Monday, July 23, 2018

கடவுளைக் காண்பது எப்படி?

கடவுளைப் பார்க்கணும் என்று ஒரு பண்டிதர் முயற்சி செய்திட்டிருக்கார்.. கடுமையான விரதங்கள் இருக்கிறார்.. புலாலை விடுறார்.. காமத்தைக் கூட்டும் உணவுகளை விடுறார்..  கோயிலையே சுத்தி சுத்தி வாறார்.. புண்ணிய நதிகளில் நீராடுறார்.. புறத்தூய்மை பேணுறார்.. யாத்திரை போறார்.. எதுவுமே பலன் தரலை.. அவர்ட கனவில் கடவுள் வந்து சொல்லுறார்.. 'கோயில் பின் வீதியில நான் நிற்கிறன் வந்து பார்' எண்டு.. பண்டிதர் ஓடி வாறார்.. பின்வீதியில கசாப்புக் கடைக்காரன் இறைச்சியை வெட்டிட்டிருக்கான்.. அருவருப்பா உணருறார்.. 'இறைச்சி.. அதுவும் கோயிலுக்கு பின்னால வெட்டுறான்.. இவன் விற்குறதால தான் சனம் வாங்கி சாப்பிட்டுக் கெட்டுப் போகுதுகள்.. பாவி.. மற்றவங்களையும் பாவம் செய்யத் தூண்டுறான்' எண்டு முகம் சுளிக்கிறார்..  பண்டிதருக்கு வேற யாரையும் தெரியலை.. நான் ஒரே கடவுள் பற்றி நினைச்சிட்டிருக்கன்.. அதால தான் அப்பிடி கனவு வருது எண்டு திரும்பி போயிடுறார்.. மறுபடியும் போய் படுக்கிறார்.. கனவில கடவுள் வந்து 'என்னடா... என்னைப் பாத்து முகம் சுளிச்சிட்டுப் போறாய்.. ' எண்டுறார்.. பண்டிதருக்கு மண்டை விறைச்சிடுது..

அடுத்தநாள் யாரெண்டே தெரியாத ஒரு ஞானி வாறார் இவரைத் தேடி.. என்னப்பா.. கடவுளைக் கண்டாயாம் எண்டு.. இவர் நடந்ததை சொல்லுறார்.. ஞானி சிரிக்கிறார்.. 'கடவுளை எல்லா இடமும் காணலாம்.. உன்ரை பார்வையை மாத்து' எண்டுறார். கிடைக்காத இடங்களில் அன்பைத் தேடி சலிப்படைந்த ஒருத்தன் எதிர்பாராத ஒருவர் காரணமில்லாம வெள்ளமாக அன்பு செலுத்தும் போது கண்ணீர் சிந்தி பேச்சற்றுப் போறமாதிரி கடவுளை காண எங்கெங்கோ திரிந்து என்னென்னவோ செய்தவர் விக்கிச்சு நிற்குறார்.. 'அப்பிடியே பார்.. கடவுள் உன்ரை ரொட்டியைத் தூக்கிட்டு ஓடுறார்..' எண்டுறார் ஞானி.. திரும்பிப் பார்த்தார் பண்டிதர்.. நாய் ஒண்டு ரொட்டியைக் கவ்விட்டு ஓடுது.. இவர் நெய்யைத் தூக்கிட்டே பின்னாலயே ஓடுறார் 'இரு பரம்பொருளே.. வெறும் ரொட்டி திண்டா விக்கும்.. ' எண்டு கத்திக் கொண்டு..  முறுவலித்துக் கொண்டே காற்றில் கரைந்து போறார் ஞானி..

மூலக்கதை ஆறேழு வயசில வாசிச்சது.. திடீரெண்டு ஞாபகம் வரேக்க நமட்டு சிரிப்பு வந்தது.. நாம சரியான வழியில் போறதா நினைச்சிட்டு மற்றவங்களைத் திருத்த முன்னாடி நம்ம சரியா எண்டு உறுதிப்படுத்தணும்..  மூலக்கதையை நான் மனனம் பண்ணலை.. அதுட கருத்து மட்டும்தான் மனசில இருந்திச்சு.. அதனால எக்ஸ்ரா வார்த்தைகளுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்..

