Sunday, September 26, 2021

எனக்குப் பிடித்த காதல்

 


மகாகாளியின் தன் கர்ப்பத்தில் இருந்து பிரம்மா, விஷ்ணு, மகாதேவரைத் தோற்றுவித்தாள். தன் ருத்ரமுகத்தை அருகில் கொண்டு போய்க் காட்டினாள். அஞ்சிய பிரம்மனுக்கு ஞானத்தை உணர்த்த கலைவாணியை அளித்தார். விஷ்ணு, "அவள் அழகி என நம்பு மனமே. அஞ்சாதே" என தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். அவருக்கு மாயையை கையாளும் திருமகளை அளித்தாள். மகாதேவரோ மகாகாளியின் ருத்ர உருவில் அஞ்சாமல் தன் தாயைக் கண்டார். அவளது உருவில் இருக்கும் பேரழகை உணர்ந்தார். "அன்னையை உன்னில் காண்கிறேன்" என மகாதேவர் சொல்ல, மகாகாளி பேரன்பின் ஆனந்தத்தை முதன்முதலில் அறிகிறாள். அவருடைய தாயாக இல்லாமல் மறுபிறப்புக் கொண்டு, தானே அவரைத் தேடி வருவதாக மகாகாளி வாக்களித்தாள். அவள், பேரழகியான 'சதி'யை "இதுவே உங்கள் துணைவி" எனக் காட்ட, மகாதேவர் "இது நீயில்லையே. நீதான் வேண்டும்" என்கிறார். மகாகாளி ஆனந்தம் கொள்கிறாள். பேரழகியான அமைதியான 'சதி'ஐ விடுத்து "நீதான் வேண்டும்" என ருத்திர ரூபம் கொண்ட அவளை மகாதேவர் கேட்டது அவள் மனதை மகிழச் செய்கிறது. "இவளுக்குள் இருப்பது நானே. இவளுக்குள் இருந்து என்னை நீங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். அதுவும் நேரடியாக சொல்லக் கூடாது" என வாக்குறுதி வாங்குகிறாள். "நீங்கள், நான் வரும்வரை தவத்தில் காத்திருங்கள்" எனக் கூறி மகாகாளி மறைந்து விடுகிறாள்.


மகாகாளிக்காக பன்னெடுங்காலம் தவத்தில் காத்திருக்கிறார் மகாதேவர். அந்த மகாகாளியை துணையாகப்பெற எவ்வளவு காலம் காத்திருப்பதும் தகும் என அவர் அறிவார். 'சதி' யாகப் பிறந்து மகாதேவரை மணந்த தேவி, மகாதேவர்மேல் சொல்லப்பட்ட வார்த்தைகள் தாளாமல் அக்கினிப்பிரவேசம் செய்கிறாள். தேவியை அவள் தான் மகாகாளியென உணரவைக்கும் மகாதேவரின் முயற்சி தடைப்படுகிறது. மகாதேவர் மீண்டும் தாடி வளர்த்து, "இனி பெண்களே வேண்டாம்" என கடும் தவத்தில் இருக்கிறார். 'பார்வதி'யாக மறுபிறப்பு எடுக்கும் மகாகாளி ஒருவாறாக மகாதேவர் மனதில் இடம்பிடிக்கிறாள்.  பார்வதியிடம் 'சதி' பற்றிக் கூறுகிறார் அவர். பார்வதியோ, தானே 'சதி' என அறியாள். மகாதேவர் 'சதி'யிலும் 'பார்வதி'யிலும் மகாகாளியையே காண்கிறார். அவர் 'சதி' பற்றி சொன்னது அவளுக்கு பழைய பிறப்பு ஞாபகம் உண்டா என அறியவே. இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். 


