Tuesday, August 7, 2012

ராகிங் கலாட்டா!

மனதிற்கு ரம்மியமான ஒரு மார்கழி மாதத்தில் தான் என் ஏ/ல் பரீட்சை முடிவுகளும் வழமை போல் வெளியாயின. அந்தா வருகுது. இந்தா வருகுது எண்டு சொல்லிச் சொல்லி திடீரெண்டு ஒரு நாள் புலி வந்த கதை போல. (ஐ மீன் ஒரிஜினல் புலி. டோன்ற் மிக்ஸ் பாலிடிக்ஸ். ஐ ஆம் அப்பாவி. )அடுத்த அடுத்த நாட்களில் என் நிம்மதி போய் விட்டது.

”ஹலோ, நாங்கள் மொரடுவக் கம்பஸில் இருந்து கதைக்கிறம்.”
”உஸ்! மொரடுவையில் ராகிங் இல்லை.”(அப்ப பெராவில இருக்குதாக்கும். போங்க சேர். ஒரு இடமும் இல்லை! அப்பிடித்தான் மீற்றிங்கில சொன்னவை. நாங்கள் சின்னப் பிள்ளையள் தானே!)

போன் எண்டால் என்ன எண்டு எனக்கு அப்பதான் புதுசாத் தெரியும். எனக்கு உள்ளுக்க ஒண்டு வச்சு வெளிய ஒண்டு பேசத் தெரியாமல் இருந்த காலம். இப்ப தெரியுமா எண்டால், ஓம்….கற்றுக் கொடுத்த அண்ணாமார், அக்காமார் வாழ்க!.

எப்ப பாரு வாய்க்காட்டிக்கொண்டு என்ன சொன்னாலும் எதிர்ப்பேச்சு பேசினாலும், ஏசுவதற்கு என்று சில வரையறைகள், வார்த்தைகள் உள்ளன!

இயல்பாகவே நகைச்சுவையுணர்வில் ஊறிவளர்ந்த எனக்கு மொக்கை ஜோக்கிற்குக் கூட சிரிப்பு வருவதில் ஆச்சரியமேதும் இல்லையே! முதலாவது அடியே என் சிரிப்பிற்குத்தான்.

”எதுக்கு எடுத்தாலும் பல்லுக் காட்டுறாய். இங்க பல்லுக் காட்டவோ வாறாய்?.....................................”

பாதி வார்த்தகளை …… விழுங்கி விட்டது. அந்த இடம் நீங்கள் நினைப்பது போல ஸென்ஸார் கட் தான்.

அது ரொம்பவே எனக்கு சங்கடமா இருந்தது. அதையும் வாங்கிக் கொண்டு அவர்களுக்குப் போய் கத்திக் காட்டியிருக்கிறேனே என்று நினைத்தால் எனக்கே அழுகை வருகிறது.

புதுப் புது நம்பர்கள். இப்பதான் எயாரெல், மொபிரல் எண்டு எக்கச்சக்கம் வந்திட்டுதே! டயலொக்கிலயே டபிள் சிம். தொலைபேசியைக் கண்டு பிடித்தவனை ஒரு நாளில் நூறு முறையாவது வார்த்தையால் கொன்றிருக்கிறேன் என்னை அவர்கள் வார்த்தையால் கொன்ற பிறகு!

அவளவைவும் வாங்கிய பிறகும் அவர்கள் கோல் எடுத்தால் ஆன்ஸர் பண்ணாமல் விட்டதில்லை. ஏனென்றால், சீனியர்ஸின்ர ஹெல்ஃப் கிடைக்காட்டிப் படிக்க ஏலாதாம். கஸ்டமாம். அவர்கள் தான் குப்பி எடுக்கணுமாம்.   இங்கிலீஸ் மீடியம் எல்லோ!

(குப்பி எண்ட சொல்லை விளங்காமத் திருப்பித் திருப்பிக் கேட்டு குப்பிக்கே குப்பி எடுத்த கதையை எடுத்து விட்டவையைக் கேளுங்கோ.)

(எங்களுக்கும் குப்பி எடுத்து விடணும் எண்டு சொல்லி நல்ல உள்ளத்தோடு எடுத்து விட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றியறிதல் இல்லாமல் அதை மறந்து விட்டு நான் கதைக்கவில்லை. ஏசியவர்கள் யாரோ. எடுத்தவர்கள் யாரோ. பட்ச் மேட்ஸ் என்பதற்காகவோ நண்பர்கள் என்பதற்காகவோ எதிர்ப்புக் குரல் கிளப்ப முன்னர், உங்கள் தங்கையையோ அக்காவையோ பார்த்து இப்பிடி சொல்லலாமோ எண்டு யோசியுங்கோ! தங்கச்சி , அக்கா இல்லாதவர்களுக்கு நான் என்ன சொல்லுறது. நான் சொன்னாலும் அவையள் கேளாயினம்.)