கிருஸ்ணா...

அம்புகள் தைத்தும் மரணம் தீண்டாமல் இருக்கும் கர்ணனை பார்க்க கிருஷ்ணர் வருகிறார் வயதான அந்தணர் வேடம் பூண்டு. அவன் செய்த தருமம் அனைத்தையும் தானமாக வாங்கி விட மரணம் அவனை தழுவிக் கொள்கிறது. மகாவிஷ்ணுவை மரணிக்கும் சமயம் தரிசித்து முக்தி பெற்று அவரோடு ஐக்கியம் ஆகி விடுகிறான் கர்ணன். அவன் பாவங்கள் அவன் அப்பிறவியில் பட்ட பாட்டிலையே தீர்ந்து விட்டது. எஞ்சி இருந்தவை புண்ணியங்கள்.. அதனை கிருஷ்ணர் தானமாக பெறாவிடின் அவன் மறுபிறவியில் புண்ணிய பலனாய் உயர்வான வாழ்வை பெற்றிருப்பான்.. துன்பமற்ற வாழ்வில் அவன் புதிதாக பாவங்களையும் புண்ணியங்களையும் சேர்த்துக் கொண்டிருக்க கூடும்.. பாவங்கள் துன்பத்தையும் புண்ணியங்கள் இன்பத்தையும் தான் வழங்க முடியும். இன்பதுன்பமற்ற பெருவாழ்வை பெற வேண்டுமெனில் இரண்டையும் வைத்திருக்கலாகாது. அதனாலேயே மாயவன் புண்ணியங்களை வாங்கி பெற்றார்..

அப்படியான புண்ணியத்தில் இருந்து தான் அசுவத்தாமன் கொன்ற உத்தரையின் மகனுக்கு உயிர் கொடுத்தார்.. ஜீவன் முத்தி வேண்டுபவர்கள் தங்கள் பாவங்களை அனுபவித்து கரைத்த பின்னர் தங்கள் புண்ணியங்களை கடவுளுக்கே ஒப்புக் கொடுக்கிறார்கள்.. புண்ணியங்களை வைத்து அவர் என்ன செய்வது..? இப்படி ஏதும் நல்ல காரியம் செய்ய வேண்டியது தான்..

கோபாலா, எங்கே கொடுத்து எங்கே வாங்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் பெருங்கணக்காளன் நீயே ஆவாய்.. அரசியல் சாணக்கியங்களை நன்றாக அறிந்து தர்மத்தை நிலைநாட்டும் உன் காரியத்தை தந்திரமாக சாதித்த சாணக்கியன் நீயே ஆவாய்.. பிரபஞ்சம் அதன் போக்கில் போவது போல் இருந்தாலும் உன் கையில் சுற்றும் காலசக்கரத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஏதும் அறியாதது போல பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனே, நிலைமை எல்லை மீறும் போது மட்டும் பூமியில் பிறந்து உலகை ரட்சிக்கும் பெருமானே..

இவ்வளவு நடந்தும் நீ வராதிருக்க பொருத்தமான காரணங்கள் என நீ கொடுத்த சிறு மதியை கொண்டு நான் எண்ணுபவற்றை கேட்பாயாக.. அதிகம் பேசாத காதலனிடம் இருந்து விசயங்களை அறிய முயலும் காதலி, வினாக்களுடன் விடைத் தெரிவுகளை கொடுத்து ஒன்றை தெரிவு செய்ய சொல்வது போல நான் சொல்லும் காரணங்களில் ஒன்றை தெரிவு செய்து உரைப்பாயாக.. வழமை போல முடிவுகள் சாதகமல்லாவிடினும் நானாக காரணங்களை கூறி என்னை நானே ஏமாற்றி கொள்வது போல அல்லாமல் நீயாக ஒன்றை சொல்லும் போது உண்மை என மனம் அமைதி கொள்ளும்..

