Sunday, September 23, 2012

பாடம்.

“என்னடா இப்ப உன்ர புறபைல் பிக்சரில இருந்து எல்லா போஸ்றுகள் எல்லாம் ஒரே விண்ணைத் தாண்டி வருவாயா ஸொட்ஸா இருக்கு? ஒருவேளை ஸேர் யாரோ அக்காவை ஆட்டயப் போடுறீங்களோ?”
நான் விளையாட்டாய் கலாய்த்தேன் வழமை போல.
நண்பன் சொன்னான்.
“அடி உனக்கு கீதா ராஜாவைத் தெரியுமோ ஃபேஸ்புக்கில இருக்கிறாள். அவள் இப்ப என்ர போஸ்றுகளுக்கு லைக் பண்ணுறவள். எனக்கும் அவளுக்கும் ஒரே ரேஸ்ற். நான் யூஸ் பண்ணின பிறடிக்ஸன் அப்பிளிக்கேஸனில என்ர லைஃப் பாட்னரை சட் றூமில சந்திப்பன் எண்டு வந்தது. சற் றூம் இல்லை… அது சற் ஃபொக்ஸ்.”
அப்பிடி இப்பிடி எண்டு அவன் என்னை வதைக்கத் தொடங்கிட்டான். என்னவோ வயசுக்கோளாறு. பயபுள்ளைக்குப் பட்டுத் தெளியாட்டி விளங்காது… நான் ஒண்டும் சொல்லேல்லை. இந்த லவ் விசயத்தில நாங்கள் ஆருக்கும் அட்வைஸ் சொல்ல ஏலாது. பிறகு எங்களை மூண்டாம் ஆளாப் பாப்பினம் எண்டதை விட உனக்கென்ன தெரியும்…லவ் பண்ணிப் பாத்தாத் தான் தெரியும் எனக்கே அட்வைஸ்….தேவையா எனக்கு? அதுக்காக அவள் உன்னைத்தான்ரா பார்க்கிறாள் எண்டு அவனை உசுப்பேத்தி விட்டுட்டு பிறகு அவன் கஸ்டப்படுறதைப் பார்க்கவும் விருப்பம் இல்லை…..
நண்பனின் அளப்பரை தாங்கேலாமப் போட்டுது. கண்ட கண்ட நேரத்தில எடுத்து, கேர்ல்ஸிற்கு என்ன பிடிக்கும், பிடிக்காது எண்டு விசாரிப்புகள். விட்டா என்னை தூது அனுப்பியிருப்பான்…
“உனக்கு ஒண்டு தெரியுமோ…நான் ஏல் படிக்கேக்கயே அவளுக்குப் பின்னால சுத்தினான்….அவளின்ர பேரைப் பார்க்கேக்கயே எனக்குத் தோன்றிச்சு அவள் எனக்காகவே பிறந்தவள் எண்டு….”
ஐயோ….நிப்பாட்டு உன்ர புராணத்தை…காதால ரத்தம் வருகுது….நான் வாய்விட்டுக் கத்தேல்ல….மனசுக்க திட்டத் தொடங்கிட்டன்…சும்மா நண்பனாச்சே எண்ட கடமைக்காக ம் கொட்டிக் கேட்டன். இடைக்கிடை நான் அவன்ர கதையைக் கேட்கிறனோ இல்லைத் தூங்கிட்டனோ எண்டு பார்க்கிறதுக்காக உனக்கு லூஸ் என்ரி என்பான். நான் அதுக்கும் ம் கொட்டினாப் பிடிபட்டிடும்….நான் அவன் சொன்னதைக் கேட்கலை எண்டு…
காதல் கவிதைகள் அது இது எண்டு நண்பனின்ர பேஜ் சும்மா கலர்புல்லா இருக்கும்….அவனின்ர ஆள் பார்க்கிறாளோ இல்லையோ நாம போய் லைக் பண்ணி நல்லா இருக்குடா யாருக்காக எழுதினாய் எண்டு கொமன்ற் பண்ணோணும். அல்லாட்டி எடுத்து வறுத்துக் கொண்டிருப்பான் வதையன்…அதுக்குக் கீழ அவன்ர ஆளின்ர பேரை போடுறதுக்கு எண்டும் ஒராளை செற் பண்ணி வைச்சிருப்பான் போல…அவரின்ர காதலை மறைமுகமா வெளிக்காட்டுறாராம்…. நீங்க எல்லாம் சொல்லத் தைரியம் இல்லாட்டி ஏன்ரா லவ் பண்ணுறீங்க…
பிறகு இவன்ர போஸ்ற்றுகளுக்கு அவள் லைக் பண்ணுறேல்லை…. அதைச் சொல்லிப் புலம்பத் தொடங்கிட்டான்…
“இந்தப் பொண்ணுகளே இப்பிடித்தாண்டா…பறவை முனியம்மா மாதிரி இருப்பாளுகள்… நாம லவ் பண்ணுறோம் எண்டு தெரிஞ்சுது ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு சீன் போடுவாளுகள்” எண்டு விவேக்கின்ர டயலொக்கைக் கொப்பி பண்ணி அவனுக்கு ஆறுதல் சொன்னன்.
சும்மா சும்மா எல்லாம் அவளுக்கு என்ன பிடிக்கும் எண்டு கேள். அவளோட சற் பண்ணு எண்டு கட்டளைகள்.
நானா அவளை லவ் பண்ணுறன்…இல்லாட்டி அவனா லவ் பண்ணுறான் எண்டு எனக்கே சந்தேகம் வந்திட்டுது…..என்ர சற்பொக்ஸில முழுக்க அவளின்ர சற்றிங் தான்…..ஒரு நாளைக்கு அவனை விட அதிகமா நான் அவளை நினைக்க வேண்டியிருந்தது……
அவளுக்கு என்ன விசயங்களில இன்ரெஸ்ற் எண்டு கேட்டு அவருக்கு சொல்லோணும்….அவரும் அதுக்கேற்ற மாதிரி தன்ர ரசனையளை மாத்திக் கொள்வாராம்….என்ன லவ் இது? அவளுக்குப் பிடிக்கணும் எண்டுறதுக்காக இவன்ர ரசனையை, பழக்கத்தை இவனுக்கு அவளைப் பிடிச்ச நேரத்தில் – லவ் பண்ணுற நேரத்தில் மாத்திக் கொள்ளலாம்… பிறகு கல்யாணத்துக்குப் பிறகு தன்ர பழக்கத்தைக் காட்டத் தொடங்கினா, அவளுக்குப் பிடிக்குமா? பிறகென்ன? டைவர்ஸ் தான்…உண்மையிலயே ஒரே ரேஸ்ற் உள்ளவங்களைப் பார்க்கணும்…இல்லாட்டி தன்ர துணையின்ர விருப்பங்களையும் அனுசரிச்சுப் போகக்கூடியவங்களைப் பார்க்கணும்…..காதலிக்காத எனக்கு உள்ள இந்த புத்திசாலித்தனம் இரண்டு தடவை காதலில் தோற்றுப் போன நண்பனிடம் இருக்கவில்லை…. அதால தான் தோற்றிருப்பானோ?
அவளுக்கு செருப்பு வகையளில தான் விருப்பம் கூட எண்டு சொன்னாள்…… என்னால முடியல….பாவம் நண்பன்…..எனக்கு என்னவோ அவன் செருப்புக் கும்பிக்க இருந்து வெளிக்கிட்டு வாற மாதிரி ஒரு பிரமை…..அவன் செருப்புக் கடையளா ஏறி இறங்கத் தொடங்கிட்டான்…..செருப்புப் பார்க்கிறாராம்…..”மெல்லிய செருப்பா - அடிச்சா வலிக்காததா வாங்கிக் கொண்டு போடா” எண்டு நான் சொன்னதுக்காக அவர் என்னோட கோபம்…..
அவன் சுத்தமா மாறிட்டன்….அவனுக்குக் கொஞ்சம் தண்ணி போடுற பழக்கம் இருந்தது…அதை விட்டுட்டான்…ஆறுமணிக்கு மேல அவனை வெளியில பிடிக்கேலா எண்டு மற்றப் ஃபிரண்ஸ் அலுத்துக் கொண்டாங்கள்…என்னவோ ஞானப்பழமாட்டம் பட்டை சகிதம் விடுதலையாகிறதுக்காக நன்னடத்தையுள்ளவன் மாதிரி நடிக்கும் ஜெயில் கைதி மாதிரித் திரியத் தொடங்கிட்டான்….அது நல்ல விசயம் தான்….கடைசிவரை தொடர்ந்தால்….
எனக்கு அவனைப் பார்க்க சைவப் பூனை என்ற வார்த்தை தான் ஞாபகம் வரும்….உடன சிரிப்பு வந்திடும்…ஆனா ஒரு மாதிரி அடக்கிடுவன்…பிறகு கோபக்காரனைப் பார்த்துச் சிரிச்சதெண்டும் வந்திடும்….கொஞ்சம் கூட ரோசமில்லாமல் வழியுறன் எண்டிடுவாங்கள்….இந்த விசயத்தில மட்டும் ஃபிரண்ஸோ இல்லையோ எல்லாப் போய்ஸும் ஒரே மாதிரித்தான்…
கோபக்காரன் ஒரு நாள் தான் புறபோஸ் பண்ணப் போறானாம். தன்னை விஸ் பண்ணட்டாம்… நாமளே காதலுக்கு எதிரி….நம்மகிட்ட விஸ்ஸா….? உருப்பட்டமாதிரித்தான்… வேற யாராவது அதில சக்ஸஸ் ஆன ஆக்களிட்ட கேட்கச் சொன்னன்…நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணினீ….நீதான் விஸ் பண்ணணும் எண்டு வதை…….(அப்படியா? சொல்லவேயில்லை…)
பின்ன என்ன செய்யுறது… பாவம்…
அடுத்த ரெண்டு கிழமையா நண்பனையும் காணேல்ல…ஃபேஸ்புக்கில அந்தப் பெண்ணையும் காணேல்ல…
செற்றானதும் பாட்டி வைக்காம ஓடிப் போயிட்டானோ நாய்ப்பயலே எண்டு நல்லா மனசுக்குள்ள கடிஞ்சு கொண்டன்…என்ன ஒரு உயர்ந்த உள்ளம்..
பிறகு பார்த்தா அவள் இவரின்ர லவ்வை மறுத்திட்டாளாம்….அதான், இவர் சோகத்தில தாடி வளர்த்தவராம்….இப்ப அவருக்கு தெளிஞ்சிட்டுதாம்..லவ் எல்லாம் இல்லை எண்டு…தான் மச்சுவட் ஆயிருக்காராம் அதில…களவையும் கற்று மற எண்ட மாதிரி காதலையும் செய்து மறந்திருக்காராம்….ஆமா எத்தனையாம் தரம் செய்து மறந்தீங்க?
”விடுடா காத்திருந்தால் வளர்வது காதலல்ல, கன்னத்து முடிதான்…” நான் சும்மா இருக்கேலாம வாய்விட்டு உண்மையை உளறிட்டன்… அவன்ர நொந்த உள்ளத்திற்கு அது ஆறுதலா இருந்திருக்கும் போல…
மீண்டும் அவஸ்தை…..லவ் மட்டும் சக்ஸஸ் ஆயிருந்தா என்னை ரோட்டில காணேக்க சிரிப்பானோ எண்டுறது சந்தேகம்… காதலுக்கு முதலும் சரி… பிறகும் சரி எனக்குத் தான் காது வலி…
ஆனாலும் எனக்கு ஒரு திருப்தி….இனி அவன் லவ் பண்ண மாட்டான்…வதைக்கவும் மாட்டான்…கடவுள் காத்தது அவனை மட்டுமல்ல என்னையும் தான்…அவனைக் காதல்ல இருந்து…என்னை அவனின்ர அளப்பரையில இருந்து… இது நீடிக்கேல்லை.
கொஞ்ச நாளா ஆளை ஃபோனில கூடப் பிடிக்க முடியலை. திடீரெண்டு ஒரு நாள் கோயிலுக்குப் போன இடத்தை கண்டன்..அடக் கடவுளே….உலகம் தலை கீழா சுத்தப் போகுதே…இவன் கூட கோயிலுக்கு வாறான் எண்டு பார்த்தா…”அடி உங்கட ஸ்கூலில படிக்கிற ஆசாவைத் தெரியுமோ…. அவள் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் வாறவளடி….இண்டைக்கு இன்னும் வரேல்ல…அவளைக் கண்டனியே…...?”
எனக்கு உள்ளுக்க சிரிப்பு…..நண்பனுக்கு நல்லபுத்தி வரணும் எண்டு வேண்டிக் கொண்டேன்…வேற என்ன செய்ய?
என்னதான் நடந்தாலும் லவ் விசயத்தில நண்பன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை இப்பிடியான லவ்வுகள் சரி வராது எண்டு….நான் கற்றுக் கொண்டு விட்டேன் நான் ஒருத்தரின்ர லவ்வுக்கும் விஸ் பண்ணி சங்கு ஊதக்கூடாது எண்டு…(அட லவ் பண்ணக்கூடாது எண்டு சொல்லுவம் எண்டு நினைச்சீங்களா? அது காதலால வாழ்க்கையைத் தொலைச்சவங்களைப் பாத்து எப்பவோ கற்றுக் கொண்ட பாடம்…)

