Tuesday, June 19, 2018

கடவுளுக்கு செய்த கர்மா

பாஞ்சாலிட சேலையை உருவுறாங்க.. பாஞ்சாலி கதறுறா.. யாரும் உதவல.. ஒரு கையை பிடிச்சுக் கொண்டு கிருஷ்ணா எண்டு கத்துறா.. கிருஷ்ணன் வரலை.. ரெண்டு கையையும் விட்டுட்டு கிருஷ்ணா எண்டு கைகூப்புறா.. கிருஷ்ணன் சக்கரத்தில இருந்து சேலையை அனுப்பிட்டே இருக்கிறார்.. அதுகூட முன்னர் கிருஷ்ணனுக்கு பாஞ்சாலி ஆடை கொடுத்து உதவிய கடனைத் தான் திருப்பிக் கொடுக்கிறார்..

அது என்ன கதையெண்டா கிருஷ்ணர் குட்டியா இருந்தபோது குளிக்க போற பொண்ணுங்க கரையில வைச்சிட்டுப் போற எல்லா உடுப்பையும் எடுத்து ஒளிச்சு வைச்சிடுவார்.. ஒருநாள் கிருஷ்ணரைப் பழிவாங்க கோபிகைகள் சேர்ந்து அவர் குளிக்கிற நேரம் பாத்து அவரின்ர உடுப்பு எல்லாத்தையும் ஒளிச்சு வைச்சிடுறாங்க.. பொண்ணுங்களாச்சும் அரைகுறை உடுப்போட குளிப்பாங்க.. கிருஷ்ணர் பையன் தானே.. உல்லாசமா சுதந்திரமா குளிச்சிட்டு பாத்தா உடுப்பைக் காணலை.. கோபிகைகள் கைகொட்டி சிரிக்கிறாங்க.. அவருக்கு ஒரே வெக்கமாப் போச்சு.. உனக்கு ஒருநாள் இப்பிடியே விட்டாத்தான் புத்திவரும் எண்டுட்டு எல்லாரும் தங்கட வேலையைப் பாக்கப் போயிடுறாங்க.. பாஞ்சாலி மட்டும் அவருக்கு களவா உடுப்பு கொண்டு வந்து கொடுக்கிறா.. அதுக்கு பிரதியுபகாரமா உனக்கு உடுப்பு தேவைப்படேக்க உடுப்பு கொடுப்பன் எண்டு வாக்குக் குடுக்கிறார்..

அதுசரி.. குடுத்த கடனுக்கு உடுப்பு குடுத்தார் தேவைப்படேக்க.. அது கர்மா.. அதென்ன ரெண்டு கையையும் விட்டாப் பிறகு குடுக்கிறது.. அது தான்யா கடவுளுக்கு உதவி செய்தா வாற கர்மா.. நீ என்னதான் குடு.. அந்த ஆளைத் தவிர உனக்கு யாருமில்லை எண்டு நீ யோசிக்குற வரைக்கும் அந்தாள் வராது..  அவங்களுக்கு வேற உதவி இருக்கு போல.. நம்ம தேவையில்லை.. அதுதான் அவளே ஒற்றைக்கையால பிடிச்சிருக்காளே.. நான் எதுக்கு.. எண்டு யோசிச்சிட்டு பேசாம இருந்திடும்..

சும்மா இரு

நாம் வெவ்வேறு நோக்கத்திற்காக படைக்கப் பட்டிருக்கிறோம்.. மற்றவர்களைப் பின்பற்ற முன்னர் அவர்கள் போகும் வழியும் நாம் படைக்கப்பட்ட நோக்கமும் ஒன்றா எனக் கண்டறிவது நலம்.. கண்டறிந்தாலும் அவர்கள் போகும் வழி எங்களுக்கு ஏற்றதா என ஆராய்வது நலம்.. நாங்கள் எதற்காக படைக்கப்பட்டோமோ அதை செய்வதற்கான தயார்படுத்தலை பிரபஞ்சம் மேற்கொள்ளும்... எது அந்தக் கடமையை செய்ய நமக்குத் தேவையோ அது நம்மைத் தேடிவரும்.. அதற்கான ஆர்வம் இயல்பாகவே அமைந்திருக்கும்.. கல்வி கற்றல், வேலை செய்தல் போன்றவற்றைத் தாண்டி இறைவனை அடையும் பாதை அந்த கடமையைச் செய்வதேயாகும்.. உனக்கு பிரியமானதை செய்யாமல், அது இதுவா அதுவா எது என அலைந்து திரியாமல் 'சும்மா இரு'ப்பாயாக..

எங்கே கொடுத்து எங்கே வாங்குகிறான்

அம்புகள் தைத்தும் மரணம் தீண்டாமல் இருக்கும் கர்ணனை பார்க்க கிருஷ்ணர் வருகிறார் வயதான அந்தணர் வேடம் பூண்டு. அவன் செய்த தருமம் அனைத்தையும் தானமாக வாங்கி விட மரணம் அவனை தழுவிக் கொள்கிறது. மகாவிஷ்ணுவை மரணிக்கும் சமயம் தரிசித்து முக்தி பெற்று அவரோடு ஐக்கியம் ஆகி விடுகிறான் கர்ணன். அவன் பாவங்கள் அவன் அப்பிறவியில் பட்ட பாட்டிலையே தீர்ந்து விட்டது. எஞ்சி இருந்தவை புண்ணியங்கள்.. அதனை கிருஷ்ணர் தானமாக பெறாவிடின் அவன் மறுபிறவியில் புண்ணிய பலனாய் உயர்வான வாழ்வை பெற்றிருப்பான்.. துன்பமற்ற வாழ்வில் அவன் புதிதாக பாவங்களையும் புண்ணியங்களையும் சேர்த்துக் கொண்டிருக்க கூடும்.. பாவங்கள் துன்பத்தையும் புண்ணியங்கள் இன்பத்தையும் தான் வழங்க முடியும். இன்பதுன்பமற்ற பெருவாழ்வை பெற வேண்டுமெனில் இரண்டையும் வைத்திருக்கலாகாது. அதனாலேயே மாயவன் புண்ணியங்களை வாங்கி பெற்றார்..

அப்படியான புண்ணியத்தில் இருந்து தான் அசுவத்தாமன் கொன்ற உத்தரையின் மகனுக்கு உயிர் கொடுத்தார்.. ஜீவன் முத்தி வேண்டுபவர்கள் தங்கள் பாவங்களை அனுபவித்து கரைத்த பின்னர் தங்கள் புண்ணியங்களை கடவுளுக்கே ஒப்புக் கொடுக்கிறார்கள்.. புண்ணியங்களை வைத்து அவர் என்ன செய்வது..? இப்படி ஏதும் நல்ல காரியம் செய்ய வேண்டியது தான்..