நாம் காண்பவற்றை காட்டிலும் கொடூரர்கள் முன்னமே இருந்திருக்க வேண்டும்.. அதனால் தான் பொறுக்காமல் முன்னர் பிறந்து வந்தாய்.. இப்போது வரவில்லை.. அல்லாவிடின் கொடுமைகளை கண்டு கண்டு பழகி, பொங்கி எழுந்து அவதரிக்கும் அந்த தன்மை உனக்கு குறைந்திருக்க வேண்டும்.. அன்றேல் செய்ய வேண்டிய காரியங்களை விடுத்து தினமும் உன்னை தாலாட்டி தாலாட்டியே இவர்கள் உன்னை தூங்க வைத்திருக்க வேண்டும்.. அன்றேல், முன்னெல்லாம் உன் பெயரை கூறுபவர்களை கொடுமை படுத்தினார்கள்.. இன்று உன் பெயராலேயே நடத்தப்படும் அநியாயங்களை கண்டு அஞ்சி, வந்தால் உன்னை உதைப்பார்கள் என்று நீ வராதிருக்க வேண்டும்.. அல்லாவிடின் இவர்கள் சகவாசமே வேண்டாம் என்று நீ ஆயாசமாக சாய்ந்து தேவியர்களுடன் பழைய கதைகளை சல்லாபித்திருக்க வேண்டும். அல்லாவிடின் நீ மன்னன் என்றும் அழகன் என்றும் மன்மதன் என்றும் ஆழ்வார்கள் கொஞ்சுவதை கேட்டு நீ அவை மட்டுமே எண்ணிக் கொண்டு உன் முழு வல்லமையையும் மறந்திருக்க வேண்டும்..

எது எவ்வாறாயினும் பெரிய பெரிய காரியங்களை செய் என நான் உன்னை வற்புறுத்த போவதில்லை.. வழமை போலவே பிரார்த்தனை தொடங்கும் போது இருக்கும் மலையளவு எதிர்பார்ப்புகளை, வேண்டுதல்களை பிரார்த்தனை முடியும் முன்னமே சொற்பமாக குறைத்துக் கொள்கிறேன்.. பிரார்த்தனை தொடங்கும் போது நீ என்னவன் என்று எனக்கு இருப்பதாக உணர்ந்த உரிமை, பிரார்த்தனை முடியும் போது  உனக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு கூட இருப்பதாக உணரவில்லை.. உன்னை முழுவதும் அறிகையில் நீ எங்கோ உயர்ந்து என்னிடம் இருந்து பிரிந்து போய் விடுகிறாய்.. இதனாலேயே பிரார்த்தனைகளை இப்போதெல்லாம் வெறுக்கிறேன்.. கசக்கும் நீண்டு நிலைத்து நிற்கும் நிஜங்களை விட இந்த தருணத்தில் சந்தோசம் தரும் பொய்கள் போதுமானவை.. நான் கேட்பது ஒன்றே.. உன் பாத தூளி கூட இதற்கு உனக்கு தேவைப்படாது.. இந்த பொல்லாத பூமியில் தந்திரமாக பிழைப்பு நடத்துவது எப்படி என்பதை மட்டும் கொஞ்சம் சொல்லிக் கொடேன் கிருஸ்ணா..

துன்பம் தாங்குவது எப்படி

பண்டிதர் ஒருவர் வாதம் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவருக்கு கடுமையான வயிற்று வலி. வயிற்றைப் பிடித்துக் கொண்டு போய் அமருகிறார். வாதம் தொடங்க முதல் பக்கத்தில் இருந்த செடி ஒன்றின் அரும்பை கிள்ளி போடுறார். பண்டிதரின் வயிற்று வலி பறந்து போகுது. கிள்ளி போட்ட அரும்பு துடிக்க ஆரம்பிக்குது. வாதத்தில் வெற்றி பெற்றுவிட்டு மறுபடி அந்த அரும்பை கையில் தூக்குறார். இப்ப பண்டிதரின் வயிறு பழைய பல்லவியை ஆரம்பிக்குது. அரும்பின் துடிப்பு அடங்கி விடுகிறது.

