யசோதரா பேரழகி...
வயதில் மிகவும் சிறியவள்...
சித்தார்த்தன் துறவு பூண்டுவிடுவான் என்று அவன் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்கள் கூறியமையால் அஞ்சிய மன்னன் சுத்தோதனன் பிணி, மூப்பு, சாக்காடு என்னும் மூன்றையும் சித்தார்த்தனின் கண்ணில் இருந்து மறைத்து அவரை வெளியே செல்ல விடாமல் அரண்மனை என்னும் கெளரவமான சிறையில் அடைத்து வைத்திருந்தான்... வாழ்க்கையின் பேரின்பத்தை அடையவிடாமல் அவரை சிற்றின்ப மயக்கத்தில் தொடர்ந்து பேண வேண்டியும் சரி மகன் துறவு போனாலும் பேரனாவது தனக்குப் பின் ஆட்சி செய்வான் என்று கருதியும் பதினாறு வயதிலேயே அவரிற்கு யசோதரையினை மணம் முடித்து வைத்ததோடு அந்தப்புரத்தில் துள்ளிக்குதிக்கும் கன்னிப்பெண்கள் கூட்டத்தையும் அள்ளிக் குவித்து வைத்திருந்தான் மன்னன்...
சித்தார்த்தனின் பிற்காலத்துறவு பற்றிய எந்த எதிர்வுகூறலையும் யசோதரை அறிய மாட்டாள்.. சித்தார்த்தர் துறவு செல்வார் என்று அறிந்தும் மன்னனின் சுயநலத்திற்காக யசோதரை பலியிடப்பட்டாள்.... சித்தார்த்தன் வெளியே செல்ல அனுமதி இல்லை... அவருக்கு மட்டும் அரண்மனைக்கதவுகள் அடைக்கப் பட்டு இருந்தன... தோழனையும் யசோதரையையும் பெற்றோரையுமே உலகமென வாழ்ந்தார் சித்தார்த்தன்.... அன்பு, ஜீவகாருண்யம் என்பன அவரின் சிறுவயதிலேயே அவருக்கு இயல்பாக அமைந்திருந்தன....
பிற்காலத்தில் புத்தராகி உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசித்து பலியிடலைத் தடுக்கப் பிறந்த சித்தார்த்தன் தான் பிறப்பிலேயே கொண்டு வந்த அவ்வளவு அன்பையும் யசோதரை மீது காட்டாமல் வேறு யார் மீது காட்டுவார்... கணவரின் அன்பைப் பூரணமாகப் பெற்ற யசோதரை மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்... அவர்களுக்கு ராகுலன் என்னும் மகன் பிறந்தான்...
விதி விடவில்லை...
சித்தார்த்தன் புத்தராகும் காலம் வந்தது....
பலியிடப்படவென்றே வளர்க்கப்பட்ட ஜீவன்களுக்கு நல்லகாலம் பிறந்தது... அவற்றிற்கெல்லாம் சேர்த்து தான் ஒருத்தியே பலியிடப்போவது அறியாமல் பஞ்சணையில் ஆனந்தமாக சயனித்திருந்தாள் யசோதரை...
எறியப்பட்ட கல்லினால் பாசியானது விலகி அதன் கீழுள்ள தெளிந்த நீர் வெளி வருவது போலவும் அடியில் நீரோட்டம் உள்ள பாறையானது அகற்றப்பட்ட பின்னர் நன்னீரானது பீச்சியடிப்பது போலவும் பலூனில் அடைத்து வைக்கப்பட்ட காற்றானது பலூன் குத்திக் கிழிக்கப் பட்ட பின்னர் வெளியே வீசியடிப்பது போலவும் கோட்டைக்கதவுகளைத் திறந்து கொண்டு சித்தார்த்தர் வெளியே கிளம்பி விட்டார்...
அரண்மனைக் காவலாளிகள் அன்றென்று பார்த்து அயர்ந்து போனார்கள்... கதவு அன்றைக்கென்று திறந்தே இருந்தது.. சிறையில் உதித்த உலகம் முழுவதும் போற்றத் தக்க கிருஸ்ணனை கோகுலத்திற்கு எடுத்து செல்ல விளைந்த போது அரக்கர்கள் அழிந்து தர்மம் தழைக்க வேண்டி திறந்து கொண்ட கதவுகள் போல உலகின் அகந்தை இருள் நீங்கி அன்பு செழிக்க வைக்கப் போகும் சித்தார்த்தர் வெளியேறவென்றே கதவுகள் திறந்திருந்தன...