Monday, September 10, 2012

முகப்புத்தகக்கலாட்டா5

ஒருமுறை நான் கொழும்பிற்குப் போன போது் என்ர டொங்கிளை விட்டிட்டுப் போயிட்டன். அதால கிட்டத்தட்ட ஒருமாதம் ஃபேஸ்புக் இல்லை. ஒரு நாள் ஓபிண் பண்ணினா அதில ஒரு பரபரப்பான போஸ்ற்….பில்லாரூ எண்டு எங்கட நண்பர் ஒருவர் போட்டோ போட்டிருக்கிறார்…ஒரு மாசம் பார்க்காத கணக்குக்கு ஒரே நாளில கொமன்ற் அடிச்சன்…
என்ர கெட்ட காலம். எங்கட குரூப்பை அண்டைக்கு எண்டு பார்த்து ஹக் பண்ணிட்டாங்க. அதோட என்னோட ஃபேக் எக்கவுண்ட் பற்றியும் பிடிபட்டிட்டு. அது சந்தேகத்தில இருந்தது…. கென்ஃபோம் ஆயிட்டுது. எனக்கு எடுத்து ஏசினம்.
“நீ பஞ்சாப் எண்டதால எங்களுக்கு ஏசிறாங்கள்…உங்கட ஜூனியரை ஒழுங்கா வைச்சிருக்கத் தெரியாதோ எண்டு…இனி எங்கட அக்கா தங்கச்சிமாரை எப்பிடிக் கட்டிக் கொடுக்கிறது? நாங்கள் பஞ்சாப் எண்டதும் மாப்பிளை தரமாட்டாங்கள்….”
என்ன கொடுமை இது? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறாங்க…நான் என்ன செய்திட்டன்… கொமன்ற் போட்டது தப்பா?
சத்தியமா அவை ஏசேக்க இது எனக்குத் தோன்றவேயில்லை. நானும் ஏதோ கொலை செய்தவள் மாதிரி அவையின்ர குற்றச்சாட்டுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தன்.
“உன்ர ஃபேக்கை டீயக்ரிவேற் பண்ணீட்டியோ?”
“ம்…”
“இனி நீ ஃபேக் கிறியேட் பண்ணினாய் எண்டால் உனக்கில்ல… ’ஏ’ யிற்குத் தான் அடிப்பம்.”
கறுமம் அந்த ஜீவன். என்னால அடி வாங்கணுமா?
”நீற்….”.
ஆமா அது ஸென்ஸார் கட் தான்…
அவை கதைச்சுமுடியுமட்டும் நான் ஒண்டும் கதைக்கலை. அப்பிடி நடக்கிறது உலக அதிசயம்……
போனை வைச்சிட்டு அழுகையெண்டால்….
என்ர நண்பி ஏசினாள்…
“லூசு ஏன் அழுறாய்? நீ செய்ததில பிழை எண்டாத்தான் அழோணும்…”
எனக்கு அப்பத் தான் உறைச்சுது….
நான் என்ன பிழை செய்தன்? ஏன் அழோணும்?
மறுபடியும் எடுத்தினம்.
“அழுகிறியோ…”
“இல்லை அண்ணா” அழுது கொண்டே….
“நான் ஏசினது பிழை தான்.. ஆனா நீ செய்தது சரியோ….”
தங்கட வார்த்தைக்கு றீசனவுட் பண்ணினம்…
அட்வைஸ்…
ஃபிறீயாக் கிடைக்கும் ஒரேயொரு பொருள்…
அவையோடை அண்டையோடை கதை இல்லை எண்டு நான் முடிவு பண்ணினன். நான் கூட அலார்ம் வைச்சு நாலு மணிக்கு எழும்புறேல்ல. அவை ஏசுவினம் எண்டு அவைக்காக எலார்ம் வைச்சு நான் எழும்பி போன் பண்ணி அவையை எழுப்பி விட்டிட்டு நான் படுத்திருப்பன். அவைக்குப் பாட்டுப் பாடச்சொன்னா பாடணும்….நான் என்ன அவைக்கு என்ரரெயின்மென்றா?
அடுத்த கோல் என்னை டீயக்ரிவேற் பண்ணச்சொன்ன அண்ணாட்ட இருந்து…
“வைச்சிருக்க வேணாம் எண்டால் கள்ளமா வைச்சிருப்பியோ”….நீற்
(நீற் எண்டுறது சென்ஸார் கட்டிற்காகப் பாவிக்கப் படுற மியூசிக் பாருங்கோ!)
சத்தியமா எனக்குக் காது ஜவ்வு வெடிச்சிட்ட மாதிரி எதுவும் கேட்கலை..
(நீதான் கனதரம் ஸென்சார் கட்டால ஏச்சு வாங்கியிருக்க. பாட்டி வை எண்டு கேட்கப்படாது…ஏற்கனவே சிலர் கேட்டாங்க. அதான் முன்னெச்சரிக்கை…)
எனக்கு இப்பிடியான ஏச்சுகளை வாங்கி வாங்கி இதெல்லாம் சும்மா எண்ட மாதிரி இப்ப ஆகிட்டுது….சத்தியமா என்ர மனசு இந்த விசயத்தில மரத்துப் போச்சு. இற்ஸ் ஓல் றைட்….டோன்ற் க்றை… ஆ யூ ஓகே?

முகப்புத்தகக்கலாட்டா6

ஃபேஸ் புக் வைச்சிருந்ததுக்கும் குரூப்பில இருந்ததுக்கும் தண்டனையாக
“நான் முகப் புத்தகத்தில் குழுவில் இருந்தது தவறு” எண்டு ஆயிரம் தரம் எழுதச் சொல்லிட்டாங்க…
இந்தக் கலவரம் அடங்கின பிறகு எக்கவுண்ட் அக்ரிவேற் பண்ணலாம் எண்டு சொல்லிச்சினம்…
ஒரு ஹப்…. ஏதாவது போடுவம் எண்டால் ஒண்டும் தோணலை…. எக்கச்சக்க அப்ளிகேசன் பெண்டிங்கில இருக்கு….அதில ஒண்டு கிளிக் பண்ணி போஸ்ற் பண்ணிட்டன்… அதை வடிவாப் பாக்கேல்ல.
நான் மிகவும் அதிஸ்ட சாலி(?) அந்த அப்ளிகேசனின்ர பேர் ”பீப்பிள் மோஸ்ற் ஐ வோன்ற் ரு சீ”
எழுமாற்றா ரெண்டு அண்ணாமாரின்ர பேர் அதில வந்திட்டுது. அதை நான் பாக்கேல்ல…
எப்பிடி இருக்கும்? வட் எ நைஸ் சிற்றுவேசன்…டொயிங்…
சம்பந்தப் பட்ட ஒரு அண்ணா எடுத்து,
”ஃபேஸ்புக்கில அப்ளிகேசன் யூஸ் பண்ணுற பழக்கம் இருக்கோ?”
“ஓம்”
“கடைசியா நீர் போட்ட அப்ளிகேசனில ரெண்டு அண்ணாமாரின்ர பேர் வந்தது தெரியுமோ?”
எனக்குத் திக் எண்டுது…. ஐயோ…
“அவயள கூட்டிக்கொண்டு வந்து காட்டினா என்ன தருவீர்?”
ஆம் அது என்ர ஃபேஸ்புக் குழறுபடியைக் கண்டு பிடிச்ச அண்ணாதான்…
எனக்கும் ஃபேஸ்புக்கிற்கும் அந்த அண்ணாக்கும் அப்பிடி ஒரு ராசி….
அவரு ஃபேஸ்புக் பி.எச்.டீ யாம்…..
”……………………..”
“நான் கவனிக்கேல்ல அண்ணா…பாத்து ரிமூவ் பண்ணி விடுறன்…”
ஃபினிஸ்….
ரிமூவ் பண்ணீட்டன்….
ஒரு நாள் நான் லெக்ஸர்ஸிற்குப் போயிட்டு வந்து தூங்கிட்டு எழும்பிப் பார்த்த போது என் போனுக்கு என் மெயிலில இருந்து எக்கச்சக்க மெஸேஜ்.
’ரெண்டு மூண்டு மெயில் வைச்சிருக்கிறது பெரிய விசயமில்லை… ஒண்டையாவது ஒழுங்கா வச்சிருக்கணும்.’
அப்பிடிக் கொஞ்சம்….
அதில இருந்து என்ர ஃபேஸ்புக் மற்றும் மெயில் எக்கவுண்ட்ஸ் ஐ ஹக் பண்ணீட்டாங்க எண்ட விசயம் தெரியவந்துது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திட்டு ஏதாவது செய்து அந்தத் தாக்குதலுக்கு உரிமை கோருற மாதிரி தாங்கள் தான் ஹக்கர்ஸ் எண்டு உறுதிப்படுத்த ஹக் பண்ணின என்ர பர்சனல் எக்கவுண்ட்ஸில ஒரு மெயில் எக்கவுண்டின்ர பாஸ்வேட் தந்திருந்தினம். அதைப் போட ஓபின் ஆச்சு.(தைரியம் இருந்தா பேரை சொல்லியிருக்கணும்…)
எனக்கு முதல் நாள் எடுத்து ஏசின அண்ணாவில லைற்றா டவுட்….ஃபேஸ்புக் பி.எச்.டீயாம்….ஹக் பண்ணத் தெரியாமலா? அதுக்கு ஏற்றமாதிரி அவரின்ர ரிக்குவஸ்ற்றை அக்செப்ற் பண்ணுறவயின்ர எக்கவுண்ட்ஸ் எல்லாம் அப்பிடியே உடனுக்குடன் ஹக் ஆச்சுது… நான் முடிவே பண்ணீட்டன்… அது அந்த அண்ணாதான்னு…
ஒரு மாதிரி இன்னொரு ஹக்கரைப் பிடிச்சு என்ர எக்கவுண்டை மீட்டன்… அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது…என்ர எக்கவுண்டை ஆறு மாசமா ஓபின் பண்ணிப் பாத்திருக்காங்க…..அட நாறப் பசங்களா……..
இதுக்கெல்லாம் இது நேரமில்லை….ஆனா எதுக்கு என் எக்கவுண்டை ஓபின் பண்ணிப் பார்க்கணும்…?எண்டு ஒரே குழப்பம்.
எங்கட செமி எக்ஸாம் பெரிய கலவரத்தோட முடிஞ்சுது. ஸ்ரைக் எண்டு வீட்ட போய்த் திரும்பி வந்து ஒரே கூத்து….
வீட்ட போய் என்ர ஃபேஸ்புக்கை ஓபின் பண்ண அது ஓபின் ஆகலை. எனக்கு கடுப்பாகிட்டுது…
மறுபடியும் இன்னொரு ஹக்கரை அழைத்து, என்ர எக்கவுண்டை மீட்டன்.
என்னை என்ன கேணச்சிறுக்கி எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினமே?
எப்ப பாரு என்ர எக்கவுண்டை ஹக் பண்ணிக் கொண்டு. இதுக்கு இண்டைக்கொரு முடிவு கட்டிறன்.
ஒரு ஸ்டேடஸ்.
“எக்ஸ் வை எண்ட எக்கவுண்டில இருந்து வரும் றிக்குவஸ்ருகளை அக்சப்ற் பண்ணுபவர்களின் ஃபேஸ்புக் மற்றும் ஈ-மெயில் எக்கவுண்டுகள் ஹக் பண்ணப்படும் அபாயம் உள்ளது. எனவே அக்சப்ற் பண்ண வேண்டாம்..”
“எக்ஸ் வை ” எண்டுறது நான் சந்தேகித்த அண்ணாவின்ர முழுப் பெயர்.
அண்டைக்குப் பின்னேரம் அந்த அண்ணா கோல் பண்ணி தான் ஹக் பண்ணேல்லை எண்டிட்டார்….தொட்டதுக்கெல்லாம் கெட்ட வார்த்தை கேட்ட எனக்கு, அப்பிடிக்கூட ஏசேல்லை. அநியாயமா ஒரு அப்பாவியை பப்ளிக்கில வைச்சு நாறடிச்சுட்டனோ…. என்னை நினைச்சா எனக்கே அருவருப்பாக் கிடந்துது… சே என்ன காரியம் பண்ணீட்டன்..
நான் செய்த காரியத்துக்காக என்னை நானே தண்டிக்கணும் எண்டு தீர்மானிச்சன்…
மறுபடியும் ஒரு ஸ்டேடஸ்.
“நான் பதிவு செய்த தகவல் தவறானது என்று தெரிய வருகிறது…அதனால் சம்பந்தப் பட்டவரை வீணாகக் குற்றம் சுமத்தியதற்காக என் ஃபேஸ்புக்கை டீயக்ரிவேற் பண்ணுகிறேன். இது யாருடைய தலையீடும் இன்றி நான் சொந்தமாக எடுக்கும் முடிவு…இதற்குப் பிறகு ஃபேக் எக்கவுண்ட் கூட வைத்திருக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்..”
ஒரு தவறான றிப்போட்டால் பத்திரிகையையே இழுத்து மூடுவது போல் என் அவசர முடிவிற்காக என் ஃபேஸ்புக் கணக்கை மூடினேன்….
அட ஃபேஸ்புக்கே மூடியாச்சு… இனியெங்க… ஃபேஸ்புக் கலாட்டா?