ஒருத்தன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான். பண்டிதரிட்ட கேட்கிறான். "ஏன்யா.. மறுபடியும் வயிற்றுவலியை வாங்கிக் கொண்டாய்.. அதை அரும்பிட்டையே விட்டுட்டு போயிருக்கலாமே" என்று. பண்டிதர் சொல்கின்றார்.. "இதை பாருப்பா.. இந்த பிறப்பில எனக்கு இந்த மாதிரி வலியை மாத்தி விட தெரிஞ்சிருக்கு.. இப்ப என்னோட வசதிக்கு மாத்தி விட்டிடலாம்.. ஆனா, இந்த வினையை அனுபவிக்க மறுபடியும் பிறந்து வர வேண்டி ஆகிடும். அதனால இப்பவே இதை வைச்சுக்குறன்"

துன்பங்கள் நேரும் போது, வினைப்பயன்.. இப்போதே என் பாவங்கள் அழிகின்றன என்று அதை ஏற்றுக் கொள்வாய் மனமே

குழந்தை வளர்ப்பு

கோபாலனது நேசரி வகுப்பு முதலாவது நாள்.. அவனுக்கு கொடுத்த கதிரையில் சின்ன ஆட்டம் ஒன்று இருந்தது.. சிறுவன் சமாளித்து இருக்க முயற்சிக்கிறான்.. பின்னால் இருந்தவன் கதிரையை பிடித்து கொண்டு பெயர் கேட்கிறான்.. திரும்பி பெயர் சொல்ல முனைந்தபோது கதிரை சமநிலை குழம்பி விழுந்து கோபலனும் கதிரையும் தரையில் கிடக்கிறார்கள்.. கதிரையின் கால் உடைந்து விட்டது.. கோபாலனுக்கு சின்னதாக சிராய்த்து விட்டது சீமெந்து தரை.. ஓடி வந்த ஆசிரியை, கோபலனுக்கு கதிரையை உடைத்ததுக்கு தண்டனையாக தடி ஒன்றை முறித்து பூசை செய்து விடுகிறார்.. புதிய கதிரை கொடுக்க படுகிறது..

கோபாலனுக்கு என்று ஒரு சிறிய கதிரை வீட்டில் இருக்கிறது.. அவன் சிரமப்பட்டு பெரிய கதிரையில் இருக்க ஆரம்பிக்கிறான்.. தந்தை இதனை அவதானிக்கிறார்.. காரணத்தை கேட்கிறார்.. "அது கக்கா கதிரை.. அதில இருந்தா உடையும்" தந்தைக்கு ஆச்சரியம்.. உடையுமா... பரிசோதித்துப் பார்க்கிறார்.. அது ஒழுங்காகத்தான் இருக்கிறது.. என்னவோ நடந்திருக்கிறது என்று அவருக்கு புரிகிறது.. ஆசிரியையை சந்தித்து கதைக்கிறார்.. ஆசிரியை உடைந்த கதிரை பற்றி அதிகம் கதைப்பது அவருக்கு புரிகிறது.. கதிரைக்கான பணத்தை கொடுத்து விட்டு வெளியே வருகிறார்..

கோபாலன் புதிய பள்ளிக்கு அனுப்ப படுகிறான்.. சிறிய கதிரை உடைந்து விடும் என்ற அவன் எண்ணத்தை பிழை என்று நிரூபித்துக் காட்டுகிறார்.. குழந்தைகளை அவதானிக்க வேண்டும்.. கேள்வி கேட்க வேண்டும்.. அது சொல்வதை நம்ப வேண்டும்.. நம் பிள்ளைகளை அவதானிக்காது, நம்பாமல், அவை கூறுவதை கேளாமல் விடுவது பிற்பட்ட காலங்களில் அந்த குழந்தையை, அதற்கும் உங்களுக்குமான உறவை, அதனோடு பழகுபவர்களை பாதிக்கும்.. ஐந்தில் நாம் கவனிக்காது விடும் விடயங்கள் ஐம்பதில் பூதமாக வெடிக்கும்..

நிம்மதிக்கு வழி

ஒரு அரசன் மிகவும் வேலைப்பளுவை உணர்ந்தான்.. அதனால் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. அவனை தேடி ஒரு ஞானி வந்தார்.. அவரிடம் பிரச்சனையை சொல்லி தீர்வு கேட்டான்.. அவர் "இந்த நாட்டை எனக்கு தந்து விடு.. உனக்கு கவலை தீரும்" என்றார்.. அவன் சம்மதித்தான்.. "இதை தந்து விட்டு.. எங்கு போவாய்.. வேறு என்ன வேலை தெரியும்.. எனக்காக இந்த நாட்டை ஆட்சி செய்.. நான் வேறு இடங்களுக்கு போய் விட்டு வருகிறேன்.. எனக்கு நீ என்னென்ன செய்தாய் என்று கணக்கு காட்டு போதும்" என்றார்..

