அன்புத் தோழிக்கு,
முன்பொருமுறை உன்னுடைய ஒரு பக்க காதல் பற்றி அதன் தோல்வி பற்றி சொல்லியிருந்தாய்.. சமீபத்தில் என்னுடைய தூரத்து நண்பி ஒருத்திக்கு திருமணம் நடந்தது.. ஆச்சரியம் என்னவென்றால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னர் அவளும் உன்னைப் போலவே இருந்தாள்.. அவள் பார்க்காத ஜோசியக்காரன் இல்லை.. தன்னுடைய காதல் நிறைவேறும் என்று சொல்லும் ஜோசியனைத்தான் அவள் சிறந்தவன் என்பாள்.. அவள் போகாத கோயில் இல்லை.. அந்தோனியார் கோயில், பொன்னம்பலவாணேஸ்வரம் என்று நீ கேட்ட அனைத்து பஸ்ரூட்டுக்களும் அவளிடம் கேட்டு நான் சொன்னவை தான்.. சத்தியானந்த ஐயர் முதல் கலகா ஐயா வரை அவள் கொடுத்த தொலைபேசி எண்களை தான் நான் உனக்கு தந்திருக்கிறேன்..
என் வாழ்க்கையிலும் ஒரு பக்க காதல் ஒன்று இருக்கிறதுதான், என்றாலும் நான் ஜோசியத்தையோ கடவுள்களையோ நம்பி இருந்திருக்கவில்லை.. என்னுடைய காதலையே முழுமையாக நம்பியிருந்தேன். இனி அதை காதல் என்று சொல்வதை காட்டிலும் விருப்பம் என்று சொல்வதே தகும்.. நிறைவேறும் காதல்கள் சிறு விருப்பம் இருப்பினும் பெருங்காதல் ஆக சித்தரிக்கப்படுவது போலவே, நிறைவேறாத காதல்கள் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு விருப்பங்கள் என்று நாளடைவில் நம்மை நாமே தேற்றிக்கொள்ளத் தேடப்படும் காரணங்களாகின்றன..
இவையெல்லாம் நீ உன்னுடைய கதையை கூறும் போது ஏன் சொல்லவில்லை என்று நீ கேட்பாய்.. அந்த நாட்களில் தான் சிறந்த உரையாடலை வைத்திருப்பது எப்படி என்ற உரையை இணையத்தில் கேட்டேன்.. அதில் கூறுபவரின் அனுபவத்தை கூற விடும் படியும் எங்களுடைய அனுபவத்தை அவர்களினதுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று சொல்லப் பட்டது.. ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் பேசும் போது அவர்களுக்கு நமது உள்ளக்கிடக்கைகளை சொல்லாமல் இருப்பது மிகவும் கடினமானது என்பதை அன்று அறிந்து கொண்டேன்.. அதில் அறிவுரை கூற வேண்டாம் என்று சொல்லப் பட்டிருந்தது.. அதனாலேயே உனக்கு அன்று எதுவும் கூறவில்லை.. ஆனால் அறிவுரை கூறுவதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது என்றே கருதுகிறேன்..
ஏனெனில் இப்போது நீ வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்களை நான் எப்போதோ வாழ்ந்து கடந்து வந்து விட்டேன்.. எல்லாவற்றையும் விட அறிவுரை கூறும் உரிமையை நீ எனக்கு தந்திருக்குறாய்.. எப்படியோ போய்த் தொலை என்று விட்டு விடுவதற்கு நீ ஒன்றும் அந்நியமானவள் அல்லவே.. நீ என் சகோதரி போன்றவள் என்ற வார்த்தைகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சமயங்களில் சகோதரிகள் நம் காலை வாரிவிடுவதுண்டு.. உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்புவதுண்டு.. நீ என் தோழி ஆவாய்.. தாய்க்கு அடுத்த ஸ்தானம் உனக்கானது.. எப்படி தந்தைக்கு முதலான ஸ்தானம் வாழ்க்கைத் துணைவனுக்கு ஆனதோ அதே போலவே இதுவும்..
அவளது மாற்றத்தைப் பார்த்த பிறகு நானும் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டேன்.. வாழ்க்கை பற்றி ஒரு நம்பிக்கை தோன்றி இருக்கிறது.. நாம் நேசித்தவர்கள் நல்லவர்களாகவே இருக்கட்டும்.. அவர்களுக்கு தான் நம்மை பிடிக்கவில்லை என்ற காரணங்கள் இருக்கட்டும்.. நாம் அவர்களை நேசிக்க ஆரம்ப காரணம் அவர்களாகவே இருக்கட்டும்.. அது அவர்களின் செய்கைக்கான எங்கள் தவறான புரிதல் ஆக இருந்து விட்டு போகட்டும்.. அவர்கள் நன்றாக இருக்கட்டும்.. நாசமாகப் போகட்டும்.. இது அவர்கள் பற்றியதல்ல.. இது நம்மை பற்றியது...
நமக்கு என்னடி குறை.. அவர்கள் காதலுக்காக வேகி, அவர்களுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரேயொரு காரணத்தால் மட்டும் எங்களுடைய பெறுமதியும் மதிப்பும் குறைந்து விடப் போவதில்லை.. இன்றைய தலைமுறை ஏடாகூடமாகவே இருந்தாலும், தனது துணையின் பழைய காதல் பற்றி தெளிவான சிந்தனைனையைத் தான் கொண்டிருக்கிறது.. வருபவர்கள் வரட்டும்.. தங்குபவர்கள் தங்கட்டும்.. போக விரும்புவர்கள் போகட்டும்.. வாழ்க்கையை இழுத்து பிடித்து வைத்திருப்பதாக வீண் பிடிவாதத்துடன் அதை அனுபவிக்காமல் வீணடிக்காதே..
இங்கு ஆயிரம் கூறுவார்கள்.. எத்தனை நாளைக்கு என்று நினைக்கிறாய்? காகம் கொத்தி மாடு என்றைக்கும் சாவதில்லையடி.. பின்னே கதை சொல்பவர்கள் உனக்காக எதையும் தர போவதில்லை.. உனக்காக நீ இருக்கிறாய் என்று எண்ணிக் கர்வம் கொள்ளடி.. இன்னொருவரை நேசித்த உன் மனதை மீட்டெடுத்து உன்னை நேசிக்க கற்றுக் கொடு.. அதன் பின்னர் யார் வந்தாலும், போனாலும் அது வாடாது. உன்னை நீயே காதலி.. உன் தோல்விகளில், வெற்றிகளில், நீ எடுத்த தவறான முடிவுகளில், நீ செய்த குறும்புகளில், தெருவில் நீ செய்த மடத்தனத்தால் நிகழ்ந்த சிறு அவமானங்களில் என்று அனைத்திலும் நீ உன்னை காதலி.. உன்னை நீயே நீயாக காதலிக்க முடியாத போது அதை இன்னொருவர் மட்டும் எப்படி செய்ய முடியும்? உன்னை நீயாகவே முழுமையாக ஏற்றுக் கொள்.. முடிந்து போன எதையும் குற்றம் என சாதித்து உனக்கு என்ன கிடைத்து விட போகிறது..? அனைத்தையும் ஏற்றுக் கொள்.. சரியோ தவறோ அந்த கணத்தை வாழ்ந்திருக்கிறாய்.. சும்மா வீணடித்து விடவில்லை.. கடந்த காலத்துக்கு விடை கொடுத்து விட்டு, வெளியே வா.. அழகான வாழ்க்கை அழைக்கிரது..
என்னென்றும் அன்புடன் உன் தோழி..
No comments:
Post a Comment