Monday, July 23, 2018

கிருஸ்ணா...

அம்புகள் தைத்தும் மரணம் தீண்டாமல் இருக்கும் கர்ணனை பார்க்க கிருஷ்ணர் வருகிறார் வயதான அந்தணர் வேடம் பூண்டு. அவன் செய்த தருமம் அனைத்தையும் தானமாக வாங்கி விட மரணம் அவனை தழுவிக் கொள்கிறது. மகாவிஷ்ணுவை மரணிக்கும் சமயம் தரிசித்து முக்தி பெற்று அவரோடு ஐக்கியம் ஆகி விடுகிறான் கர்ணன். அவன் பாவங்கள் அவன் அப்பிறவியில் பட்ட பாட்டிலையே தீர்ந்து விட்டது. எஞ்சி இருந்தவை புண்ணியங்கள்.. அதனை கிருஷ்ணர் தானமாக பெறாவிடின் அவன் மறுபிறவியில் புண்ணிய பலனாய் உயர்வான வாழ்வை பெற்றிருப்பான்.. துன்பமற்ற வாழ்வில் அவன் புதிதாக பாவங்களையும் புண்ணியங்களையும் சேர்த்துக் கொண்டிருக்க கூடும்.. பாவங்கள் துன்பத்தையும் புண்ணியங்கள் இன்பத்தையும் தான் வழங்க முடியும். இன்பதுன்பமற்ற பெருவாழ்வை பெற வேண்டுமெனில் இரண்டையும் வைத்திருக்கலாகாது. அதனாலேயே மாயவன் புண்ணியங்களை வாங்கி பெற்றார்..

அப்படியான புண்ணியத்தில் இருந்து தான் அசுவத்தாமன் கொன்ற உத்தரையின் மகனுக்கு உயிர் கொடுத்தார்.. ஜீவன் முத்தி வேண்டுபவர்கள் தங்கள் பாவங்களை அனுபவித்து கரைத்த பின்னர் தங்கள் புண்ணியங்களை கடவுளுக்கே ஒப்புக் கொடுக்கிறார்கள்.. புண்ணியங்களை வைத்து அவர் என்ன செய்வது..? இப்படி ஏதும் நல்ல காரியம் செய்ய வேண்டியது தான்..

கோபாலா, எங்கே கொடுத்து எங்கே வாங்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் பெருங்கணக்காளன் நீயே ஆவாய்.. அரசியல் சாணக்கியங்களை நன்றாக அறிந்து தர்மத்தை நிலைநாட்டும் உன் காரியத்தை தந்திரமாக சாதித்த சாணக்கியன் நீயே ஆவாய்.. பிரபஞ்சம் அதன் போக்கில் போவது போல் இருந்தாலும் உன் கையில் சுற்றும் காலசக்கரத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஏதும் அறியாதது போல பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனே, நிலைமை எல்லை மீறும் போது மட்டும் பூமியில் பிறந்து உலகை ரட்சிக்கும் பெருமானே..

இவ்வளவு நடந்தும் நீ வராதிருக்க பொருத்தமான காரணங்கள் என நீ கொடுத்த சிறு மதியை கொண்டு நான் எண்ணுபவற்றை கேட்பாயாக.. அதிகம் பேசாத காதலனிடம் இருந்து விசயங்களை அறிய முயலும் காதலி, வினாக்களுடன் விடைத் தெரிவுகளை கொடுத்து ஒன்றை தெரிவு செய்ய சொல்வது போல நான் சொல்லும் காரணங்களில் ஒன்றை தெரிவு செய்து உரைப்பாயாக.. வழமை போல முடிவுகள் சாதகமல்லாவிடினும் நானாக காரணங்களை கூறி என்னை நானே ஏமாற்றி கொள்வது போல அல்லாமல் நீயாக ஒன்றை சொல்லும் போது உண்மை என மனம் அமைதி கொள்ளும்..

நாம் காண்பவற்றை காட்டிலும் கொடூரர்கள் முன்னமே இருந்திருக்க வேண்டும்.. அதனால் தான் பொறுக்காமல் முன்னர் பிறந்து வந்தாய்.. இப்போது வரவில்லை.. அல்லாவிடின் கொடுமைகளை கண்டு கண்டு பழகி, பொங்கி எழுந்து அவதரிக்கும் அந்த தன்மை உனக்கு குறைந்திருக்க வேண்டும்.. அன்றேல் செய்ய வேண்டிய காரியங்களை விடுத்து தினமும் உன்னை தாலாட்டி தாலாட்டியே இவர்கள் உன்னை தூங்க வைத்திருக்க வேண்டும்.. அன்றேல், முன்னெல்லாம் உன் பெயரை கூறுபவர்களை கொடுமை படுத்தினார்கள்.. இன்று உன் பெயராலேயே நடத்தப்படும் அநியாயங்களை கண்டு அஞ்சி, வந்தால் உன்னை உதைப்பார்கள் என்று நீ வராதிருக்க வேண்டும்.. அல்லாவிடின் இவர்கள் சகவாசமே வேண்டாம் என்று நீ ஆயாசமாக சாய்ந்து தேவியர்களுடன் பழைய கதைகளை சல்லாபித்திருக்க வேண்டும். அல்லாவிடின் நீ மன்னன் என்றும் அழகன் என்றும் மன்மதன் என்றும் ஆழ்வார்கள் கொஞ்சுவதை கேட்டு நீ அவை மட்டுமே எண்ணிக் கொண்டு உன் முழு வல்லமையையும் மறந்திருக்க வேண்டும்..

எது எவ்வாறாயினும் பெரிய பெரிய காரியங்களை செய் என நான் உன்னை வற்புறுத்த போவதில்லை.. வழமை போலவே பிரார்த்தனை தொடங்கும் போது இருக்கும் மலையளவு எதிர்பார்ப்புகளை, வேண்டுதல்களை பிரார்த்தனை முடியும் முன்னமே சொற்பமாக குறைத்துக் கொள்கிறேன்.. பிரார்த்தனை தொடங்கும் போது நீ என்னவன் என்று எனக்கு இருப்பதாக உணர்ந்த உரிமை, பிரார்த்தனை முடியும் போது  உனக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு கூட இருப்பதாக உணரவில்லை.. உன்னை முழுவதும் அறிகையில் நீ எங்கோ உயர்ந்து என்னிடம் இருந்து பிரிந்து போய் விடுகிறாய்.. இதனாலேயே பிரார்த்தனைகளை இப்போதெல்லாம் வெறுக்கிறேன்.. கசக்கும் நீண்டு நிலைத்து நிற்கும் நிஜங்களை விட இந்த தருணத்தில் சந்தோசம் தரும் பொய்கள் போதுமானவை.. நான் கேட்பது ஒன்றே.. உன் பாத தூளி கூட இதற்கு உனக்கு தேவைப்படாது.. இந்த பொல்லாத பூமியில் தந்திரமாக பிழைப்பு நடத்துவது எப்படி என்பதை மட்டும் கொஞ்சம் சொல்லிக் கொடேன் கிருஸ்ணா..

No comments:

Post a Comment