இதுக்குள்ள ஊரில சும்மா இருக்கிற குறுக்கால போனதுகள் எல்லாம் போன் எடுத்து வதைக்க ஸாறி, எமோஸனில உண்மையை உளறிட்டன். கதைக்க வெளிக்கிட்டுதுகள். என்ன வதை! வேணும் எண்டால் ஆரையாவது கேளுங்கோ. எவ்வளவு கிழிச்சாலும் நான் அவைக்குப் பாடியோ கத்தியோ காட்டியிருக்கிறன். கவிதை சொல்லு. அ,ஆ எழுது. லூஸுத்தனமா என்னவோ வந்து பாப்பினம் மாதிரி செய்த என்னை நினைச்சால் எனக்கே சிரிப்பாக் கிடக்கு.

பிறகு அது சீனியர்ஸ் இல்லை எண்டதும் அம்மா கிழிக்கத் தொடங்கினா. நீ போன் தூக்கினால் உன்னைத் தூக்கிடுவன் எண்ட மாதிரி. அம்மம்மா, மாமா என அவர்களுக்குத் தெரிந்தால் வானுக்கும் பூமிக்கும் குதிப்பார்கள். பிறகு நீ கம்பஸ் பக்கம் போகேலாது எண்டு.

கடவுளே! கதைக்காட்டி அவங்கள் மொரட்டுவப் பக்கம் வராத எண்டுறாங்கள்.கதைச்சால் அம்மா அந்தப் பக்கம் போக மாட்டாய் எண்டுறா! அப்பதான் புதுசா நான் பொய் சொல்ல ஆரம்பிச்சன். சத்தையமா சொல்லுறன். பொய் சொல்லுறதை விட அந்தப் பொய்யைக் காப்பாத்துறது கஸ்டம். காப்பாத்தாட்டி அந்தப் பொய்யே நம்மை மாட்டி விட்டிடும். அதுவும் அவங்கள் எடுத்தால் வைக்காங்கள். வைக்கிறதுக்குள்ள, கோல் வந்த ஸ்ராட்டில நான் சொன்ன பொய் மறந்து போடும். பிறகு அந்தப் பொய்யை என்ன எண்டு நானே திருப்பிக் கேட்பன். பிறகு லட்சார்ச்சனை தான். சிவசங்கரா…….

ட்ரிங்…ட்ரிங்…
"டேய் தீபன் புது நம்பரடா! நீ எடுத்து அக்கா அம்மம்மா வீட்ட எண்டு சொல்லு"

"நான் மாட்டன். ஒரு பொய் சொல்ல பத்து ரூபாய்!"

"சனியன். கழுத்தறுக்குது. தாறனடா எருமை. நீ சொல்லு."

என்ன கொடுமை சரவணா!
தம்பியின் பத்து ரூபாய் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. நான் என்னவோ கொலை செய்த மாதிரி பிடிபடாமலிருக்க லஞ்சம் கொடுத்துக் கொண்டிருந்தேன். (ஆனாலும் நாம மறுபடியும் ரீலோட் போடச் சொல்லி மறைமுகமா அந்தக் காசைக் கறந்திடுவமே! காசு விசயத்தில நான் கறார்… யாருக்கிட்ட…)
பிறகு பிறகு நானே எடுத்து அக்கா வீட்ட இல்லை எண்டும் சொல்லத் தொடங்கினன்.

"நீ இந்த படத்துக்கு பருப்பு ஒட்டித்தராட்டி நான் அவைக்கு சொல்லிடுவன். நீ இங்க தான் நிற்குறாய் எண்டு."

எண்டு என்ர கடைசித் தங்கச்சி கூட மிரட்டத் தொடங்கியது.
என்ர நேரம்... பிறகென்னங்க? பருப்பு ஒட்டினது தான்.
ஸோ ஸாட்.

"என்ன வாயடிக்கிறாய்? என்ன றிசல்ற்?"
"ரூ ஏ பி"
"என்ன பி? "
"மத்ஸ்…..இல்லை கணிதம்."
"மத்ஸிற்கு பி எடுத்திட்டு என்னத்துக்கு மொரடுவ வாறாய்?"

