Thursday, June 30, 2016

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

நடராஜப்பத்து

பாடல் : 1

மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
 பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
 பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
 பொன்னும் நீ, பொருளும் நீ, ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
 புகழொணா கிரகங்கள் ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
 ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 2
 மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
 மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
 கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
 குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
 ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
 நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி துவேளை, விருதோடு ஆடி வருவாய்
 ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
பாடல் : 3
 கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
 காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
 உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
 உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
 தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
 தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
 இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
 ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
 பாடல் : 4
 வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
 அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
 ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
 கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
 பாடல் 5:
 நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
 சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
 தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
 விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
 வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ
 இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

 பாடல் 6:
 வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
 மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
 மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
 தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
 பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
 பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
 என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
 ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 7
 அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
 அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
 முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று
 உணர்வனோ
 தன்னை நொந்தழுவனோ ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
 தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ இன்னுமென்ன
 பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
 ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 8
 காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
 கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
 தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லை
 யென்றனோ
 தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
 வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
 வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
 ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 9 :
 தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
 தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
 சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,
 சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
 ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம்
 சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
 யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
 ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 10 :
 இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
 இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
 என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோ
 இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
 உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்
 கெடுவனோ,
 ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
 என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
 ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

 பாடல் : 11
 சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை,
 சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
 பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
 பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
 என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்
 கசக்கி,
 கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி சிறுமணவை
 முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.


மாமிசம் வேணாம்கிறீங்க... கண்ணப்பர் படைக்காத மாமிசமா?

எங்க மிஸ்ஸிட்ட ஒரு நாள் நான் கேட்டன்...

“ஏன் மிஸ் கண்ணப்பர் கூட கடவுளுக்கு மாமிசம் தானே படைச்சார்? அப்புறம் நாங்க மட்டும் ஏன் மச்சம் சாப்பிடக்கூடாது” எண்டு..

மிஸ் சொன்னா...

“கண்ணப்பர் தன்ர கண்ணை இடந்து வைச்சார்... உம்மாலயும் இடந்து வைக்க முடியும் எண்டா சாப்பிடலாம்...”

என்னால அதை ஏத்துக்கொள்ள ஏலலை...

அப்புறம் சொன்னா...

“கண்ணப்பரின் பக்தி - அன்பு எண்டுறது அவர் படைச்ச மாமிசத்தில இல்லை... கடவுளுக்கு கண்ணால ரத்தம் வந்தப்போ தன்ர கண்ணை இடந்து வைக்கத் துணிஞ்சதில தான் இருக்கு... கடவுள் எங்களிட்ட எதிர்பார்க்குறது அந்த அன்பைத் தான்”...

என் தங்கச்சிட்ட அதை சொன்னன்... அது கேட்குது.... கண்ணப்பர் அந்தக் காலத்திலயே கண்மாற்று சத்திரசிகிச்சை தெரிஞ்சு வைச்சிருக்காரு.. ஹீ இஸ் கிரேட் எண்டுட்டுது....

கடவுளை எவ்வளவு நேசிக்கணும்?

கடவுளை நேசிக்கிறதுக்கு ஒரு அளவிடையா எண்டு கேட்பீங்க...

சரியை கடவுளை ஆண்டானாகவும் தன்னை அடிமையாகவும் பாவிக்கிறது... என் கடன் பணி செய்து கிடப்பதே! எண்ட மாதிரி! உரிமை குறைந்த உறவு..

கிரியை எண்டுறது கடவுளை தந்தையாகவும் தன்னை மகனாகவும் பாவிக்கிறது....  உரிமை அதிகம் மகனுக்கு... ஆனா அப்பா சைட்டால கண்டிப்பும் கிடைக்கும்....

யோகம் தோழமை உறவு... என் ஃபிரண்டைப் போல யாரு மச்சான்... உரிமை ரொம்ப அதிகம்.. கண்டிப்பு இல்லை... ஃபிரண்டின்ர பிளேட்டில இருக்குற சாப்பாட்டை ஆட்டயப் போடலாம்.... ஆனாலும் ரெண்டு பேரும் வேற வேற தான்...

ஞானம் இறைவனைத் தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் நினைப்பது... வேறாயினும் வேறு இல்லை.... உலகத்திலயே உயர்ந்த அன்பாகக் கருதப்படுவது அதைத் தான்... ஒரு பெண் தன் தலைவனுக்காக பலவற்றைத் தியாகம் செய்கிறாள்... காரணம் ஒன்று தான்.. அவன் மீதுகொண்ட அன்பு...  அவ்வளவு சிறந்ததா கடவுளை நேசிக்கணும்....