சிறிது காலத்துக்கு பின்னர் திரும்பி வந்தார்.. அரசன் மகிழ்வுடன் வரவேற்றான்.. கணக்குகளை காட்டினான்.. தற்போது கவலையின்றி இருப்பதாக சொன்னான்.. ஞானி புன்னகைத்தார்.. "நீ முன்பு செய்த வேலைக்கும் இப்போது செய்வதற்கும் ஏதும் சம்மந்தம் உள்ளதா" என்று கேட்டார்.. "ஏதும் இல்லை.. " என்றான்.. "நீ வேலைகளை உன் தலையில் கட்டிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால் பளுவாக உணர்ந்தாய்.. இப்போது எனக்கு வேலை செய்வதாக நினைத்தாய்.. நிம்மதி பெற்றாய்.. அது போலவே நான் செய்ய வேண்டும் என்று செய்யாமல் கடவுளுக்கு செய்யும் கடமையாக செய்ய வேண்டும்.. செயல்களின் விளைவுகள் நன்மையோ தீமையோ அது கடவுளுக்கு என்று எண்ண வேண்டும்.. அதாவது நான் ஒரு கருவியே.. வேலைக்காரன்.. தந்த வேலையை செய்கிறேன்.. அதன் விளைவு கடவுளை தான் பாதிக்கும்.. அவன் தான் எஜமானன் என்று எண்ண வேண்டும்.. அதுவே நிம்மதிக்கு வழி" என்றார்..

அன்புத் தோழிக்கு..

அன்புத் தோழிக்கு,

முன்பொருமுறை உன்னுடைய ஒரு பக்க காதல் பற்றி அதன் தோல்வி பற்றி சொல்லியிருந்தாய்.. சமீபத்தில் என்னுடைய தூரத்து நண்பி ஒருத்திக்கு திருமணம் நடந்தது.. ஆச்சரியம் என்னவென்றால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னர் அவளும் உன்னைப் போலவே இருந்தாள்.. அவள் பார்க்காத ஜோசியக்காரன் இல்லை.. தன்னுடைய காதல் நிறைவேறும் என்று சொல்லும் ஜோசியனைத்தான் அவள் சிறந்தவன் என்பாள்.. அவள் போகாத கோயில் இல்லை.. அந்தோனியார் கோயில், பொன்னம்பலவாணேஸ்வரம் என்று நீ கேட்ட அனைத்து பஸ்ரூட்டுக்களும் அவளிடம் கேட்டு நான் சொன்னவை தான்.. சத்தியானந்த ஐயர் முதல் கலகா ஐயா வரை அவள் கொடுத்த தொலைபேசி எண்களை தான் நான் உனக்கு தந்திருக்கிறேன்..

என் வாழ்க்கையிலும் ஒரு பக்க காதல் ஒன்று இருக்கிறதுதான், என்றாலும் நான் ஜோசியத்தையோ கடவுள்களையோ நம்பி இருந்திருக்கவில்லை.. என்னுடைய காதலையே முழுமையாக நம்பியிருந்தேன். இனி அதை காதல் என்று சொல்வதை காட்டிலும் விருப்பம் என்று சொல்வதே தகும்.. நிறைவேறும் காதல்கள் சிறு விருப்பம் இருப்பினும் பெருங்காதல் ஆக சித்தரிக்கப்படுவது போலவே, நிறைவேறாத காதல்கள் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு விருப்பங்கள் என்று நாளடைவில் நம்மை நாமே தேற்றிக்கொள்ளத் தேடப்படும் காரணங்களாகின்றன..