போனார்.. பிணி - மூப்பு - சாக்காட்டினை முதன் முறையாகக் கண்டார்... மழலை போல கேள்வி மேல் கேள்வி கேட்டார்... பதிலை அறிந்த பின் சிந்தித்தார்...
’எல்லாம் பொய்யா? மாயை தானா? எல்லாருக்கும் நோய் வருமா? அரண்மனையில் அன்புப் புன்னகை பூக்கும் யசோதரை மூப்படைவாளா? நோய்வாய்ப்படுவாளா? கடைசியில் இறந்து போவாளா? பச்சிளம் பாலகனான என் மகன் ராகுலன், என் அன்புத்தந்தை எல்லோருக்கும் இதே கதிதானா? எல்லாம் சொப்பனந்தானா?’
எண்ணிலடங்கா கேள்விகள் மனதில் உதித்தன... விடை தேட வேண்டும்... தனிமை வேண்டும்... மூடனாக வாழ்ந்து விட்டேன் இது வரை.. வாழ்வின் உண்மைத் தத்துவம் அறியாமல் போனேன்... போதும் பார்த்தவை... அரண்மனை திரும்பினார்...
யசோதரை இன்னும் எழுந்திருக்கவில்லை... அவள் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை... அரண்மனை வாழ்வைத் துறந்து விட்டு போய்விட்டார் காட்டுக்கு...
அவர் போன செய்தியை அவள் பின்னரே அறிந்து கொண்டாள்....
கோபம் பொத்துக் கொண்டு வந்தது...
திட்டினாள்... சத்தமிட்டாள்... ரெண்டாவது சம்சாரத்திடம் சென்று விட்ட கணவனை தூற்றும் பெண் போல ஆக்ரோஸமாக ஏசினாள்.. வாழத் தெரியாமல் கோழை போல் துறவியாகி விட்டார் என்று அரற்றினாள்...
ஆதங்கம், கோபம், விரக்தி, ஆத்திரம், எரிச்சல், அழுகை என அவள் மனநிலை கடைசி நிலையை அடைந்து விட்டது... பொங்கிவரும் அலைகள் தாக்க ஆளில்லாமல் கரையை அடித்து விட்டு மறுபடியும் கடலில் சங்கமமாவது போல அவள் கொண்ட கோபம் காட்டுவதற்கு அங்கு புத்தர் இல்லாமையால் அவளையே தாக்கியது... வரும் போது பொங்கி வரும் அலைகள் மோதி விட்டு மீளும் போது வேகம் குறைவது போல வெடித்த விசும்பல் அழுகையாக மாறத் தொடங்கியது...
பாவம்... அபலைப் பெண் அவள்...
அன்பு என்பது மகிழ்வைத் தருகிறது என்று எல்லோரும் சொல்கிறார்களே.... அன்பு கிடைக்காத ஒருவன் கூட மகிழ்வாக இருந்துவிட முடியும்.. அதைப் பெற்று விட்டு இழந்தவர்களால் அது முடியாது.. கிடைக்கும் போது சுவர்க்கமாகவும் இழந்த பின்பு நரகமாகவும் மாறி விடும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டாள்.... அழுகை மட்டும் நிற்கவில்லை... பெருகிவரும் கங்கையோடு அடித்து செல்லப்படும் காற்றினால் சாய்ந்து தூக்கி வீசப்பட்ட மரத்தைப் போல அவள் மனம் உணர்ச்சியற்றுப் போனது... எண்ணங்கள் மட்டும் அம்மரம் வெள்ளத்தினால் இழுத்து அடித்து பாடுபடுவதைப் போல ஓடிக்கொண்டே இருந்தன...
