Monday, August 13, 2012

ராகிங் கலாட்டா4

இந்த புதுவருசம், தைப் பொங்கல், மிட்செமி எக்ஸாம் முதலிய திருவிழாக்கள்(??????) இருக்குத் தானே. அதுக்கெல்லாம் விஸ் பண்ணோணுமாம் எல்லாருக்கும். முதல்ல நானும் ஓம் எண்டிட்டுப் பண்ணலை. பிறகு ஏச்சு வாங்கினது தான்.
இது என்னெண்டு தெரியும் அவைக்கு எண்டு ரொம்ப லேற்றாத் தான் எனக்குத் தெரிஞ்சுது. அது என்னெண்டால் ரெண்டு மூண்டு பேராச் சேர்ந்துதானே றூமில நிற்பினம். அப்ப மற்றவரின்ர நம்பரைத் தந்து அவருக்கு விஸ் பண்ணச் சொன்னா பண்ணாட்டிக் கண்டுபிடிக்கிறதுக்கு ஐ.பி.எஸ் மூளை தேவையில்லை தானே. இந்தக் கறுமம் விளங்காமல் அதுக்குப் பிறகு என்னட்டைக் கிடக்கிற எல்லா நம்பருக்கும் நான் விஸ் பண்ணத் தொடங்கினன். அதில கதைக்காதவையும் இருப்பினம் தானே. அவை ஹூ ஆர் யூ எண்டு போட்டு, நானே என்னை ஜூனியர் எண்டு காட்டிக்கொடுத்த பிறகு தான் தெரிய வரும் அநியாயமாய் என்னை நானே காட்டிக் கொடுத்திட்டன் எண்டு. ஆனா என்ன கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்தால என்ன பயன்?
சிலரின்ர பேர் ஒரே மாதிரி இருக்கும். ஒருத்தர் எடுக்கச்சொல்ல மற்றவைக்கு எடுத்து வாங்கிக்கட்டின கதையள் எல்லாம் இருக்கு. அதுவும் தூங்கிக் கொண்டிருந்த ஒரு அண்ணாவுக்கு மாறி எடுத்துத் துலைக்க, அவர் ”ஏன் எடுத்தனீ” எண்டு கேட்க, ”நீங்கதானே எடுக்க சொன்னனீங்க அண்ணா” எண்டு வீறாய்ப்பாய் பதில் சொல்லி, வாங்கினதை மறக்கவே ஏலா.
என்ர டப்பா போனில குறிப்பிட்ட எழுத்துக்கு மேல கொன்ராக்ற் நேம் அடிக்க ஏலாது. நீட்டுப் பேர் உள்ள ஆக்களின்ர பேருக்குப் பின்னால அண்ணா, அக்கா போட முடியாது. பட்ச்மேற்றின்ர பேரே அப்பதான் பாடமாக்கிக் கொண்டிருந்தன். (அதுவும் ஃபுல் டீற்றெயில்ஸ் எழுதச்சொன்னவை. அவயின்ர அக்கான்ர பிள்ளை என்ன செய்யுது எண்ட மட்டும் தெரிஞ்சிருக்கோணுமாம். அப்பப் பாருங்களன்.)
அப்பேக்கதான் ஒருவருக்கு – அதுவும் என்னை யாரெண்டு தெரியாத ஒரு சீனியருக்கு விஸ் பண்ணி விட்டன் மெஸேஜில. அவர் போன் பண்ணி ரொம்ப டீஸன்ராக் கதைச்சாரா. நான் பட்ச்மேற் எண்டு நினைச்சுட்டன். ஏனெண்டால் எங்கட அண்ணாமார் யாருமே அவ்வளவு மரியாதையாக் கதைக்கிறேல்லை.
“நான் ஆர் தெரியுமோ? தெரியாம என்னண்டு விஸ் பண்ணினீர்?”
என்ர போனில அவரின்ர பேர் கிடக்கு. அதுக்குப் பின்னால அண்ணா இல்லை. அது போனின்ர பிழை. அப்ப பட்ச்மேற்றாக்கும்.
”நீங்கள் எக்ஸ் தானே?” . எக்ஸ் எண்டுறது அந்த அண்ணான்ர பேர் பாருங்கோ. அதுக்குப் பின்னால அண்ணா இல்லை.
“ஓம். எனக்கு ஏன் விஸ் பண்ணினீர்?”
அண்ணாமார் சொன்னவை எண்டு சொன்னால் கிழிவாங்கோணும் எல்லோ. அண்ணாமாரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஏற்கனவே நான் சூடு கண்ட பூனை. காட்டிக் கொடுக்க வெளிக்கிட்டு வாங்கியிருக்கிறன்.
“”ஜஸ்ற் ஒரு விஸ் தானே. அதுக்குப் போய்…….” (வதைக்கிறீங்க எண்டுறது சொல்லலை.)