இவையெல்லாம் நீ உன்னுடைய கதையை கூறும் போது ஏன் சொல்லவில்லை என்று நீ கேட்பாய்.. அந்த நாட்களில் தான் சிறந்த உரையாடலை வைத்திருப்பது எப்படி என்ற உரையை இணையத்தில் கேட்டேன்.. அதில் கூறுபவரின் அனுபவத்தை கூற விடும் படியும் எங்களுடைய அனுபவத்தை அவர்களினதுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று சொல்லப் பட்டது.. ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் பேசும் போது அவர்களுக்கு நமது உள்ளக்கிடக்கைகளை சொல்லாமல் இருப்பது மிகவும் கடினமானது என்பதை அன்று அறிந்து கொண்டேன்.. அதில் அறிவுரை கூற வேண்டாம் என்று சொல்லப் பட்டிருந்தது.. அதனாலேயே உனக்கு அன்று எதுவும் கூறவில்லை.. ஆனால் அறிவுரை கூறுவதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது என்றே கருதுகிறேன்..

ஏனெனில் இப்போது நீ வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்களை நான் எப்போதோ வாழ்ந்து கடந்து வந்து விட்டேன்.. எல்லாவற்றையும் விட அறிவுரை கூறும் உரிமையை நீ எனக்கு தந்திருக்குறாய்.. எப்படியோ போய்த் தொலை என்று விட்டு விடுவதற்கு நீ ஒன்றும் அந்நியமானவள் அல்லவே.. நீ என் சகோதரி போன்றவள் என்ற வார்த்தைகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சமயங்களில் சகோதரிகள் நம் காலை வாரிவிடுவதுண்டு.. உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்புவதுண்டு.. நீ என் தோழி ஆவாய்.. தாய்க்கு அடுத்த ஸ்தானம் உனக்கானது.. எப்படி தந்தைக்கு முதலான ஸ்தானம் வாழ்க்கைத் துணைவனுக்கு ஆனதோ அதே போலவே இதுவும்..

அவளது மாற்றத்தைப் பார்த்த பிறகு நானும் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டேன்.. வாழ்க்கை பற்றி ஒரு நம்பிக்கை தோன்றி இருக்கிறது.. நாம் நேசித்தவர்கள் நல்லவர்களாகவே இருக்கட்டும்.. அவர்களுக்கு தான் நம்மை பிடிக்கவில்லை என்ற காரணங்கள் இருக்கட்டும்.. நாம் அவர்களை நேசிக்க ஆரம்ப காரணம் அவர்களாகவே இருக்கட்டும்..  அது அவர்களின் செய்கைக்கான எங்கள் தவறான புரிதல் ஆக இருந்து விட்டு போகட்டும்.. அவர்கள் நன்றாக இருக்கட்டும்.. நாசமாகப் போகட்டும்.. இது அவர்கள் பற்றியதல்ல.. இது நம்மை பற்றியது...

நமக்கு என்னடி குறை.. அவர்கள் காதலுக்காக வேகி, அவர்களுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரேயொரு காரணத்தால் மட்டும் எங்களுடைய பெறுமதியும் மதிப்பும் குறைந்து விடப் போவதில்லை.. இன்றைய தலைமுறை ஏடாகூடமாகவே இருந்தாலும், தனது துணையின் பழைய காதல் பற்றி தெளிவான சிந்தனைனையைத் தான் கொண்டிருக்கிறது..  வருபவர்கள் வரட்டும்.. தங்குபவர்கள் தங்கட்டும்.. போக விரும்புவர்கள் போகட்டும்.. வாழ்க்கையை இழுத்து பிடித்து வைத்திருப்பதாக வீண் பிடிவாதத்துடன் அதை அனுபவிக்காமல் வீணடிக்காதே..