துலைஞ்சுது. நான் கிழியப் போறன். இங்கிலீஸும் எனக்கு அவ்வளவு வராது. வேம்படி, யஃப்னா ஹிண்டு, மெதடிஸ்ற் இன்னமும் எதோ பெரிய பெரிய பள்ளிக்கூடத்தில இருந்து வாற பிள்ளையள் இங்கிலீஸில புலியா இருக்குங்கள். நான் சீனியர்ஸ் எல்லாரோடையும் கொழுவல்.( அட ஏச்சு வாங்கினத சொன்னம்பா. நாம யாருக்கிட்ட வாங்கலை. யாரைத் தான் ஏசாம இருக்க விட்டம்.) பத்தாக் குறைக்கு அந்தப் பிள்ளையள் என்னை சேர்த்துக் கொள்ளுதோ தெரியாது. பெரிய பள்ளிக்கூடப் பிள்ளையள்! ஐயோ! அவியப் போறன்.
எனக்கு அழுகை வந்திட்டு.


”அம்மா நான் கம்பஸ் போகலை.”
”ஏன்?”
”நான் போக மாட்டன்.”
அம்மாவிற்கு சொன்னாலும் புரியாது ஜெனரேசன் gஅப். அவ சொல்லுவா உன்ர பெரிய மாமா படிக்கேக்கயும் ராகிங் இருந்தது தானே! அது வலுத்த மோசம். அவரும் படிச்சவர் தானே! எண்டு. அவர் என்ன வாங்கினாரோ ஆருக்குத் தெரியும். எனக்கு உள்ளூர நினைப்பு ஓடியது.
அம்மா பார்த்தா. இது சரிவராத கேஸ். பிடிச்சா விடாது.
“சரி அதைப் பிறகு யோசிப்பம். இப்ப சாப்பிடு.”
”எனக்குப் பசிக்கேல்லை.”
”என்னடி பசிக்கேல்லை. இண்டக்கு நீ விரதம். காலம இருந்து பட்டினி கிடக்குறாய். பிறகென்ன பசிக்கேல்ல?”
”பசிக்கேல்ல எண்டால் பசிக்கேல்ல தான்.”
தலையணைக்குள் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த நான் வெடுக்கென தலையைக் கிளப்பிப் பதிலளித்த போது என் கண்களில் தெரிந்த சிவப்பு நிறத்தைக் கொண்டு நான் மணிக்கணக்கா அழுததை அம்மா கண்டு பிடித்து விட்டார்.
சரி….மறுபடியும் புயல்.
”ஏன் ஆரேனும் எடுத்து ஏசினவையோ?”
”இல்ல.”
”அப்ப ஏன் அழுகிறாய்?”
”அழேல்ல”
”அப்ப ஏன் கண் சிவந்து கிடக்கு?”
”காய்ச்சலாக்கும்.”
அம்மா நெற்றியில் கை வைத்துப் பார்த்தா. லேசாக சுட்டது.
”ம்….காய்ச்சல் தான்.”
இருந்தாலும் அவக்குத் திருப்தியில்லை.
”அவங்கள் விசரங்கள் எனி எடுத்தா நீ எடாத. அவயள ராகிங் பண்ணுற எண்டு பிடிச்சுக் கொடுத்தாத் தான் சரி வரும்.”
எனக்குத் திக்கென்றது.
”அம்மா என்ன கதைக்கிறியள். என்ன நடக்கும் தெரியுமே? அவங்கட படிப்ப நிப்பாட்டிடுவாங்கள் அம்மா.”
”நிப்பாட்டட்டும்.”
”அம்மா விசர்க்கதை கதையாதயுங்கோ. உங்களுக்கும் ரெண்டு மகன்மார் இருக்கினம். அவயள் குறைஞ்ச ஆக்களே? அவயளும் நாளைக்கு இப்பிடி செய்து யாரும் அவயள பிடிச்சுக் கொடுத்தா என்ன செய்வியள்? அதுகளின்ர தாய் தேப்பன் என்ன கஸ்டப் பட்டு என்ன கனவு கண்டு பிள்ளையளைப் படிப்பிச்சுதுகளோ தெரியேல்ல. அதுகள் ஏதோ அறியாம விளையாட்டுக் குணத்தில செய்யுதுகள்”
நான் அண்ணாமாரை என் சகோதரர்களுடன் ஒப்பிட்டு வாதத்தில் அம்மாவை வென்று விடுகிறேன். என்ன தான் பட்சிற்குள்ள சீனியர்ஸ் பற்றிக் கடுப்பாக் கதைச்சாலும், வெளிய மொரடுவ எண்டு பார்த்தால் அவயள நாங்கள் விட்டுக் கொடுக்க ஏலாது தானே!
”அப்ப நீ கம்பஸ் போறியோ….”
”…………………….”
மீண்டும் ட்ரிங் ட்ரிங். ”ஹலோ”
”ஹலோவோ, ஹலோவிற்கு என்ன தமிழ்?”
”ஐயோ…வணக்கம் அண்ணா.”
”யார்?”
”மீரா”
”முழுப் பெயர் சொல்லு.”
”ரத்தன்சிங் மீரா.”
கொல்……சிரிப்புச்சத்தம்.
அப்பான்ர பேர் பின்னுக்கு சொல்லோணுமாம். அப்பிடித்தான் வேற பிள்ளையளும் சொல்லுறவை. இப்ப ஃபோமிலயும் அப்பிடித்தான் எழுதினம். ஆனா அது பிழை. பிழை எண்டு தெரிஞ்சதை மற்றவை சொல்லினம் எண்டதுக்காக சொல்ல ஏலுமே!. நான் மாத்த மாட்டன். இப்பிடித்தான் சொல்லுவன்.
”நீங்க யார்? ”இது நான்…
சீனியரைக் கேள்வி கேட்கக் கூடாதாம். அவர்களுக்கு ஏசுவதற்கோ அல்லது பேசுவதற்கோ சாட்டுக் கிடைத்து விட்டது.
”நான் ஆர் எண்டு தெரிந்தால் தான் கதைப்பியோ?”
”ஓம்”
இது எல்லாம் அந்த குறுக்கால போன ரோங் நம்பருகளால வந்த வினை தான். பின்ன என்ன? சும்மா எல்லாரும் சீனியர்ஸ் எண்டு வதைக்க வாங்கிக் கொண்டிருக்க நான் என்ன கோம்பையா?
என் துரதிஸ்டத்திற்கு அவன் உண்மை சீனியரா இருந்திட எனக்கு அர்ச்சனை, வாழ்த்து, தோத்திரம் எல்லாம் கிடைத்தது.
”எந்த இடம் நீ?”
”சாவகச்சேரி….”
”அட குழைக்காடு…”
”குழைக்காடா?”
எனக்குப் பத்திக் கொண்டு வந்தது. எனக்கு ஊர், ரீச்சர் மார், பள்ளிக்கூடம் பற்றித் தப்பாக் கதைச்சால் பிடிக்காது. அதைக் கண்டு பிடிக்கிறதுக்கு நானே வழிசமைச்சிட்டன் லூஸுத்தனமா ஒரு பதிலைச் சொல்லி.