அரிச்சந்திரபுராணத்தில் சந்திரமதி நெல்லுக்குத்துவது கண்டு தேவர்கள் வருந்திச் சோர்வதாக சொல்லியிருப்பார்கள்... நெல்லுக் குத்துவது ஒன்றும் அவ்வளவு துன்பம் இல்லை.... கிராமப்புறத்தில் பெண்கள் சாதாரணமாக செய்யும் காரியம்தான் அது.. அதற்கு ஏன் இவ்வளவு பில்ட் அப் என்று கேட்டால் சாமானியப் பெண்கள் செய்வது புதிதல்ல... அது அவர்களுக்குப் பழக்கமான ஒன்று..... அவர்களின் கைகள் உலக்கை பிடித்தே காய்த்துப் போய் இருக்கும்.... உலக்கையை லாவகமாக கைகளை மாற்றி மாற்றிப் போடுவதும் பிடிப்பதும் அவர்களுக்கு கைவந்தகலை.... அவர்கள் கல்லிலும் முள்ளிலும் காலணி இல்லாமல் நடந்து பழகியவர்கள்... காலில் முள் தைத்தாலும் தெரியாது.. இரத்தம் வந்து காற்றுப் பட்டு அதனால் குளிர்மை உண்டாகும் போதே காலைப் பார்த்து அட முள் தைத்து விட்டதென்று ஆச்சரியம் கொண்டு முள்ளை இன்னொரு முள்ளால் தோண்டி அகற்றிவிட்டு வெட்டொட்டி பிழிந்து சாறிட்டுக் கொள்வர்... அதுவும் அருகில் கிடைத்தால்தான் உண்டு... இல்லையென்றால் கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து தானே! (இங்கு சாமானியப் பெண்களைக் குறை கூறவில்லை.. அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் வலியவர்கள் என்பதையே சொல்ல வந்தேன்...) ஆனால் சந்திரமதி அப்படியா? மகாராணி அல்லவா? அவளால் முடியுமா?
அது போலவே சாமானியப் பெண்கள் கணவனைப் பிரிந்தாலும் வருந்துவர்தான்... அவர்களின் கணவன் வேலைக்காக வெகுதூரம் சென்றிருப்பான்... வீட்டு வேலை செய்ய வேண்டும்... .... விளையாடுவது போல விளையாடி விட்டு ஒரு வேலை செய்துவிட்டு திரும்புவதற்கிடையில் அடிபட்டு விட்டு அழும் ஒன்று... சொல்லச் சொல்லக் கேளாமல் அடுப்புக்கு அருகில் சென்று விளையாடும் ஒன்று... துவைக்கவென்று கிணற்றடிக்குப் போனால் ஆகிப் போயிட்டு கையில் அழைந்துவிட்டு சிணுங்கும் ஒன்று.. அதைப் பார்க்கப் போயிட்டு வாற காப்பில திறந்து கிடந்த கதவுக்கால போய் வெட்டி வைச்ச மீனை ஆட்டயப் போயிட்டுப் போயிடும் காகம்... கணவனுக்காக அவர்கள் செலவிட்ட நேரம் மிகக் குறைவாகவே இருக்கும்....
எனக்கு அப்பிடியா? அரண்மனையில் குளிப்பாட்டிவிடக்கூட ஆட்கள் இருக்கும் போது எந்நேரமும் என்னை நீங்காது நின்ற என் கணவருக்கு இப்போது மட்டும் என்ன ஆகிவிட்டது.... என்றெல்லாம் எண்ணமிட்டாள் யசோதரை....
நீ ஒன்று தந்தால் நான் ஒன்று தருவேன் என்று கணக்கு வைத்துக் கொடுத்த முத்தங்களின் கணக்கு இன்னும் பாக்கி இருக்கிறது... கன்னத்தில் கொடுத்தவற்றின் ஈரம் இப்பொழுது அழுத கண்ணீரால் அழிக்கப் படலாம்... அதன் நினைவுகள் மறக்குமா எனக்கு? அவருக்கு மட்டும் எப்படி மறந்தது? என்றெல்லாம் குழம்பித் தவித்தாள்...
என் அழகு, இளமை இன்னும் கெட்டுவிடவில்லையே என்று கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள்... எந்நேரமும் பிரியாதிருந்ததால்தான் சீக்கிரம் சலித்துவிட்டதோ என்று தனக்குத் தானே ஆயிரம் முறை கேட்டாள்....
என் இளமை தான் தீர்ந்துவிடவில்லையே.... ஆசை என்னும் தீயால் தன் இளமை எரியப் போகிறதோ.... சித்தார்த்தர் மீதிருந்த ஆசை இன்னும் அற்று விடவில்லை.... அதன் கொடுமையால் அற்பசுகத்திற்காக அஞ்சி தன் கற்பை இன்னொருவனுக்கு விற்றுவிடுவேனோ என்றெண்ணி அச்சமும் கொண்டாள்... சித்தார்த்தன் மீது கொண்ட ஆசை அவளை அச்சமடையச் செய்தது...