தேவி கோபக்காரி. ஒரே சண்டை தான். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒன்று அவளது வலிமையின் எல்லையை அவள் அறியாதது. மகாதேவரையே அவள்தான் தோற்றுவித்தாள். அவ்வளவு வலியவள். அத்தோடு மகாதேவரிடம் 'நாம் தானே காதலை சொன்னோம். அவராக என்னைக் கண்டடையவில்லை' என்ற எண்ணம் கூட அவளிடம் இருந்தது. அத்தோடு அவரது முதல் மனைவி 'சதி' பற்றி சொன்னதும் எரிச்சலைக் கொடுத்தது. இன்னும் அவளை மறக்கவில்லை எனக் கோபம். ஆனால் அவர் அவளுக்காகக் காத்திருந்த காலங்கள், அவள் பிரிந்த போது அவர் அடைந்த துயர் அவள் அறியாதது. அதற்கும் மேல் காளி கறுப்பழகி. மகாதேவர் செந்நிறம். அதற்கும் மேல் தேவி பிறப்பால் மனிதகுலத்தவள். மகாதேவரோ கடவுள். இவருக்கு நான் தகுதியானவளோ என்று எண்ணம் - தாழ்வு மனப்பான்மை. சர்வவல்லமை படைத்த மகாகாளி, மகாதேவனின் காதல் போதாதென எண்ணி மனம் வருந்தி பிரிந்து செல்வது ஒருபக்கம் மகாதேவருக்கு சிரிப்பைக் கொடுத்திருக்கும். இல்லையா?


தேவியை சாதாரண கணவன் போல காத்துக் கொள்ளாமல் அவளது வல்லமையை அவளறியச் செய்ய அவளை ஆபத்து நேரத்தில் நீயே உன்னைக் காப்பாற்றிக் கொள்ளென விட்டுவிடுகிறார் மகாதேவர். தானே மகாகாளியென தேவி அறிகிறாள். ஆனால் அவளது வலிமையின் எல்லையை அவள் அறியாள்.  ஒருமுறை மகாதேவர் அவளை 'கறுப்பி' என சொல்லிவிடுகிறார். சாதாரண பெண் போல சண்டையிட்டு பிரிந்துசென்று தவம்செய்து தானும் சிவப்பியாகி நின்றாள். பின்பொருமுறை பணியாள் ஒன்று பகடை விளையாட்டில் மகாதேவருக்கு வக்காளத்து வாங்கியதற்கு சண்டையிட்டாள்.


