…
பிறகு இவன்ர போஸ்ற்றுகளுக்கு அவள் லைக் பண்ணுறேல்லை…. அதைச் சொல்லிப் புலம்பத் தொடங்கிட்டான்…
“இந்தப் பொண்ணுகளே இப்பிடித்தாண்டா…பறவை முனியம்மா மாதிரி இருப்பாளுகள்… நாம லவ் பண்ணுறோம் எண்டு தெரிஞ்சுது ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு சீன் போடுவாளுகள்” எண்டு விவேக்கின்ர டயலொக்கைக் கொப்பி பண்ணி அவனுக்கு ஆறுதல் சொன்னன்.
சும்மா சும்மா எல்லாம் அவளுக்கு என்ன பிடிக்கும் எண்டு கேள். அவளோட சற் பண்ணு எண்டு கட்டளைகள்.
நானா அவளை லவ் பண்ணுறன்…இல்லாட்டி அவனா லவ் பண்ணுறான் எண்டு எனக்கே சந்தேகம் வந்திட்டுது…..என்ர சற்பொக்ஸில முழுக்க அவளின்ர சற்றிங் தான்…..ஒரு நாளைக்கு அவனை விட அதிகமா நான் அவளை நினைக்க வேண்டியிருந்தது……
அவளுக்கு என்ன விசயங்களில இன்ரெஸ்ற் எண்டு கேட்டு அவருக்கு சொல்லோணும்….அவரும் அதுக்கேற்ற மாதிரி தன்ர ரசனையளை மாத்திக் கொள்வாராம்….என்ன லவ் இது? அவளுக்குப் பிடிக்கணும் எண்டுறதுக்காக இவன்ர ரசனையை, பழக்கத்தை இவனுக்கு அவளைப் பிடிச்ச நேரத்தில் – லவ் பண்ணுற நேரத்தில் மாத்திக் கொள்ளலாம்… பிறகு கல்யாணத்துக்குப் பிறகு தன்ர பழக்கத்தைக் காட்டத் தொடங்கினா, அவளுக்குப் பிடிக்குமா? பிறகென்ன? டைவர்ஸ் தான்…உண்மையிலயே ஒரே ரேஸ்ற் உள்ளவங்களைப் பார்க்கணும்…இல்லாட்டி தன்ர துணையின்ர விருப்பங்களையும் அனுசரிச்சுப் போகக்கூடியவங்களைப் பார்க்கணும்…..காதலிக்காத எனக்கு உள்ள இந்த புத்திசாலித்தனம் இரண்டு தடவை காதலில் தோற்றுப் போன நண்பனிடம் இருக்கவில்லை…. அதால தான் தோற்றிருப்பானோ?
அவளுக்கு செருப்பு வகையளில தான் விருப்பம் கூட எண்டு சொன்னாள்…… என்னால முடியல….பாவம் நண்பன்…..எனக்கு என்னவோ அவன் செருப்புக் கும்பிக்க இருந்து வெளிக்கிட்டு வாற மாதிரி ஒரு பிரமை…..அவன் செருப்புக் கடையளா ஏறி இறங்கத் தொடங்கிட்டான்…..செருப்புப் பார்க்கிறாராம்…..”மெல்லிய செருப்பா - அடிச்சா வலிக்காததா வாங்கிக் கொண்டு போடா” எண்டு நான் சொன்னதுக்காக அவர் என்னோட கோபம்…..
அவன் சுத்தமா மாறிட்டன்….அவனுக்குக் கொஞ்சம் தண்ணி போடுற பழக்கம் இருந்தது…அதை விட்டுட்டான்…ஆறுமணிக்கு மேல அவனை வெளியில பிடிக்கேலா எண்டு மற்றப் ஃபிரண்ஸ் அலுத்துக் கொண்டாங்கள்…என்னவோ ஞானப்பழமாட்டம் பட்டை சகிதம் விடுதலையாகிறதுக்காக நன்னடத்தையுள்ளவன் மாதிரி நடிக்கும் ஜெயில் கைதி மாதிரித் திரியத் தொடங்கிட்டான்….அது நல்ல விசயம் தான்….கடைசிவரை தொடர்ந்தால்….