நல்ல ஒரு இன்றடக்ஸன்.
நாமளே நம்ம வதைக்கிறதுக்கு வழி செய்திட்டம். பிறகு எல் கன்ரீனில வைச்சு ஜஸ்ற் ஒரு விஸ்ஸை ஆயிரம் தரம் எழுதட்டுமாம். எழுதினாத்தானே! மீராவா கொக்கா.
இந்த எல் கன்ரீன் கன தரம் வருகுது. அது என்ன இடம் எண்டு கேட்கிறீங்களே? அது ஒரு கனவு மாளிகை. மொறட்டுவைக் கம்பஸே ஒரு அழகான இடம் எண்டால் எல் கன்ரீன் அதுக்கு உச்சம். (நான் மட்டும் தான் சொல்லிக்கணும். மொரடுவ வர நேர்ந்தால் பாத்திட்டு அட்ரஸ் தேடி வந்து அடிக்கப் படாது. சொல்லிட்டன்.) பிறகொரு சந்தர்ப்பத்தில,” மொரட்டுவ பிடிச்சிருக்கா” எண்டு கேட்க, ”இல்லை” எண்டு சொல்ல,”எது பிடிக்கேல்லை?” எண்டு கேட்க, “எல் கன்ரீன்” எண்டு அண்ணாமாரைக் கலாய்க்க ட்ரை பண்ணியிருக்கன். இது எல்லாம் பொது வாழ்க்கையில சகஜமப்பா.
கிறிஸ்மஸ்ஸிற்கு முதல் நாள் ஒருவர் எடுத்து எங்கட அண்ணாமாரின்ர ரெப் அண்ணான்ர நம்பரைத் தந்து அவருக்கு வெடிங் டே அனிவசரியாம். எடுத்து விஸ் பண்ணட்டாம் எண்டிட்டார். நாங்க தான் விஸ் பண்ணுறதில புலி ஆச்சே!
பண்ணாட்டி இவர் ஏசுவார். பண்ணினா அவர் ஏசுவார். நான் மத்தளத்திற்கு நடுவில மாட்டின சுண்டெலி கணக்கு. என்ன செய்யலாம்? எடுத்து விஸ் பண்ண வேண்டாம். மெஸேஜ் போடுவம்.
“மே யூ லீட் யுவ ஹப்பி மரீட் லைஃப்”. மெஸேஜ் பறந்தது. உடனயே அண்ணா எடுத்தார்.
”ஏன் விஸ் பண்ணினீ? யார் சொன்னது? பண்ணச்சொல்லி?”
“தெரியாது அண்ணா”
“தெரியாத ஆக்கள் என்ன சொன்னாலும் செய்வியோ?”
“………………………………………”
மீண்டும் கலவரத்தை நான் வரவழைச்சுட்டன். சும்மா இருந்த குழந்தையைக் கிள்ளி விட்ட கணக்கு அந்த விஸ் பண்ணச் சொன்ன மரியாதைக்குரிய அண்ணாவை ஆர் எண்டு இன்னமும் தெரியாது பாருங்கோ.(தெரிஞ்சா மட்டும் என்ன செய்யப் போறன்?)
மிச்சக்கதை அப்புறமா சொல்றன்.

ராகிங் கலாட்டா3

இண்டைக்கு நான் சொல்லப் போறது விசுவாமித்திரரின் கதை. என்ன கொடுமை சேர் இது? ஞாபகங்கள் எப்ப புராணக்கதையா மாறினது எண்டு நீங்கள் யோசிக்கிறது எனக்கு நல்லா விளங்குது. அது ஒண்டும் நான் பில்ட் அப் குடுத்த அளவுக்கு பெரிய கதை இல்லை.
ஒரு நாள் எடுத்தவர் ஆர் எண்டு கேட்டதுக்கு செமையாக் கிழிச்சுட்டார். அப்புறம் நான் அழுது சீன் போட்டு சபா என்ன கலாட்டா….. பேர் கேட்டதுக்கே பேய்க்கோபம் கொண்ட அந்த நபரின்ர நம்பரை நான் விசுவாமித்திரர் எண்டு தான் சேவ் பண்ணி வைச்சிருந்தன். பிறகு என்ர ஃபிரண்ட் ஒருத்தன் சொன்னான். அது விசுவாமித்திர முனிவரின்ர இயற்பெயரைப் பெயராகக் கொண்ட ஒரு மாமனிதரின் (மியாவ்…..பொய்யி…பொய்யி…) பெயராம். ஆனா என்ன…அப்புறம் தான் தெரிஞ்சுது. அந்த நம்பரின்ர சொந்தக்காரர் ஒரிஜினல் விசுவாமித்திரர் அல்ல எண்டு. அதாவது அவர் என்னை ஏசலைப் பாருங்கோ.
