Saturday, December 10, 2011

எதிர்பார்ப்பு.


ந்த அழகிய தென்னந்தோப்பினூடே செல்லும் ஒற்றையடிப் பாதை வழியே ஆதவன் சென்று கொண்டிருந்தான்.அவன் மீது வைத்த விழியை வாங்க முடியாதவளாய் நின்றாள் அவன் தாய் பார்வதி.அவள் மனம் கடந்த காலத்தை ஒரு முறை மீட்டிப் பார்த்துக் கொண்டது....
யுத்தம்,இடப்பெயர்வு,வறுமையின் அவலத்திற்கு நடுவேயும் தந்தையில்லாத ஆதவனை மிகவும் கஸ்டப்பட்டு கூலிவேலை செய்து, சின்னச் சின்ன வீட்டுவேலைகளில் இருந்து கட்டடங்களிற்கு கல்லறுத்தல் வரை பல்வேறு வழியில் உழைத்துப் படிக்க வைத்தாள் அவன் தாய் பார்வதி.அவளுடைய உறவினர்கள், அவளின் கணவன் இறந்த பிறகு, அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைகளாய் உறவையும் அறுத்துக் கொண்டார்கள்.கணவனின் உறவுகளோ அவளை ஏமாற்றிப் பொருள் பறிக்கத் திட்டமிட்டார்கள்.சிறு சண்டைகள் புயலாகி சொந்தங்களை அவளை விட்டு விரட்டி விட்டது.அவளுக்கிருந்த ஒரே சொந்தம் அவளின் ஒரே மகனான ஆதவன் மட்டும் தான்.ஆதவன் மிகவும் சாந்தமானவன்:வீட்டுக் கஸ்டம் உணர்ந்து, மற்றைய நண்பர்கள் போலன்றி-ஊர் சுற்றாமல்,அரட்டை அடிக்காமல்,அது வாங்கித் தா இது வாங்கித்தா என்று அடம்பிடிக்காமல் தன் கல்வியே கண்ணென எண்ணிக் கற்றுவந்தான்.
அவன் கல்வியில் உயர உயர, அதற்குப் போட்டியாக பார்வதியின் உடல்நிலையோ அதிகரிக்கும் வீதத்தில் பாதிப்படைந்துகொண்டே வந்தது.அவள் கஸ்டங்களிற்கு எல்லாம் தீர்வாக,ஆதவன், “வைத்தியர்”  என்ற பெயருடன் தன் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.பார்வதி பரவசமடைந்தாள்.தன் மகன் Doctor என தன் வாய்வலிக்கும் வரை சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதமடைந்தாள்.அவளின் உழைப்பிற்கு விளைச்சல் கிடைத்திருக்கிறது. அவளின் பாடுபடலிற்குப் பரிசு கிடைத்திருக்கிறது. அவளின் இறுதி மூச்சுவரை அவள் நிம்மதியாய் வாழலாம் என்ற அவளின் எண்ணத்தில் மண்ணைப் போடும் விதமாக ‘பிரியாஎன்பவள் புதிதாக முளைத்தாள்.
பிரியா-நல்ல அழகி:அத்துடன் நல்ல படிப்பும் இருந்தது.பெண்ணுக்குப் பெண் ஆசை கொள்ளும் தோற்றம். நாகரிகத்தின் சிகரத்தில் அவள். அவளைப் பொறுத்தவரை பாசம், பரிவு, இரக்கம் இவை எல்லாம் ஏளனப் பொருட்கள். அவற்றை கிலோ எவ்வளவு என்று கேட்கும் ரகம். அவற்றையும் பட்டிக்காட்டுப் பொருட்களாக ஒதுக்கிவிட்டாள் போலும். உதட்டிலே புன்னகையும் முகத்திலே கடுகடுப்புமாய் வலம் வந்தாலும் ஆதவனை அவள் நன்றாகவே கவர்ந்து விட்டாள். இல்லாவிட்டால், திருமணமே செய்யாது, தன் தாய்க்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கப் போவதாகச் சொன்ன ஆதவன், அவள் பின்னால் அலைந்திருப்பானா?