முகப்புத்தகக்கலாட்டா4

அதுக்குப் பிறகு நான் ஒஃப் லைன் குடுத்திட்டுத் தான் இருப்பன். ஒருநாள் காலமை எட்டு மணியில இருந்து பன்னிரண்டு மணிவரைக்கும் நான் ஃபேஸ்புக்கில கிடைக்குற போஸ்றுகளுக்கு கொமன்ற் பண்ணிட்டிருந்தன் எண்டு எக்கவுண்டை டீயக்ரிவேற் பண்ணச்சொல்லிட்டார் ஒரு அண்ணா….
(எக்ஸ்கியூஸ்மீ அண்ணா…. அவ்வளவு நேரமும் நீங்களும் ஃபேஸ்புக்கில தானே இருந்தீங்க?)
மாமியார் உடைச்சா மண்கலம். மருமகள் உடைச்சா பொன்கலம்……
சீனியர் செய்தா சரி….ஜூனியர் செய்தா பிழை….நோ நோ முறைச்சுப் பார்க்கப் படாது…
”சரி அண்ணா”
நான் சாக்கிற்கு சொன்னன்….ஆனா நான் தான் எந்த சட் டும் பண்ணலையே! எனக்கு எதுக்குத் தண்டனை கொடுக்கணும் எண்டு என் மனசுக்க ஒரு பட்சி பேசிச்சு…. சரி அண்ணா எண்டு சொன்ன அந்தக் கணத்திலயே முடிவு பண்ணினன். ஒரு ஃபேக் எக்கவுண்ட் கிறியேற் பண்ணுறது எண்டு. அதில எந்த சீனியரும் இருக்கக் கூடாது.
அண்டக்கு அஞ்சு மணிக்கிடையில டீயக்ரிவேற் பண்ணணும் எண்டு உத்தரவு. அதுக்கு முன்னாடியே டீயக்ரிவேற் பண்ணிட்டு சரியா அஞ்சு மணிக்கு ஃபேக் எக்கவுண்ட் கிறியேற் பண்ணினன். அதுக்கெண்டு ஈமெயில் அட்ரஸ் எல்லாம் பிறிம்பாக் கிறியேற் பண்ணி….ஃபிரண்ஸை இம்போட் பண்ணணும். எப்பிடி எல்லாரையும் பண்ணுறது?
இரவு பன்னிரண்டு மணிக்கு எலாம் வைச்சு எழும்பி பழைய எக்கவுண்டை அக்ரிவேற் பண்ணி அதில இருந்து ஃபேக்கிற்கு றிக்குவஸ்ற் குடுத்து, அதை லொக் அவுட் பண்ணி ஃபேக்கில இருந்து றிக்குவஸ்ற் அக்செப்ற் பண்ணி, அதன்மூலம் என்ர ஃபிரண்ட்ஸிற்கு மட்டும் றிக்குவஸ்ற் குடுத்திட்டு, அதை லொக் அவுட் பண்ணி பழைய எக்கவுண்டில இருந்து ஃபேக்கை ரிமூவ் பண்ணி, அதை டீயக்ரிவேற் பண்ணிட்டுப் படுக்க ரெண்டு மணியாப் போச்சு….படிக்கிறதுக்குக் கூட அவ்வளவு நேரம் மினக்கெட்டிருப்பனா எண்டுறது சந்தேகம் தான்…
அப்புறம் என்ன ஃபேக்கில இருந்து எங்கட குரூப்பிற்குள்ள மட்டும் ஏதாவது…. எப்பவாவது வெளியிலயும்…கொமன்ற் பண்ணுவன்…
என்னதான் ஃபிரண்ஸை புது எக்கவுண்டுக்கு எடுத்தாலும் ஒரு சிலரை மிஸ் பண்ணிட்டன்….
அதால என்ர புது எக்கவுண்டை டீயக்ரிவேற் பண்ணிட்டு பழசைப் பேர் மாத்தலாம் எண்டு நினைச்சன்…புது மெயில் கிறியேட் பண்ணி மதுபாலா கிருஸ்ணா எண்டு பேர் வைச்சன்…அதில இருந்து வெளிய எந்தக் கொமன்றும் போடுறதில்லை எண்டும் முடிவு எடுத்தன்… எல்லாம் மாத்தி புறபைல்லை பெரிய விளையாட்டுக் காட்டிட்டன்….
அண்டைக்கு எனக்கு ஒரு மெஸேஜ் வந்தது…அதுவும் ஒரு அண்ணாதான்…
”மீரா…ஏன் பேர் மாத்தினீர்?” எண்டு…
போட்டு வாங்கிறாங்களோ…..
நானா சிக்குவன்…
“மீராவா? அது யாரு?” ரிப்ளை மெஸேஜ்.
”நல்லா நடிக்கிறீர்?”
“நான் மீரா எண்டு எப்பிடி சொல்லுறீங்க?”
சரண்டர்.
“உம்மட வோலில போய்ப் பாரும். மீரா எண்ட நேமை அப்பிளிக்கேசனில செக் பண்ணியிருக்கிறீர்”
இவங்க எல்லாம் கொமன்ற் அடிச்சோ போஸ்ற் போட்டோ நான் பார்த்ததில்லை…. எப்பிடித்தான் தெரியுதோ….?
அட நாசமறுப்பு….எல்லாத்தையும் பாத்தன்….. இதைப் பாத்தனா?
”அண்ணா அண்ணா இதை ஒருத்தருக்கும் சொல்லாதீங்க…”
(தூ… இது எல்லாம் ஒரு பிழைப்பு…)
“ம்..”
எனக்கு அவரில நம்பிக்கை இல்லை… நான் அந்த எக்கவுண்டை டீயக்ரிவேற் பண்ணீட்டு, மறுபடி ஃபேக்கிற்கே ஓடிற்றன்…

முகப்புத்தகக்கலாட்டா3

இது இப்பிடியே இருக்க நான் சும்மா இருக்காமல் உள்ள நாட்டு போஸ்ற் எல்லாத்துக்கும் கொமன்ற் அடிக்கிறதுதான் வேலை. எங்கட பட்ச் மேற் எல்லாருமா ஒரு குரூப் வைச்சிருந்தம். அதில ஒன்லைனில இருக்கிற எல்லாருமா சற் பண்ணுவம். ஒரு நாள் டொங்கில் சிம்மில காசு முடிஞ்சுது. போன் சிம்மைக் கழட்டிப் போட்டிட்டு நான் ஃபேஸ்புக் பாத்துக் கொண்டிருந்தன். அப்ப எனக்கு ஆப்பு ஒண்டு தேடிவந்தது ஒரு ஹாய் அக்கா வடிவில.
அது ஒரு சீனியர். நானும் சரியெண்டு ஹாய் போட்டன். விட்டிட்டு ஓடினால் பயந்து ஓடின எண்டு போன் பண்ணி ஏசினாலும்……என்ர வாய்த்திறமையால எந்த ஜூனியரையுமே நேர ஏசாத அண்ணாவை ஏச வைச்சு – அதுவும் கேவலமா ஏச வைச்சிட்டன். யெஸ். ஐ ஆம் த ஒன்லி வண் ஜுனியர் ஹூ இஸ் ஸ்கோல்டட் பை ஹிம்.(இதிலையுமா?)
”இப்ப நீ எனக்குப் போன் பண்ணு”
“உங்கட நம்பர் தெரியாது அண்ணா…”
“நம்பர் அனுப்புறன்… உடன பண்ணு…”
என்ர சிம் தான் டொங்கிளுக்குள்ளயாச்சே!
“என்ர போனை தம்பி கொண்டு போட்டான் அண்ணா… வந்ததும் பண்ணுறன்….”
“முதல்ல ஃபேஸ்புக்கை டீயக்ரிவேற் பண்ணு….”
“அண்ணா…..”
“இனிமேல் நீ ஃபேஸ்புக் பக்கம் வரப்படாது….அரை மணித்தியாலத்துக்குள்ள பண்ணு.”
என்ர சிம்மில கிடந்த காசு முடிஞ்சிது போல…அது விக்குது….இன்ரனெற் விளம்பரத்தில வாற கட்டுப்பாட்டுப் பரிசோதனைக்கு பக்கத்தில இருக்கிற மாதிரி போல.. வீட்ட ஒருத்தரும் இல்லை. நான் என்ன செய்ய?
இருக்கவே இருக்கே நம்ம டயலொக்கின்ர முப்பது ரூபாக் கடன் திட்டம். ஒரு மாதிரி அதை எடுத்திட்டு, சிம்மை டொங்கிலுக்குள்ள போட்டு எக்கவுண்டை டீயக்ரிவேற் பண்ணுறதா? இல்லாட்டி அண்ணாக்குப் போன் பண்ணி ஏச்சை வாங்கிறதா?
டொங்கில் சிம்மில் காசு இருந்தால் இதைப் போனுக்குப் போட்டு விடலாம். போனுக்குப் போடுவதற்குக் கையில் கிற்காட் இருந்தால் இதை டொங்கிலிற்குள் போட்டு விடலாம். இருப்பதுவோ பேலன்ஸ் உள்ள ஒரேயொரு சிம்….. நான் என்ன செய்வேன்? என்ன செய்வேன்?
ஸாரி பாஸ்… ஃபீலிங்ஸ்ஸு……ஓகே ஸொரி ஃபோ த டிஸ்ரப்மென்ற்.
முதல்ல அண்ணாவோட கதைப்பம். சொன்னதும் கோல் எடுத்திட்டாள் எண்டு என்னை டீயக்ரிவேற் பண்ணத் தேவையில்லை எண்டு சொன்னா……. நப்பாசை….
”ஹலோ அண்ணா….”
“ஹலோ மீராவா?”
“ஓம்”
“என்னவோ தம்பி போன் கொண்டு போட்டான் எண்டாய்”
(அட அதை நீங்க நம்பீட்டீங்களா? சொல்லவேயில்ல… முதலே சொல்லியிருந்தா இன்னும் எக்கச்சக்க பொய் சொல்லியிருக்கலாமோ?)
“இல்லண்ணா அது வந்து….”
“எக்கவுண்ட் டீயக்ரிவேற் பண்ணீட்டியோ?”
“இல்லை அண்ணா நெற் கனக்ற் ஆகுதில்ல……”
எப்பிடி ஆகும் சிம்மில காசு இல்லாமல்.
“ஓ சற் பண்ணேக்க  மட்டும் கனக்ற் ஆகும்”(ஹீ மீன்ஸ் ஒன்லி இன்ரநெற் ஓகே)
“எக்கவுண்ட் டீயக்ரிவேற் பண்ண சொன்னா மட்டும் ஆகாது….”
“…………..”
“அரை மணித்தியாலத்துக்குள்ள பண்ணிடு…. இல்லையெண்டா கம்பஸ் பக்கம் வர மாட்டாய்….”(எல்லாரும் இதைத் தான் சொல்லுங்கப்பா)
எகெயின் ஃபீலிங்ஸ். ஏன்னா எத்தனை தரம் எண்டாலும் டீயக்ரிவேற் - அக்ரிவேற் பண்ணலாம் எண்டு எனக்கு அப்ப தெரியாது. போய் பண்ணினன். திடீரெண்டு நான் அநாதை ஆனது மாதிரி சூனியமாக் கிடந்தது….
பிறகு எப்பிடியோ பெரிய மனசு பண்ணி அண்ணாவே அந்த எக்கவுண்டை அக்ரிவேற் பண்ண சொன்னார்… என்னால நம்பவே முடியல. அக்ரிவேற் பண்ண விருப்பமும் இல்லை. ஃபெஸ்ரா லவ்வில தோத்துப் போனவன் திரும்பவும் லவ் பண்ணுவானா? அதே மனநிலை எனக்குள்ள. நானே கஸ்டப்பட்டு என்னை மறுபடியும் நானா கொண்டுவந்திருக்கிறன்…அதுக்குள்ள..
”நீ என்னை அண்ணாவா ஏற்கேல்லைப் போல… நான் அப்பிடிக் கேவலமாப் பேசினதை நீ இன்னும் மறக்கேல்லைப் போல..”
“இல்லை அண்ணா….”
பொய்….அப்பட்டமான பொய்…அந்த வேட் அது இப்பவும் என்னைக் குத்திக் கொண்டேயிருக்கு….
“நீ என்னை மன்னிச்சிட்டாய் எண்டால், என்னை உன்ர அண்ணாவா நினைச்சாய் எண்டா எக்கவுண்டை அக்ரிவேற் பண்ணி அதில இருந்து எனக்கு வணக்கம் போடு”
சரியில்லை… இவ்வளவு இறங்கி வந்து கேட்கேக்க நான் சீன் போடக்கூடாது…
பண்ணினன்…. போட்டன். தற்ஸ் இற்…வாழ்க்கை என்கிறது ஒரு அனுபவம் தானே!
ஆனா அதுக்கு அப்புறம் எக்கவுண்ட் அக்ரிவேற் – டீயக்ரிவேற் எல்லாம் சும்மா ஜுஜுபி மாதிரிப் போயிடிச்சு….
ரெண்டு லவ்வைக் கடந்திட்டா அதுக்கு அப்புறம் லவ்வெண்டா கிலோ எத்தனை ரூபா எண்டு கேட்கத் தோணுமாம்…சும்மா சும்மாவே மனசு அலை பாயுமாம்…..அது மாதிரி…….(என்ன ஒரு தத்துவம்!)

