நீ இவற்றை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறாயா என்று தெரியவில்லை.. குறைந்த பட்சம் என்னை நீ ஞாபகம் வைத்திருந்தால் என்னைப் பற்றி யோசிக்கும் போது நான் உனக்கு கொடுமை செய்ததாகவோ அல்லது உன்னைக் காயப்படுத்தியதாகவோ நீ எண்ணும் சில விடயங்கள் மட்டும் உனக்கு ஞாபகம் வரக்கூடும்.. அவற்றை பற்றி பேசுவது இனி பயனில்லை.. ஆயினும் என் மனநிம்மதிக்காகவாவது இந்தக் முறை அவற்றை உன்னிடம் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்..
உனக்கு நினைவிருக்குமோ தெரியாது.. நீ அப்போதெல்லாம் நான் பேசுவதை கேட்கும் அளவு பொறுமையாக இருந்தாய்.. நான் உன்னை கொஞ்சம் தூரமாகவே பார்த்தேன்.. அனைத்தையும் சொல்ல விரும்பவில்லை...
நாட்கள் நகர்ந்தன.. நான் உன்னை மிகவும் அண்மையாக உணரத் தொடங்கினேன்.. நீ முந்திய என்னைப் போல என்னைத் தூரமாக எண்ணத் தொடங்கியிருந்தாய்.. நான் எல்லாவற்றையும் உன்னோடு பகிர வேண்டும் என்று எண்ணிய போது நீ அவற்றை கேட்கும் பொறுமையை இழந்து விட்டிருந்தாய்..
துருவங்கள் நாம் கருத்துக்களிலும் அதற்கான காரணங்களிலும்... ஆயினும் இருவருக்கும் இடையே ஏதோ இருந்தது.. அது அப்போது தலையில் இருக்கும் போதான முடியாகவும் பிரிந்த பின்னர் உதிர்ந்து விட்ட முடியாகவுமே இருக்குறது..
உன்னில் நான் வெறுத்தவற்றை நானும் என்னில் நீ வெறுத்தவற்றை நீயும் செய்ய தொடங்கியிருந்தோம்.. அந்த நாட்களில் நீ எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாய் என்று நான் வேதனைப்படும் போது நன்றாக புரிந்து கொண்டேன்.. உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்க தொடங்கியிருந்தாய்.. நீயோ முதல் நீ பட்ட அவஸ்தைகளையும் பின்னர் பட்டவற்றையும் சேர்த்து என்னை வெறுக்கத் தொடங்கியிருந்தாய்..
நான் சண்டை பிடிக்கக் காரணங்களாய் இருந்தவை பின்னர் உனது காரணங்களாகி போயின.. நானும் அவ்வாறே.. நானும் நீயும் நான் நீயாகவும் நீ நானாகவும் அப்படியே இடம் மாறியிருந்தோம்.. சில இடங்களில் நான் செய்வது, முன்னர் நீ செய்த - என்னைக் காயப்படுத்திய விடயம் என்று தெரிந்தாலும் உனக்கு புத்தி வரட்டும் என்று உன்னைப் பழி வாங்க வேண்டும் என்று வேண்டும் என்றே அவற்றை செய்திருக்கிறேன்..
பின்னாட்களில் நீ செய்ததாக நான் எண்ணிய தவறுகளுக்காக நான் கேள்வி கேட்கப்படும் போது, என்னில் உன்னைக் கண்டிருக்கிறேன்.. எந்தத் தவறும் செய்யாமல் ஏன் அவ்வாறு கேட்கின்றான் என்று பரிதாபம் ஒருபுறம் எங்கே கோவித்துக் கொண்டு போய்விடுவானோ என்று பயம் ஒருபுறம் நான் தத்தளித்தது போலவே நீயும் தத்தளித்திருப்பாய் என்று எண்ணும் போதே என் மீது வெறுப்பும் உன் மீது இரக்கமும் வராமலில்லை..
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போலத்தான் நான் பெற்ற இந்த ஞானம்.. வழக்கம் போலவே நீ என்னை மன்னிப்பாய் என்று நம்புகிறேன்.. உன் நேசத்தை நம்புமாறு நீ கெஞ்சிக் கொண்டிருந்த போது நான் உன்னைக் கீறி ரணம் செய்து கொண்டிருந்தேன்.. நீ மௌனம் காக்கும் போது நீ இன்னும் என்னை நேசிக்குறாய் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.
இருவருக்கு இடையில் காதல் எப்போது தோன்றியது என்பது தெரிய வருவதில்லை.. உணரப்படும் போதே அது உருவானதாக கொள்ளப்படுகிறது.. இருவருக்கும் ஒரே நேரத்தில் அது உணரப்படுவதில்லை.. அல்லது சரியான முறையில் அது வெளிப்படுத்தப் படுவதில்லை.. அல்லது வெளிப்படுத்தப்படும் போது அவை நம்பவோ ஏற்றுக் கொள்ளப்படுவதோ இல்லை.. பெரும்பாலான காதல்கள் அடுத்தவர் உணர முன்னரே வெளிப்படுத்தப்பட்டு, கைவிடப்படுகின்றன.. மற்ற நெஞ்சம் கனியும் வரை காக்கும் பொறுமை அந்தக் காதலுக்கு இருப்பதில்லை.. நமது அப்படியான ஒன்றில் அடங்கவில்லை என்பதே எனக்கு இப்போது இருக்கும் ஒரே ஆறுதல்..
நீ எனக்குத் தந்த மரியாதை அற்புதமானது.. அந்த மரியாதையை வேறு யாருமே இன்னும் எனக்கு தரவில்லை.. உன்னிடத்தை நிறைக்கும் அளவு யாருமே என்னுள் இடம்பிடிக்கவில்லை.. அதற்காக என்னை நான் பூட்டி வைத்திருக்கிறேன் என்று அர்த்தமில்லை..
இருந்தாலும் என் வாழ்வில் மீண்டும் வா என்றோ என்னோடு வாழ வேண்டும் என்றோ நான் தொல்லை கொடுக்க போவதில்லை.. நீ என்னைச் சகித்துக் கொண்டிருந்தது போதும்.. புரிந்து கொள்ளாமையை போன்ற பெரிய தவறு காதலில் இல்லை.. அந்த எனது தவறு இனி திருத்திக் கொள்ளவும் முடியாதது.. நான் திருந்துவேன் என்று, உன்னை நீயும், என்னை நானும் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்... நான் உனக்கானவள் இல்லை.. நாம் ஒருவருக்கு ஒருவர் என்று பிறக்கவில்லை. உனக்காக பிறந்தவள் எங்கோவும் எனக்காக பிறந்தவன் எங்கோவும் இருக்கிறார்கள்..
என் கழுத்தில் வேறொருவர் கையால் தாலி ஏறும் போது, கூடும் போது, சேர்ந்து வாழும் போது குறைந்த பட்ஷம் நான் சாகும் போதாவது இந்த காதல் மரித்துப் போகட்டும்..
No comments:
Post a Comment