Friday, March 16, 2018

நான் உன்னைக் காதலிப்பதாயில்லை...


காதல் என்றால் ஒருவரையொருவர் நம்ப வேண்டும்.. 
நீ என்னை விட்டுப் போக மாட்டாய் என்பதை
எத்தனை தடவை கூறியும்
நான் நம்பப் போவதில்லை.. 

காதல் என்றால் புரிந்து கொள்ள வேண்டும்.. 
நீயாக விளக்கம் எதுவும் கூறாமல் 
நானாக எதையும் 
நினைத்து ஏமாறப் போவதில்லை... 

காதல் என்றால் சந்தேகம் கொள்ளக் கூடாது.. 
உன் நண்பர்கள் எனக் கூறியவர்களின்
முகப்புத்தகத்தில் நீ இட்ட 
விருப்பங்களின் வகை வரைக்கும் ஆராயாமல்
நான் இருக்கப் போவதில்லை.. 

காதல் என்றால் ஒருவரையொருவர் உரிமை கொண்டாடக் கூடாது.. 
உன்னை யாரேனுமோ
நீ யாராவதனோ அழகை ரசிப்பதை 
சகித்துக் கொண்டு சண்டைபோடாமல் 
நான் இருக்கப் போவதில்லை.. 

காதல் என்றால் காதலித்தவர் நன்றாய் வாழ 
காதலையே விட்டுக் கொடுக்க வேண்டும்... 
நான் உன்னை வதைத்து எடுத்தாலும் 
நீ என்னதான் தப்பிச்செல்லப் பார்த்தாலும் 
நான் உன்னை பிழைத்துப்போ என்று 
தப்பிச்செல்ல விடப் போவதில்லை.. 

காதல் என்றால் வரட்டுக்‌ கவுரவம் கூடாது.. 
விட்டுக் கொடுக்க வேண்டும்‌‌.. 
என்னை இழந்து உன்னை நான் 
ஒருபோதும் யாசிக்கப் போவதில்லை.. 

நான் நேசிப்பது என்னுடைய வழியில் தான்.. 
அதற்கு வரைவிலக்கணங்களும் இல்லை.. விதிகளும் இல்லை.. 
அமைதியும் ஓய்வும் இல்லை.. 

ஓயாமல் அலையாய் உன்னினைப்பு என்றும் என்னுள் ஆர்ப்பரிக்கும்.. 
நீ என் சுவாசமாய் உள்ளே நுழைந்து நுரையீரலில் நிறைகிறாய்.. 
இதயத்தை அடைந்து கலம் தோறும் சேர்கிறாய்.. 
வெளிச்சுவாசமாய் மீண்டும் பிரிகிறாய்.. 

இணைவும் பிரிவும் ஊடலும் கூடலுமாய் காலங்கள் கழியட்டும்.. 
காலம் வீணென்று போலியாய் 
எனக்குத் தெரியாத வழிகளில் எல்லாம் நான் காதலிப்பதாயில்லை