முகப்புத்தகக் கலாட்டா2

அண்ணாமார், அக்காமார், ஸ்கூல் ஃபிரண்ட்ஸ்,றிலேசன்ஸ் எண்டு என்ர வட்டம் வளர்ந்துகொண்டே போச்சு. ஒரு நாள் ஒரு றிக்குவஸ்ற் வந்தது. அது கேர்லின்ர பேரில. அது ஒரு ஃபேக் எக்கவுண்ட் எண்டு எனக்கு லேற்றாத்தான் தெரியும். அவங்க நமக்கு சீனியராமா…….டேட் ஒஃப் பேர்த் ஃபெப்ரவரி ஃபோட்டீன். நேமையும் அதையும் தவிர வேற எந்த டீரெயிலும் அதில இல்லை. ஆனா அதில எங்கட சீனியர்ஸ் கனபேர் இருந்தவை. அந்த அக்காவோ அண்ணாவோ எனக்கு மெஸேஜ் பண்ணியிருந்தினம் எஃப். பி யில. என்ர போட்டோவை அனுப்பட்டாம்.(என்ன பொம்பிளையோ பாக்கப் போகினம்.)
இந்தக் கறுமத்தால பின்னேர நேரம் ஓஃப் லைன் குடுத்திட்டு இருப்பன். ஆனா நம்ம கைதான் சும்மா இருக்காதே! ஏதாச்சும் ஒரு போஸ்ற்றைப் பார்த்ததுமே கொமன்ற் அடி எண்டு கை குறுகுறுக்கும். லைக் பண்ண வரும். பண்ணுவம். ஓஃப் லைன் குடுத்துட்டு இருந்தாலும் நோட்டிஃபிகேஸன் லிஸ்ற்றில மீரா கிருஸ்ணா லைக் எக்ஸ்’ஸ் போஸ்ற். மீரா கிருஸ்ணா கொமன்ரட் ஒன் வை’ஸ் போஸ்ற் எண்டு வந்து கொண்டேயிருக்கும் எனக்கு ஃபிரண்டா இருக்கிறாக்களுக்கு.
அதுக்குப் பிறகு ஒன்லைன் வா எண்டு கூப்பிட்டு வதை. நான் முடிவு எடுத்தன் இதுக்கு எல்லாம் முடிவு கட்டணும் எண்டு. ஆனா அதுக்காக போட்டோ அனுப்ப நான் என்ன கிறுக்கிச்சிறுக்கியா? அம்மா என்ர வயசில இருக்கேக்க எடுத்த போட்டோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு இருந்திச்சு. அதை வெப் கமராவால படம் எடுத்து அனுப்புறதா பிளான். அது கனகாலத்துக்கு முதல் எடுத்தது தானே. சரியா மங்கலாக் கிடந்துது. பிறகு அதில என்ர போட்டோசொப் வித்தை எல்லாம் காட்டிச் சரிப்பண்ணி என்ர போட்டோ எண்டு அனுப்பிட்டன்.
(பிறகு கனகாலத்துக்குப் பிறகு கம்பஸ் தொடங்கின பிறகு அதே எக்கவுண்டில இருந்து ஒரு மெஸேஜ். தாங்கள் யுனியில அப்பிடி ஒராளைக் காணேல்லையாம். எப்பிடிக் காணுறது? காணுற எண்டால் முப்பது வருசம் பின்னோக்கிப் போகவெல்லோ வேணும்………..மீராவா கொக்கா….)
அந்த அக்காவோடை(அப்பிடித்தான் சொன்னாங்க) சற் பண்ணேக்க, எங்கட பட்சில ஒரு லவ் ஸ்ரோறி ஓடுதாம் எண்டு சொன்னா…நான் பின்ன இதை சம்பந்தப்பட்ட ஆக்களிட்ட போட்டுவிட்டன் யார் சொன்னது எண்டதையும் சேர்த்து…
அவங்கள் மெஸேஜில் நல்லாத்திட்டிவிட்டாங்கள்.
அதுக்கு எனக்கு மெஸேஜில ஏசினா….நான் சொன்னன்… நீங்க எங்கட சீனியர் இல்லை எண்டு எனக்குத் தெரியும்…(எப்படி….சும்மா சொல்ல வேண்டியது தான்…)தேவையில்லாம எங்களுக்கும் எங்கட சீனியர்ஸிற்கும் பிரச்சினை உருவாக்கப் பாக்குறீங்க…எங்க சீனியர்ஸிட்டப் போட்டுக் குடுக்க முதல் எக்கவுண்டை டீயக்ரிவேற் பண்ணுங்க எண்டு..(நாம சொல்ல மாட்டம் எண்டு தெரிஞ்சு அவங்க டீயக்ரிவேற் பண்ணவேயில்ல… என்ன இறுமாப்பு…..)

Sunday, September 9, 2012

ராகிங் கலாட்டா - முகப் புத்தகக் கலாட்டாக்கள்

இந்த முகப்புத்தகம் (அதாங்க ஃபேஸ்புக்) எண்ட ஒண்டு இருக்கே…. அது ராகிங்கில பெரிய ஒரு சப்டர்.
நான் போனுக்கும் சரி, கொம்பியூட்டருக்கும் சரி, இங்கிலீஸுக்கும் சரி இப்பிடி பெரும்பாலான விசயங்களில லேட் பிக் அப் தான். இதை சொல்லுறதுக்கு நான் வெட்கப்படவோ, வேதனைப்படவோ இல்லை.
எனக்கு கொம்பியூட்டர் எண்டால் என்ன எண்டு நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது தான் தெரியும். வீட்ட அப்பதான் கொம்பியூட்டர் வாங்கினது. இன்ரநெற் எண்டா என்ன எண்டு ஓ லெவல் எக்ஸாம் எடுத்தபிறகு தான் தெரியும். எக்ஸாம் எடுத்திட்டு ஏ/ல் வகுப்புக்கு போறதுக்கிடையில தான் நான் கொம்பியூட்டர் படிக்கப் போனான். அது வரைக்கும் மெசினில நானா ஒண்டும் செய்து பார்க்கேல்ல.
என்ர ரெண்டாவது தம்பி எப்ப பார்த்தாலும் அதுக்கயே தலை வைச்சுக் கொண்டு கிடப்பான். அந்தக் கறுமத்துக்க என்ன நாசம் இருக்கெண்டு பார்க்க எனக்கும் ஆசை தான். ஆனா நேரம் இல்லை. பள்ளிக்கூடம், ரியூசன், ஹோம் வேர்க் எண்டு ஓட சரியா இருக்கும். அதுக்காக டைம் ஒதுக்கிற எண்டால் நித்திரையைத்தான் தியாகம் பண்ணோணும். எனக்கு அதில இஸ்டம் இல்லை. படுத்தா இடி விழுந்தாலும் தெரியாத எருமை மாடாட்டம் தூங்குற கும்பகர்ணியான எனக்கு அது எல்லாம் சரிவராத சங்கதிதானே?
ஓ.எல் லீவுக்குள்ள நான் கொம்பியூட்டர் படிக்கப் போன இடத்தில தான் எனக்கு ஒரு ஃபேஸ்புக் எக்கவுண்ட் கிறியேற் பண்ணித் தந்தவை. அதில ஒரேயொரு ஃபிரண்ட் தான். அதுவும் என்ர வகுப்புப் பிள்ளை…..எக்கவுண்டை எப்பிடி யூஸ் பண்ணுறது எண்ட மேட்டர் ஒண்டும் எனக்குத் தெரியாது. எப்பவாவது தம்பி நெற் பார்க்கும் போது, கால்ல விழாத குறையாக் கெஞ்சி என்ர எஃபி எக்கவுண்டையும் ஒரு ரப்பில ஓபின் பண்ணி புரபைல் பிக்ஸரை மட்டும் அடிக்கடி மாத்திக் கொள்ளுவன்.(ஃபேஸ்புக் பற்றி அவங்க சொல்லித் தந்ததில எனக்கு ஞாபகம் நிண்டது அது மட்டும் தான்.)
இப்பிடி பாழடைஞ்ச மம்மி மாதிரி நான் வைச்சிருந்த ஃபேஸ்புக் எக்கவுண்டுக்கு திடீரெண்டு மியூசியத்தில இருந்து அழைப்பு. அட புரியலையா?
இந்த ராகிங் ரைம் எங்கள் பாசத்துக்குரிய (பாரதிராஜாவா? ) அண்ணாமார் கேட்டினம். உன்னட்ட ஃபேஸ்புக் இருக்கோ எண்டு. நான் ஓம் எண்டன். அதில இருந்து ரிக்குவஸ்ட் போடச்சொல்லி அவை ஒரு ரிக்குவஸ்ட் போட்டினம் (அவை போட்டது போன் ரிக்குவஸ்டுங்கோ)
சரி நம்மட ஒரேயொரு ஃபிரண்ட் இருக்கிற எக்கவுண்டை ஓபின் பண்ணுவம் எண்டால் தம்பி எருமை புதுசா விண்டோஸ் போட்டிருக்கு. என்ர ஃபேஸ்புக்கின்ர பாஸ்வேட் ஞாபகம் இல்லை. நானே லொக் அவுட் பண்ணத் தெரியாததால பண்ணுறதேயில்லை. இப்ப பாஸ்வேட் இல்லாமல் என்னெண்டு ஓபின் பண்ணுறது? நான் தம்பியைக் கரிச்சுக் கொட்டினன்.
”என்னத்துக்கு இப்ப தேவையில்லாத வேலை செய்தனீ? அவங்கள் அறுவாங்கள் இப்ப எனக்கு ஏசியே கொல்லப் போறாங்கள்.”
“பீசிக்கு அன்ரிவைரஸ் போட்டிருக்கேல்ல. வைரஸ் பிடிச்சிட்டுது. அதான்…”
“வைரஸோ?”
“ஓம்”
“அப்ப போடத்தான் வேணும். நெடுகப் பக்கத்தில இருக்கிறாய், உனக்கும் தொற்றினாலும்….”
தம்பிக்கு வாய்க்குள்ள சிரிப்பு. இப்ப அதை நினைச்சுப் பார்த்தா எனக்கு என்னை நினைச்சா……ஐயோ…ஐயோ….
“அதில்ல அக்கா….”
அவன் ஏதோ சொல்ல வந்தான். நான் கையைக் காட்டி நிப்பாட்டிட்டன். தன்ர கணனிப் புலமையை என்னில காட்டினா, ஐ ஆம் பாவம். ஐ கான்ற் சமாளிபிகேட். (ஐயோ, இந்த இங்கிலீஸை வாசிச்சால் இங்கிலீஸ் காரனுக்கே பைத்தியம் பிடிச்சிடும்…).
”இப்ப என்ன வந்தது? புதுசா ஒரு எக்கவுண்ட் கிரியேட் பண்ணிட்டாப் போச்சு”
“அப்பிடிப் பண்ணலாமோடா?”
“ஓம். நான் பண்ணித் தாறன்”…(ஆமா இவர் பெரிய கம்பியூட்டர் பிடுங்கி…)
அவன் கிரியேட் பண்ணித் தந்தான். அதில என்ன என்ன செய்யலாம் எண்டெல்லாம் சொல்லித் தந்தான். அதோடை ப்ளொக் கிரியேட் பண்ணி, அது சம்பந்தமான விசயங்கள், ஈ-மெயில் எக்கவுண்ட் கிரியேட் பண்ணித் தந்து சேர்ச் பண்ணுறது எப்பிடி எண்ட மாதிரிக் கொஞ்ச விசயங்கள். (இதெல்லாம் உங்களுக்கு சப்பையாவும் காரித்துப்பும் படியாவும் இருக்கலாம். ஆனா நான் அப்ப தான் இன்ரநெற்றில நேஸரி லெவலில நிண்டன். இப்பவும் அதில தான்…)என் இன்ரநெற் குரு வாழ்க.
முதலாவது என்ர பழைய எக்கவுண்டைத் தேடினன். எக்ஸாம் மூட்டம், கிட்டத்தட்ட மூண்டு மாதம் அதை ஓபின் பண்ணி ஒண்டுமே செய்யாததால அது இறுகிட்டுதாம்….(டெட் ஸ்ரேஜ் – ஸோ சாட். ஆழ்ந்த அனுதாபங்கள்.)
பிறகென்ன கொஞ்சம் கொஞ்சமா ரிக்குவஸ்ற் போடத் தொடங்கினன்.