புத்தர் போதிமரத்திற்கு கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார்... ஊர் ஊராக சென்று அன்பு குறித்து உபதேசம் செய்து கொண்டிருந்தார்... அவர் அனைவருக்கும் அன்பு போதிக்க வேண்டி அவருடைய பயணம் என்னும் வேள்வியில் அவரையே உலகம் என வாழ்ந்த அன்பின் திருவுருவம் ஆகுதியாகிக் கொண்டிருந்தது...
என்னுடன் என் மகன் ராகுலன் இருக்கிறான்.. என்று நிம்மதி பிறந்தது... அவர் நினைவுடன் அரண்மனையில் வாழலாம் என்று முதலில் எண்ணமிட்டாள்...
மறுகணமே எப்படி முடியும்..?
ஒளிந்து விளையாடிய அந்தப்புரத்தூண்கள் என்னவரை எனக்கு நினைவூட்டாதா?... இனி இது மஞ்சமே அல்ல.. என் நெஞ்சை எரிக்கப் போகும் தீ.. மலர் தூவப்பட்ட முள்படுக்கை... இரவாகிவிட்டால் இருட்டின் அச்சம் நெஞ்சைக் கொல்லப்போகிறது... அணைத்துக் கிடந்த ராத்திரிகளினால் மீண்டும் ஆசை எட்டிப்பார்க்காதா? அச்சம் ஒருபுறம் ஆசை ஒரு புறம் நான் தினமும் ஆசை எனும் யாகத்தில் என் தேகத்தை எரிய வைக்கப் போகிறேனா?
அறை முழுவதும் அவர் சிரிப்பொலிகள் கேட்கும்... பேசிய பேச்சுகள்... மீண்டும் ஏன் அவை... வேண்டாம்...
அத்தனை ரணகளத்திலும் இரண்டு சந்தோசங்கள் அவளுக்கு... ஒன்று அவர் என்னோடு இல்லாவிட்டாலும் என்றென்றும் என்னவரே ஆவார்.... இன்னொரு மனைவி தேடிப் போகவில்லையே அவர்.... என்னை மட்டுமா துறந்தார்? எல்லா இன்பங்களையும் அரசபோகத்தையும் அல்லவா துறந்தார் அவர்?
அடுத்தது இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்திலும் அன்பு செலுத்துகிறாரே.. அவ்வளவு அன்புக்கும் ஒரு காலத்தில் பாத்திரமாக இருந்தவள் நான் அல்லவா? அன்பு அந்த இடத்தில் ஆனந்தம் அளித்தது.... மனதில் ஒரு சந்தோசம்... நீண்ட பெருமூச்சு விட்டாள்...
சரி நான் அரண்மனையில் சுகமாக வாழ்வேன்... அவர் என் செய்வார்... கல்லிலும் முள்ளிலும் நடந்து வேகாத வெயிலில் வெந்து அத்தனை வருடங்கள் வெயில் படாத மேனி... அரண்மனைக்குள்ளேயே பாதணி அணிந்து பழக்கப் பட்ட பாதங்கள்... நினைக்கவே கண்ணீர் முட்டியது...
அவர் வாழாத அரச போகம் எனக்கெதற்கு? அரண்மனை வேண்டாம்....
இந்தாருங்கள்... இது அவர் மகன்... இந்த நாட்டின் அடுத்த வாரிசு... அவனை மன்னனாக்குங்கள்... நான் போகிறேன்....
முடியை மழித்துக் கொண்டாள்... அவர் ரசிக்காத அழகு எதற்கு? அலங்காரம் எதற்கு? அரண்மனையை விட்டு வெளியேறி ஊருக்கு ஒதுக்குப் புறம் சென்று வாழ்ந்தாள்... பெளத்தமதத்தைத் தழுவிக் கொண்டாள்...
எவ்வளவு காலம் தான் தானே அரசபோகம் ஆள...
சுத்தோதனன் சித்தார்த்தனை வரவழைக்க எண்ணம் கொண்டார்... அரச ஆட்சியே வேண்டாம் என்று துறந்து சென்ற சித்தார்த்தர் மீண்டும் வந்து நாட்டு நிலமை கண்டு அரசாட்சியை ஏற்பார் என்று நப்பாசை கொண்டார் அவர்... நடக்குமா அது?