அவர் தவுசண்ட் மினிற்ஸ் பக்கேஜ் வச்சிருக்கிறாராம். அவருக்கு செற்றும் ஆகலை. ஏசவும் தெரியாது. (அவர் கூட எனக்கு எல் கன்ரீனில வைச்சு உனக்கு ஒழுங்காக் கதைக்கத் தெரியாதே எண்டு ஏசினாரு. இல்லைங்க. ஏச ட்றை பண்ணினார். பால் மணம் மாறாத அப்பக்கோப்பை மூஞ்சியோட அவரு ஏசி என்னை மிரட்டினா நான் பயந்திடுவனா?. ஐயோ…ஐயோ…எல் கன்ரீன் கதை பிறகு சொல்லுறன்.) ஏசத்தெரிஞ்சாலாவது ஜூனியர்ஸிற்கு எடுத்து வதைச்சு ஏசி மினிற்ஸை முடிக்கலாம். சரி செற் ஆகியிருந்தாலாவது அண்ணிக்கு எடுத்துக் கதைச்சு மினிற்ஸ் பத்தாமல் போயிருக்கும். இது ரெண்டும் இல்லை. பிறகென்ன? அதை சும்மாதானே வச்சிருக்கிறார் எண்டு அவரின்ர ஃப்றீ மினிற்ஸிற்கு அவரின்ர ஃபிரண்ஸ் வேலை வச்சிருக்கினம். டயலொக் ஒழிக!
ஆனால் ஒரிஜினல் விசுவாமித்திரரின் போனில் பேசிய போலி விசுவாமித்திரர் மகா வதைப் பேர்வழி.
“ஒரு பாட்டுப் பாடு”
“எனக்குப் பாடத் தெரியா அண்ணா”.
”அப்ப என்ன தெரியும்?”
“கத்தத் தெரியும்.”
“சரி கத்து.”
கஸ்டப்பட்டு தம் கொட்டி பாடுற எண்ட பேரில நான் கத்தி முடிய
“மறுபடியும் ஒரு பாட்டுப் பாடு.”
அடப் பாவி.
“பாடினா வைக்கலாம்.”
மறுபடியும் கத்த…..கடவுளே….என்னால முடியலை.
கடவுள் காக்க வைச்சிட்டார்.
பாட்டுப் பாடச்சொல்லிற எல்லாருக்கும் பாடிக் காட்டுறதுக்கு எண்டே சில பாட்டுகள் வைச்சிருந்தன். நோண்டி போட முடியாத பாட்டுக்கள் எண்டதால. ஏனெண்டால் நாம பாடுறதுகளில ஏதும் ஏடாகூடமான வரியள் இருந்தால் நம்மட வாயால நாமளே கெட்ட மாதிரி ஆயிடும்.(ஒரு முறை ஏதோ பாட்டைச் சொல்லிப் பாடக் கேட்க, ”பாடினா நோண்டி ஆக்குவீங்க” எண்டு அவயளிட்டயே சொல்லி, “நோண்டி ஆக்கத்தானே கேட்கிறம்” எண்டு அவயள் பதில் சொன்ன சங்கதியளும் இருக்கு.) பிறகு என்னடா எண்டால் அவயள் கேட்கிறதுகளைப் பாடட்டாம்.(இங்க என்ன உங்கள் விருப்பமா போய்க்கிட்டிருக்கு?)
”லவ்வைப் பற்றிக் கவிதை சொல்லு.”
“தெரியா அண்ணா”
“சொல்லாட்டி வைக்க மாட்டம்”
(அவயளுக்கே விளங்குது தாங்கள் ஒரு வதை தான்னு.)
”ஒரே வண்டியில் இரு வேறு பயணம்
வென்றவன் சொர்க்கத்திற்கும்.
தோற்றவன் நரகத்திற்கும்
சொல்லிட்டன் அண்ணா”
“லவ் பற்றிக் கவிதை சொல்லச் சொல்ல நீ என்ன சொல்லுறாய்”
நான் என்ன செய்யுறது…. அவை கேட்கிற மாதிரிக் கவிதை வேணுமெண்டால் மெரீனாக் காற்று எண்ட என்ர ப்ளொக்கில தான் பார்க்கணும். அதில கூட படிப்பைக் கலந்து வதைச்சுத்தான் வச்சிருக்கிறன்.
நீ லவ் பண்ணுவியோ மாட்டியோ?”
“மாட்டன் அண்ணா”
“ஏன்?”
“லவ்வில நம்பிக்கை இல்லை அண்ணா”
“சொந்தத்திற்கையோ வெளியிலயோ கட்டுவாய்?”
உதெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கு?