முதல் தொலைபேசி உரையாடல்

அப்ப எனக்கு அஞ்சு வயசு இருக்கும். அப்ப எல்லாம் ரெலிபோன் கதைக்கோணும் எண்டு எனக்கு ஒரு ஆசை பாருங்கோ. சிரிக்காதயுங்கோ. அப்பெல்லாம் இப்ப மாதிரிக் காண்ட் போன் எல்லாம் எங்கட யாழ்ப்பாணத்தில இருந்ததே? யாழ்ப்பாணம் ஒரு செல்வந்த நகரம். வெளிய இருந்து பார்த்தா அது நரகம் தான். ஒரு ஆறு, மலை ஏதேனும் இருக்கே?
கன இடத்தில கறண்ட் இல்லை. தொலைத் தொடர்பாடல் வசதியள் குறைவு. குறைவு எண்டால் பெருசா இல்லை… என்ன ஒரு கோல் கதைக்கோணும் எண்டால் யாழ்ப்பாணம் போகோணும். அது தலை போற விசயமா இருந்தாக் கூட யாழ்ப்பாணம் தான். அப்பெல்லாம் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போகோணும் எண்டால் எத்தினை சென்ரி பொயின்ற் தாண்டோணும். அதுவும் நாவற்குழிக் களஞ்சியம் இருக்கிற இடத்தில இருந்த பெரிய பொயின்ரில இறங்கி ஏறுற எண்டால் சத்தியமா சொல்லுறன். கருவில இருக்கிற குழந்தைக்குக் கூட இனத்துவேசம் பிடிச்சிடும். ஆனாலும் யாழ்ப்பாணம் எங்களுக்கு சொர்க்கம் தான்.
ஒரு நாள் என்ர ஆசை நிறைவேறுற நாளும் வந்திச்சு. ஜேர்மனியில இருக்கிற மாமாவோட கதைக்க அம்மா யாழ்ப்பாணம் போறாவாம்.
“அம்மா அம்மா நானும் வரட்டே?”
“உனக்குப் பள்ளிக்கூடம் இருக்கெல்லோ”
“என்னம்மா…என்னம்மா…ஒரு நாள் தானே?”
“நான் எண்டால் மினக்கெட்டாலும் பரவாயில்ல. நீ லைனில நிற்க மாட்டாய். அங்க போப்போறன். இங்க போப் போறன் எண்டு வீணை வாசிக்கத் தொடங்கிடுவாய்….”
“அம்மா நான் அழ மாட்டன். சனத்துக்க நெரிச்சாலும் கத்த மாட்டன். அது வாங்கித்தா இது வாங்கித்தா எண்டு உயிரெடுக்க மாட்டன்.”
“சத்தியமா?”
“சத்தியமா…”
“வேண்டாம் நீ பள்ளிக்கூடம் போ…..”
“அம்மா……”
எனக்கு வலுத்த ஏமாற்றம். கடுப்பு. சினம். பின்ன என்ன? சத்தியம் பண்ணியும் கூட்டிக்கொண்டு போகேலாதாம். நானா அம்மாவா? எனக்கு இண்டைக்கு ரெலிபோன் கதைச்சே ஆகோணும். நான் முடிவு பண்ணிட்டன்.
பள்ளிக்கூடம் போறன் எண்டு போட்டு, வேப்ப மரத்துக்குப் பின்னால ஒளிச்சு இருந்தன். எங்கட வேம்புக்கு கீழ அம்மா பூ வைக்கிறவா. வைக்க வரேக்க என்னைக் கண்டுட்டா. பள்ளிக்குடத்திற்கு நேரம் போட்டுது.
“நீ பள்ளிக்குடம் போகேல்லையோ?”
“……………………………………………………”
“சொல்லச் சொல்லக் கேட்காம இப்ப என்னத்துக்குப் பள்ளிக்கூடம் கட் அடிச்சனீ” எண்டு கேட்டுக் கொண்டே ஒரு பூவரசம் தடி உருவி, சாத்துத் தான். அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு, அழுது கொண்டும் நான் சொன்னன்.
“அம்மா, நான் வரப் போறன்”.
அ.தி.மு.க.(அடித்தும் திருத்த முடியாத கழுதை) எண்டு இதைத்தான் சொல்லுவாங்களோ?
அம்மாக்கு அழுகையே வந்திட்டு.
“வந்தா உனக்குத் தான் கஸ்டம் மீரா…சொன்னாக் கேள்.”
“என்ன ஆனாலும் பரவாயில்ல. நான் வருவன்.”
(ஆமா, இவ பெரிய ஜான்சிராணி. எதுக்கும் துணிஞ்சிட்டா…..போடி அப்பிடின்னெல்லாம் என்னைத் திட்டப் படாது.)
சந்திக்குத்தான் பஸ் வரும். அடிச்சுப் பிடிச்சு சந்தி காண நடந்து போய், மணிக்கணக்கா நிண்டு, பஸ்ஸிற்குள்ள மூச்சு விட முடியாமல் நெரிந்து கொண்டிருக்கும் சனக்கும்பலுக்குள்ள ஏறினன். என்னை மிதிக்காத குறை. ஏன் நெரிக்குதுகளோ தெரியேல்ல. சீ எண்டுட்டுது.
ஆனா என்ன நான் அது பற்றிக் குறைகூற முடியாது. அதுதான் சத்தியம் பண்ணிக் குடுத்திட்டமே! ம்…காலம்.
ஒரு மாதிரி பஸ் வெளிக்கிட லேசாக் காத்து வருது. பஸ்ஸிற்குள்ள பாட்டு…
”அழகான ராட்சசியே…அடி நெஞ்சை உலுப்புறியே”….. பாட்டு…
.அது அந்தக் காலத்தில நம்மட ஃபேவரிட் சோங் பாருங்கோ. அதுக்கு அர்த்தம் எல்லாம் தெரியாது. இலங்கை வானொலி கொழும்பு சர்வதேச ஒலிபரப்பில அது போச்செண்டால் நான் எங்க இருந்தாலும் ரேடியோவிற்குக் கிட்ட வந்திடுவன்.
பாட்டு முடியிறதுக்கு முதலே செக் பொயின்ற். எல்லாமே இறங்குதுகள். அறுவாங்கள். வரிசையில நிற்குறம். எங்களுக்கு முதலே எக்கச்சக்கம் பேர் நிற்கினம். வாகனங்களில கிடந்த சாமான் எல்லாம் இறக்கி அவிட்டுத் திறந்து காட்டித் தூக்கி வைக்கோணும். பொடி செக்கிங். ஏன் தான் இப்பிடிப் போட்டுத் தேய்க்கிறாளுகளோ… எனக்கு வயித்தப் பிரட்டிக் கொண்டு வந்தது.
அம்மாக்கு முன்னால நான்.
“ஐ சின்னத் தங்கச்சீஈஈ” கொச்சைத் தமிழில் அந்த அக்கா என்ர சொக்கைப் பிடிச்சுக் கிள்ளினா.
“விடுங்கோ வலிக்குது….”
அது அவக்கு விளங்கிச்சோ இல்லையோ… நான் கையைத் தட்டி விட்டது ஏனெண்டு நல்லா விளங்கியிருக்கும்.
‘எங்கள இறக்கி விட்டு இவ்வளவு நேரம் நிற்க வைச்சிட்டு….தங்கச்சியாம். அவயின்ர தங்கச்சியை அவை இப்பிடி நிற்க வைப்பினமே?’ எனக்குள் திட்டிக் கொண்டேன்.
”மீரா பேசாம வா”
ஏன் எண்டு கேட்க முடியாது. சத்தியம்……
கேட்டு அம்மா சொன்னால் கூடப் புரிந்துகொள்ள எனக்கு வயது போதாது.
மீண்டும் மீண்டும் இறங்கல்கள்-ஏறல்கள்- எங்களுக்காக இரங்கத் தான் யாருமில்லை.
ஒரு மாதிரி கிட்டத்தட்ட மூணரை மணி நேரத்தவம். ரவுணுக்குள்ள இறங்கிட்டம். கொமினிக்கேசன் தேடிப் பிடிச்சு, போனாச்சு. என்னவோ ஃபிறீயாக் கொடுக்கிற மாதிரி கியூ நிற்குது. இங்கயுமா? ஒரு வேளை செக் பண்ணப் போகினமோ?
மெல்ல மெல்ல லைன் நகருது. பார்த்தா உள்ளுக்க நாலு கியூ நிற்குது. நான் கதைக்கேல்ல. அதிலயே மத்தியானச்சாப்பாடு. தண்ணி எல்லாம்……..நாங்க உள்ளுக்க போக வேண்டியது தான். ஏனெண்டா அடுத்தது எங்கட முறை.
“அஞ்சரையாப் போச்சு. கொமினிக்கேசன் பூட்டப் போறம்”
எனக்கு வந்த விசருக்கு, நாங்கள் என்ன இளிச்ச வாயளே….இவ்வளவு நேரம் லைனில நிற்கிறம்.
“வெளிக்கிடேக்கயே கத்தன். போற வேலை உருப்படும்” அம்மா என்னைத் திட்டினா…..நான் பேசேல்ல. வழக்கம் போல எனக்காக வக்கீல் வேலை பார்க்க என்னால ஏலும் தான்….ஆனா….சத்தியம்….
”மிச்சம் இருக்கிற ஆக்கள் ரோக்கன் வாங்கிக் கொண்டு போங்கோ. நாளைக்கு டோக்கன் ஓடரில கதைக்கலாம்.”
ஒரு துண்டைத் தந்தாங்கள்.
அதைப் பத்திரமா அம்மா பாக்கிற்குள்ள வைச்சா. ஆமா பெரிய சொத்துப் பத்திரம் பாருங்க.
திரும்பி வருவதற்கும் போராட்டம்.
அடுத்த நாள் போனா அம்மாக்கு அடுத்த என்ர முறை.
“அம்மா ரெலிபோன் எப்பிடி இருக்கும்? அதுக்கால என்னெண்டு சத்தம் வருது? எதில வைச்சுக் கதைக்கிறது?”
அடுக்கடுக்கான கேள்விகள். அதற்கான பதில்களை அம்மா சொல்ல அதையெல்லாம் லேப் பிறக்டிகலிற்கு முன்னரான எக்ஸ்பிளனேஸன் மாதிரிக் கவனமாக் கேட்டு ஞாபகப் படுத்திக் கொண்டேன்.
என் முதல் போன் பேசல். சொதப்பி விடக்கூடாது….
கடவுளே…. இண்டைக்கு கட்டாயம் எங்களைக் கதைக்க விடணும்.
அம்மா கதைச்சிட்டு வெளிய வந்தா…
அடுத்தது நான்…
“ஹலோ மாமா…”
“ஹலோ மீராவோ”
“ஓம் மாமா, எப்பிடி இருக்குறீங்க?”
“சுகம். நீங்க….”
“நல்ல சுகம் மாமா”
அவ்வளவும் தான். இப்பவும் மனசுக்க நிற்குது.
வெளில வந்தன். உலகத்தையே வெண்ட மாதிரி ஒரு பூரிப்பு.
“அம்மா, அந்த ஓட்டைக்குள்ளால சத்தம் வருது. அப்ப மாமா அதுக்கயோ இருக்கிறார். பேசாமல் அதுக்குள்ளால நாங்களும் அங்க போவமே? இங்க இருந்து கஸ்டப் படாமல்”.
அம்மா என்னைத்தூக்கிக் கொஞ்சினா.
“எவ்வளவு?”
பெறுமதி நினைவில் இல்லை.
ஏனெண்டால் நான் குதூகலத்தில் பறந்து கொண்டிருந்தேன்.
“அறுவாங்கள். கொஞ்ச நேரம் கதைச்சதுக்கு இவ்வளவு வாங்கிட்டாங்கள்….
இவங்கள் நல்லா இருப்பாங்களோ?”
எல்லாச்சனமும் எங்களைப் பார்த்துது.
“அம்மா சத்தம் போடாதேங்கோ”
எனக்குப் பயம். அம்மா ஏசினால் அதுகள் பலிச்சிடும். அவ அவ்வளவு ஃபேபெக்ட்.
ஒரு மாதிரி வீட்ட வந்தம். பிறகென்ன வகுப்பு முழுக்க நான் ரெலிபோன் கதைச்ச கதை தான்.(ஆமா இவ என்னவோ சந்திர மண்டலம் போய் வந்திட்டா)
வெரி ஸொறி…என்ர போன் ரிங் பண்ணுது. பிறகு கதைப்பமா?

நாமளும் லொறி ஓட்டப் பாத்தம்!

என்ர மாமாமாரில ரெண்டு பேர் லொறி வைச்சிருக்கினம். ஒரு நாள் அவை வீட்ட வந்தினம். அப்ப எனக்கு ஏழு வயசு. தம்பிக்கு ஆறு. எங்க ரெண்டு பேரையும் லொறியில ட்ரைவர் சீற்றில இருத்திப் போட்டு வடிவுக்கு போட்டிருப்பினமே எல்.ஈ.டி. பல்ப் செற்றா… அதைப் போட்டுக் காட்டிச்சினம். எனக்குப் பயங்கரப் புழுகு. நான் அறிஞ்சு அப்ப தான் ஃபெஸ்ரா தலை கீழா எரியுற விளக்கைப் பார்த்தனான்.
பிறகு எங்கள அதுக்க விட்டிட்டு அவை அம்மம்மா வீட்ட போட்டினம். நான் சும்மா இருந்தனே? அவயள் வயர் தொடுத்தா மட்டும் தான் லைற்றுப் பத்துமா? நானும் தொடுத்தா என்ன? என்ர குறுக்கால போன புத்தி சும்மா இருக்கல. தம்பி அப்பவும் சொன்னான் வேணாம் வேணாம் எண்டு. நான் தான் கேட்கல.
“நீ சத்தம் போடாம இரு. உனக்குப் பயமாக்கிடந்தா இறங்கிப் போ. நானே உன்னை இறக்கி விடுறன்”. அவன் இறங்கேல்லை. சத்தமும் போடலை. நான் என்ன வயரைத் தொடுத்தனோ தெரியாது. லொறி ஸ்ராட் ஆயிட்டுது.
கத்தவும் விருப்பம் இல்லை. தம்பி நிற்கிறான். மானக்கேடு. உள்ளுக்க பயமாக் கிடந்தாலும் வெளிய காட்டக் கூடாது. தற்சமயம் லொறி வெளிக்கிட்டு எங்கயாச்சும் போய் மோதினா……….அதுவும் நேர போஸ்ற் கட்ட வேற? கிளிஞ்சுது. தம்பியை இறக்கி விட்டிருக்கலாம். எனக்கு அவன்ர முகத்தைப் பார்க்கவே பயமாக் கிடந்தது. நம்ம முகரையைப் பேர்த்திடுவானோ? கடவுளே! இதுக்கு போஸ்ற் கட்டயே தேவலாம்.
அரைமணிநேர மனப் போராட்டம். இன்ஜின் சத்தம் தவிர எந்த சத்தமும் இல்லை. இந்த நேரம் பார்த்து எல்லாம் எங்க போய்த் துலைஞ்சுதுகளோ தெரியாது.
மாமா வந்தார். வயரைக் கழட்டிட்டு சரியாக் கனக்ற் பண்ண சொல்லித் தந்தார். நான் இறங்கினன். என்ர முகத்தில ஈயாடேல்ல. தம்பி முகத்தில சிரிப்பு.
அண்டைக்கு விட்டது தான். இண்டைக்கு வரைக்கும் போன் சார்ஜ் போடுற எண்டால் கூட சுவிற்சை நிப்பாட்டிட்டுத் தான் போடுவன். அண்டைக்கு அந்த வயரைத் தொடுக்க வேணாம் எண்ட தம்பி, ரீவியை நிப்பாட்டாமல் பிடுங்கி எறிஞ்சு போட்டு சார்ஜ் போடுறான். முழுப்படியாக் கிடக்குற றேடியோவைப் பிரிச்சு பாட்ஸ்ஸைப் பிரிச்சுப் போட்டிட்டு, மறுபடியும் மூடி வைக்க அது பாடுது. என்ன வாழ்க்கைடா இது?

தண்ணீர் குடிக்காத ரோசம்!

