Tuesday, November 1, 2022

Cat Lover

பூனைகளை வளர்ப்பவர்களுக்கு தெரியும். என்றோ ஒரு நாள் அது ஓடித் தான் போய்விடும் என்று. மறந்து விட முடியாத நேசத்தை அதன் மீது வைத்துவிடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையாக இருப்போம். அவை எம்மை சுற்றி சுற்றி வந்து, நம்பிக்கையை வெல்லத் துடிக்கும். என்றாவது ஒரு நாள் விடிகாலையில் கண்விழிக்கும் போது அதை எவ்வளவு நேசிக்கிறோம் என்று தெரிந்து கொள்வோம்.

அதன் கட்டளைகளை சிரமேற் கொள்வோம். மியாவ் என்ற சத்தத்துக்கு, அழுகிறதென்றும் சிரிக்குறதென்றும் பசிக்கிறதென்றும், ஒரு அன்னையைப் போல பேதமான அர்த்தங்களை அறிவோம். கடவுளிடம் கூட பகிரமுடியாத, காதலின் கண்டுகொள்ளாத தன்மையையும் ஊடல்களையும் காமடி என்ற பெயரிலான காயப்படுத்தும் வார்த்தைகளையும் கூட நம்பி சொல்லி வைப்போம். யார் இல்லாது போனாலும் அது இருக்கும் என்று இறுமாப்பு கொள்ளும் ஒரு நாளில் அது ஓடிப் போகும்.
கண்ணீர்-ஏமாற்றம்-விரக்தி. ஆசையாய் வளர்த்த பூனை இன்னொரு வீட்டில் அசைவ உணவுண்ணுவதை காண கிடைக்காதவர்கள் பாக்கியசாலிகள். "இனியொரு பூனைக்கு என்வாழ்வில் இடமில்லை" என்று திடசங்கற்பத்துடன் உறுதிமொழிகளை எடுத்துக் கொண்ட பின்னர், இன்னொரு பூனை எங்கிருந்தோ வரும். "இங்கிதனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்று எண்ண வைக்கும். இதுவும் என்றோ ஒரு நாள் ஓடி தான் போய்விடும் என்று தெரிந்தே எந்தக் கவலையும் இல்லாது நேசிப்போம்.
நாய்கள் விசுவாசமானவை. தாலி கட்டிய கணவன் என்று வாழும் எங்கள் பெண்களை போல, நாம் கொடுக்கும் ஒரு பங்கு உணவை அன்பென்று நம்பி-அதை விட பல மடங்கு அன்பைத் திரும்பக் கொடுப்பவை. அவற்றை நேசிப்பதில் என்ன இருக்கிறது? ஒரு பங்கு முதலில் பத்து பங்கு கிடைக்கும் வியாபாரம் அது. அவற்றுக்கும் வேறு வழியில்லை. சுதந்திரமாக வேட்டையாடி வாழ்ந்த அவற்றை, தமது வேட்டைக்கு என்று பழக்கி, பின்னர் தமது தனிமைக்கு என்று வளர்த்து, மனிதர்கள் அவற்றின் சுயத்தையே அழித்து விட்டார்கள். தம் சுயத்தை தொலைத்த அவை, வேறு வழியில்லாமல் மனிதர்களை சார்ந்தே வாழவேண்டிருக்கிறது.
அன்பையும் விசுவாசத்தையும் உணவுக்கு பதிலாகக் கொடுப்பது தான் தமது வாழ்வின் அர்த்தம் என்று எண்ணிக்கொண்டு நாய்கள் வாழ்கின்றன. முதலாளிகள் கொழிக்க உழைப்பைக் கொடுக்கும் வர்க்கம் போலவே நாய்கள். பூனைகள் அப்படி அல்ல. திமிர் பிடித்தவை. சுய கவுரவம் அதிகம். உண்பதற்கும் உறங்குவதற்கும் தமக்கென்று ஒரு தரநிலையைக் கொண்டவை. தமது தரநிலைக்கு கீழானவற்றைத் திரும்பியும் பார்ப்பதில்லை.
ஓடி தான் போகும் என்று தெரிந்தும் பூனைகளை நேசித்து இருக்கிறீர்களா? தனது உணவுக்காக வேட்டையாட தெரிந்தும் , அவை உங்கள் கவனத்துக்காகவும் நீங்கள் போடும் உணவுக்காகவும் காத்திருந்திருக்கிறதா? தொலைந்து போன பூனைக்குட்டி திரும்ப வந்ததாய் கனவு கண்டு இருக்கிறீர்களா? பக்கத்து வீட்டுப் பூனை கத்தியதை, "உனது பூனையா" என்று அன்னை சொல்ல, "இல்லை, அதன் குரல் வேறு" என்று சரியாகக் கணிக்க முடிந்திருக்கிறதா? புதிதாக ஒரு பூனை வந்த பிறகு, உங்களுக்கு என்றோ பிடித்திருந்த பழைய பூனையின் தோற்றத்தையும் இயல்புகளையும் புதிய பூனையில் தேடாமல் நேசிக்க முடிந்திருக்கிறதா? நிபந்தனையற்ற அன்பைக் கொடுக்க முடிகின்றமைக்காய் நீங்கள் என்றென்றைக்கும் பெருமை கொள்ளலாம்.

No comments:

Post a Comment