“அண்ணா சொந்தத்தில் கட்டினால் வலது குறைஞ்ச பிள்ளையள் பிறக்குமாம்” நான் அண்ணாவை வதைக்க வெளிக்கிட்டன்.
“என்னைப் பார்க்க வலது குறைஞ்சமாதிரியே கிடக்கு” இது வேறொரு அண்ணாவின்ர குரல். அநேகமா போன போஸ்ரில வந்த அண்ணாவா இருக்கோணும். சரியாத் தெரியேல்ல. அவரின்ர அப்பாவும் அம்மாவும் முதலே சொந்தக்காரர் போல. அது தான் அவருக்கு அளவான தொப்பி எண்டு வலிய எடுத்து போட்டிட்டார்.
”லவ்வைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
“முட்டாள் தனம்”
”லவ்வைப் பற்றி சொல்லு”
“எனக்குத் தெரியாது அண்ணா”
”சரி அப்ப நீ எழுதிட்டு எனக்கு மிஸ்கோல் போடு. இண்டைக்கே எழுது”
நாமளும் வேற வேலை இல்லாமத் தானே நிற்கிறம். எனக்குத் தெரிஞ்ச சைக்கோலொஜியில லவ்வைப் பற்றிக் கிடந்த எல்லாத்தையும் இங்கிலீஸில ட்ரான்ஸிலேற் பண்ணி அண்ணாவை வதை வதை எண்டு வதைச்சு விட்டன். சும்மாவே நான் வதைச்சா தாங்கேலா. பாவம். அண்ணா வலிய வந்து வாங்கிக்கட்டிக்கொண்டார்.
பெரும்பாலான அண்ணா, அக்காமாரின்ர போன் நம்பரை நான் வாங்கி வைச்சிருந்தன். ரோங் நம்பரில இருந்து தப்பிக்க. அதால கதைச்ச பெரும்பாலான ஆக்களை எனக்குத் தெரியும். இப்பவும் அவயளப் பார்த்தா எனக்குச் சிரிப்பு வந்திடும். பார்ரா…பச்சப் புள்ளயள் கூட நமக்கு ஏசியிருக்கு. அதுக்கு எல்லாம் நாம அழுதிருக்கம். பயப்பிட்டிருக்கம். செம காமடி தான். எங்கட பட்சில யாருக்கும் தெரியாத சீனியர் கோல் பண்ணினால் என்னட்டைத் தான் கேட்பினம். இது ஆரின்ர நம்பர் எண்டு. அந்தளவுக்கு எல்லாரின்ர நம்பரும் என்னட்டை இருந்திச்சு. ஆனா, அது கூட ஒரு வகையில் ஆப்பா அமைஞ்சிட்டுது. அது எப்படியெண்டு பிறகு சொல்லுறன். அப்ப வரட்டே?

Thursday, August 9, 2012

ராகிங் கலாட்டா2

சும்மா சொல்லக் கூடாது. எங்கட சீனியர்ஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வதை. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். ஒரு நாள் ஒருத்தர் போன் பண்ணினார். அப்பப்பான்ர பேர், அவற்றை அப்பான்ர பேர் எல்லாம் கேட்கத் தொடங்கிட்டார்.(இதெல்லாம் அவருக்கே தெரியுமோ தெரியாது. இதெல்லாம் கேட்டு என்ன என்ர வம்சாவளியே எழுதப் போறார்.) இவ்விடத்தில நான் ஒண்ட சொல்லோணும் பாருங்கோ. அது என்னெண்டால், நாங்கள் எங்கட அப்பரின்ர வழி சொந்தக்காரரோட கதை பேச்சுக் குறைவு. அவயள எங்களுக்குப் பெரிசாத் தெரியாது. ஆனாலும், அப்பரின்ர டயரில கடைசி மட்டையில வேற வேலையில்லாமல் ஒவ்வொரு வருசமும் உந்தக் கொடுமை பிடிச்ச விசயங்களை எழுதி வைச்சிருப்பர் எண்டு எனக்கு நல்லாத் தெரியும். கட்டுக் கட்டாக் கிடந்த டயரிக் கும்பலுக்குள்ள இருந்து குத்துமதிப்பா ஒண்டை வெடுக்கெண்டு இழுத்து எடுத்து சொல்லிட்டன். அதோட விடலாம் தானே! அதுக்கு முதலாவது தலைமுறையையும் கேட்கினம். உந்தப் பூராயம் எல்லாம் உவைக்கு என்னத்துக்கு?(பிழையா சொன்னாலும் தெரியாது தான்.)