வணக்கம் வணக்கம். ஸாரிங்கோ…நாம கொஞ்சம் பிஸியா இருந்ததால ஒண்டுமே எழுத முடியல. நீ எழுதாட்டி என்ன குறைஞ்சிட்டுது எண்டு நீங்க திட்டுறது எனக்கு விளங்குது. ஆனாலும் இதெல்லாம் ஒரு ஃபோமாலிட்டி தானே. அதுகளையும் நாங்க ஃபொலோ பண்ணோணும்.
ஒரு குட்டி பிரேக்கிற்குப் பிறகு வந்திருக்கிறன். ராகிங் கலாட்டாவையே ஓட்டாமல் புதுசா வேற கதை ஒண்டு சொல்லப் போறன். (அதுக்காக அதை நிப்பாட்டிட்டன் எண்டு நினைக்க வேண்டாம். வதைக்காம விட மாட்டன். ஒன்லி ஃபோ நெள. ஓ.கே.)என்ர சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம் பாருங்கோ அது.
அப்ப எனக்கு ஏழு வயசு இருக்கும். நான், என்ர மச்சாள், அப்புறம் இன்னொரு பையன் நாங்க மூண்டு பேரும் எங்கட கிளாசில ஒரு தனிக் (g)காங். நாங்க ரியூசனுக்கு வாற எண்டால் சந்திக்கு நடந்துதான் வரோணும். போய் வாற வழியில நிற்குற நாவல் மரங்களில நாங்க ஏறவே மாட்டம். போற வாற ஆக்கள நாங்க கேலி பண்ணவே மாட்டம். குளத்துக்க இறங்கித் தாமரைப்பூ பிடுங்கவே மாட்டம். சோடி சோடியா சைக்கிளில போற அக்கா அண்ணாமாரைக் கலாய்க்கவே மாட்டம். ஒருத்தரின்ர வயலுக்கையும் இறங்கி நெல்லுக்குடல் பிடுங்கித் தின்னவே மாட்டம். புளிய மரத்திற்குக் கல் எறிய மாட்டம். கிளாசிற்குக் கட் அடிக்கவே மாட்டம். ஒருத்தருக்கு ஒருத்தர் மாறி மாறி அடிச்சுக்கிட்டு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு வீட்டுக்கு லேட்டா வரவும் மாட்டம். என்னங்க நம்புறீங்களா? இதெல்லாம் பண்ணுவமுங்க. நாங்கெல்லாம் அப்பவே அந்த மாதிரி. ஓகே. லீவ் தட். கம் ரு பாயின்ட்.
எங்கட ரியூசனில கிணறு இல்லைப் பாருங்கோ. (அப்ப ரப் இருந்ததாக்கும் எண்டு கேட்கப்படாது. நீங்க ரவுணில இருந்து கொண்டு லொள்ளுத் தனமா நினைக்கப் படாது.) பக்கத்து வீட்டில தான் போய்த் தண்ணி குடிக்கிறனாங்கள். துலாக்கிணறு. அங்கயும் ஒரு ரப் இருக்குத் தான். எங்கட ஏரியாவில கறண்ட் இருந்த காலத்தில கட்டினதாம். (இப்ப மறுபடியும் கறண்ட் வந்திட்டுது.)
ஒரு நாள் எங்கட நண்பன் இருக்கிறான் தானே. அவன் என்ன செய்தானெண்டால் அந்த ரப்பைத் திறந்து பார்த்தான். எத்தினை வருசத்திற்கு முதல் ஏற்றப்பட்ட தண்ணியோ, அதில இருந்து ரெண்டு துளி விழுந்துது.
அந்த நேரம் பார்த்து வெளிய போயிருந்த அந்த வீட்டுக்காரன் என்னவோ கழுகுக்கு மூக்கில வேர்த்தது மாதிரி, வந்திட்டான். என்ன ஒரு டைமிங். வந்த வேகத்தில சைக்கிளைப் போட்டிட்டு, என்னவோ எங்கட தமிழ்ப்பட வில்லன் கணக்கு கத்திக்கொண்டு ஓடிவந்து விட்டானே ஒரு அடி நண்பன்ர முதுகில. ஆளுக்கு சரியான வெறி. அவன் சைக்கிளில வரேக்கயே எனக்கு மணத்திட்டு. “வாடா போவம்” எண்டு நண்பனின்ர கையைப் பிடிச்சு இழுக்க அவன் திரும்புறதுக்குள்ள அடி விழுந்திட்டுது. அடுத்த அடி எனக்கு விழுறதுக்கு இடையில அவன்ர கையை விட்டிட்டு நானும் மச்சாளும் பறந்திட்டம். நாவல் மரத்தடிக்கு வந்த பிறகு தான் உயிரே வந்திச்சு. அந்தளவு வேகமா நானா ஓடினன்? அதிரினலீன் வாழ்க.
அதுக்குப் பிறகு அந்த வீட்டுக்கு நாங்கள் தண்ணி குடிக்கப் போறதில்லை. விடாய்ச்சாலும் பேசாம இருப்பம். ஏன்னா நாங்க ரோசக்காரர். நாங்கெல்லாம் அப்பவே அந்த மாதிரி. இப்ப கேட்கவா வேணும்?

Monday, August 13, 2012

ராகிங் கலாட்டா4

இந்த புதுவருசம், தைப் பொங்கல், மிட்செமி எக்ஸாம் முதலிய திருவிழாக்கள்(??????) இருக்குத் தானே. அதுக்கெல்லாம் விஸ் பண்ணோணுமாம் எல்லாருக்கும். முதல்ல நானும் ஓம் எண்டிட்டுப் பண்ணலை. பிறகு ஏச்சு வாங்கினது தான்.
இது என்னெண்டு தெரியும் அவைக்கு எண்டு ரொம்ப லேற்றாத் தான் எனக்குத் தெரிஞ்சுது. அது என்னெண்டால் ரெண்டு மூண்டு பேராச் சேர்ந்துதானே றூமில நிற்பினம். அப்ப மற்றவரின்ர நம்பரைத் தந்து அவருக்கு விஸ் பண்ணச் சொன்னா பண்ணாட்டிக் கண்டுபிடிக்கிறதுக்கு ஐ.பி.எஸ் மூளை தேவையில்லை தானே. இந்தக் கறுமம் விளங்காமல் அதுக்குப் பிறகு என்னட்டைக் கிடக்கிற எல்லா நம்பருக்கும் நான் விஸ் பண்ணத் தொடங்கினன். அதில கதைக்காதவையும் இருப்பினம் தானே. அவை ஹூ ஆர் யூ எண்டு போட்டு, நானே என்னை ஜூனியர் எண்டு காட்டிக்கொடுத்த பிறகு தான் தெரிய வரும் அநியாயமாய் என்னை நானே காட்டிக் கொடுத்திட்டன் எண்டு. ஆனா என்ன கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்தால என்ன பயன்?
சிலரின்ர பேர் ஒரே மாதிரி இருக்கும். ஒருத்தர் எடுக்கச்சொல்ல மற்றவைக்கு எடுத்து வாங்கிக்கட்டின கதையள் எல்லாம் இருக்கு. அதுவும் தூங்கிக் கொண்டிருந்த ஒரு அண்ணாவுக்கு மாறி எடுத்துத் துலைக்க, அவர் ”ஏன் எடுத்தனீ” எண்டு கேட்க, ”நீங்கதானே எடுக்க சொன்னனீங்க அண்ணா” எண்டு வீறாய்ப்பாய் பதில் சொல்லி, வாங்கினதை மறக்கவே ஏலா.
என்ர டப்பா போனில குறிப்பிட்ட எழுத்துக்கு மேல கொன்ராக்ற் நேம் அடிக்க ஏலாது. நீட்டுப் பேர் உள்ள ஆக்களின்ர பேருக்குப் பின்னால அண்ணா, அக்கா போட முடியாது. பட்ச்மேற்றின்ர பேரே அப்பதான் பாடமாக்கிக் கொண்டிருந்தன். (அதுவும் ஃபுல் டீற்றெயில்ஸ் எழுதச்சொன்னவை. அவயின்ர அக்கான்ர பிள்ளை என்ன செய்யுது எண்ட மட்டும் தெரிஞ்சிருக்கோணுமாம். அப்பப் பாருங்களன்.)
அப்பேக்கதான் ஒருவருக்கு – அதுவும் என்னை யாரெண்டு தெரியாத ஒரு சீனியருக்கு விஸ் பண்ணி விட்டன் மெஸேஜில. அவர் போன் பண்ணி ரொம்ப டீஸன்ராக் கதைச்சாரா. நான் பட்ச்மேற் எண்டு நினைச்சுட்டன். ஏனெண்டால் எங்கட அண்ணாமார் யாருமே அவ்வளவு மரியாதையாக் கதைக்கிறேல்லை.
“நான் ஆர் தெரியுமோ? தெரியாம என்னண்டு விஸ் பண்ணினீர்?”
என்ர போனில அவரின்ர பேர் கிடக்கு. அதுக்குப் பின்னால அண்ணா இல்லை. அது போனின்ர பிழை. அப்ப பட்ச்மேற்றாக்கும்.
”நீங்கள் எக்ஸ் தானே?” . எக்ஸ் எண்டுறது அந்த அண்ணான்ர பேர் பாருங்கோ. அதுக்குப் பின்னால அண்ணா இல்லை.
“ஓம். எனக்கு ஏன் விஸ் பண்ணினீர்?”
அண்ணாமார் சொன்னவை எண்டு சொன்னால் கிழிவாங்கோணும் எல்லோ. அண்ணாமாரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஏற்கனவே நான் சூடு கண்ட பூனை. காட்டிக் கொடுக்க வெளிக்கிட்டு வாங்கியிருக்கிறன்.
“”ஜஸ்ற் ஒரு விஸ் தானே. அதுக்குப் போய்…….” (வதைக்கிறீங்க எண்டுறது சொல்லலை.)
நல்ல ஒரு இன்றடக்ஸன்.
நாமளே நம்ம வதைக்கிறதுக்கு வழி செய்திட்டம். பிறகு எல் கன்ரீனில வைச்சு ஜஸ்ற் ஒரு விஸ்ஸை ஆயிரம் தரம் எழுதட்டுமாம். எழுதினாத்தானே! மீராவா கொக்கா.
இந்த எல் கன்ரீன் கன தரம் வருகுது. அது என்ன இடம் எண்டு கேட்கிறீங்களே? அது ஒரு கனவு மாளிகை. மொறட்டுவைக் கம்பஸே ஒரு அழகான இடம் எண்டால் எல் கன்ரீன் அதுக்கு உச்சம். (நான் மட்டும் தான் சொல்லிக்கணும். மொரடுவ வர நேர்ந்தால் பாத்திட்டு அட்ரஸ் தேடி வந்து அடிக்கப் படாது. சொல்லிட்டன்.) பிறகொரு சந்தர்ப்பத்தில,” மொரட்டுவ பிடிச்சிருக்கா” எண்டு கேட்க, ”இல்லை” எண்டு சொல்ல,”எது பிடிக்கேல்லை?” எண்டு கேட்க, “எல் கன்ரீன்” எண்டு அண்ணாமாரைக் கலாய்க்க ட்ரை பண்ணியிருக்கன். இது எல்லாம் பொது வாழ்க்கையில சகஜமப்பா.
கிறிஸ்மஸ்ஸிற்கு முதல் நாள் ஒருவர் எடுத்து எங்கட அண்ணாமாரின்ர ரெப் அண்ணான்ர நம்பரைத் தந்து அவருக்கு வெடிங் டே அனிவசரியாம். எடுத்து விஸ் பண்ணட்டாம் எண்டிட்டார். நாங்க தான் விஸ் பண்ணுறதில புலி ஆச்சே!
பண்ணாட்டி இவர் ஏசுவார். பண்ணினா அவர் ஏசுவார். நான் மத்தளத்திற்கு நடுவில மாட்டின சுண்டெலி கணக்கு. என்ன செய்யலாம்? எடுத்து விஸ் பண்ண வேண்டாம். மெஸேஜ் போடுவம்.
“மே யூ லீட் யுவ ஹப்பி மரீட் லைஃப்”. மெஸேஜ் பறந்தது. உடனயே அண்ணா எடுத்தார்.
”ஏன் விஸ் பண்ணினீ? யார் சொன்னது? பண்ணச்சொல்லி?”
“தெரியாது அண்ணா”
“தெரியாத ஆக்கள் என்ன சொன்னாலும் செய்வியோ?”
“………………………………………”
மீண்டும் கலவரத்தை நான் வரவழைச்சுட்டன். சும்மா இருந்த குழந்தையைக் கிள்ளி விட்ட கணக்கு அந்த விஸ் பண்ணச் சொன்ன மரியாதைக்குரிய அண்ணாவை ஆர் எண்டு இன்னமும் தெரியாது பாருங்கோ.(தெரிஞ்சா மட்டும் என்ன செய்யப் போறன்?)
மிச்சக்கதை அப்புறமா சொல்றன்.