இதனை நினைக்கும்போது, பார்வதிக்குத் தன் மீதே வெறுப்பாய் இருந்த்து.அடி முட்டாளே, உன் மகன் கல்யாணம் செய்யாமல் வாழ்ந்து உனக்குக் கறுமாதி செய்யணும்னு எதிர்பார்த்தியா?என்று தன்னைத் தானே கடிந்துகொண்டாள். பிரியா எப்படிப்பட்டவளாக இருந்தாலும், அவளின் மருமகள்-இல்லை இல்லை அவளின் மகனின் மனைவி. ஆம்! பார்வதியைப் பொறுத்தவரை ஆதவனுக்கு அடுத்ததாகத் தான் அவள் பிரியாவைப் பார்த்தாள். ஆனால், ஆதவனோ, பிரியாவிற்கு அடுத்ததாகத் தான் பார்வதியைப் பார்த்தான். இல்லா விட்டால் தாயின் சம்மதம் இன்றி ஒரு வார்த்தையேனும் சொல்லாது, பிரியாவைத் திருமணம் செய்து இருப்பானா?
இந்தச் சம்பவம் அவளைப் பலமாக உலுக்கி விட்டது. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அவளே பிரியாவைக் கல்யாணம் செய்து வைத்திருப்பாள். ஒருவேளை, தன் தாய்க்கு அளித்த வாக்குறுதி அவனை உறுத்தி இருக்கலாம். அந்தக் கூற்றை மெய்யென்றெண்ணி வாழ்ந்த தன் தாய், திருமணத்திற்கு ஒப்ப மாட்டாள் என்று அவன் நினைத்திருக்கலாம். ஆனால், அவளால் அதைத் தாங்க முடியவில்லை. “நானென்ன அவ்வளவு கேவலம் கெட்டவளா-என் மகனைத் திருமணம் செய்யாது, எனக்குப் பணிவிடை செய்யுமாறு சொல்லஎன்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அவளின் தாயுள்ளம் தன் செல்ல மகனுக்காக பிரியாவையும் ஏற்றுக் கொண்டது. பிரியா தான் பார்வதியை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். நாகரிகத்தையே தன் நடையுடை பாவனைகளில் காட்டிக் கொண்ட அந்த நங்கை, தானும் ஒரு காலத்தில் ‘கிழவிஆகப் போவதை மறந்து விட்டாள் போலும். இல்லை என்றால், பார்வதியை-தான் அவளது மருமகள் என்று மனதில் எண்ணாமல், “எடி கிழவி, வெளியே போஎன்று திட்டியிருப்பாளா? சில சமயம் அவள் வேடிக்கைக்காகச் சொல்லியிருக்கலாம் என்று நினைத்தாள் பார்வதி. கால மாற்றத்தை அவள் அறிவாள். Generation gap ஐக் குறைக்க அவள் இறங்கி வந்தாள். அது தப்புக் கணக்காகிப் போய்விட்டது.என்ன பிள்ளை விளையாடுற நேரமே இது? என்று சிரிப்புடன் கேட்டாள் பார்வதி.
அதனைத் தொடர்ந்து, பிரியா என்னென்னவோ ஏசினாள். ஆங்கிலத்தில் ஏதேதோ எரிந்து விழுந்தாள். காதல் மொழி பிரெஞ்சு என்பார்களே! இப்படியான இடங்களில் ஏச்சு மொழியாக ஆங்கிலம் மாறிப் போனது சற்று வியப்பிற்குரியது தான். உணர்ச்சிப் பெருக்கில் தாய்மொழி வெளிப்படும் என்பார்களே! விதிகளிற்கான விதி விலக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியலின் அறுவடையில் இதுவும் ஒன்றோ? ஆங்கிலம் பார்வதிக்குப் புரியவில்லை. அவளின் பாசை புரியவில்லையேயொழிய அவளின் குணம் பார்வதிக்கு நன்றாகவே புரிந்து விட்டது. அவள் என்ன பாசையிலும் தன்னைத் திட்டட்டும். தன் மகனைத் தான் ஒருமுறையாவது பார்க்க அனுமதிக்கலாமே என்ற எண்ணம் தான் அவளிடம் மேலோங்கி நின்றது. அந்த நினைப்பு அவளை பிரியாவின் வீட்டுவாசலில் தொடர்ந்து நிற்பதற்குத் துணை புரிந்தது.