பிறகு பார்த்தால் அப்பப்பான்ர அப்பா பெயர், அப்பப்பா பெயர், அப்பா பெயர், என்ர பெயர் எல்லாத்தையும் சேர்த்து சொல்லட்டாம். (ஆமா இவையள் ஜாவா புரோகிராம் எழுதினம். ஒரு மெதடை பாவிக்கிறதுக்கு பக்கேஜ் நேம், கிளாஸ் நேம் எல்லாம் சொல்லணும்.) சொன்னதும் ஒன்ஸ் மோராம். அப்பப் பாருங்களன். எனக்கு மூச்சு வாங்கத் தொடங்கிட்டு. அந்தக் கறுமத்தில அட்வைஸ் பண்ணுறாங்க. என்ன தெரியுமே?
அவையின்ர பெயர் எல்லாம் சொல்லவே இவ்வளவு கஸ்டப் படுறியே. அவை எவ்வளவு கஸ்டப்பட்டு அவயின்ர பிள்ளையை வளர்த்திருப்பினம்.”
யார் ராசன் இல்லையெண்டது. அதுக்காக அவயளே ஃபீல் பண்ணியிருக்க மாட்டினம். உங்களுக்கு ஏனப்பா வலிக்குது?
பிறகு தான் தெரிஞ்சுது. கிட்டடியில வந்த ஒரு படத்தில அப்பிடிக் கேட்டுக் கலாய்க்கிற(வதைக்கிற) மாதிரி ஒரு சீன் இருக்கெண்டு. அடக் கறுமம் பிடிச்சவங்களே! இதுக்குக் கூட கொப்பியடிப்பீங்களா?
பிறகு பார்த்தா என்ர வாழ்க்கை வரலாறை எழுதட்டுமாம். (இவ்வளவு டீடெயிலா விபரம் கேட்டீங்களே அண்ணாநீங்களே எழுதியிருக்கலாமே!)
என்ன தலையெழுத்து இதுநான் எழுதேல்ல. என்னத்த எழுதுறது. அதுக்கு பொயின்ஸாக் கேள்வி கேட்பாராம். அந்தக் கேள்விக்கான விடையை எழுதினா வரலாறு வந்திடுமாம்.
நானும் சரி எண்டன்.
எங்க பிறந்தனீ?”
ஹொஸ்பிட்டல்ல
இந்த மாதிரி பதில் சொன்னா யாருக்குத் தான் கடுப்பாகாது.
எந்த எந்த ஸ்கூலில் படிச்சனீ?”
உண்மையா உந்தக் கணக்கு இப்பவும் எனக்கு சரியாத் தெரியாது. இடப் பெயர்வு, அப்பான்ர இடமாற்றம் எண்டு பெயர் தெரியாத ரெண்டு பள்ளிக் கூடங்களில ரெவ்விரண்டு நாள் படிச்சதாய் ஞாபகம். நாலாம் வகுப்புப் படிக்கும் போது ரெண்டாம் தவணை பங்கருக்குள்ளயே முடிஞ்சுது. இதுக்கெல்லாம் நான் எங்க போறது. குத்துமதிப்பா கொஞ்சம் அடிச்சன்.
விட்டிட்டாங்கள்.
சரி சரி வை
அப்பாடா. நான் தப்பிச்சன் எண்டு நினைச்சன். சும்மா இருக்கப்படாமல் தாங்கோட் எண்டு வாய்விட்டே சொல்லிட்டன்.
அவருக்குப் பாம்புக் காது. கேட்டிட்டுது.
மறுபடியும் எடுத்தார்.
என்ன சொன்னனீ கடைசியாய்?”
முதல்ல ஒண்டும் சொல்லேல்ல எண்டு முரண்டு பிடிச்சாலும் பிறகு சொன்னது தான்.
தாங் கோட் எண்டு சொன்னன் அண்ணா
அப்பிடியெண்டா என்ன?”
தெரியாது அண்ணா
தெரியாதோ? தமிழில கதைக்கோணும் எண்டு தெரியாதே! நீ இப்ப என்ன செய்யுறாய் எண்டால் ஒரு ஏஃபோ சைஸ் பேப்பரில லெஃப்ரில இருந்து 2.5சென்ரிமீற்றர், மற்றதுகளில இருந்து 1 சென்ரிமீற்றரும் விட்டு மாஜின் போட்டு அதை ரெண்டாப் பிரிச்சு ஒரு பக்கம் தாங் கோட், மற்றப் பக்கம் அதுக்கு தமிழ் மீனிங் எழுது. எத்தனை தரம் எழுதுவாய்?”
தங்கச்சி கேட்டுக் கொண்டிருந்த போனைப் பறிச்செடுத்து
எத்தனை தரம் அண்ணாஎண்டு கேட்டன்.
உண்மையா அண்டைக்கே மறந்து போட்டுது அந்தக் கணக்கு. சொன்னவைக்குத் தெரியும் எண்டு நினைக்கிறன். ஏனெண்டால் ஒவ்வொரு நாளும் மறக்காம எடுத்துக் கேட்பினம். எழுதிட்டியோ எண்டு.