இங்கு ஆயிரம் கூறுவார்கள்.. எத்தனை நாளைக்கு என்று நினைக்கிறாய்? காகம் கொத்தி மாடு என்றைக்கும் சாவதில்லையடி..  பின்னே கதை சொல்பவர்கள் உனக்காக எதையும் தர போவதில்லை.. உனக்காக நீ இருக்கிறாய் என்று எண்ணிக் கர்வம் கொள்ளடி.. இன்னொருவரை நேசித்த உன் மனதை மீட்டெடுத்து உன்னை நேசிக்க கற்றுக் கொடு.. அதன் பின்னர் யார் வந்தாலும், போனாலும் அது வாடாது. உன்னை நீயே காதலி.. உன் தோல்விகளில், வெற்றிகளில், நீ எடுத்த தவறான முடிவுகளில், நீ செய்த குறும்புகளில், தெருவில் நீ செய்த மடத்தனத்தால் நிகழ்ந்த சிறு அவமானங்களில் என்று அனைத்திலும் நீ உன்னை காதலி.. உன்னை நீயே நீயாக காதலிக்க முடியாத போது அதை இன்னொருவர் மட்டும் எப்படி செய்ய முடியும்?   உன்னை நீயாகவே முழுமையாக ஏற்றுக் கொள்..  முடிந்து போன எதையும் குற்றம் என சாதித்து உனக்கு என்ன கிடைத்து விட போகிறது..?  அனைத்தையும் ஏற்றுக் கொள்.. சரியோ தவறோ அந்த கணத்தை வாழ்ந்திருக்கிறாய்..  சும்மா வீணடித்து விடவில்லை..  கடந்த காலத்துக்கு விடை கொடுத்து விட்டு, வெளியே வா.. அழகான வாழ்க்கை அழைக்கிரது..

என்னென்றும் அன்புடன் உன் தோழி..

சொல்லாமல் போன கதை - கடைசிக் கடிதம்

நீ இவற்றை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறாயா என்று தெரியவில்லை.. குறைந்த பட்சம் என்னை நீ ஞாபகம் வைத்திருந்தால் என்னைப் பற்றி யோசிக்கும் போது நான் உனக்கு கொடுமை செய்ததாகவோ அல்லது உன்னைக் காயப்படுத்தியதாகவோ  நீ எண்ணும் சில விடயங்கள் மட்டும் உனக்கு ஞாபகம் வரக்கூடும்.. அவற்றை பற்றி பேசுவது இனி பயனில்லை.. ஆயினும் என் மனநிம்மதிக்காகவாவது இந்தக் முறை அவற்றை உன்னிடம் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்..

உனக்கு நினைவிருக்குமோ தெரியாது.. நீ அப்போதெல்லாம் நான் பேசுவதை கேட்கும் அளவு பொறுமையாக இருந்தாய்.. நான் உன்னை கொஞ்சம் தூரமாகவே பார்த்தேன்.. அனைத்தையும் சொல்ல விரும்பவில்லை...

நாட்கள் நகர்ந்தன.. நான் உன்னை மிகவும் அண்மையாக உணரத் தொடங்கினேன்.. நீ முந்திய என்னைப் போல என்னைத் தூரமாக எண்ணத் தொடங்கியிருந்தாய்.. நான் எல்லாவற்றையும் உன்னோடு பகிர வேண்டும் என்று எண்ணிய போது நீ அவற்றை கேட்கும் பொறுமையை இழந்து விட்டிருந்தாய்..

துருவங்கள் நாம் கருத்துக்களிலும் அதற்கான காரணங்களிலும்...  ஆயினும் இருவருக்கும் இடையே ஏதோ இருந்தது.. அது அப்போது தலையில் இருக்கும் போதான முடியாகவும் பிரிந்த பின்னர் உதிர்ந்து விட்ட முடியாகவுமே இருக்குறது..

உன்னில் நான் வெறுத்தவற்றை நானும் என்னில் நீ வெறுத்தவற்றை நீயும் செய்ய தொடங்கியிருந்தோம்.. அந்த நாட்களில் நீ எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாய் என்று நான் வேதனைப்படும் போது நன்றாக புரிந்து கொண்டேன்.. உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்க தொடங்கியிருந்தாய்..  நீயோ முதல் நீ பட்ட அவஸ்தைகளையும் பின்னர் பட்டவற்றையும் சேர்த்து என்னை வெறுக்கத் தொடங்கியிருந்தாய்.. 