பிரியாவோ அவள் மனதைப் புரியாதவளாகவே இருந்தாள். நினைவெல்லாம் தன் மகனே என்று தனக்காக ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு வாழ்ந்த அந்தத் தாயுள்ளத்தை அவள் அறிந்திருக்க நியாயமில்லை தான். அவள் முகத்தில் இருந்த ரெளத்திரம், உக்கிரம் கூடிக்கொண்டே வந்தது. ஏச்சு வல்லினத்தில் உச்சஸ்தாயியில் தொடர்ந்தது. அவள் பேசும் வார்த்தை புரியவில்லை. அது புரிந்தாலென்ன? புரியாவிட்டாலென்ன? அவளின் நிலை புரிந்தது பார்வதிக்கு. தனக்காகத்தான் கடவுள் உணர்ச்சிகளை முகத்தில் காட்டும்படியாய் மனிதனைப் படைத்தானோ என பார்வதியின் மனம் எண்ணமிட்டது. பிரியாவின் ஏச்சிலே அவள் மனதில் அவள் தன் மகன் மீது வைத்திருந்த பாசத்துடன் சேர்த்து கவலையும் வந்து குடிகொண்டது. கவலைக்கு இடம்கொடுப்பதற்காகவோ என்னமோ அவளின் பாசம் கண்ணீராய் கன்னம் வழியே வெளியேறிக் கொண்டிருந்தது. ஆனால், அவளின் உடல் முழுவதும் பரவியிருந்த பாசத்தை வெளியேற்றவா முடியும்? அவளின் நாடி, நரம்பெங்கும் அவள் மகனல்லவா நிலைத்திருக்கிறான்! அவள் எண்ணம் முழுவதும் அவனல்லவா வியாபித்திருக்கிறான்! அவளின் உயிர் கூட அவனுக்காக அல்லவா வாழ்ந்தது-வாழ்ந்துகொண்டிருக்கிறது.
பலிக்கடா வெட்டப்போகும் கொலையாளியைப் பார்த்துக் கத்துவது போல ஈனஸ்வரத்தில் தன் மகன் எங்கேயென்று கேட்டாள். “அவர் வேலைக்குப் போட்டார்என்ற பதில் மட்டும் பதிந்து வைக்கப்பட்ட ஒலிப்பேழையின் குரலாய் வெளிவந்தது. அதனைப் பொய்ப்பிப்பதாய் அமைந்தது ஆதவனின் வீட்டுக்குள்ளிருந்தான வருகை! “ஏனப்பா இப்படிக் கத்துகிறாய்? என்றவாறு வந்தான் அவன். தரிசனம் கிடைத்த திருப்தியோ பார்வதிக்கு. பிரியா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பார்வதி மகனைப் பார்த்தாள். அவன் தாயைப் பார்த்தான். தாயின் பார்வையிலே பரிவு பொங்கியது. அவன் பார்வை வித்தியாசமாக இருந்தது. வழமையாக அவன் கண்ணில் மிதக்கும் பரிவை அவளால் காணமுடியவில்லை. ஸ்றீராமன் கண்ட புதுக் கைகேயியும் (காட்டுக்குப் போகக் கட்டளை விதிக்கையிலான தோற்றம்) இப்படித் தான் இருந்திருப்பாளோ?
முதல்ல நீங்க உள்ள போங்கபிரியாவின் கட்டளையைச் சிரமேற்தாங்கி ஆதவன் உள்ளே போனான் பாரவதியின் கண்கள் அவனைத் தொடர்ந்து வர. “ஏ கிழவி, உனக்கு என்ன வேணும்கூச்சலில் திடுக்கிட்டாள் பார்வதி. “என் மகனுக்கு வெட்டுப் பலகாரம் என்றா உசிரு. அது செய்து கொண்டு வந்திருக்கிறன். ஒருக்கா நானே ஊட்டி விட்டுட்டுப் போகட்டா?.......திக்கித் திணறி ஆயுததாரியின் அதட்டலுக்கு பதில் சொல்லும் இளைஞனாய்க் கூறி முடித்தாள்.