எப்போதும் சண்டையிட்டால் பிரிந்து சென்றுவிடுவாள். சிலசமயங்களில் பிரியும் போது, சிலகாலங்களின் பின்னர் தானே வந்துவிடுவதாக கூறுவாள். சிலசமயங்களில் நீங்கள் தேடிவந்தால் மட்டுமே வருவேன் என்று கூறுவாள். சிலசமயங்களில் செல்வதைத் தடுக்கவில்லை என்பதையும் கூறி மேலும் கோபமுற்று பிரிந்து செல்வாள். என்ன ஆனாலும் அவளது துயர் தீர்ந்த பின்னர் அவரை சேர்ந்து விடுவாள். அவள் நதி. மகாதேவர் சமுத்திரம். எங்கெங்கே அவள் சென்றாலும் கடைசியில் சேர்ந்தே ஆகவேண்டும். அவ்வளவு தவம் செய்துதான் மகாதேவர் அவளை துணையாகப் பெற்றார். சுயாதீனமான சர்வவல்லமை கொண்ட தேவி எண்ணிலடங்கா சண்டைகளின் பின்னரும் மகாதேவரையே நாடுவதற்கு அதுவே காரணம். மகாதேவரின் அந்தத் தவம் - அவருடைய தீராக்காதல் அவளை அவரிடமே சேர்க்கும் வல்லமை கொண்டது. ஆம். தேவி பிரிந்து செல்லும் போதெல்லாம் மகாதேவர் அமைதியாகத் தியானத்தில் அமர்ந்து விடுவார். தனது தொழிலைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பார். அதிகமாகத் தேவியின் இன்மையை உணரும் போது அவர் அவளைத் தேடிச்செல்வார். அல்லது அதிகமாக மகாதேவரின் இன்மையை உணரும்போது அவள் அவரைத் தேடிச் செல்வாள்.  ஒரேயொரு முறை மகாதேவர் தேவியைப் பிரிகிறார். அப்போது தேவியோ உலகை அழிக்கத் துணிந்துவிடுகிறாள். அந்த ஒரு பிரிவில், அவள் ஒவ்வொரு முறையும் பிரியும் போதும் அவர் அடைந்த வலியைத் தேவி அறிந்து கொள்கிறாள். "வெளியே இருக்கும் நான், உன்னைப் பிரிந்தாலும்- உனக்குள் இருக்கும் என்னைத் தேடு" என பிரிவிலும் வழிகாட்டியாய் இருக்க முன்பொருநாள் மகாதேவர் சொன்ன வார்த்தைகளுடன் தேவி மீள்கிறாள். அதன் பின்னர் தேவி மகாதேவரைப் பிரிந்ததேயில்லை. அதன் வலியை அவள் உணர்ந்து விட்டாள். தான் உணர்ந்த வலியை தன் காதலனுக்குத் தேவி கொடுக்க மாட்டாள். பிள்ளைகளுக்கு மணமுடித்து வைக்கும் தேவி மனநிறைவு அடைகிறாள். அவளுக்குள் அந்த நொடியே அனைத்தும் அடங்கி விடுகிறது. தேவி தனித்து நிற்கிறாள். "எங்கே எனது வீடு. எங்கே என் பிள்ளைகள். எங்கே என் கணவன்" என கண்கலங்கி நிற்கிறாள். அவளுக்குள் இருக்கும் அவளது மகாதேவன் "நீ மட்டுமே சத்தியம். அனைத்தும் உன்னுள் அடக்கம். உன்னால் மீண்டும் உன்னுள் இருந்து அனைத்தையும் தோற்றுவிக்க முடியும்" என்கிறார். மகாதேவரின் காதலின் எல்லையையும் தனக்குக் கொடுத்த வாக்கிற்காய் அவர் பட்டபாட்டையும் தனது வலிமையையும் ஒருங்கே அறியும் தேவி மீண்டும் தனக்குள் ஒடுங்கிப்போன அனைத்தையும் மீள பிரித்து ஆனந்தம் காண்கிறாள். இனி சந்தேகங்கள் இல்லை. சண்டைகளும் இல்லை. 


மகாதேவரின் காதல் அளப்பரியது. மிகச்சிறந்த காதல் ராதாகிருஷ்ணருடையது இல்லை. அது மகாதேவர் மற்றும் மகாகாளியின் காதலே. எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு மகாகாளி இருக்கிறாள். என்ன செய்வதென அறியாது நிற்கும் போது, வழி சொல்லும் கலைவாணியாகவும், ஏதும் இல்லாத நிலையிலும் எல்லாம் இருப்பதாய் நிறைவு தரும் மகாலக்ஷ்மியாகவும், அனைத்தையும் ஜெயித்து விட முடியும், அதற்கு தான் துணை நிற்பதாகக் கூறும் பார்வதியாகவும், மோட்சத்திற்கு வழிகாட்டியாகவும்-மோட்சமாகவும் அந்த மகாகாளி நிற்கிறாள். தன் துணையின் திறமைகளை வெளிக்கொணரும் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் மகாதேவர் இருக்கிறார். அதிகம் பேசாவிடினும் அவரின் தீராக்காதல் தெய்வீகமானது. அவ்வாறு துணைநிற்கும் பெண்களிலும் ஆண்களிலும் மகாகாளியையும் மகாதேவரையும் காண முடியாதவர்களே நாத்திகர்கள். அவர்கள் வாழும்போதே நரகத்தில் உழல்வார்கள். நரகத்துக்குச் செல்ல அவர்களுக்கு மறுபிறப்புத் தேவையில்லை.

No comments:

Post a Comment