புத்தர் வந்தார்... யசோதரை அவரைப் பார்க்க வரவில்லை... அவரே வந்து பார்க்கட்டும் என்று பிடிவாதம் கொண்டாள்....
இன்னும் தன் மீது அன்பிருந்தால் வந்து பார்ப்பார் என்று அவரின் அன்புக்கு அவள் வைத்த சோதனை அது? பேரன்பு கொண்ட புத்தர் அவளை வந்து பார்த்தார்...
கதறியழுதாள் அவள்...
புத்தர் முகத்தில் சலனமில்லை...
உலகமும் உறவும் நம்மைப் பிரிக்கவில்லை... உறவு இருந்தது ஒருகாலத்தில்... வெளிவேசம் போட்டு பிக்குனியாய் வாழ்ந்தாலும் நான் பெண்ணல்லவா? நீங்கள் இன்னமும் என் மனதில் எண்ணமாய் வாழ்கிறீர்கள் என்று எவ்வாறு சொல்ல முடியும்... அது நாம் இருவரும் கொண்ட விரதத்திற்குப் பங்கமல்லவா? இந்த நிமிடத்தில் தண்டவாளம் போல் அருகில் நிற்கிறோம்... தொட்டுக்கொள்ள உறவில்லை....நாம் தொட்டுக்கொண்ட காலங்கள் முடிவிலியில் தொடும் தண்டவாளங்கள் போலவும் கடலும் வானும் தொடுவது போலவும் தூரத்தில் தெரிகின்றன.... அவை போலவே இதுவும் பிரமை தானோ? நிஜத்திலே நீங்களும் உலகத்துக்காக நானும் அதை இல்லை என்பதாய் நடந்து கொள்ள வேண்டும்... நீங்கள் மட்டும் நிஸ்களங்கமாய் நின்றுகொண்டிருக்கிறீர்கள்... உங்களுக்காய் அழுது என் துறவினை நான் களங்கப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு மட்டும் ஏன் ஞானம் கிடைக்காமல் போய்விட்டது...? நீங்கள் பெற்ற ஞானத்தில் எனக்கும் பங்கு தாருங்கள்...
என்றெல்லாம் நினைத்து நினைத்து அழுதாள்...
ராகுலனைக் கூட்டி வந்து காட்டினார்கள் உங்கள் மகன் என்று...
அவனை புத்தசங்கத்தில் சேருங்கள்.... தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்து அவனுக்கு நான் கொடுக்கும் உயர்ந்த சிறப்பு அதுவேயாகும் என்றார் புத்தர்....
யசோதரைக்கென்ன வந்தது? ம்ம்ம்.. உங்கள் மகன்... நான் துறவி.. அவனை என்னவாச்சும் செய்யுங்கள் என்ற ரீதியில் விட்டுவிட்டாள்..
சுத்தோதனன் தான் பாவம்... மகனும் துறவு... பேரன் ஆள்வான் என்றால் அவனும் துறவு...
பிக்குனியாகவே கடைசி வரை வாழ்ந்து முடித்தாள் யசோதரை...
புத்தர் ஞானம் பெற்றது சுத்தோதனனுக்கும் பிரச்சினை தான்.... நாட்டை ஆள வாரிசு இல்லாமல் போய்விட்டது.... தாய் கொஞ்சக் காலம் அழுதிருப்பாள்... மகன் அவருடனேயே பிக்குவாகப் போய்விட்டான்... தோழன் இன்னொருவனைத் தோழனாக்கியிருப்பான்... இல்லை மனைவியோடு மகிழ்வாய் இருந்திருப்பான்...
யசோதரை மட்டும் தனியாகவே வாழ்ந்தாள்... காத்திருப்பு இல்லை... கனவுகளும் இல்லை... இனி யாரும் தேவையில்லை... வந்த பாதை நினைவில் இல்லை... போகும் பாதை மட்டும் தெளிவாகத் தெரிந்தது... அரண்மனையில் துள்ளிக் குதித்து தரையில் ஒழுங்காகப் படியாத அவள் பாதங்களின் சுவடுகள் தெளிவாக மணலில் பதிந்தன அவள் மனதில் இருந்த வைராக்கியம் போலவே....
No comments:
Post a Comment