நான் சண்டை பிடிக்கக் காரணங்களாய் இருந்தவை பின்னர் உனது காரணங்களாகி போயின.. நானும் அவ்வாறே.. நானும் நீயும் நான் நீயாகவும் நீ நானாகவும் அப்படியே இடம் மாறியிருந்தோம்..  சில இடங்களில் நான் செய்வது, முன்னர் நீ செய்த - என்னைக் காயப்படுத்திய விடயம் என்று தெரிந்தாலும் உனக்கு புத்தி வரட்டும் என்று உன்னைப் பழி வாங்க வேண்டும் என்று வேண்டும் என்றே அவற்றை செய்திருக்கிறேன்..

பின்னாட்களில் நீ செய்ததாக நான் எண்ணிய தவறுகளுக்காக நான் கேள்வி கேட்கப்படும் போது, என்னில் உன்னைக் கண்டிருக்கிறேன்.. எந்தத் தவறும் செய்யாமல் ஏன் அவ்வாறு கேட்கின்றான் என்று பரிதாபம் ஒருபுறம் எங்கே கோவித்துக் கொண்டு போய்விடுவானோ என்று பயம் ஒருபுறம் நான் தத்தளித்தது போலவே நீயும் தத்தளித்திருப்பாய் என்று எண்ணும் போதே என் மீது வெறுப்பும் உன் மீது இரக்கமும் வராமலில்லை..

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போலத்தான் நான் பெற்ற இந்த ஞானம்.. வழக்கம் போலவே நீ என்னை மன்னிப்பாய் என்று நம்புகிறேன்.. உன் நேசத்தை நம்புமாறு நீ கெஞ்சிக் கொண்டிருந்த போது நான் உன்னைக் கீறி ரணம் செய்து கொண்டிருந்தேன்.. நீ மௌனம் காக்கும் போது நீ இன்னும் என்னை நேசிக்குறாய் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இருவருக்கு இடையில் காதல் எப்போது தோன்றியது என்பது தெரிய வருவதில்லை.. உணரப்படும் போதே அது உருவானதாக கொள்ளப்படுகிறது.. இருவருக்கும் ஒரே நேரத்தில் அது உணரப்படுவதில்லை.. அல்லது சரியான முறையில் அது வெளிப்படுத்தப் படுவதில்லை.. அல்லது வெளிப்படுத்தப்படும் போது அவை நம்பவோ ஏற்றுக் கொள்ளப்படுவதோ இல்லை.. பெரும்பாலான காதல்கள் அடுத்தவர் உணர முன்னரே வெளிப்படுத்தப்பட்டு, கைவிடப்படுகின்றன.. மற்ற நெஞ்சம் கனியும் வரை காக்கும் பொறுமை அந்தக் காதலுக்கு இருப்பதில்லை.. நமது அப்படியான ஒன்றில் அடங்கவில்லை என்பதே எனக்கு இப்போது இருக்கும் ஒரே ஆறுதல்..

நீ எனக்குத் தந்த மரியாதை அற்புதமானது.. அந்த மரியாதையை வேறு யாருமே இன்னும் எனக்கு தரவில்லை..  உன்னிடத்தை நிறைக்கும் அளவு யாருமே என்னுள் இடம்பிடிக்கவில்லை.. அதற்காக என்னை நான் பூட்டி வைத்திருக்கிறேன் என்று அர்த்தமில்லை..

இருந்தாலும் என் வாழ்வில் மீண்டும் வா என்றோ என்னோடு வாழ வேண்டும் என்றோ நான் தொல்லை கொடுக்க போவதில்லை.. நீ என்னைச் சகித்துக் கொண்டிருந்தது போதும்.. புரிந்து கொள்ளாமையை போன்ற பெரிய தவறு காதலில் இல்லை.. அந்த எனது தவறு இனி திருத்திக் கொள்ளவும் முடியாதது.. நான் திருந்துவேன் என்று, உன்னை நீயும், என்னை நானும் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்... நான் உனக்கானவள் இல்லை..  நாம் ஒருவருக்கு ஒருவர் என்று பிறக்கவில்லை. உனக்காக பிறந்தவள் எங்கோவும் எனக்காக பிறந்தவன் எங்கோவும் இருக்கிறார்கள்..

என் கழுத்தில் வேறொருவர் கையால் தாலி ஏறும் போது, கூடும் போது, சேர்ந்து வாழும் போது குறைந்த பட்ஷம் நான் சாகும் போதாவது இந்த காதல் மரித்துப் போகட்டும்..