சரி அதோட முடிஞ்சுது எண்டு பார்த்தா, அடுத்த நாள் எங்கட பட்சில ஒருத்தனைக் கொன்ஃபெரன்ஸில போட்டு என்னை இன்ரவியூ பண்ணட்டாம்.
அவன் பாவி மொக்க மொக்கக் கேள்வியளாவே கேட்கிறான்.
உனக்குப் பிடிச்ச கலர் என்ன?”
பச்சை
ஏன் பச்சை பிடிக்கும்?” இது எங்கட பாசத்துக்குரிய அண்ணா.
(ஆமா இது ரொம்ப முக்கியம்)
தாவரங்கள் எல்லாம் பச்சை தானே. பச்சை கண்ணுக்கு குளிர்ச்சியான கலர்எண்டு தொடங்கி அண்ணாவை நான் வதைக்கத் தொடங்கினன். (இதெல்லாம் எங்களுக்கு பிறப்போட வந்தது)
நீ ஆடு மாடு தானே. அது தான். இலை குழையின்ர கலர் பிடிக்குதுஎண்டார் அண்ணா.
என்னைக் கலாய்ச்சிட்டாராமா….ஐயோ ஐயோ….
இதுக்குள்ள ஒண்ட சொல்ல மறந்து போனன்.
முதல் நாள் கதைச்ச ஒரு அண்ணாவின்ர கட்டளைக்கிணங்க எனக்குத் தெரிஞ்ச சீனியர்ஸின்ர பேருகளை ஃபேஸ்புக்கில சேச் பண்ணி ரிக்குவஸ்ற் போட்டிருந்தன். அதுக்குள்ள அவரும் இருந்திருக்கிறான். வேற யாரு? இப்ப நம்மள வதைச்சிட்டு இருந்தாரே ஒரு ஹீரோ ( வாளி)
நான் ஃபேஸ்புக்கில ஜீன்ஸ் போட்ட ஒரு போட்டோதான் போட்டிருந்தனான். கூலிங் கிளாஸ் போட்டு இருந்ததால அது நான் எண்டு கண்டுபிடிக்கேலா எண்ட ஒரு நம்பிக்கை தான்.
ஆனாப் பாருங்கோ.. பூதக்கண்ணாடி வைச்சுப் பாத்தோ என்னவோ அந்தக் கழுகுக்கண்ணன் கண்டுபிடிச்சிட்டான்.
அடுத்த கேள்வி
உனக்குப் பிடிச்ச உடுப்பு என்ன?”
பாவாடையும் சட்டையும்
ஜீன்ஸ் பிடிக்காதோ
சுத்தம். விளங்கிடும்
உனக்குப் பிடிச்ச கடவுள் யார்?”
ஸ்றீ ராமா இதெல்லாம் இவருக்கு என்னத்துக்கு?
பராசக்தி
ஏன் பிடிக்கும்
எனக்கு வந்த விசருக்கு அவர் மட்டும் பக்கத்தில நிண்டிருந்தால்…………..
பராசக்தி உலகத்திற்கு தாய் மாதிரி…. தாயை எல்லாருக்கும் பிடிக்கும் தானே!”
அப்ப உனக்கு அப்பாவைப் பிடிக்காதோ…..சிவபெருமானைப் பிடிக்காதோ?”
அப்பிடி எண்டு இல்லைஅம்மாவைத் தான் அதிகம் பிடிக்கும்…………”
வதைப் படலம் முடியவில்லை.
டேய் உனக்கு எதும் வேலையிருக்கே?”
அண்ணா எங்கட பட்ச்மேற்றைக் கேட்டார்.
அந்த செம்மறி ஓம் எண்டு சொல்லுவம் எண்டு இல்லை எண்டு யோசிக்குது. அவரைக் கேள்வி கேட்டிருந்தால் தெரிஞ்சிருக்கும்.
என்னால பொறுக்க ஏலாமல் நான் சொன்னன்.
ஓம் எண்டு சொல்லும் ஓம் எண்டு சொல்லும்.”
அதுக்குப் பிறகு அவன் ஓம் எண்டு சொல்ல அண்ணா ஓமாமே?
அவர் சொன்னார்.
அவள் சொன்னதைக் கேட்டு நீ எண்டதால நீ போகேலா. கேள்வியைத் தொடர்ந்து கேள்எண்டு.
பூனைக்கு விளையாட்டுசுண்டெலிக்கு சீவன் போகுது.
வதை வதை எண்டு வதைச்சிட்டு விட்டாங்கள்.