ராகிங் கலாட்டா3

இண்டைக்கு நான் சொல்லப் போறது விசுவாமித்திரரின் கதை. என்ன கொடுமை சேர் இது? ஞாபகங்கள் எப்ப புராணக்கதையா மாறினது எண்டு நீங்கள் யோசிக்கிறது எனக்கு நல்லா விளங்குது. அது ஒண்டும் நான் பில்ட் அப் குடுத்த அளவுக்கு பெரிய கதை இல்லை.
ஒரு நாள் எடுத்தவர் ஆர் எண்டு கேட்டதுக்கு செமையாக் கிழிச்சுட்டார். அப்புறம் நான் அழுது சீன் போட்டு சபா என்ன கலாட்டா….. பேர் கேட்டதுக்கே பேய்க்கோபம் கொண்ட அந்த நபரின்ர நம்பரை நான் விசுவாமித்திரர் எண்டு தான் சேவ் பண்ணி வைச்சிருந்தன். பிறகு என்ர ஃபிரண்ட் ஒருத்தன் சொன்னான். அது விசுவாமித்திர முனிவரின்ர இயற்பெயரைப் பெயராகக் கொண்ட ஒரு மாமனிதரின் (மியாவ்…..பொய்யி…பொய்யி…) பெயராம். ஆனா என்ன…அப்புறம் தான் தெரிஞ்சுது. அந்த நம்பரின்ர சொந்தக்காரர் ஒரிஜினல் விசுவாமித்திரர் அல்ல எண்டு. அதாவது அவர் என்னை ஏசலைப் பாருங்கோ.
அவர் தவுசண்ட் மினிற்ஸ் பக்கேஜ் வச்சிருக்கிறாராம். அவருக்கு செற்றும் ஆகலை. ஏசவும் தெரியாது. (அவர் கூட எனக்கு எல் கன்ரீனில வைச்சு உனக்கு ஒழுங்காக் கதைக்கத் தெரியாதே எண்டு ஏசினாரு. இல்லைங்க. ஏச ட்றை பண்ணினார். பால் மணம் மாறாத அப்பக்கோப்பை மூஞ்சியோட அவரு ஏசி என்னை மிரட்டினா நான் பயந்திடுவனா?. ஐயோ…ஐயோ…எல் கன்ரீன் கதை பிறகு சொல்லுறன்.) ஏசத்தெரிஞ்சாலாவது ஜூனியர்ஸிற்கு எடுத்து வதைச்சு ஏசி மினிற்ஸை முடிக்கலாம். சரி செற் ஆகியிருந்தாலாவது அண்ணிக்கு எடுத்துக் கதைச்சு மினிற்ஸ் பத்தாமல் போயிருக்கும். இது ரெண்டும் இல்லை. பிறகென்ன? அதை சும்மாதானே வச்சிருக்கிறார் எண்டு அவரின்ர ஃப்றீ மினிற்ஸிற்கு அவரின்ர ஃபிரண்ஸ் வேலை வச்சிருக்கினம். டயலொக் ஒழிக!
ஆனால் ஒரிஜினல் விசுவாமித்திரரின் போனில் பேசிய போலி விசுவாமித்திரர் மகா வதைப் பேர்வழி.
“ஒரு பாட்டுப் பாடு”
“எனக்குப் பாடத் தெரியா அண்ணா”.
”அப்ப என்ன தெரியும்?”
“கத்தத் தெரியும்.”
“சரி கத்து.”
கஸ்டப்பட்டு தம் கொட்டி பாடுற எண்ட பேரில நான் கத்தி முடிய
“மறுபடியும் ஒரு பாட்டுப் பாடு.”
அடப் பாவி.
“பாடினா வைக்கலாம்.”
மறுபடியும் கத்த…..கடவுளே….என்னால முடியலை.
கடவுள் காக்க வைச்சிட்டார்.
பாட்டுப் பாடச்சொல்லிற எல்லாருக்கும் பாடிக் காட்டுறதுக்கு எண்டே சில பாட்டுகள் வைச்சிருந்தன். நோண்டி போட முடியாத பாட்டுக்கள் எண்டதால. ஏனெண்டால் நாம பாடுறதுகளில ஏதும் ஏடாகூடமான வரியள் இருந்தால் நம்மட வாயால நாமளே கெட்ட மாதிரி ஆயிடும்.(ஒரு முறை ஏதோ பாட்டைச் சொல்லிப் பாடக் கேட்க, ”பாடினா நோண்டி ஆக்குவீங்க” எண்டு அவயளிட்டயே சொல்லி, “நோண்டி ஆக்கத்தானே கேட்கிறம்” எண்டு அவயள் பதில் சொன்ன சங்கதியளும் இருக்கு.) பிறகு என்னடா எண்டால் அவயள் கேட்கிறதுகளைப் பாடட்டாம்.(இங்க என்ன உங்கள் விருப்பமா போய்க்கிட்டிருக்கு?)
”லவ்வைப் பற்றிக் கவிதை சொல்லு.”
“தெரியா அண்ணா”
“சொல்லாட்டி வைக்க மாட்டம்”
(அவயளுக்கே விளங்குது தாங்கள் ஒரு வதை தான்னு.)
”ஒரே வண்டியில் இரு வேறு பயணம்
வென்றவன் சொர்க்கத்திற்கும்.
தோற்றவன் நரகத்திற்கும்
சொல்லிட்டன் அண்ணா”
“லவ் பற்றிக் கவிதை சொல்லச் சொல்ல நீ என்ன சொல்லுறாய்”
நான் என்ன செய்யுறது…. அவை கேட்கிற மாதிரிக் கவிதை வேணுமெண்டால் மெரீனாக் காற்று எண்ட என்ர ப்ளொக்கில தான் பார்க்கணும். அதில கூட படிப்பைக் கலந்து வதைச்சுத்தான் வச்சிருக்கிறன்.
நீ லவ் பண்ணுவியோ மாட்டியோ?”
“மாட்டன் அண்ணா”
“ஏன்?”
“லவ்வில நம்பிக்கை இல்லை அண்ணா”
“சொந்தத்திற்கையோ வெளியிலயோ கட்டுவாய்?”
உதெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கு?
“அண்ணா சொந்தத்தில் கட்டினால் வலது குறைஞ்ச பிள்ளையள் பிறக்குமாம்” நான் அண்ணாவை வதைக்க வெளிக்கிட்டன்.
“என்னைப் பார்க்க வலது குறைஞ்சமாதிரியே கிடக்கு” இது வேறொரு அண்ணாவின்ர குரல். அநேகமா போன போஸ்ரில வந்த அண்ணாவா இருக்கோணும். சரியாத் தெரியேல்ல. அவரின்ர அப்பாவும் அம்மாவும் முதலே சொந்தக்காரர் போல. அது தான் அவருக்கு அளவான தொப்பி எண்டு வலிய எடுத்து போட்டிட்டார்.
”லவ்வைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
“முட்டாள் தனம்”
”லவ்வைப் பற்றி சொல்லு”
“எனக்குத் தெரியாது அண்ணா”
”சரி அப்ப நீ எழுதிட்டு எனக்கு மிஸ்கோல் போடு. இண்டைக்கே எழுது”
நாமளும் வேற வேலை இல்லாமத் தானே நிற்கிறம். எனக்குத் தெரிஞ்ச சைக்கோலொஜியில லவ்வைப் பற்றிக் கிடந்த எல்லாத்தையும் இங்கிலீஸில ட்ரான்ஸிலேற் பண்ணி அண்ணாவை வதை வதை எண்டு வதைச்சு விட்டன். சும்மாவே நான் வதைச்சா தாங்கேலா. பாவம். அண்ணா வலிய வந்து வாங்கிக்கட்டிக்கொண்டார்.
பெரும்பாலான அண்ணா, அக்காமாரின்ர போன் நம்பரை நான் வாங்கி வைச்சிருந்தன். ரோங் நம்பரில இருந்து தப்பிக்க. அதால கதைச்ச பெரும்பாலான ஆக்களை எனக்குத் தெரியும். இப்பவும் அவயளப் பார்த்தா எனக்குச் சிரிப்பு வந்திடும். பார்ரா…பச்சப் புள்ளயள் கூட நமக்கு ஏசியிருக்கு. அதுக்கு எல்லாம் நாம அழுதிருக்கம். பயப்பிட்டிருக்கம். செம காமடி தான். எங்கட பட்சில யாருக்கும் தெரியாத சீனியர் கோல் பண்ணினால் என்னட்டைத் தான் கேட்பினம். இது ஆரின்ர நம்பர் எண்டு. அந்தளவுக்கு எல்லாரின்ர நம்பரும் என்னட்டை இருந்திச்சு. ஆனா, அது கூட ஒரு வகையில் ஆப்பா அமைஞ்சிட்டுது. அது எப்படியெண்டு பிறகு சொல்லுறன். அப்ப வரட்டே?