எனக்கு அவனைப் பார்க்க சைவப் பூனை என்ற வார்த்தை தான் ஞாபகம் வரும்….உடன சிரிப்பு வந்திடும்…ஆனா ஒரு மாதிரி அடக்கிடுவன்…பிறகு கோபக்காரனைப் பார்த்துச் சிரிச்சதெண்டும் வந்திடும்….கொஞ்சம் கூட ரோசமில்லாமல் வழியுறன் எண்டிடுவாங்கள்….இந்த விசயத்தில மட்டும் ஃபிரண்ஸோ இல்லையோ எல்லாப் போய்ஸும் ஒரே மாதிரித்தான்…
கோபக்காரன் ஒரு நாள் தான் புறபோஸ் பண்ணப் போறானாம். தன்னை விஸ் பண்ணட்டாம்… நாமளே காதலுக்கு எதிரி….நம்மகிட்ட விஸ்ஸா….? உருப்பட்டமாதிரித்தான்… வேற யாராவது அதில சக்ஸஸ் ஆன ஆக்களிட்ட கேட்கச் சொன்னன்…நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணினீ….நீதான் விஸ் பண்ணணும் எண்டு வதை…….(அப்படியா? சொல்லவேயில்லை…)
பின்ன என்ன செய்யுறது… பாவம்…
அடுத்த ரெண்டு கிழமையா நண்பனையும் காணேல்ல…ஃபேஸ்புக்கில அந்தப் பெண்ணையும் காணேல்ல…
செற்றானதும் பாட்டி வைக்காம ஓடிப் போயிட்டானோ நாய்ப்பயலே எண்டு நல்லா மனசுக்குள்ள கடிஞ்சு கொண்டன்…என்ன ஒரு உயர்ந்த உள்ளம்..
பிறகு பார்த்தா அவள் இவரின்ர லவ்வை மறுத்திட்டாளாம்….அதான், இவர் சோகத்தில தாடி வளர்த்தவராம்….இப்ப அவருக்கு தெளிஞ்சிட்டுதாம்..லவ் எல்லாம் இல்லை எண்டு…தான் மச்சுவட் ஆயிருக்காராம் அதில…களவையும் கற்று மற எண்ட மாதிரி காதலையும் செய்து மறந்திருக்காராம்….ஆமா எத்தனையாம் தரம் செய்து மறந்தீங்க?
”விடுடா காத்திருந்தால் வளர்வது காதலல்ல, கன்னத்து முடிதான்…” நான் சும்மா இருக்கேலாம வாய்விட்டு உண்மையை உளறிட்டன்… அவன்ர நொந்த உள்ளத்திற்கு அது ஆறுதலா இருந்திருக்கும் போல…
மீண்டும் அவஸ்தை…..லவ் மட்டும் சக்ஸஸ் ஆயிருந்தா என்னை ரோட்டில காணேக்க சிரிப்பானோ எண்டுறது சந்தேகம்… காதலுக்கு முதலும் சரி… பிறகும் சரி எனக்குத் தான் காது வலி…
ஆனாலும் எனக்கு ஒரு திருப்தி….இனி அவன் லவ் பண்ண மாட்டான்…வதைக்கவும் மாட்டான்…கடவுள் காத்தது அவனை மட்டுமல்ல என்னையும் தான்…அவனைக் காதல்ல இருந்து…என்னை அவனின்ர அளப்பரையில இருந்து… இது நீடிக்கேல்லை.
கொஞ்ச நாளா ஆளை ஃபோனில கூடப் பிடிக்க முடியலை. திடீரெண்டு ஒரு நாள் கோயிலுக்குப் போன இடத்தை கண்டன்..அடக் கடவுளே….உலகம் தலை கீழா சுத்தப் போகுதே…இவன் கூட கோயிலுக்கு வாறான் எண்டு பார்த்தா…”அடி உங்கட ஸ்கூலில படிக்கிற ஆசாவைத் தெரியுமோ…. அவள் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் வாறவளடி….இண்டைக்கு இன்னும் வரேல்ல…அவளைக் கண்டனியே…...?”
எனக்கு உள்ளுக்க சிரிப்பு…..நண்பனுக்கு நல்லபுத்தி வரணும் எண்டு வேண்டிக் கொண்டேன்…வேற என்ன செய்ய?
என்னதான் நடந்தாலும் லவ் விசயத்தில நண்பன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை இப்பிடியான லவ்வுகள் சரி வராது எண்டு….நான் கற்றுக் கொண்டு விட்டேன் நான் ஒருத்தரின்ர லவ்வுக்கும் விஸ் பண்ணி சங்கு ஊதக்கூடாது எண்டு…(அட லவ் பண்ணக்கூடாது எண்டு சொல்லுவம் எண்டு நினைச்சீங்களா? அது காதலால வாழ்க்கையைத் தொலைச்சவங்களைப் பாத்து எப்பவோ கற்றுக் கொண்ட பாடம்…)
No comments:
Post a Comment