தேவாரம் பாடு, கிளி மாதிரிக் கத்து, காகம் மாதிரிக் கத்து, பாட்டுப் பாடு என எக்கச்சக்கக் கட்டளைகள். நேஸரி விளையாட்டுகளுக்கு பபிள்கம் வாங்கித் தருவதாகக் கூறி நான் தங்கச்சியை உதவிக்கு அழைத்தேன். (ஏனெண்டால் நான் நேஸரிக்குப் போகேல்ல பாருங்கோ.)
அடுத்த நாள் எடுத்து.
நான் சொன்ன வேலை செய்திட்டியா?”
என்ன வேலை அண்ணா?”
தாங் கோட் எழுதிட்டியா?”
வந்து பாக்கவோ போறார். நான் ஓம் எண்டன். எப்பிடி செக் பண்ணுவினம் போனுக்கால எண்ட தைரியத்தில. ஆனா பாருங்கோ அண்ணாவுக்கு குறிப்பில புதன் உச்சம் போல. கேட்டாரே ஒரு கேள்வி.
என்னென்ன மாஜின் அளவுகளை சொல்லு.”
மாறிச்சாறி சொல்லாமல் சரண்டர் ஆகியிருக்கலாம் பொய் தான் சொன்னான் எண்டு. நான் ஆகலை. மாட்டிக்கிட்டன். காது தப்பியது தம்பிரான் புண்ணியம்.
வாழ்க்கை வரலாறு எழுதிட்டியோ
ஓம் அண்ணா
எங்க வாசி
இதை நான் எதிர்பார்க்கல. ஆயிரம் சொல்லில எழுதச் சொன்னதை வாசிக்க சொல்லமாட்டினம் எண்ட நம்பிக்கையில நான் ரீல் விடுரன். அவர் என்னடாவெண்டால் வாசிக்கட்டுமாம். எழுதினாத்தானே?
எங்கயோ வச்சிட்டன் அண்ணா
குதப்பி சொதப்பி பொய் சொல்லிட்டன். நல்லவர் அதோட விட்டிட்டார்.
அப்புறம் பார்த்தா ஒரு இங்கிலீஸ் எஸ்ஸே எழுதித் தரட்டுமாம். இங்கிலீஸ் எக்ஸாமிற்கு எஸ்ஸே எழுதத் தந்த பேப்பரில செம்பருத்தம்பூ கீறி விளையாடின எனக்கு இங்கிலீஸ் எஸ் வந்தது எப்பிடி எண்ட குழப்பத்தில இருந்து இன்னமும் நான் மீளலை. இதுக்குள்ள எஸ்ஸேக்கு நான் எங்க போறது?
தலைப்பை அவையே விளக்கிச்சினம். அது என்னண்டால் ரெயில்வே போடினம் தானே! அது புது இடத்தில போடுறது நல்லமோ அல்லாட்டி பழைய பாதையிலயே போடுறது நல்லமோ எண்டு தான். அவர் எக்ஸாமிற்குப் படிக்கிறாராம். அஸைன்மென்ராம். கட்டாயம் எழுதட்டாம்.
நான் எழுதலாம். ஆனா என்ர இங்கிலீஸ்???????????????? ஏன் மற்றவன்ர மாக்ஸில நான் விளையாடுவான்?
அப்பத்தான் கடவுள் கருணை காட்டினார். எங்கட ஊரில கைலைநாதன் சேரிட்ட நான் இங்கிலீஸ் படிக்கப் போனனான். அந்த ஆளும் அண்டைக்கு எண்டு பாத்து இந்தத் தண்டவாளக் கதையை எடுத்தார். எனக்கு அவ்விடத்தில என்ர வண்டவாளப் புத்தி வேலை செய்ஞ்சிச்சு. எப்பிடியோ சேரிட்டக் கதைச்சு எஸ்ஸே ரெடி பண்ணிட்டன். சேருக்கு நல்ல மனசு. என்ன ஏது எண்டு அரியண்டப் படுத்தாமல் எழுதித் தந்திட்டார். சேர் நல்லாயிருக்கணும்.
அதை டைப் பண்ணி அண்ணாவின்ர மெயிலுக்கு அனுப்பி வைச்சன். (அது மட்டும் தான் நான் செய்தது.) அண்ணா என்னண்டால் அந்தக் கட்டுரையை நான் எழுதினதா நினைச்சுட்டார். என்னவோ நீ சாவகச்சேரியைக் கட்டியெழுப்பலாம் எண்ட மாதிரி ஒரு ரிப்ளை இங்கிலீஸில போட்டிருந்தார்.
அட உங்களுக்கு அந்தக் கட்டியெழுப்புற கதை தெரியாது என்ன?
அது என்ன எண்டால் எங்கட /ல் றிசல்ற் வந்த மூட்டம் எனக்கும் என்னோட ஃபிரண்டுக்கும் டென் . உதயனாலயோ வலம்புரியாலயோ பேட்டி எடுக்க வந்தவங்கள். ரெண்டு கேள்வி தான் கேட்டவை. என்ன /ல் படிக்கிறீர்,
என்ன மாதிரிப் படிச்சீர் எண்டு.