Thursday, August 9, 2012

ராகிங் கலாட்டா2

சும்மா சொல்லக் கூடாது. எங்கட சீனியர்ஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வதை. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். ஒரு நாள் ஒருத்தர் போன் பண்ணினார். அப்பப்பான்ர பேர், அவற்றை அப்பான்ர பேர் எல்லாம் கேட்கத் தொடங்கிட்டார்.(இதெல்லாம் அவருக்கே தெரியுமோ தெரியாது. இதெல்லாம் கேட்டு என்ன என்ர வம்சாவளியே எழுதப் போறார்.) இவ்விடத்தில நான் ஒண்ட சொல்லோணும் பாருங்கோ. அது என்னெண்டால், நாங்கள் எங்கட அப்பரின்ர வழி சொந்தக்காரரோட கதை பேச்சுக் குறைவு. அவயள எங்களுக்குப் பெரிசாத் தெரியாது. ஆனாலும், அப்பரின்ர டயரில கடைசி மட்டையில வேற வேலையில்லாமல் ஒவ்வொரு வருசமும் உந்தக் கொடுமை பிடிச்ச விசயங்களை எழுதி வைச்சிருப்பர் எண்டு எனக்கு நல்லாத் தெரியும். கட்டுக் கட்டாக் கிடந்த டயரிக் கும்பலுக்குள்ள இருந்து குத்துமதிப்பா ஒண்டை வெடுக்கெண்டு இழுத்து எடுத்து சொல்லிட்டன். அதோட விடலாம் தானே! அதுக்கு முதலாவது தலைமுறையையும் கேட்கினம். உந்தப் பூராயம் எல்லாம் உவைக்கு என்னத்துக்கு?(பிழையா சொன்னாலும் தெரியாது தான்.)
பிறகு பார்த்தால் அப்பப்பான்ர அப்பா பெயர், அப்பப்பா பெயர், அப்பா பெயர், என்ர பெயர் எல்லாத்தையும் சேர்த்து சொல்லட்டாம். (ஆமா இவையள் ஜாவா புரோகிராம் எழுதினம். ஒரு மெதடை பாவிக்கிறதுக்கு பக்கேஜ் நேம், கிளாஸ் நேம் எல்லாம் சொல்லணும்.) சொன்னதும் ஒன்ஸ் மோராம். அப்பப் பாருங்களன். எனக்கு மூச்சு வாங்கத் தொடங்கிட்டு. அந்தக் கறுமத்தில அட்வைஸ் பண்ணுறாங்க. என்ன தெரியுமே?
அவையின்ர பெயர் எல்லாம் சொல்லவே இவ்வளவு கஸ்டப் படுறியே. அவை எவ்வளவு கஸ்டப்பட்டு அவயின்ர பிள்ளையை வளர்த்திருப்பினம்.”
யார் ராசன் இல்லையெண்டது. அதுக்காக அவயளே ஃபீல் பண்ணியிருக்க மாட்டினம். உங்களுக்கு ஏனப்பா வலிக்குது?
பிறகு தான் தெரிஞ்சுது. கிட்டடியில வந்த ஒரு படத்தில அப்பிடிக் கேட்டுக் கலாய்க்கிற(வதைக்கிற) மாதிரி ஒரு சீன் இருக்கெண்டு. அடக் கறுமம் பிடிச்சவங்களே! இதுக்குக் கூட கொப்பியடிப்பீங்களா?
பிறகு பார்த்தா என்ர வாழ்க்கை வரலாறை எழுதட்டுமாம். (இவ்வளவு டீடெயிலா விபரம் கேட்டீங்களே அண்ணாநீங்களே எழுதியிருக்கலாமே!)
என்ன தலையெழுத்து இதுநான் எழுதேல்ல. என்னத்த எழுதுறது. அதுக்கு பொயின்ஸாக் கேள்வி கேட்பாராம். அந்தக் கேள்விக்கான விடையை எழுதினா வரலாறு வந்திடுமாம்.
நானும் சரி எண்டன்.
எங்க பிறந்தனீ?”
ஹொஸ்பிட்டல்ல
இந்த மாதிரி பதில் சொன்னா யாருக்குத் தான் கடுப்பாகாது.
எந்த எந்த ஸ்கூலில் படிச்சனீ?”
உண்மையா உந்தக் கணக்கு இப்பவும் எனக்கு சரியாத் தெரியாது. இடப் பெயர்வு, அப்பான்ர இடமாற்றம் எண்டு பெயர் தெரியாத ரெண்டு பள்ளிக் கூடங்களில ரெவ்விரண்டு நாள் படிச்சதாய் ஞாபகம். நாலாம் வகுப்புப் படிக்கும் போது ரெண்டாம் தவணை பங்கருக்குள்ளயே முடிஞ்சுது. இதுக்கெல்லாம் நான் எங்க போறது. குத்துமதிப்பா கொஞ்சம் அடிச்சன்.
விட்டிட்டாங்கள்.
சரி சரி வை
அப்பாடா. நான் தப்பிச்சன் எண்டு நினைச்சன். சும்மா இருக்கப்படாமல் தாங்கோட் எண்டு வாய்விட்டே சொல்லிட்டன்.
அவருக்குப் பாம்புக் காது. கேட்டிட்டுது.
மறுபடியும் எடுத்தார்.
என்ன சொன்னனீ கடைசியாய்?”
முதல்ல ஒண்டும் சொல்லேல்ல எண்டு முரண்டு பிடிச்சாலும் பிறகு சொன்னது தான்.
தாங் கோட் எண்டு சொன்னன் அண்ணா
அப்பிடியெண்டா என்ன?”
தெரியாது அண்ணா
தெரியாதோ? தமிழில கதைக்கோணும் எண்டு தெரியாதே! நீ இப்ப என்ன செய்யுறாய் எண்டால் ஒரு ஏஃபோ சைஸ் பேப்பரில லெஃப்ரில இருந்து 2.5சென்ரிமீற்றர், மற்றதுகளில இருந்து 1 சென்ரிமீற்றரும் விட்டு மாஜின் போட்டு அதை ரெண்டாப் பிரிச்சு ஒரு பக்கம் தாங் கோட், மற்றப் பக்கம் அதுக்கு தமிழ் மீனிங் எழுது. எத்தனை தரம் எழுதுவாய்?”
தங்கச்சி கேட்டுக் கொண்டிருந்த போனைப் பறிச்செடுத்து
எத்தனை தரம் அண்ணாஎண்டு கேட்டன்.
உண்மையா அண்டைக்கே மறந்து போட்டுது அந்தக் கணக்கு. சொன்னவைக்குத் தெரியும் எண்டு நினைக்கிறன். ஏனெண்டால் ஒவ்வொரு நாளும் மறக்காம எடுத்துக் கேட்பினம். எழுதிட்டியோ எண்டு.
சரி அதோட முடிஞ்சுது எண்டு பார்த்தா, அடுத்த நாள் எங்கட பட்சில ஒருத்தனைக் கொன்ஃபெரன்ஸில போட்டு என்னை இன்ரவியூ பண்ணட்டாம்.
அவன் பாவி மொக்க மொக்கக் கேள்வியளாவே கேட்கிறான்.
உனக்குப் பிடிச்ச கலர் என்ன?”
பச்சை
ஏன் பச்சை பிடிக்கும்?” இது எங்கட பாசத்துக்குரிய அண்ணா.
(ஆமா இது ரொம்ப முக்கியம்)
தாவரங்கள் எல்லாம் பச்சை தானே. பச்சை கண்ணுக்கு குளிர்ச்சியான கலர்எண்டு தொடங்கி அண்ணாவை நான் வதைக்கத் தொடங்கினன். (இதெல்லாம் எங்களுக்கு பிறப்போட வந்தது)
நீ ஆடு மாடு தானே. அது தான். இலை குழையின்ர கலர் பிடிக்குதுஎண்டார் அண்ணா.
என்னைக் கலாய்ச்சிட்டாராமா….ஐயோ ஐயோ….
இதுக்குள்ள ஒண்ட சொல்ல மறந்து போனன்.
முதல் நாள் கதைச்ச ஒரு அண்ணாவின்ர கட்டளைக்கிணங்க எனக்குத் தெரிஞ்ச சீனியர்ஸின்ர பேருகளை ஃபேஸ்புக்கில சேச் பண்ணி ரிக்குவஸ்ற் போட்டிருந்தன். அதுக்குள்ள அவரும் இருந்திருக்கிறான். வேற யாரு? இப்ப நம்மள வதைச்சிட்டு இருந்தாரே ஒரு ஹீரோ ( வாளி)
நான் ஃபேஸ்புக்கில ஜீன்ஸ் போட்ட ஒரு போட்டோதான் போட்டிருந்தனான். கூலிங் கிளாஸ் போட்டு இருந்ததால அது நான் எண்டு கண்டுபிடிக்கேலா எண்ட ஒரு நம்பிக்கை தான்.
ஆனாப் பாருங்கோ.. பூதக்கண்ணாடி வைச்சுப் பாத்தோ என்னவோ அந்தக் கழுகுக்கண்ணன் கண்டுபிடிச்சிட்டான்.
அடுத்த கேள்வி
உனக்குப் பிடிச்ச உடுப்பு என்ன?”
பாவாடையும் சட்டையும்
ஜீன்ஸ் பிடிக்காதோ
சுத்தம். விளங்கிடும்
உனக்குப் பிடிச்ச கடவுள் யார்?”
ஸ்றீ ராமா இதெல்லாம் இவருக்கு என்னத்துக்கு?
பராசக்தி
ஏன் பிடிக்கும்
எனக்கு வந்த விசருக்கு அவர் மட்டும் பக்கத்தில நிண்டிருந்தால்…………..
பராசக்தி உலகத்திற்கு தாய் மாதிரி…. தாயை எல்லாருக்கும் பிடிக்கும் தானே!”
அப்ப உனக்கு அப்பாவைப் பிடிக்காதோ…..சிவபெருமானைப் பிடிக்காதோ?”
அப்பிடி எண்டு இல்லைஅம்மாவைத் தான் அதிகம் பிடிக்கும்…………”
வதைப் படலம் முடியவில்லை.
டேய் உனக்கு எதும் வேலையிருக்கே?”
அண்ணா எங்கட பட்ச்மேற்றைக் கேட்டார்.
அந்த செம்மறி ஓம் எண்டு சொல்லுவம் எண்டு இல்லை எண்டு யோசிக்குது. அவரைக் கேள்வி கேட்டிருந்தால் தெரிஞ்சிருக்கும்.
என்னால பொறுக்க ஏலாமல் நான் சொன்னன்.
ஓம் எண்டு சொல்லும் ஓம் எண்டு சொல்லும்.”
அதுக்குப் பிறகு அவன் ஓம் எண்டு சொல்ல அண்ணா ஓமாமே?
அவர் சொன்னார்.
அவள் சொன்னதைக் கேட்டு நீ எண்டதால நீ போகேலா. கேள்வியைத் தொடர்ந்து கேள்எண்டு.
பூனைக்கு விளையாட்டுசுண்டெலிக்கு சீவன் போகுது.
வதை வதை எண்டு வதைச்சிட்டு விட்டாங்கள்.
தேவாரம் பாடு, கிளி மாதிரிக் கத்து, காகம் மாதிரிக் கத்து, பாட்டுப் பாடு என எக்கச்சக்கக் கட்டளைகள். நேஸரி விளையாட்டுகளுக்கு பபிள்கம் வாங்கித் தருவதாகக் கூறி நான் தங்கச்சியை உதவிக்கு அழைத்தேன். (ஏனெண்டால் நான் நேஸரிக்குப் போகேல்ல பாருங்கோ.)
அடுத்த நாள் எடுத்து.
நான் சொன்ன வேலை செய்திட்டியா?”
என்ன வேலை அண்ணா?”
தாங் கோட் எழுதிட்டியா?”
வந்து பாக்கவோ போறார். நான் ஓம் எண்டன். எப்பிடி செக் பண்ணுவினம் போனுக்கால எண்ட தைரியத்தில. ஆனா பாருங்கோ அண்ணாவுக்கு குறிப்பில புதன் உச்சம் போல. கேட்டாரே ஒரு கேள்வி.
என்னென்ன மாஜின் அளவுகளை சொல்லு.”
மாறிச்சாறி சொல்லாமல் சரண்டர் ஆகியிருக்கலாம் பொய் தான் சொன்னான் எண்டு. நான் ஆகலை. மாட்டிக்கிட்டன். காது தப்பியது தம்பிரான் புண்ணியம்.
வாழ்க்கை வரலாறு எழுதிட்டியோ
ஓம் அண்ணா
எங்க வாசி
இதை நான் எதிர்பார்க்கல. ஆயிரம் சொல்லில எழுதச் சொன்னதை வாசிக்க சொல்லமாட்டினம் எண்ட நம்பிக்கையில நான் ரீல் விடுரன். அவர் என்னடாவெண்டால் வாசிக்கட்டுமாம். எழுதினாத்தானே?
எங்கயோ வச்சிட்டன் அண்ணா
குதப்பி சொதப்பி பொய் சொல்லிட்டன். நல்லவர் அதோட விட்டிட்டார்.
அப்புறம் பார்த்தா ஒரு இங்கிலீஸ் எஸ்ஸே எழுதித் தரட்டுமாம். இங்கிலீஸ் எக்ஸாமிற்கு எஸ்ஸே எழுதத் தந்த பேப்பரில செம்பருத்தம்பூ கீறி விளையாடின எனக்கு இங்கிலீஸ் எஸ் வந்தது எப்பிடி எண்ட குழப்பத்தில இருந்து இன்னமும் நான் மீளலை. இதுக்குள்ள எஸ்ஸேக்கு நான் எங்க போறது?
தலைப்பை அவையே விளக்கிச்சினம். அது என்னண்டால் ரெயில்வே போடினம் தானே! அது புது இடத்தில போடுறது நல்லமோ அல்லாட்டி பழைய பாதையிலயே போடுறது நல்லமோ எண்டு தான். அவர் எக்ஸாமிற்குப் படிக்கிறாராம். அஸைன்மென்ராம். கட்டாயம் எழுதட்டாம்.
நான் எழுதலாம். ஆனா என்ர இங்கிலீஸ்???????????????? ஏன் மற்றவன்ர மாக்ஸில நான் விளையாடுவான்?
அப்பத்தான் கடவுள் கருணை காட்டினார். எங்கட ஊரில கைலைநாதன் சேரிட்ட நான் இங்கிலீஸ் படிக்கப் போனனான். அந்த ஆளும் அண்டைக்கு எண்டு பாத்து இந்தத் தண்டவாளக் கதையை எடுத்தார். எனக்கு அவ்விடத்தில என்ர வண்டவாளப் புத்தி வேலை செய்ஞ்சிச்சு. எப்பிடியோ சேரிட்டக் கதைச்சு எஸ்ஸே ரெடி பண்ணிட்டன். சேருக்கு நல்ல மனசு. என்ன ஏது எண்டு அரியண்டப் படுத்தாமல் எழுதித் தந்திட்டார். சேர் நல்லாயிருக்கணும்.
அதை டைப் பண்ணி அண்ணாவின்ர மெயிலுக்கு அனுப்பி வைச்சன். (அது மட்டும் தான் நான் செய்தது.) அண்ணா என்னண்டால் அந்தக் கட்டுரையை நான் எழுதினதா நினைச்சுட்டார். என்னவோ நீ சாவகச்சேரியைக் கட்டியெழுப்பலாம் எண்ட மாதிரி ஒரு ரிப்ளை இங்கிலீஸில போட்டிருந்தார்.
அட உங்களுக்கு அந்தக் கட்டியெழுப்புற கதை தெரியாது என்ன?
அது என்ன எண்டால் எங்கட /ல் றிசல்ற் வந்த மூட்டம் எனக்கும் என்னோட ஃபிரண்டுக்கும் டென் . உதயனாலயோ வலம்புரியாலயோ பேட்டி எடுக்க வந்தவங்கள். ரெண்டு கேள்வி தான் கேட்டவை. என்ன /ல் படிக்கிறீர்,
என்ன மாதிரிப் படிச்சீர் எண்டு.
பிறகு பார்த்தா பேப்பரில நாங்கள் சொல்லாத எல்லாம் போட்டிருக்கினம். அந்தப் பிள்ளை ஒரு இஞ்சினியரா வந்து சாவகச்சேரியைக் கட்டியெழுப்புவன் எண்டு சொன்ன மாதிரி. எனக்கும் ஏதோ போட்டிருந்தவங்கள். மறந்திட்டுது.
எங்கட ஸ்கூலில 10 பேருக்கு டென் . ஆனா எங்கட ரெண்டு பேரின்ர பேட்டி (இல்லைங்க அது புனை கதை) பற்றி அனல் பறந்தது. காலப் போக்கில அந்தப் பிள்ளையின்ர பேருக்குக் கீழ வந்ததை எனக்கு சொல்லத் தொடங்கிட்டினம். அது தாங்க. சாவகச்சேரியைக் கட்டியெழுப்புற கதை.
அது நடந்தது 2007. அதைக் கூட ஞாபகம் வச்சிருந்து அண்ணா வதைச்சார் பாருங்க. தெய்வமே………..நீங்க எங்கயோ போயிட்டீங்க.
அதுக்குள்ள 2011 பிறந்திச்சு. அதுக்கு எங்கட நண்பன் ஒருத்தன் ஒரு இங்கிலீஸ் விஸ் அனுப்பினவன். அந்த எருமை அதுக்கு அனுப்பினதை சரியா வாசியாமல் எனக்கு அனுப்பி இருக்கு. நான் அண்ணாமாரின்ர கட்டளைக்கு இணங்க இன்றைய போஸ்ற் நாயகனிற்கும் அனுப்பினன். நாலைஞ்சு மெஸேஜ். றண்டமா அனுப்பினன்.(சீனியர்ஸிற்கு இங்கிலீஸில மெசேஜ் அனுப்பக் கூடாதாம். அது வேற கதை)அதில வில்லங்கம் பிடிச்ச மெஸேஜ் அண்ணாவுக்கு போயிட்டு. அண்ணா அதிஸ்டசாலி.
அண்ணா அதுக்கு தாங்ஸ் & சேம் டூ யு போட்டிட்டு விடுவம் எண்டு இல்லை. அதை வாசிச்சுப் பாத்திட்டு, எடுத்து விளக்கம் கேட்டார். அதுக்குப் பிறகு தான் நானே அதை வாசிச்சுப் பாத்தன். கறுமம். குழந்தை குட்டிகளோட புன்னகையா இந்த வருசம் கழியணும் எண்ட மாதிரி அந்த விஸ் இருந்திச்சு. ஐயோ…….
இப்ப நான் சமாளிக்கோணும். என்ன சொல்லுறது.
நான் பாடன் எண்டுறதுக்கு பாடேன் எண்டு அர்த்தம் சொன்ன சந்தானத்துக்கு ஒரு படி மேல போய் அதுக்கு புது விளக்கம் சொன்னன்.
குழந்தையளின்ர புன்னகை கள்ளங்கபடம் அற்றது தானே அண்ணா. அது மாதிரி இருக்கோணும் எண்டு இருக்கு
அவருக்கு அர்த்தம் விளங்காமலில்லை. ஏதோ என் நல்ல காலம். நல்ல மூடில் இருந்தார் போலும். கடவுள் காத்தார்.
பிறகொரு நாள் எடுத்து எந்த எந்த சேர் மாரிட்ட என்ன என்ன பாடம் படிச்சாய் ஆர் நல்லாப் படிப்பிப்பினம் எண்டு கேட்டு அதுக்குள்ள கூட வதைச்சார். (அண்ணாக்கு சகோதரங்கள் படிக்கினம் போல. ஏன் அண்ணாநீங்க படிச்ச சேர் மாரிட்டயே விடலாமே)
எனக்கு சேர் மார், ரீச்சர்மார் பற்றிக் கூடாமக் கதைக்கிறது, கொமன்ற் பண்ணுறது பிடிக்காதுன்னு சொன்னன். விட்டிட்டார். அப்புறம் அட்வைஸ்.
நான் உன்ன வதைக்கணும் எண்டு கதைக்கல. நீ யாரோடயும் மரியாதையாக் கதைக்கிறேல்ல. அப்பிடிப் பழகாத…..” எண்ட மாதிரி. (இதைத் தாம்பா எல்லாரும் சொல்றீங்க) இதுக்கு நீங்க வதைச்சதே தேவலாம்.
அடுத்த முறை விசுவாமித்திர முனிவர் அண்ணாட வதை வெரி ஸாறி கதை சொல்றேன். அப்ப வாறனுங்கோ.