“வெட்டுப் பலகாரம்....what? பட்டிக்காட்டுப் பலகாரம். அவர் ஒரு doctor. பட்டிக்காட்டுப் பலகாரம் சாப்பிடணுமா? அதை நீ ஊட்டி விடணுமா?சற்று இளக்காரமாகவே கேட்டாள் பிரியா. பட்டிக்காடு என்று அவள் நினைக்கும் அந்தத் தாயின் இரத்தம் தன் கணவன் உடலில் ஓடிக் கொண்டிருப்பதை மறந்து விட்டாள் போலும். “அடியே ராட்சசி, அவன் doctor ஆக முந்தி அதைத் தாண்டி திம்பான். அவனைச் சுமந்த உடம்புடி இது. இந்த வயிறு வேகுதே. நீ நல்லா இருப்பியா? இந்தக் கையால் தான் இத்தனை நாளா ஊட்டி விட்டேன். இப்ப அதே சாப்பாட்டை என்னோடை கையால ஊட்டி விட்டா என்ன? நோயா தொற்றும்?என்று கத்த வேண்டும் போல் இருந்தது பார்வதிக்கு. தன் மகனுக்காகப் பொறுத்துக் கொண்டாள். தான் அவ்வாறு கத்துவது மகனுக்கு மரியாதை இல்லை. சுற்றி இருப்பவர்கள் தன் மகனைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மெளனியானாள் அவள். அவளின் எண்ண அலைகள் ஆதவனைத் தாக்கியோ என்னமோ, அவன் வெளியே வந்தான். “இருக்கிற தலையிடிக்க உன்ர தொல்லை பொறுக்கேலாதாம்.போ....போ....இனி மே வராதே”. அவன் போய் விட்டான். சற்று ஆடித் தான் போய் விட்டாள் பார்வதி.
திரும்பினாள் வீடு செல்ல. அதற்கு மனம் இல்லை. ஊர் எல்லையில் தென்னந்தோப்பிற்கு காவல் போல் நின்ற அரச மர நிழலில் அமர்ந்தாள். இப்போது சின்னதாய் நிற்கும் தென்னம்பிள்ளைகள் நாளை வளர்ந்ததும் அரச மரத்தை விரட்ட நினைக்குமோ? அவற்றிற்கு கீழே நிற்கும் அன்னாசிகளும் அதைப் பின்பற்றக் கூடும். அவள் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அரச மரம் “பாசம் பொய் என்று ஞானமும் கொடுக்கவில்லை அவளுக்கு. அவள் மகன் மீது கொண்டிருந்த பாசம், அவன் சற்று நேரத்திற்கு முன்னர் கொட்டிய வார்த்தைகளின் உஸ்ணம் தாங்காமல் கண்ணீராய் உருகிக் கொண்டிருந்தது. ஆனால் அவளால் மகனை வெறுக்க முடியாது. அதனால் தான் கண்ணீர் வெளிவர முடியாது கண்ணிற்குள் த்தும்பி வெளிக் கிளம்ப வழியின்றித் துடிக்கின்றது போலும்.
கண்ணை மெல்ல விழித்தாள். கண்ணை விழித்ததும், கண்ணெதிரே அவள் கண்ணன் நின்றுகொண்டிருந்தான். அவள் யசோதாவாய் உருகினாள். மன்னிப்புக் கேட்க வந்திருப்பானோ? நினைக்கவே இனித்தது. ஆதவன், தான் அந்த உயர்ந்த உள்ளத்திற்கு-யசோதைக்கு மகனாக நடந்துகொள்ளும் தகுதி தனக்கு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஏசினான். வார்த்தையில் கனல் பறந்தது. “உனக்கு நான் நிம்மதியாய் இருப்பது பிடிக்கேல்லையோ? ஏன் அங்க வாறாய்?என்றெல்லாம் ஏசினான். அவளுக்குப் பிரியா சொன்ன வார்த்தைகள் மண்டையில் ஏறவேயில்லை. ஆனால்......ஆனால்....அவள் மகன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சைப் பிளந்து விட்டன: உறைத்தன: திரும்பத் திரும்ப எதிரொலித்தன. மண்டையில் யாரோ ஓங்கி சுத்தியலால் அடித்தது போன்ற ஒரு பிரமை. அவள் மகனை நோக்கினாள். அவனோ சினிமா நாயகன் நடக்கும் பாணியில் போய்க் கொண்டிருந்தான்.
தன் குடிசைக்கு ஓடினாள்: தான் வணங்கி வந்த கருமாரியம்மனிடம் தன் மகன் நன்றாக வாழவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். கண்கள் இருண்டன; உலகமே இருள்வது போலத் தோன்றிற்று. அவள் நெஞ்சு பிளப்பது போன்ற பிரமை! கணநேர அமைதி! புயலுக்கு முன்னான அமைதி! அவள் இதய நாடிகள் வெடித்து.......அவள் ஜீவன் புறப்பட்டு விட்டது. தன் மகன், தனக்கு இறுதிக்கிரியை செய்யவாவது வருவான் என்ற எதிர்பார்ப்போடு அந்தப் பாசப்பறவை போய்க் கொண்டிருந்தது இறுதி நோக்கி!
முற்றும்.

No comments:

Post a Comment