”அண்ணா…தேவையில்லாம எங்கட இடத்தைப் பற்றிக் கதைக்காதயுங்கோ.”
பிறகென்ன வெறும் வாயையே மெல்லுவாங்கள். வீக்னஸ் கிடைச்சால் சொல்லவா வேணும்?
அதுக்குள்ள எங்கட பட்ச்மேற் ஒருத்தனுக்கு எடுத்து ஒரு சீனியர் அக்கா கதைக்கிறா எண்டு குடுத்து விட்டினம் என்னைக் கதைக்க சொல்லி. எனக்கு சந்தோசம் சொல்லி மாளாது. நான் வாங்கினதில ஒரு வீதம் எண்டாலும் குடுக்க முடிந்த்தால்….? ராகிங்கின் தத்துவமே அது தானே! “நான் பெற்ற வதைகள் பெறுக என் ஜூனியர்ஸ்!”
“நாங்கள் எடுத்துக் கதைக்கிறனாங்கள் எண்டு யாருக்கும் சொல்லுறனியோ?”
”இல்லை.”
”இல்லையே! எங்களுக்கு கதை வந்திச்சு.”
கதை விட்டுக் கதை வாங்கினமாம். எனக்கு உள்ளூர சிரிப்பு. அவைக்கே ட்ரெஸ் கோட் எடுக்கேல்ல. எங்களுக்கு எடுக்கிறது தெரிஞ்சா அவயின்ர சீனியர்ஸ் ஏசுவினம் தானே!
மீண்டும் அழைப்பு.
”ஹலோ யாரு?”

”நான் செகண்ட் இயர் அண்ணா
உங்கட சீனியர்ஸ் எடுக்கிறவையே?”

“இல்லையே!”

“நீர் பயப்படாமல் சொல்லும்.”

நானும் நம்பி உளறிக் கொட்டி விட அப்புறம் தான் தெரிஞ்சது. எங்கட இம்மீடியற் எண்டு. கெட்டவன். கெட்டித்தனமாக் கதை வாங்கிட்டான். ஸாறி…. ஃபீலிங்கு.

பிறகென்னங்க? சம்போ மகாதேவா…சாம்ப சதாசிவா… சந்த்ரக் கலாதரா……….
அடுத்த பதிவில மிச்சம் சொல்லுறன். வேண்டாம் எண்டாலும் விடுறதா இல்லை.
இவங்கள் இப்போதைக்கு கம்பஸ் தொடங்காங்கள். பார்க்கலாம்.

No comments:

Post a Comment