பிறகு பார்த்தா பேப்பரில நாங்கள் சொல்லாத எல்லாம் போட்டிருக்கினம். அந்தப் பிள்ளை ஒரு இஞ்சினியரா வந்து சாவகச்சேரியைக் கட்டியெழுப்புவன் எண்டு சொன்ன மாதிரி. எனக்கும் ஏதோ போட்டிருந்தவங்கள். மறந்திட்டுது.
எங்கட ஸ்கூலில 10 பேருக்கு டென் . ஆனா எங்கட ரெண்டு பேரின்ர பேட்டி (இல்லைங்க அது புனை கதை) பற்றி அனல் பறந்தது. காலப் போக்கில அந்தப் பிள்ளையின்ர பேருக்குக் கீழ வந்ததை எனக்கு சொல்லத் தொடங்கிட்டினம். அது தாங்க. சாவகச்சேரியைக் கட்டியெழுப்புற கதை.
அது நடந்தது 2007. அதைக் கூட ஞாபகம் வச்சிருந்து அண்ணா வதைச்சார் பாருங்க. தெய்வமே………..நீங்க எங்கயோ போயிட்டீங்க.
அதுக்குள்ள 2011 பிறந்திச்சு. அதுக்கு எங்கட நண்பன் ஒருத்தன் ஒரு இங்கிலீஸ் விஸ் அனுப்பினவன். அந்த எருமை அதுக்கு அனுப்பினதை சரியா வாசியாமல் எனக்கு அனுப்பி இருக்கு. நான் அண்ணாமாரின்ர கட்டளைக்கு இணங்க இன்றைய போஸ்ற் நாயகனிற்கும் அனுப்பினன். நாலைஞ்சு மெஸேஜ். றண்டமா அனுப்பினன்.(சீனியர்ஸிற்கு இங்கிலீஸில மெசேஜ் அனுப்பக் கூடாதாம். அது வேற கதை)அதில வில்லங்கம் பிடிச்ச மெஸேஜ் அண்ணாவுக்கு போயிட்டு. அண்ணா அதிஸ்டசாலி.
அண்ணா அதுக்கு தாங்ஸ் & சேம் டூ யு போட்டிட்டு விடுவம் எண்டு இல்லை. அதை வாசிச்சுப் பாத்திட்டு, எடுத்து விளக்கம் கேட்டார். அதுக்குப் பிறகு தான் நானே அதை வாசிச்சுப் பாத்தன். கறுமம். குழந்தை குட்டிகளோட புன்னகையா இந்த வருசம் கழியணும் எண்ட மாதிரி அந்த விஸ் இருந்திச்சு. ஐயோ…….
இப்ப நான் சமாளிக்கோணும். என்ன சொல்லுறது.
நான் பாடன் எண்டுறதுக்கு பாடேன் எண்டு அர்த்தம் சொன்ன சந்தானத்துக்கு ஒரு படி மேல போய் அதுக்கு புது விளக்கம் சொன்னன்.
குழந்தையளின்ர புன்னகை கள்ளங்கபடம் அற்றது தானே அண்ணா. அது மாதிரி இருக்கோணும் எண்டு இருக்கு
அவருக்கு அர்த்தம் விளங்காமலில்லை. ஏதோ என் நல்ல காலம். நல்ல மூடில் இருந்தார் போலும். கடவுள் காத்தார்.
பிறகொரு நாள் எடுத்து எந்த எந்த சேர் மாரிட்ட என்ன என்ன பாடம் படிச்சாய் ஆர் நல்லாப் படிப்பிப்பினம் எண்டு கேட்டு அதுக்குள்ள கூட வதைச்சார். (அண்ணாக்கு சகோதரங்கள் படிக்கினம் போல. ஏன் அண்ணாநீங்க படிச்ச சேர் மாரிட்டயே விடலாமே)
எனக்கு சேர் மார், ரீச்சர்மார் பற்றிக் கூடாமக் கதைக்கிறது, கொமன்ற் பண்ணுறது பிடிக்காதுன்னு சொன்னன். விட்டிட்டார். அப்புறம் அட்வைஸ்.
நான் உன்ன வதைக்கணும் எண்டு கதைக்கல. நீ யாரோடயும் மரியாதையாக் கதைக்கிறேல்ல. அப்பிடிப் பழகாத…..” எண்ட மாதிரி. (இதைத் தாம்பா எல்லாரும் சொல்றீங்க) இதுக்கு நீங்க வதைச்சதே தேவலாம்.
அடுத்த முறை விசுவாமித்திர முனிவர் அண்ணாட வதை வெரி ஸாறி கதை சொல்றேன். அப்ப வாறனுங்கோ.